நீதி தவறிய நீதிபதி

நீதி தவறிய நீதிபதி 
====================

நேற்றைய தொடர்ச்சி......61

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் 
=====================================

பக்தாத் நகரத்தில் மிகப்பெரும் செல்வந்தர் ஒருவர் இருந்தார்; அவரிடம் நம்பிக்கைக்குறிய கணக்காளர் ஒருவர் வரவு செலவுகளை கண்காணிக்கும் வேலையை செய்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் செல்வந்தர், "என் கணக்காளர் என் செல்வங்களை கையாடல் செய்து விட்டார்" என காவல்துறை வசம் புகாரளித்தார்.

காவலர்கள் அவரை கைது செய்து விசாரித்தார்கள்; அவர், "நான் எந்த குற்றமும் செய்யவில்லை; நான் யாருடைய பணத்தையும் திருடவில்லை" என்று கூறினார். 

செல்வந்தருடைய பேச்சை மட்டுமே நம்பி அரசாங்க அதிகாரிகளும், நீதிமன்றத்தின் நீதிபதியும் மேற்கொண்டு விசாரிக்காமல் தண்டனை வழங்க நாள் குறித்து விட்டார்கள்.

கணக்கரை யாரும் நம்பாத நிலையில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அவரை நம்பினார்கள். "சகோதரரே! அல்லாஹ்வின் மீது நம்பிக்கையோடு இருங்கள் ; பொய்க்கு  ஆயுள் நீளமில்லை; உண்மை வெற்றி பெறும்" என்று கூறினார்கள். 

மறுநாள் நீதிமன்றத்திற்கு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் சென்றபோது நீதிபதி அவர்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களை பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்க முனைந்தார்.

இதனை கவனித்த இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "உண்மையை காப்பாற்றுவோர் எனக்காக எழுந்து நிற்கலாம்; அநியாயத்திற்கு துணை போவோர் என்னை வரவேற்கத் தேவையில்லை" என சாடினார்.

மௌனமாக இருந்த நீதிமன்றத்தை கலைத்த இமாம்  ஜீலானி (ரஹ்) அவர்கள் செல்வந்தரை நோக்கி, "நீங்கள் நேர்மையானவர் என நான் அறியவில்லை; உங்களைக் குறித்து விசாரித்ததில் உங்களைப் பற்றி எவரும் நல்லவராக சொல்லவில்லை" என்று சொன்னதும் அவருக்கு வியர்த்து கொட்டியது.

மீண்டும் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "உமது கணக்கர் கையாடல் செய்து விட்டார் என்று சொல்கிறீர்களே! அந்த கையாடல் செய்யப்பட்ட பணம்  வரவு வந்ததற்காக கணக்கு எழுதி வைத்திருக்கிறீரா? யாரிடமிருந்து அந்தத் தொகை வந்தது என்ற ஆதாரம் இருக்கின்றதா?" என்று கேட்டார்கள்.

அவர், "இல்லை! நீங்கள் கேட்பது போன்ற எந்த ஆவணங்களும் என்னிடம் இல்லை; ஆனால் நேற்று நான் அவரிடத்தில் தான் கொடுத்து வைத்தேன்; மறுநாள் காலை வந்து காணும் போது இல்லை; அப்படியென்றால் இவர்தானே எடுத்திருக்க வேண்டும்?" என்று செல்வதர் கேட்டார்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "அலுவலகம் உங்கள் வீட்டில்தான் இருக்கின்றது; அவரும் நீங்களும் இருந்த இடத்தில் அவன் அந்த பணத்தை எடுத்து விட்டான் என்று நீங்கள் கூறுகிறீர்களே! அதை நிரூபிக்க ஏதேனும் ஆதாரங்கள் இருக்கின்றதா? இல்லைதானே? ஏன் அந்த பணத்தை நீங்களே எடுத்து இருக்கக் கூடாது? அந்த பழியை இவர் மீது சுமத்த கூடாது?" என்று கேட்டார்கள்.

உடனே அந்த செல்வந்தர், "செய்வதறியாது திகைத்துப் போய் விழி பிதுங்கி நின்றார்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "உன் வீட்டின் வலது புறத்தில் உள்ள மரத்திற்கு அருகில் ஏதோ புதைக்கப்பட்டு இருக்கிறதே! அது என்ன? அதை யார் புதைத்தது? என்று தாம் இல்ஹாம் மூலம் அறிந்த  (தமக்கு இறைவன் காட்டிக் கொடுத்த)தது குறித்து கேட்டார்கள்.

செல்வந்தர் நடுநடுங்கி போனார்; ஒரு வார்த்தையும் பதில் பேச இயலவில்லை; அவர், "இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களே! அந்த பணத்தை நான் தான் மறைத்து வைத்தேன்; வேலைக்காரன் மீது பொய்யாக குற்றம் சுமத்தினேன்; என்னை மன்னித்து விடுங்கள்" என்று சொன்னதும் நீதிபதியும் நீதிமன்றத்தில் இருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் நீதிபதியை நோக்கி, " நீதிபதியே நீதி தவறினால் அது உன்னையும் உன் குடும்பத்தினரையும் அழித்துவிடும்; உண்மைகளிடம் நீ அஞ்சிக்கொள்! இல்லையென்றால் நீ அஞ்சும் படியான சோதனைகள் உன்னை தொடும்" என்று எச்சரித்தார்கள்.

நூல் : கலாயிதுல் ஜவாஹிர்

ஒரு நீதிபதி செய்யும் தவறு தனிப்பட்ட பிழை அல்ல!
அது ஒரு குடும்பத்தையும், ஒரு குடியையும், ஒரு சமுதாயத்தையும் சீர்குலைக்கும் விதை.

ஆதாரமில்லாத ஒரு பொய்யான குற்றச்சாட்டு ஒரு நிரபராதியின் வாழ்வையே அழித்துவிடும்.

ஆனால் உண்மையை நேசிப்பவர்களை இறைவன் ஒருபோதும் தனியாக விடமாட்டான்.
இல்ஹாம் - மனஉதிப்பு, உளவியல் தெளிவு போன்ற எந்த வழியிலாகிலும் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர உதவி செய்வான்.

தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்