இரண்டு நபிமார்களின் சரிதை ஓர் ஒப்பாய்வு

அல்குர்ஆன் கூறும் இரண்டு இறைத் தூதர்களின் சரிதைகள். இரண்டுமே பேரற்புதம். 1. யூசுஃப் (அலை). 2. மூஸா (அலை).

இரண்டு சரிதைகளுக்கும் இடையிலான ஒப்பீடு பேரற்புதம். அல்குர்ஆன் அதை அழகாக விவரிக்கிறது.

இரண்டுமே எகிப்தில் தொடங்கின. இரண்டுமே தொலைந்து போனவர்களின் சரிதைகள். 

இருவருமே நீர்நிலைகளில் வீசப்பட்டனர். ஒருவர் கிணற்றில் வீசப்பட்டார். இன்னொருவர் நதியில் வீசப்பட்டார்.

யூசுஃப் (அலை), அவரை வெறுத்த சொந்த சகோதரர்களால் கிணற்றில் வீசப்பட்டார். மூஸா (அலை), சொந்தத் தாயாரால் அல்லாஹ்வின் ஆணைப்படி ஆற்றில் வீசப்பட்டார்.

முதல் சரிதை மிகுந்த வெறுப்பும் பகைமையும் கொண்டது. இரண்டாவது சரிதை மிகுந்த மென்மையும் அக்கறையும் கொண்டது.

முதல் சரிதையில் மனிதர்களின் திட்டமிடல் இருந்தது. இரண்டாவது சரிதையில் மனித குலத்தின் இறைவனுடைய திட்டமிடல் இருந்தது.

இருவருமே அரண்மனையில் வளர்க்கப்பட்டனர். 

யூசுஃப் (அலை) அவர்களின் இழப்பால் அவரது தந்தை வாடினார். மூஸா (அலை) அவர்களின் இழப்பால் அவரது தாயார் வாடினார்.

மகனது கவலையால் யூசுஃப் (அலை) அவர்களது தந்தையின் பார்வை பறிபோனது. மகனது கவலையால் மூஸா (அலை) அவர்களது தாயாரின் இதயமே நின்றுபோகும் அளவுக்குச் சென்றது.

இருவரையும் இரு பெண்மணிகள் வளர்த்தனர்.

யூசுஃப் (அலை) அவர்களின் வளர்ப்புத்தாயோ அவரிடம் மோசமாக நடக்க முயன்றார். மூஸா (அலை) அவர்களின் வளர்ப்புத்தாயோ, 'அவரைக் கொல்லாதீர்கள்’ என்று ஃபிர்அவ்னிடம் மன்றாடினார்.

யூசுஃப் (அலை) அவர்களைத் தேடி சகோதரர்கள் புறப்பட்டனர். மூஸா (அலை) அவர்களைத் தேடி அவரது அக்கா புறப்பட்டார்.

யூசுஃப் (அலை) அவர்களின் தந்தைக்கும் மூஸா (அலை) அவர்களின் தாயாருக்கும் அவர்களது மகன்களைத் திருப்பித் தருவதாக அல்லாஹ் வாக்களித்தான்.

மகனது வாசனையை உணர்ந்தபோது யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை நிம்மதியடைந்தார். பெற்ற மகனை நெஞ்சோடு வாரியணைத்தபோது மூஸா (அலை) அவர்களின் தாயார் நிம்மதியடைந்தார்.

யூசுஃப் (அலை) வாழ்ந்த அரண்மனை அவருக்கு தீங்கு விளைவித்தது. மூஸா (அலை) வாழ்ந்த அரண்மனை அவருக்கு பாதுகாப்பை வழங்கியது.

ஆனால் இறுதியில் யூசுஃப் (அலை) வாழ்ந்த ஊர்மக்கள் அவருடன் சமரசம் செய்து நல்லமுறையில் நடந்துகொண்டனர்.

மூஸா (அலை) வாழ்ந்த ஊர்மக்களோ அவருடன் மோதி அவரைக் கொலைசெய்ய முயன்றனர்.

இறுதியில் இருபெரும் இறைத்தூதர்களும் பெருவெற்றி பெற்றனர். பேருதாரணங்களாக மாறினர்.

யாருடைய சூழ்ச்சியும் அங்கு எடுபடவில்லை. தடைகளைத் தாண்டினர். சதிகளை வென்றனர். 

இங்கும் சில ஆட்சியாளர்கள் பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டுகிறார்கள். முஸ்லிம்களை கருவறுக்க நாடுகிறார்கள். ஓட்டுரிமையை பறிக்க நினைக்கிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் பதில் ஒன்றே ஒன்றுதான்:

’’அவர்களும் சதித் திட்டங்களை தீட்டினார்கள். அல்லாஹ்வும் தகுந்த திட்டங்களை தீட்டினான். இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரிலும் வல்லவன்”. (3:54)

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்