இறைவன் ஓர் அறிமுகம்
இறைவன் ஓர் அறிமுகம்
நேற்றைய தொடர்ச்சி.....40
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்
=====================================
கடவுளின் தகுதிகள் குறித்து இஸ்லாம் கூறுவது போல் உலகத்தில் வேறு எந்த மதங்களும், அறிஞர்களும் சொன்னதில்லை.
அல்லாஹ், தான் யார் தெரியுமா? என கேட்டுக்கொண்டு தன்னைப் பற்றி தான் அருளிய வேதமான திருக்குர்ஆனில் ஆங்காங்கே சொல்லிக் காட்டுகிறான்; அவற்றின் தொகுப்புதான் இந்த அவனுடைய அறிமுகம்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இறைவன் குறித்து கூறுவதாவது;
இறைவன் மக்களுக்கு மிக அருகில் இருக்கின்றான்;
அனைத்தையும் படைத்தவன் அவனே!
இந்த உலகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து காரியங்களையும் ஏற்கனவே (கற்பித்து) புறகிராம் செய்து முடித்துவிட்டவனும் அவனே!
இந்த உலகத்தில் காணப்படும் படைப்புகள் மற்றும் செயல்கள் அனைத்திலும் அவனுடைய பேரறிவு சூழ்ந்துள்ளது.
இந்த அண்டத்தில் அல்லாஹ்வைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ;
உலகப் படைப்புகளில் ஒன்றை இறைவனுக்கு இணையாக்குவோர் பொய் கூறுவோரும் கற்பனையாளருமே ஆவர்;
அவன் படைத்த படைப்புகளில் எதுவும் அவனுக்கு சமமாகவோ நிகராகவோ இல்லை ;
இறைவன் ஒருவனே! அவன் படைத்த அனைத்திற்கும் ஏகாதிபதியும் அவனே!
படைப்புகளிடம் காணப்படும் எந்த குறையும் அவனிடத்தில் இல்லை; அவன் அனைத்தையும் மிகைத்தவன்;
அவன் அனைத்தையும் அறிந்தவன்; அவனுடைய அறிவுக்குச் சமமாக இந்த அண்டத்தில் யாரும், எதுவும் இல்லை;
அவன் உண்ணுவதில்லை; உறங்குவதில்லை; பருகுவதுமில்லை; அவனுக்கு பெற்றோரும் இல்லை; பிள்ளைகளும் இல்லை;
உலகத்தில் உள்ள அனைத்து படைப்புகளின் பேச்சுகளையும் ஒரே நேரத்தில் கேட்கின்றவனாகவும், பார்க்கின்றவனாகவும் இருக்கின்றான்;
எனவே அவனுடைய பார்வையை விட்டும் எந்த பொருளும் எந்த செயலும் மறைந்து கொள்ள இயலாது;
அவனுக்கு உதவுவோர் யாரும் தேவையில்லை ; அவனுடைய ஏவல்களை செய்யும் பணியாளர்களும் யாருமில்லை;
அவன் பருப்பொருளும் அல்ல! அழியும் பொருளும் அல்ல! மனிதனைப் போன்று எலும்பு, தோல், நரம்பு, மாமிசம் போன்ற கூட்டுப் பொருட்களினால் உண்டானவனும் அல்ல!
அவன் ஒரு எல்லைக்குள் கட்டுப்பட்டவன் அல்ல! பஞ்சபூதங்களில் ஒரு பூதமும் அல்ல! தினமும் தோன்றி மறையும் ஒரு பொருளும் அல்ல!
அவன் நித்திய ஜீவன்; அவனுக்கு மரணம் இல்லை; அவனே அதிபதி; நேர்மையாளன்; அனைத்து ஆற்றலும் உள்ளவன்; அருளாளன்; அன்பாளன்; மன்னிப்பவன்; மனிதர்கள் செய்யும் பாவச் செயல்களை மறைப்பவன்;
தான் படைத்த அனைத்து படைப்புகளுக்கும் உணவளிப்பவன்; நிரந்தர ஆட்சியாளன்; அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது; அவனுக்கே புகழ் நிரந்தரமானது;
அவன் நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன்; அவனுடைய உருவ அமைப்பை எவராலும் காணவோ, கணிக்கவோ இயலாது;
இந்த உலகத்தில் அவனுக்கு நிகரான அல்லது அவனைப் போன்ற எந்த பொருளும் இல்லை;
ஒவ்வொரு நாளும் உயிரினங்கள் விடும் மூச்சுகளின் எண்ணிக்கையையும், அவற்றின் செயல்களின் எண்ணிக்கையையும் அறிந்தவன்!
அவனே படைப்புகளுக்கு உணவளிக்கின்றான்; ஆனால் அவன் உண்ணுவதில்லை!
அவன் எதை செய்தாலும் மறுத்து பேச எவருக்கும் உரிமை இல்லை; அவன் முன்மாதிரி இன்றி படைப்புகளை படைத்தவன்; இப்பொழுதும் படைத்து கொண்டே இருப்பவன்;
அவன் எது நடக்க வேண்டும் என்று ஏற்கனவே தீர்மானித்து இருக்கின்றானோ அவற்றை குறிப்பிட்ட காலத்தில் நடக்கச் செய்கிறவன்;
அவனுடைய கவனத்திற்கு வராமல் எதுவும் இல்லை; அவனுடைய ஆற்றலுக்கு எல்லை இல்லை; அவன் நிகரற்ற நினைவாற்றல் உள்ளவன்; மறதி அவனுக்கு இல்லை.
தொடரும்....
Comments
Post a Comment