ஜாமிஆ மன்பவுல் அன்வாருக்கு50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதம் பேசும் மௌன வரலாறு ==================================

ஜாமிஆ மன்பவுல் அன்வாருக்கு
50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதம் பேசும் மௌன வரலாறு 
====================================

வாட்ஸ்அப் காலத்தில் வாசிக்க வேண்டிய ஒரு கடிதம்!

இந்தக் கடிதம் எழுதப்பட்டு ஐம்பது ஆண்டுகள் கடந்து விட்டது!

இந்தக் கடிதம் இரண்டு தலைமுறைகளை தாண்டிய குரல்!

ஒவ்வொரு கடிதமும் ஒரு கருத்தை, ஒரு கதையை, அந்தந்த கால வரலாறுகளை, சந்தோசங்களை, சோகங்களை தாங்கி நிற்கும்; அப்படி பல நிகழ்வுகளை தாங்கி நிற்கும் ஒரு கடிதம் தான் இது. 

மேற்கண்ட கடிதத்தில் இருக்கும் செய்தி இதுதான்!

٧٨٦

8 . 10 . 76 

பரங்கிப்பேட்டை .

 
கணம் மேன்மை தாங்கிய ஹஜ்ரத் கிப்லா நாயிப் நாஜிர் அவர்களுக்கு தங்கள் அன்புள்ள மாணவன் ஷேக் முஹம்மது சுல்தான் உடைய அஸ்ஸலாமு அலைக்கும் நலம் நலம் அறிய அவா.... நிற்க .......
நமது ஊர் பையன் விஷயமாக நான் தங்களுக்கு ரமலானில் கடிதம் எழுதி இருந்தேன் ஹீப்ஜு வகுப்பில் சேர்த்து கொள்ளும் படியாக.... 

அதற்கு தாங்கள் "இடமில்லை" என்று பதில் எழுதி விட்டீர்கள்; 

இருப்பினும் நான் தங்களை நேரில் வந்து சந்திக்க நினைத்தபோது எனக்கு உடம்பு கொஞ்சம் சுகக் குறைவு ஏற்பட்டு விட்டது. எனவே வர முடியவில்லை 

எனக்கு பதிலாக நமது ஊர் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அவர்களுடன் மேற்படி பையன் கலீமுல்லா என்பவரை அனுப்பி இருக்கிறேன்.

தாங்கள் பார்த்து தயவுகூர்ந்து ஹிப்ஜு அல்லது அரபி வகுப்பிலாவது சேர்த்துக் கொள்ளும்படி மிக மிக தாழ்மையுடன் வேண்டி விரும்பி தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் மேற்படி பையன் குர்ஆன் ஷரீஃப் நன்றாக ஓதி முடிக்கும், அரபுத் தமிழ் கிதாபுகளும் ஓதி முடித்து இருக்கிறான் என்பதை நான் உறுதி கூறுகிறேன். 

மற்றவை பின் 
வஸ்ஸலாம் 
இப்படிக்கு 
ஷைகு முஹம்மது சுல்தான் அஃபா அன்ஹு

8/10/76

கடிதத்தின் கவரில் உள்ள வாசகங்கள் 

மௌலானா மௌலவி முஹம்மது ஜக்கரியா ஹஜ்ரத் AVL  நாயீப் நாஜிர் மதரஸா மன்பவுல் அன்வார் லால்பேட்டை

மேற்கண்ட கடிதம் கூறும் வரலாற்று உண்மைகள் இதுதான்! 

1.  1976 களில் மர்ஹூம் முஹம்மது ஜக்கரியா ஹள்ரத் கிப்லா அவர்கள் கானலில்லாஹ் அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்கள் காலத்தில் நாயிப் நாஜிர் - துணை முதல்வராக இருந்திருக்கிறார்கள்.

