10,00000 / 00 பேரில் ஒருவர் அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள்

10,00000 / 00 பேரில் 
ஒருவர் அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் 
=====================================

💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 12 | தொடர் பரப்புரை  🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

நேற்று பெரம்பலூர் மௌலானா பள்ளிவாசலில் பெரம்பலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் விருது வழங்கும் விழா நடைபெற்றது; அதில் உரையாற்றிய சில உலமாக்களின் கருத்தும் தனிப்பட்ட முறையில் சில ஆலிம்கள் சொன்ன கருத்தும் மன்பயீ ஆலிம்கள் அறிய வேண்டிய தகவலாக இருந்ததால் உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியை மிகச் சிறப்பாக நடத்தி வந்த போது, அது சகோதர சமயத்தவர்களையும் சென்றடைந்தது. 

சிதம்பரம், காட்டுமன்னார்குடி, கடலூர், பாண்டிச்சேரி பழைய தஞ்சை மாவட்டம் முழுவதிலும் இருந்து பல சமயத்தவர்களும் ஹள்ரத் அவர்களிடம் வந்து தமது சந்தேகங்களை கேட்டுச் செல்வார்கள். அவர்களை சந்தித்து அவர்களின் ஆசியைப் பெற்றுச் செல்வார்கள்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து சில அறிஞர்கள், இஸ்லாத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் வந்து விரிவான கேள்விகளை கேட்பார்கள்; ஹள்ரத் அவர்கள் வழங்கும் பதில்களை கேட்டு திருப்தியோடு திரும்புவார்கள். பலர் இஸ்லாத்தை தழுவினார்கள்.

சிலர் ஹள்ரத் அவர்களின் புகழ் ஓங்குவதை மங்கச் செய்யும் வகையில் கேள்விகளைக் கேட்டு சிறுமைப்படுத்திட நினைத்து சிலர் கேள்விகளை கேட்டார்கள்; அவர்கள் வியந்து போகும் அளவிற்கு பதில் அளித்து அவர்களை தெளிவடையச் செய்தும் திகைப்போடும் திரும்பிச் செல்ல வைப்பார்கள்.

ஹள்ரத் அவர்களுக்கு இருந்த அறிவு பத்து லட்சத்தில் ஒருவருக்கு இருக்கலாம்; அந்த அளவிற்கு சமயோஜித புத்தியும் விரிவான நுண்ணறிவும் பெற்றிருந்தார்கள்.

நான் ஓத வந்த வருடத்தில் ஆறாவது ஜும்ராவிற்கு அவர்களிடம் பாடம் இல்லை; ஆனாலும் அவர்கள் எனக்கு ஆசிரியர் தான். 

நான் ஆறாவது ஜும்ரா ஓதும் பொழுது ஹள்ரத் அவர்கள் இறந்து விட்டார்கள்; அன்று வானமும் அழுதது லால்பேட்டை நகரத்தில் வாழ்ந்த அனைவரும் அழுதார்கள்; அன்று அழுகாத கண்கள் எதுவும் இருந்திருக்காது.

மவ்லவி, N.A. அப்துல் பஷீர் மன்பயீ ஹள்ரத் 
பெரிய வடகரை பெரம்பலூர் மாவட்டம். 

மௌலானா முஹம்மது ஜக்கரியா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் இறந்த நாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆலிம்களும், அரசியல் தலைவர்களும், செல்வந்தர்களும், மாணவர்களும் அலைகடலென திரண்டு வந்திருந்தார்கள். 

இரங்கல் கூட்டத்தில் உரையாற்ற யாரை அழைப்பது ? யாரை விடுவது? என்கிற அளவிற்கு பல அரபுக் கல்லூரிகளின் முதல்வர்களும், அரசியல் பிரமுகர்களும் திரும்பிய திசை எல்லாம் தெரிந்தார்கள். 

அப்பொழுது மர்ஹூம் கலீல் அஹமது கீரனூரி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். 

அதில், "யார் அமானி ஹள்ரத் ரஹ் அவர்களுடைய மாணவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மட்டும் இங்கே உரையாற்றுவது" என முடிவு செய்யப்பட்டது. 

அவ்வாறு முடிவானதில் கலீல் அஹ்மது கீரனூரீ அவர்களும், சென்னை புரசைவாக்கம் கே. ஏ. நிஜாமுதீன் ஹள்ரத் அவர்களும், பெரம்பலூர் அணுகுண்டு மொலானா என்று சொல்லப்படும் ஷரஃபுத்தீன் மன்பயீ ஹள்ரத் அவர்களும் உரையாற்றுவது என முடிவு செய்யப்பட்டது. 

அவ்வாறே மூவரும் உரையாற்றினார்கள்; ஆனால் வேறு சிலரும் பிறகு உரையாற்றினார்கள். 

ஆனால் உரையாற்றுவதற்கு முதல் தகுதி படைத்தவர்கள் இவர்கள்தான் என வரையறுக்கப்பட்டதும் அதில் நான் ஒருவனாக இருந்ததும் எனக்கு கிடைத்த பாக்கியம் என எனது தந்தை  ஷறஃபுதீன் ஹள்ரத் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள்" மகனார் மவ்லவி, S. சதக்கத்துல்லாஹ் தாவூதி ஹள்ரத் அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டார்கள்.

•°•°•°•°•°•

3000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மன்பயீ ஆலிம்கள் பல நாடு நகரங்களில் பல அரிய சேவைகளை செய்து வருகிறார்கள்; அவர்கள் சேவைகள் அனைத்தையும் எழுதியோ சொல்லியோ குவித்து விட முடியாது. 

ஆனாலும் எவ்வளவு பேர் புத்தகங்கள் எழுதி இருக்கிறார்கள்? மதரஸாக்களை தொடங்கி இருக்கிறார்கள்? ஸ்கூல்களை உருவாக்கி இருக்கிறார்கள்? சமூகத்தில் பல நிரந்தர சதக்கத்துன் ஜாரியாவான அமல்களை தோற்றுவித்திருக்கிறார்கள் என்பதை கணிக்க வேண்டும்.

மர்ஹூம், K.A. நிஜாமுதீன் ஹள்ரத், கலீல் அஹமது கீரனூரி ஹள்ரத், B.M. சுல்தான் ஹள்ரத் போன்ற மன்பயீ ஆலிம்கள் மட்டும் தமிழ் உலகத்திற்கு ஒரு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் அரபு மொழிகளில் நூல்களை எழுதி சமூகத்திற்கு பொதுவுடமை ஆக்கியிருக்கிறார்கள். சமூகம் மிகப் பெரும் பயன்களை அடைந்திருக்கிறது; மேலும் அடைந்து வருகிறது.

ஹுஸைன் முஹம்மது மன்பயீ ஹள்ரத், ஹபீப் முஹம்மது ஹள்ரத் போன்ற பல நூறு மன்பயீ ஆலிம்கள் ஜும்ரா மதரஸாக்கள் பெண்கள் மதரஸாக்கள், ஹிஃப்ழு மதரஸாக்கள், ஸ்கூல்கள் என நிறுவி இருக்கிறார்கள்.

காலம் சென்ற ஆலிம்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னித்து உயர்ந்த அந்தஸ்துகளை வழங்குவானாக! ஆமீன்!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்