நீதிமன்றத்தை வென்ற உளவியல் ஞானம்
நீதிமன்றத்தை வென்ற
உளவியல் ஞானம்
நேற்றைய தொடர்ச்சி.....59
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்
=====================================
பக்தாத் நகரத்தில் பிரபல்யமான ஞானி ஒருவர் இருந்தார்; அவர் அரசாங்க நிதியை திருடிவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்திற்கு முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருந்தார்.
அவர் நல்லவர்தான் என சொல்ல எவரும் முன்வரவில்லை; இந்நிலையில் அந்த ஞானி தன் மாணவரான இளம் வயதில் இருந்த இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களை தனக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
மறுநாள் நீதிமன்றத்தில் ஞானி அவர்கள் குற்றவாளி கூண்டில் நின்றிருந்த போது இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "நீங்கள் உண்மையாளராக இருந்தால், உங்கள் முகம் அதன் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டுமே" என்று கூறினார்.
அதற்கு ஞானி, "எனக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இல்லை" என்று அப்ராணியாக கூறினார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் நீதிபதியை நோக்கி குற்றம் சாட்டப்பட்டவர் உண்மையான குற்றவாளியாக இருந்தால் அவரிடம் மூன்று மாற்றங்கள் ஏற்படும்.
ஒருவர் உண்மையான குற்றவாளியாக இருந்தால் அவர் கண்களில் பயம் தெரியும்.
இரண்டு: அவர் பொய் சொன்னால் அவரது நெற்றியில் வியர்த்து கொட்டும்.
மூன்று: அவர் உண்மையாளராக இருந்தால் அவரது மூச்சு சீராகவும், அமைதியாகவும், நிதானமாகவும் வெளிப்படும்" என்று கூறினார்கள்.
நீதிபதி உட்பட அங்கிருந்த அனைவரும் அதை ஏற்றுக் ஏற்றுக்கொண்டதின் அடையாளமாக தலையை அசைத்தார்கள்.
குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஞானியை பார்த்து, "நீங்கள் உங்கள் மூச்சை கட்டுப்படுத்தாமல், அடக்காமல் இயல்பாக விடுங்கள்" என்று கூறினார்.
அவர் அவ்வாறே பயமின்றி நடுக்கமின்றி மூச்சு விட்டார்.
இவர் குற்றமற்றவர் இவர் குற்றவாளியாக இருந்திருந்தால் அவரின் குற்றம் அவரின் இதயத்தை அடைத்திருக்கும்; அதனால் அவர் நிதானமாக மூச்சு விடாமல் தடுமாறி இருப்பார்" என்று சொன்னதும் நீதிபதியின் முகம் அந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதது போல் காணப்பட்டது.
நீதிமன்றங்களுக்கு தேவை முகம் பாவனையில் அல்லவே சாட்சியங்கள் தானே!
இதனை மேலும் நிரூபணம் செய்ய இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அந்த ஞானியின் மாணவர்களை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்கள்; அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தின் வாசலில் நுழைந்தனர்.
அவர்களில் ஒரு மாணவர் பயந்து நடுங்கி கொண்டு உள்ளே நுழைந்தார்; இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "நீங்கள் தேடும் திருடன் இவர்தான்!" என சொல்லி ஒருவரை அடையாளப்படுத்தினார்.
பின்னர் அவரை அழைத்து விசாரித்த போது அவர் அந்த குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
நீதிபதி அவர்கள், "நீங்கள் எப்படி மனிதர்களின் மனதை இவ்வளவு துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறீர்" என்று கேட்டார்.
அதற்கு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "நான் மனிதர்களின் இதயங்களை படிப்பதில்லை; ஆனால் உண்மை வெளிப்படும் வழிகளை அறிந்திருக்கிறேன்; அறிவு என்பது மனிதனின் வெளிப்புறத்தில் தெரிவது அல்ல! ஒவ்வொருவருடைய எதார்த்தமான செயல்களில் வெளிப்படும்" என்று கூறினார்கள்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை பக்தாத் மக்கள், "அவர் ஞானி அல்ல! இதயங்களை படித்தவர்" என்று பேசிக் கொண்டார்கள்.
நூல்: பஹ்ஜதுல் அஸ்ரார்
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஞானியை உளவியல் - psychology அடிப்படையில் அவரின் உடல் மொழி, முக அமைதி, கண்களின் அசைவு ஆகியவற்றைப் பார்த்து அவரின் உண்மை நிலையை புரிந்து கொண்ட பிறகுதான் அவருக்காக வாதாட வழக்காடு மன்றம் சென்றார்.
உளவியல் அறிவும் ஆழமான மன உணர்வும் ஒன்றிணைந்த பார்வையின் மூலம் அவர் நிரபராதி என்பதை புரிந்து கொண்டார்.
நீதிமன்றத்தில் நிரபராதியை நிரபராதி என அடையாளப்படுத்தியது மட்டுமின்றி உண்மையான குற்றவாளியையும் காட்டிக் கொடுத்தார்.
மேலும் நீதிமன்றங்களில் இருப்பவர்கள் தெரிந்திருக்க வேண்டிய அழகிய அறிவுரையையும், நெறியையும் அழகான முறையில் வழங்கினார்.
"உண்மை ஆவணங்களில் இருக்காது; மனிதனின் உள்ளத்தில் இருந்து வெளிவரும் சிணுங்கல்களில் இருக்கும்" என்று வெளிப்படுத்தினார்.
படித்துவிட்டால் ஞானம் கிடைத்து விடாது; நெருக்கடியான தருணங்களில் எதிராளியின் உள்ளத்துக்குள் ஊடுருவி அவரின் சிந்தனை ஓட்டத்தை புரிந்து செயல்படுவது தான் ஞானம் என்பதை இமாம் ஜீலானி அவர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள்.
Comments
Post a Comment