அல்லாஹ் உங்களுக்குவழங்காததில் அருள் உள்ளது
அல்லாஹ் உங்களுக்கு
வழங்காததில் அருள் உள்ளது
நேற்றைய தொடர்ச்சி...37
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
==================================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
இறை நேசர்களுக்கு இரண்டு கூலி உண்டு. இறைவன் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் அனுபவிப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்கி இருக்கிறான். அப்படித்தான் இறைநேசர்களுக்கும் அனுமதி வழங்கியிருக்கின்றான்.
ஆனால் இறைநேசர்கள் குறைவாக அனுபவித்தால் அதற்கு ஒரு கூலியை அல்லாஹ் வழங்குகிறான்.
அனைத்தையும் அனுபவிக்க அனுமதி வழங்கியும் குறைவாக அனுபவித்ததற்காக ஒரு கூலியை வழங்குகிறான்; ஆக இரண்டு கூலிகளை இறைநேசர்கள் பெறுகிறார்கள்.
சில இறைநேசர்களுக்கு இறைவன் சோதனைகளை வழங்கி சோதிக்கின்றான்.
அச்சமயம் இறைநேசர்கள் இறைவனிடம் தம் பிரச்சினைகளை நீக்கி அருளும்படி கெஞ்சி கதருவோரைக் கண்டு அல்லாஹ் ஆனந்தம் அடைகிறான்.
அவர்கள் தொடர்ந்து கெஞ்சி பிரார்த்தனை செய்யும் பொழுது பன்மடங்கு பரக்கத்துகளை வாரி வழங்குகிறான்.
சில சமயம் நமக்கு நேர்ந்த சோதனைகள் நீண்ட காலம் இருந்தால் அது நாம் செய்த தீமைகளின் காரணமாகக்கூட இருக்கலாம்.
எனவே நாம் செய்த தீமைகள் என்ன என்பது குறித்து யோசித்து அல்லாஹ்விடம் தவ்பா - பாவமீட்சி பெறவேண்டும்.
ஆனால், நமது சோதனைகள் நீக்கப்படும் அதே சமயம் அவனிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் நீண்ட நாள் பிரார்த்தனை செய்தும் நமது பிரச்சனை நீங்காவிட்டால் நாம் பிரார்த்திப்பதை அல்லாஹ் விரும்புகிறான், ரசிக்கின்றான் என்று பொருளாகும்.
எனவே நமது பிரார்த்தனையை அல்லாஹ் நிராகரித்து விட்டானோ என்று எண்ணி பிரார்த்தனை செய்வதை நிறுத்தி விடக்கூடாது.
நாம் கேட்பதை அல்லாஹ் கொடுத்து விட்டால் நாம் கேட்பதை நிறுத்தி விடுவோம் என்பதால் தான் அல்லாஹ் வழங்காமல் இருக்கிறான் என்று நீங்கள் விளங்கிக் கொள்ளுங்கள்.
இறைவன் நமக்கு எதை வழங்கியிருக்கின்றானோ அதை திருப்தியாக ஏற்றுக் கொண்டால் உலக வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.
இறைவன் நமக்கு எதை வழங்கவில்லையோ அதைத் தேடி அலைவது அறிவீனம்.
மனிதர்கள் அனுபவிக்கும் கொடிய தண்டனை எதுவென்றால், தனக்கு கிடைக்காததை தேடி அலைவது தான்!
தனக்கான அருளை தேடிக் கொள்வதில் என்ன குற்றம் என நீங்கள் கேட்கலாம்? நமக்கு எதை இறைவன் வழங்க வேண்டும் என எழுதி வைத்திருக்கின்றானோ அது கண்டிப்பாக நம்மை வந்து அடையும் என்கிற போது நீங்கள் ஏன் தேடி அலைய வேண்டும்?
தொடரும்......
Comments
Post a Comment