இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் மரணம்
இமாம் ஜீலானி (ரஹ்)
அவர்களின் மரணம்
நேற்றைய தொடர்ச்சி....53
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்
=====================================
உலகத்தில் எத்தனையோ இறைநேசர்கள் தோன்றியிருக்கிறார்கள்; அவர்களெல்லாம் அவர்கள் வாழ்ந்த ஊர்களிலும், பகுதிகளிலும், குடும்பத்தாரிடையே மட்டுமே பிரசித்தி பெற்றிருந்தார்கள்.
ஆனால் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மட்டும்தான் உலக அளவில் பிரசித்தி பெற்று வாழ்ந்தார்கள். அதனால் அவர்களின் சீடர்களும் உலகம் முழுவதும் இப்பொழுதும் வாழ்ந்து வருகிறார்கள்; அவர்களை பின்பற்றி வருகிறார்கள்.
அனைவராலும் அறியப்பட்ட இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மரணிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தம் குடும்பத்தினரை அழைத்து, "எனது மரணம் என்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது; சில மாதங்களில் மரணித்து விடுவேன்" என்று கூறினார்கள்.
இவ்வாறு சொன்ன சில நாட்களுக்குப் பிறகு நோயாளியாக ஆனார்கள்; இமாம் அவர்கள் உடல் நலக்குறைவால் இருந்த சந்தர்ப்பத்தில் அரசு அதிகாரிகள், ஆன்மீகத்தின் உச்ச நிலை அடைந்திருந்த இறைநேச செல்வர்கள் என பலரும் தினம் தினம் வந்து சென்ற வண்ணம் இருந்தார்கள்.
இரண்டு மாத காலம் நோயாளியாகவே இருந்து ஹிஜ்ரி 561 ரபியுல் ஆகிர் மாதம் 11 ஆம் நாள் திங்கள்கிழமை கி.பி. 15 / 02 / 1166 அன்று காலமானார்கள்.
இறுதி நேரமும்
இறுதி வார்த்தையும்
==========================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மரணிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய மகனார் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் உடன் இருந்தார்கள்; அவர்கள் கூறுவதாவது;
"உயிரை எடுக்கும் வானவர்கள் தம் குழுவினரோடு வந்து இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கு ஸலாம் சொல்லி இருப்பார்கள் போல் தெரிகிறது.
அதற்குப் பதிலாக வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு என என் தந்தை பதில் சொன்னதை நான் கேட்டேன்.
நான் எனது தந்தையின் உடல் மிகவும் நலிவுற்றும், பலவீனமாகவும் இருந்ததை அறிந்து அவர்களை தொட்டுப் பார்த்தேன்; அப்பொழுது அவர்கள் என்னிடம் ابتعد عنى - என்னிடமிருந்து சற்று விலகி இரு என்று சொன்னார்கள்.
பின்னர் என் தந்தை அவ்வப்பொழுது தன் கையை வானத்தின் பக்கம் உயர்த்தி வானத்தை பார்த்தவாறு
حسبي الله ونعم الوكيل
அல்லாஹ்வே எனக்கு போதுமானவன் அவனே சிறந்த பாதுகாவலன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
மேலும்
لا اله الا الله
الى الله ترجع الامور
عليك السلام يا ملائكة ربي
என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.
என் உடன் பிறந்தவர்கள், எனது தாய்மார்கள், உறவினர்கள் என பலரும் அங்கே கூடி இருந்தோம்.
அப்பொழுது அவர்களின் முகம் ஒளி வீசிக் கொண்டிருந்தது. ஃபனா - ஆன்மீகப் பரவசத்தில் தன்னை இழந்த நிலையில் இருந்தார்கள்; அவர்கள் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை; எங்களைக் குறித்து எங்களிடம் பேசவும் இல்லை."
பின்னர் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மரணித்த செய்தி பக்தாத் நகர் முழுவதும் பரவியதும் ஒவ்வொரு வீடும் துக்கத்தில் மூழ்கியது; பக்தாத் நகரத்தின் உயிர் பிரிந்து விட்டது போல் மக்கள் கூச்சலிட்டார்கள்.
அவர்களின் தீதாரை காண மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தார்கள்; நள்ளிரவு வரை தொடர்ந்தது. அவர்களைக் காண வந்திருந்த கூட்டம் அவர்களின் வீட்டிலிருந்து நதிக்கரை வரை மக்கள் திரண்டு நின்றிருந்தார்கள்.
பின்னர் அவர்கள் ஓதிக் கொடுத்து வந்த காதரிய்யா கல்விச் சாலையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
அன்று கூடியது போன்று மக்கள் வேறு எந்த நாளிலும் அங்கே ஒன்று சேர்ந்து இருக்க மாட்டார்கள் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அப்பொழுது அந்த நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னர் அல் முஸ்தன்ஜித் பில்லாஹ் எனும் அப்பாஸிய கலீஃபா ஆவார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மரணித்த வருடத்திலோ, மாதத்திலோ சந்தேகம் இல்லை. ஆனால் அவர்கள் மரணித்த நாள் பிறை 13 என்றும் 17 என்றும் 11 என்றும் மூன்று வகையான கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்தியாவைத் தவிர மற்ற பகுதிகளில் வாழ்வோர் பிறை 17 இல் மரணித்தார்கள் என்றே நம்புகிறார்கள். அதற்கே பலமான ஆதாரங்கள் இருக்கின்றது. அந்த நாளில்தான் அவர்களின் நினைவு நாளை மக்பராவில் கொண்டாடி வருகிறார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், தான் வாழ்ந்த காலத்தில் நபி (ஸல்) அவர்கள் மீது ஒவ்வொரு மாதமும் பிறை 11ஆம் நாளில் நபிகளாருக்காக ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கி, துஆ மஜ்லிஸ் ஏற்பாடு செய்து சிறப்பிப்பார்கள்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் சீடர்களும் அதே நாளில் நபி (ஸல்) அவர்களுக்கும் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுக்கும் அவ்வாறே துஆ மஜ்லிஸும் ஏழை எளியவர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்து வந்தார்கள்.
காலப்போக்கில் அது மறைந்து போய் விட்டது; இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மறைந்த நாளாக பிறை 11ஆம் நாளையே கொண்டாடப்பட்டு வருகின்றது.
தொடரும்.....
Comments
Post a Comment