ஆலிம்களுக்கான பொறுப்பு

ஆலிம்களுக்கான பொறுப்பு, 
இமாம் ஜீலானி (ரஹ்) அறிவுரைகள்
==================================

நேற்றைய தொடர்ச்சி....43

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் 
=====================================

இமாம் ஜீலானி (ரஹ் ) அவர்கள் தமது மாணவர்களான ஆலிம்களுக்கும் தமது சீடர்களுக்கும் சொன்ன சில அறிவுரைகள்;

நீங்கள் செல்வந்தராக ஆக வேண்டும் என்கிற ஆசையை விட்டு விடுங்கள்; ஏனென்றால் அதில் உங்களுக்கு அழிவும், ஆபத்தும் இருக்கலாம். 

உங்களின் வறுமை உங்களுக்கு நன்மையைத் தரலாம்; 

அல்லாஹ்வின் நாட்டத்தை திருப்தியோடு ஏற்றுக் கொள்வது ஆகச் சிறந்தது. 

அதற்காக நீங்கள் சும்மா இருந்துவிட வேண்டாம்; அல்லாஹ்விடத்தில் உங்களுக்குத் தேவையானவற்றை கெஞ்சி கேட்டுக் கொண்டே இருங்கள்; 

ஏனென்றால் உங்களுக்கு ஒரு சமயம் செல்வத்தை வழங்கி, அதில் நன்மையை கூட இறைவன் ஏற்படுத்தி இருக்கக் கூடும்.

அதேசமயம் எதையும் இறைவனிடம் வற்புறுத்தி, நிர்பந்தப்படுத்தி கேட்க வேண்டாம்;

அவ்வாறு கேட்கும் பொழுது அல்லாஹ்வின் அடிமையாக நீங்கள் இருக்கிறீர் என்கிற இறக்கையை நீங்களே முறித்துக் கொண்டது போல் ஆகும்; 

அதனால் எதிர்காலத்தில் நீங்கள் பறந்து செல்ல இயலாமல் போய்விடும். 

உங்களின் வாலிபம், உடல் வலிமை ஆகியவற்றை கொண்டு படைப்பினங்களிடம் ஏதேனும் லாபங்களை அடைந்தால், அது தற்காலிக மகிழ்ச்சியைத் தரும்; 

பிற்காலத்தில் நீங்களே சகித்துக் கொள்ள இயலாத சிரமங்களைத் தரும். 

சிலரது சொல் முஸ்லிமாகவும் செயல் காஃபீராகவும் இருக்கின்றது. 

ஆமாம்! மக்களோடு கூட்டமாக இருக்கும் பொழுது இஸ்லாத்தை தன்னில் வெளிப்படுத்திக் கொள்கிறீர்; தனிமையில் இருக்கும் போது உங்கள் மனம் விரும்பியப்படி வாழ்கிறீர்.

மக்களே! ஆலிம்களே!! படிப்பு நல்ல நடத்தையையே உண்டாக்கும்! 

எனவே படியுங்கள்! படிப்பதை மரணம் வரை நிறுத்தி விடாதீர்!

குறிப்பாக திருக்குர்ஆனை வாசியுங்கள்! 

கருப்பு மையில் பதிந்த அதன் வசனங்களில், ஒளி மறைந்துள்ளது. 

அந்த ஒளி உங்கள் உள்ளத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி உள்ளத்திற்கு ஒளியூட்டும்.

ஆலிம்களை பார்த்து குர்ஆன் கூறுகிறது; "நான் சொல்வது போல் நீங்கள் நடந்து கொண்டால், நான் அல்லாஹ்வின் அருட்கொடையாக இருப்பேன்; 

அவ்வாறு நீங்கள் நடந்து கொள்ளவில்லை என்றால் உங்களுக்கு எதிராக இறைவனிடம் விவாதம் செய்வேன்".

நன்னடத்தை ஒருவரிடம் இல்லை என்றால், அவர் கற்ற கல்வி அவரிடம் இருந்து வெளியேறிவிடும். 

அதனால் கல்விமான் என்கிற கோலம் மட்டும் இருக்கும்; உள்ளே எந்த அறிவும், ஞானமும் இல்லாமல் போன்சாய் மரம் போல் ஆகிவிடுவீர். 

கற்றபின் அதற்குத் தக - கற்றது போல் வாழ்ந்தால் இறைவனிடம் உங்களை அந்த கல்வியே நெருக்கி வைக்கும்; ஞானம் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும்.

நீங்கள் கற்ற கல்விக்கான ஜகாத், மக்களை திருத்துவதும், நல்வழிப்படுத்துவதும், அவர்களுக்கு அறிவூட்டுவதும், அல்லாஹ்வின் பால் அழைப்பதுமே ஆகும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்