2.  ஹிஃப்ழு பிரிவில் போதிய அளவு மாணவர்கள் இருக்கிறார்கள்; புதிதாக மாணவர்களை சேர்க்கும் அளவிற்கு  இடம் இல்லை என்று சொல்லப்படுகிற அளவிற்கு மாணவர்களின் வருகை அதிகமாக இருந்திருக்கிறது என தெரிய வருகிறது.

3.  நேரில் வந்து ஜக்கரியா ஹள்ரத் கிப்லா அவர்களை பார்த்து பேசி சமாதானப்படுத்தி, எப்படியாகிலும் மாணவரை சேர்த்து விட வேண்டும் என்கிற மனநிலையில் இந்த கடிதத்தை எழுதிய மவ்லவி ஷேக் முஹம்மது சுல்தான் அவர்கள் இருந்திருக்கிறார்கள் எனவும் தெரிய வருகிறது.

4.  கலீமுல்லாஹ் என்பவரை எப்படியாகிலும் மன்பவுல் அன்வாரில் ஹிஃப்ழு பிரிவில் சேர்த்து விட வேண்டும் என்கிற முனைப்பில் தமதூர் முத்தவல்லியவே ரெக்கமண்டேஷன் - பரிந்துரை செய்ய அனுப்பி வைத்திருக்கிறார்.

5.  நாங்கள் கேட்கிற கோர்ஸ் (ஹிஃப்ழு பிரிவு ) கிடைக்காவிட்டாலும் அங்கு இருக்கிற கோர்ஸில் தயவு செய்து சேர்த்துக் கொள்ளுங்கள் என அவர் தாழ்மையுடன் வேண்டி விரும்பி கடிதம் எழுதி இருக்கிறார்.

6.  அந்த மாணவருடைய சிறப்பை சொல்லும் வண்ணம், "இவர் முழுமையாக குர்ஆன் ஓதியிருக்கிறார்; அரபு தமிழ் கிதாபுகள்  கூட ஓதியிருக்கிறார்" அதனால் சேர்த்துக் கொள்ளுங்கள் என மேலும் தாழ்மையோடு கேட்டுக் கொண்டிருக்கிறார். 

7.  உடல் குணமான பிறகு நேரடியாக நான் வந்து உங்களை சந்திப்பேன் என்பது போல் "மற்றவை பின்" என குறிப்பிட்டு இருக்கிறார். 

அதாவது என் முகதாட்சனைக்காக சேர்த்துக் கொள்ளுங்கள் என்பது போல் இந்த கடிதம் அமையப்பெற்றுள்ளது. 

அன்று மன்பவுல் அன்வார் மதரஸாவில் இடப்பற்றாக்குறை நிலவும் அளவிற்கு மாணவர்களின் வருகை அதிகமாக இருந்திருக்கிறது என்பதை இந்த கடிதம் தெளிவுபடுத்துகிறது.  

கடிதம் எழுதியவர் பரங்கிப்பேட்டையில் பணி செய்த ஆலிம் ஆவார்; அவருடைய கையொப்பம் கைதேர்ந்த ஒரு ஆலிமுடைய கையொப்பம் போல் தெரிகிறது. 

ஷேக் முஹம்மது சுல்தான் என்கிற  பெயரில் 6/12/1965  அன்று 297 வது நபராக புதுச்சேரியை சேர்ந்த K. ஷேக் முஹம்மது சுல்தான் என்பவர் பட்டம் பெற்றிருக்கிறார் என தெரிய வருகிறது.

அதனால்தான் இந்த மவ்லவி தனது  பேராசிரியரிடம் உரிமையோடு தனக்கு ஒரு சீட் கல்லூரியில் இடம் ஒதுக்கும்படி கேட்டு இருக்கிறார் என புரிந்து கொள்ள முடிகிறது.

ஆசிரியருக்கும் மாணவருக்கும் அல்லாஹ் உயர்ந்த தரஜாக்களை வழங்கி சொர்க்கத்தில் சேர்த்து வைப்பானாக!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்