ரியாவின் நிழலில் நீங்களுமா?
==============================
நேற்றைய தொடர்ச்சி......60
மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள்
=====================================
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது மஹல்லா பள்ளிவாசலில் தனியாக நஃபில் தொழுது கொண்டிருந்தார்கள்.
அவர்களுடன் வந்திருந்த அவருடைய முரீத் - சீடர் வெளியே நின்று இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அந்த சீடரின் மனதில், "எனது ஷைகு அவர்கள் உலகையே அறிந்த ஞானி! அவருடைய தொழுகை பூமியில் தொழுப்படுகிற தொழுகைகளில் ஆகச் சிறந்தது" என்று எண்ணினார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தொழுகையை முடித்த பின் சீடர் அருகே வந்து, "நீ என்ன நினைத்தாயோ அதை நான் உணர்ந்தேன்; அது உண்மை என்றால் என் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது" என்று கூறினார்கள்.
சீடர் அதிர்ச்சி அடைந்து, "ஏன் உங்களுடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது?" என பணிவோடு கேட்டார்.
இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "நான் தொழுவதை பிற மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் - ரியா என் இதயத்தில் கண நேரம் உதித்து மறைந்தது;
தொழுகையில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் நினைவு கொள்ளக்கூடாது;
பொதுவாக தொழும் போது உடல் கிப்லாவை நோக்கியும், இதயம் கிப்லாவின் இறைவனை நோக்கியும் கவனமாக இருக்க வேண்டும்;
தொழுகை, குனிவது நிமிர்வது போன்ற செயல்களால் ஆனதல்ல! தொழும்போது அல்லாஹ்வின் நினைவால் இதயம் நிரம்பி இருக்க வேண்டும்" என்று கூறினார்கள்.
முரீத் - சீடர் இதனைக் கேட்டதும், நான் தொழுகையை தொடங்குவதற்கு முன் என் இதயத்தை முழுமையாக சுத்தப்படுத்திக் கொண்டுதான் தொழுகையில் ஈடுபடுவேன் என்று கூறினார்.
நூல் : பஹ்ஜத்துல் அஸ்ரார், ஸியர் அல் அஸ்ரார்.
ஒரு செயலை எவ்வளவு அழகாக செய்தாலும், எவ்வளவு நேர்த்தியாக செய்தாலும் அது அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கின்றேன் என்கிற எண்ணம் இல்லாமல் போனால் அனைத்தும் பாழாகிவிடும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மிகப்பெரும் இறைநேசர்களின் இதயத்திலேயே ரியா - பிறர் பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் நுழைந்து விடும்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?
தொடரும்........
Comments
Post a Comment