இறைவனை அடையும் பாதையில் மனத்திரைகள் விலக வழி
இறைவனை அடையும்
பாதையில் மனத்திரைகள் விலக வழி
====================================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்;
தன்னைப் பற்றி ஒருவன் அறிந்து கொள்வதற்கான அறிவை இறைவன் கொடுக்காத வரை, ஒரு மனிதனால் இறைவனை அறியவோ, புரியவோ இயலாது.
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து படைப்புகள் குறித்து ஆழமாக யோசிக்கும் பொழுது, அது இறைவனை அறியவும் புரியவும் வழிவகை செய்யும்.
ஆனால் அல்லாஹ்வை முழுமையாக அறிய, அவனே அதற்கான அறிவை விசாலமாக்காத வரை அவனை புரிந்து கொள்ள முடியாது.
அவனை நெருங்குவதற்கான சில வழிகள் இருக்கின்றன; அந்த வழிகளைத் தொடர்ந்து செய்து வரும் பொழுது அவனை புரிந்து கொள்வதற்கான ஒவ்வொரு முடிச்சும் அவிழும்.
முடிச்சுகள் அவிழும் பொழுது, திரைகள் விலகும்; திரைகள் விலகும் பொழுது அவனை அறியவும் புரியவும் இயலும்.
வாருங்கள் அவனை அடைவதற்கான வழியை காணலாம்.
1. இறையன்பு வேண்டும் என விரும்புகிறவர் அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். சதா அவனையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
2. உலகில் உள்ள எந்த பொருளின் மீதும் கவனத்தை செலுத்தாமல் வாழ வேண்டும்.
3. நாவாலும் மனதாலும் உடலாலும் இறை உணர்வை அகத்திலும் புறத்திலும் வெளிப்படுத்த வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எதன் பக்கமும் சிந்தனை சிதற கூடாது.
4. இறைவன் நமக்கு எதை விதித்திருக்கின்றானோ அதை ஏற்றுக் கொண்டு திருப்தியாக இறுதிவரை வாழ வேண்டும்.
5. மூலதனம் இல்லாமல் வியாபாரம் செய்ய இயலாது; அதில் லாபமும் பெற இயலாது; இது போலவே இறைவன் விதித்த கடமைகளை முழுமையாக செய்யாமல் இதர நடைமுறைகளை பின்பற்றி வருவதால் மட்டும் இறைவனை அடைந்து விட முடியாது.
6. தூக்கத்தை பெரிதாக மதிக்கிறவர்கள் உயர்ந்த பொருளுக்கு பகரமாக மட்டமான பொருளை பெறுகிறவனைப் போன்று ஆவான்.
உயிர் உள்ளவர்களை விட்டுவிட்டு பிணத்தை நேசிப்பவனை போன்று ஆவான்; தூக்கம் மரணத்தின் சகோதரன்; அதனால் தான் அல்லாஹ்விற்கு தூக்கம் இல்லை; அவனோடு நெருங்கி இருக்கின்ற வானவர்களுக்கும் தூக்கம் இல்லை; சொர்க்கவாசிகளும் சொர்க்கத்தில் தூங்குவதில்லை.
எனவே இரவின் பின் நேரத்தில் விழித்திருந்து இறைவனை வணங்குகிறவர் மட்டுமே இறைவனை அடைய இயலும்.
7. மார்க்கம் அனுமதித்த உணவை வயிறு நிரம்ப சாப்பிடுகிறவரும், மார்க்கம் தடைவிதித்த உணவில் கொஞ்சத்தை சாப்பிடுகிறவரும் சமமானவர்கள் தாம்!
வயிறு நிரம்ப சாப்பிடுகிறவனின் உள்ளத்தில் ஈமானின் ஒளி, பிரகாசிக்காது; அதிகம் சாப்பிடுவதால் உள்ளம் இருள் அடையும்.
இருளடைந்த உள்ளத்தோடு தொழுதாலோ மற்ற இறைவழிபாடுகளை செய்தாலோ அது முழுமை அடையாது.
முழுமை அடையாத இறைவணக்கம் இறைவனின் பக்கம் நம்மை நெருக்கி வைக்காது.
எனவே இறைவனை அடைய இயலாது.
இறைவனை வழிபட உடலுக்கு சக்தி வேண்டும் என்கிற எண்ணத்துடன் குறைந்த உணவை ஒருவர் உட்கொள்வாரானால் அது அவருடைய வயிற்றில் பிரகாசத்தை ஏற்படுத்தும். எனவே இந்த எண்ணத்தோடு சாப்பிட வேண்டும்.
ஹலாலான உணவை வயிறு நிரம்ப சாப்பிட்டால் தூக்கத்தை கொடுத்து தொழுவதை தடுத்துவிடும்; அதனால்தான் இறைத்தேடலில் இருப்போருக்கு ஹலாலான உணவு கூட ஹராமுக்கு நிகரானது என்று இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
மேற்கண்ட செய்திகளை யார் கவனமாக தம் வாழ்வில் செயல்படுத்துகிறார்களோ அவர்களே அல்லாஹ்வை அடைய தகுதி உடையவர்கள் ஆவர்.
Comments
Post a Comment