நான்' மறையும் புனித தருணம்

'நான்' மறையும் புனித தருணம்
================================
நேற்றைய தொடர்ச்சி.....56

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் 
=====================================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;

பகா - அல்லாஹ்வின் நினைவில் நிலைத்திருக்கும் நிலை குறித்து இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு அவர்கள் பகா - அல்லாஹ்வின்  நினைவில் நிலைத்திருக்கும் நிலை என்பது லிகா - அல்லாஹ்வை சந்திக்கும் நேரமாகும். 

லிகா-  அல்லாஹ்வை சந்திக்கும் நேரம் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடும்; அல்லது அதை விடவும் வேகமாக நிகழ்ந்து முடிந்து விடும். 

அந்த சந்திப்பை பெற்றவர்களுக்கு ஓர் அடையாளம் உண்டு. அல்லாஹ்வை அவர்கள் சந்திக்கும் போது அவர்கள் அங்கு இல்லாமல் போய்விடுவார்கள். 

அதாவது தான் யார்? தான் எங்கு இருக்கிறோம்? என்பது போன்ற எந்த உணர்வுகளும் இல்லாமல் அல்லாஹுவை சந்திக்கிறோம் என்கிற ஒரே மன நிலையில் மட்டுமே இருப்பார்கள். 

அல்லாஹ்வை நீங்கள் நினைத்தால் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவராக ஆகிறீர். 

அல்லாஹ் உங்களை நினைத்தால் அப்போது நீங்கள் அல்லாஹ்வின் நேசத்திற்கு உரியவராக ஆகிவிடுகிறீர்.

மக்களை நீ பார்த்துக் கொண்டிருக்கும் வரை உன்னை நீ பார்க்க முடியாது.

உன்னை நீ பார்க்கத் தொடங்கி விட்டால் உன் ரப்பை உன்னால் பார்க்க இயலாது. 

எனவே மக்களையும் உன்னையும் பார்க்காத நிலையை நீ அடையும் பொழுது தான் அல்லாஹ்வை நீ பார்க்கும் நிலையை அடைவாய்.

அல்லாஹ்வோடு இருக்கும்போது படைப்புகளை மறந்து விடு. 

மக்களோடு இருக்கும்போது உனக்குள் இருக்கும் 'நான்' என்பதை மறந்து இரு.

இவ்வாறு இருக்காதவர்கள் குழப்பங்களிலேயே நீடித்திருப்பார்கள். 

அத்தகையவர்களுடைய அனைத்து காரியங்களும் சிதறிவிடும்.

ஒரு மனிதன் மக்களோடு இரண்டறக் கலந்து வாழும் பொழுது பொதுமக்களிடம் உள்ள நற்பண்புகளையும் இறையச்சத்தையும் கூர்ந்து கவனித்து அதை தம் வாழ்விலும் கொண்டு வர வேண்டும்.

அன்றாட வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் தமது அன்றாட வேலைகளும், இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன; 

இவற்றில் இறைகடமைகளுக்கு முக்கியத்துவமும் முதன்மை துவமும் கொடுத்து செவ்வையாக செய்து முடிக்க வேண்டும்.

இறைவன் தடுத்திருப்பவற்றை முழுமையாக விலகி வாழ வேண்டும்.

மனிதனுக்கு இரண்டு கடமைகள் இருக்கின்றன; ஒன்று; தனக்கும் இறைவனுக்குமான ஒரு கடமை.

இரண்டு தனக்கும் தன்னோடு வாழும் சக மனிதர்களுக்கு செய்ய வேண்டிய  கடமை.

இந்த இரண்டு கடமைகளும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும்; ஏனென்றால் மனிதர்கள் நடுநிலையை கையாள வேண்டும்.

தனக்கென ஒரு விருப்பம், தனது ஆசை, நான் என்ற அகங்காரம் ஆகியன இல்லாமல் ஒரு வேலையை செய்யத் தொடங்கினால் அதில் எந்த குறுக்கிடும் இல்லாமல் அல்லாஹ் வேலையை முடித்து தருவான்.

அல்லாஹ்விற்காக வேண்டி மனத்தூய்மையோடும் மன ஓர் மையோடும் அற்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டால் நாம் செய்ய நினைத்த காரியம் முழுமையாக செய்து முடிக்க இயலும்.

ஒரு மனிதன் மனதார நற்செயல்களை  செய்தால் அவன் உள்ளுணர்வால் வழிகாட்டப்படுவான். ஆழ் மனதில் ஆன்மீக உணர்வுகளை உணரத் தொடங்குவான்.

தொடரும்.......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்