இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் மரணித்த நாளில்

இமாம் ஜீலானி (ரஹ்) 
அவர்கள் மரணித்த நாளில் 
============================

நேற்றைய தொடர்ச்சி...54

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் 
=====================================

பஹ்ஜதுல் அஸ்ரார், குல்லியாத் காதரிய்யா போன்ற நூல்களில் சில செய்திகள் காணப்படுகிறது. 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அஸர் நேரத்தில் காலமானார்கள்; மறுநாள் லுஹருக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டார்கள். 

மரணிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு அருகில் இருந்த மகன்களில் ஒருவரான அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் , "எனது தந்தை மரணிக்கும் பொழுது அல்லாஹ், அல்லாஹ் என திக்ரு செய்து கொண்டே இருந்தார்கள். 

அந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் முகம் பௌர்ணமி நிலவு போல் ஜொலித்தது. எங்களது வீட்டிற்குள்ளும் வெளிப்புறத்திலும் ஒரு நற்மணம் பரவி இருந்தது; அது ஜனாஸாவை எடுக்கும் வரை நீடித்திருந்தது. 

என்னையும் என் சகோதரர்கள் சிலரையும் அழைத்து,

كونوا مع الصالحين، واجتنبوا أهل السوء، وتمسَّكوا بالله عز وجل تمسُّكًا شديدًا.
يا وَلَدِي، لا تَتَّكِلْ عَلَى غَيْرِ اللهِ، وَفَوِّضْ أَمْرَكَ كُلَّهُ إِلَيْهِ.
عليك بالله، لا تَرْكَن إلى أحدٍ سواه.

"நல்லவர்களுடன் இருங்கள்; 
கெட்ட செயல்களில் இருந்து விலகி வாழுங்கள்; 
அல்லாஹ்வை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; 
என் மக்களே! அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் எந்த ஒன்றுக்காகவும் நம்பிக்கை வைக்காதீர்கள்" என்று கூறினார்கள். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் மகன்களில் ஒருவரான அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள், "மரண தருவாயில் இருந்த எனது தந்தை தமது உடலை தாமே சரி செய்து கொண்டார்கள்; கைகளையும் கால்களையும் நன்கு நீட்டி வைத்தார்கள்; 

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்க தயாராக இருப்பது போல் உடல் மொழியை வெளிப்படுத்தினார்கள்; சிறிது நேரத்தில் அவர்களின் ஆன்மா பிரிந்தது.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் ஜனாஸாவை வீட்டிலிருந்து மதரஸாவிற்கு  எடுத்துச் செல்லும் பொழுது வானம் மேகமூட்டமாக ஆனது; பன்னீர் தெளிப்பது போல் மழைத்துளி விழுந்தது.

அடக்கம் செய்யும் சந்தர்ப்பத்தில் மிகப்பெரும் நிசப்தம் நிலவியது; ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளத்தின் நடுவே  அந்த நிசப்தம் அச்சத்தை ஏற்படுத்தியது.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தை மதரஸது ஷைகு அல் ஜீலானி என்றும், ஜாமிவு சுல்தான் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. 

தற்போது மக்கள்  “பாபா ஜீலானி தர்கா”, “அப்துல் காதிர் ஜீலானி ஷரிஃப்”, “காதிரிய்யா தர்கா ஷரீஃப்”, “பக்தாத் ஷரீப்”, தர்ப் ஷரீஃப் என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இறப்பதற்கு முன்பே "என்னை இந்த இடத்தில் அடக்கம் செய்யுங்கள்" என தமக்கான இடத்தை தேர்வு செய்து வைத்திருந்தார்கள். அந்த இடம் மதரஸாவில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தங்கியிருந்த  அறைக்கு அருகிலேயே இருந்தது.

பொதுவாகவே இறைநேசர்கள், மதரஸாக்களை உருவாக்கியவர்கள், தரீகாக்களின் மிகப்பெரும் ஷைகுமார்கள் தாம் காலம் முழுவதும் அல்லாஹ் மற்றும் ரசூலை குறித்து பேசிக் கொண்டிருந்த இடத்திலேயே அடக்கம் செய்வது ஒரு மரபாகவே இருந்து வருகிறது. 

அந்த மரபின் அடிப்படையில்தான் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களும் அடக்கம் செய்யப்பட்டார்கள்; நபிமார்கள் அனைவரும் அப்படித்தான் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு தான் வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவின் நிறுவனர் அஃலா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் மதரஸாவின் வளாகத்திற்கு உள்ளாகவே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

அவ்வாறே பொதக்குடி அந் நூருல் மஹம்மதிய்யா மதரஸாவின் நிறுவனர் அஃலா ஹள்ரத் அப்துல் கரீம் (ரஹ்) அவர்களும், 

நீடூர் நெய்வாசல் மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா நிறுவனர் அப்துல் கரீம் பாகவி (ரஹ்) அவர்களும், 

லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் நீண்ட கால பேராசிரியர் அல்லாமா ஜியாவுதீன் அஹமது அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்களும் மதரஸாவின் வளாகத்திற்கு உள்ளாகவே அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் மாணவர்கள், சீடர்கள் எப்பொழுதும் போல் தம்மை மதரஸாவிலேயே வந்து ஜியாரத்து செய்ய வேண்டும் என்பதற்காகவே இங்கு அடக்கம் செய்ய சொல்லி இருக்கிறார்கள் என்பதே உண்மை. 

அந்த இடம் ஏற்கனவே குர்ஆன் ஓதப்படக்கூடிய, ஹதீஸ், ஃபிக்ஹு, தஸவ்வுஃப் ஆகியன கற்பிக்கப் படக்கூடிய, அல்லாஹ்வின் நினைவோடு இருக்கக்கூடிய இடமாகவே இருப்பதால் அங்கே தம்மை அடக்கம் செய்ய சொல்லி இருக்கிறார்கள். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அடக்கம் செய்யப்படும் இடத்தை மாணவர்களும் பொதுமக்களும் தேர்வு செய்த பிறகு அதை அன்றைய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அந்த இடத்தை அவர்களின் பேரில் வக்ஃபு செய்தது.

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்