மனிதர்களின் நான்கு பாதைகள் யாரை தொடர்வது? யாரை தவிர்ப்பது?
மனிதர்களின் நான்கு பாதைகள்
யாரை தொடர்வது? யாரை தவிர்ப்பது?
நேற்றைய தொடர்ச்சி.....47
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்
=====================================
இமாம் ஜீலானி ரஹ் அவர்கள் கூறுவதாவது;
நான்கு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்; 1. மனதாலும் வாயினாலும் எந்த பயன்மிக்க வேலையும் செய்யாதவர்கள்.
இவர்கள் இறைவனுடைய வல்லமையை சிந்தித்திருக்கவே மாட்டார்கள்; அவர்கள் மனமும், மூளையும் எந்த நல்லறிவையும் பெற்றிருக்காது.
அதனால் இவர்களின் வாழ்க்கை முறை மதிக்கத்தக்கதாக இருக்காது.
இப்படிப்பட்டவர்களை இயன்றால் நாம் திருத்த வேண்டும்; ஆனால் அவர்களோடு நெருங்கிய தொடர்புகளை வைத்துக் கொள்ளக் கூடாது.
2. சிலர் இறைவன் குறித்து பேசுவார்கள்; ஆனால் உள்ளத்தில் இறைவன் குறித்த நல்லெண்ணம் இருக்காது.
மக்களுக்கு உபதேசிப்பார்கள்; ஆனால் சொந்த வாழ்வில் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள்.
மக்களிடையே நல்லவர்களாகவும் தனிமையில் மிகக் கெட்டவர்களாகவும் நடந்து கொள்வார்கள்.
"எனது உம்மத்தில் அதிகம் அஞ்சத்தக்கவர்கள் படித்தபடி நடக்காத அறிஞர்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இத்தகையவர்களை விட்டு நாம் விலகியே இருக்க வேண்டும்.
3. சிலர் உள்ளத்தால் நல்லவர்களாக இருப்பார்கள்; வாய் திறந்து பேச மாட்டார்கள்; அவர்களின் உள்ளத்தில் ஞானம் நிறைந்திருக்கும்.
இத்தகையவர்கள் தம் ஆரம்ப கால தவறுகளை நினைத்து தம்மை திருத்திக் கொள்வதிலேயே கவனமாக இருப்பார்கள்.
தியானத்தில் ஒன்பது பாகம் மௌனத்தில் தான் அடங்கி இருக்கிறது; அந்த வகையில் அவர் மௌனமாகவே இருக்கிறார்.
இத்தகையவர்களோடு நாம் நெருங்கி பழக வேண்டும் அவர்களுக்கு தேவையான உதவிகளை நாம் செய்ய வேண்டும்.
4. கற்றது படி நடந்து பிறருக்கும் அதையே போதித்து வருகிறவர் வானவர்களிடையே பேசப்படும் மனிதராக ஆகிறார்.
இத்தகையவர்கள், இறைவன் குறித்து நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் உள்ளம் ஆன்ம ஞானத்தால் நிறைந்திருக்கும்.
நிறைவான அறிவை பெற்ற இவர்கள் மக்களுக்கு நல்வழி காட்டுவார்கள்; இத்தகையவர்களை நாம் நேசிக்க வேண்டும்; அவர்களோடு நெருங்கிப் பழக வேண்டும்; அவர்கள் சொல்வதைக் கேட்டு வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
இத்தகையவர்களுக்கு எதிராக நாம் நடந்து கொண்டால் நமது வாழ்க்கை வழிகேட்டில் தான் சென்று முடியும்.
எனவே உங்களுக்கு நான்கு வகை மனிதர்கள் குறித்து சொல்லி இருக்கிறேன்; எந்த மனிதர் உகந்தவர் என்று நீங்களே தேர்ந்தெடுத்து அத்தகையவர்களை பின்பற்றி வாழுங்கள்.
Comments
Post a Comment