கருணையால் பொங்கிய கரங்கள் - தர்மம்

கருணையால் 
பொங்கிய கரங்கள் - தர்மம்
============================

நேற்றைய தொடர்ச்சி.....62

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் 
=====================================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தாம் வாழும்பொழுது இரண்டு வகையான சமுதாயத்தினரை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

ஒன்று: மாணவர்களுக்கு நல்ல கல்வி வழங்குவதின் மூலம் உருவான சமுதாயம். 

மற்றொருபுறம் தமது ஆன்மீக ஞான கல்வியை தினமும் மக்களுக்கு போதித்து வந்தார்கள். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான முரீதீன்கள் உருவானார்கள்.

இந்த இரண்டு நற்பணிகளும் இவர்கள் நடத்திய காதரிய்யா மதரஸாவிலும் அதன் ஒரு பகுதியிலிருந்த காங்காவிலும் ( ஆன்மீகப் பயிற்சியகத்ததிலும்)
நடைபெற்று வந்தது.

எனவே இந்த இரண்டு இடங்களிலும் கற்பவர்களுக்கு  உணவு, உறைவிடம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

ஒவ்வொரு நேரமும் ஆயிரக்கணக்கானோர் உண்டு மகிழ்ந்தனர்.

இந்நிலையில் ஒரு வருடம் மிகவும் கொடூரமான பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பசி பட்டினியால் பரிதவித்து வந்தார்கள்; இந்த நேரத்திலும் கூட தம்மிடம் பயில்வோருக்கும், தம்மைத் தேடி வருவோருக்கும், வழிப்போக்கர்களுக்கும் குறைவின்றி உணவுகளை வழங்கிக் கொண்டே இருந்தார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் காங்கா -  ஆன்மீகப் பயிற்சியகத்திற்கு  சென்றால் உணவு கிடைக்கும் என்கிற தகவல்களை அறிந்த ஏழை எளியவர்கள்  தினமும் காங்காவிற்கு வரத் தொடங்கினர். 

இந்நிலையில் ஒரு நாள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தும் சமைப்பதற்குத் தேவையான ஒரு தானியமும் கைவசம் இல்லை.

காங்காவின் சமையல் பொறுப்பாளர்கள் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் வந்து, "ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள்; இன்னும் மக்கள்  கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்; குழந்தைகளும் சிறுவர்களும் பசி கொடுமையை தாழ முடியாமல் அமர்ந்திருக்கிறார்கள்; அவர்களைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கின்றது; நாம் என்ன செய்வது?" என்று கேட்டு நின்றார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "உணவு அளிப்பவன் அல்லாஹ்தான்! எதற்கும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்; அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லுங்கள்; அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகள் நடக்கும்" என்று உறுதியோடு சொன்னது மட்டுமின்றி அவர்களை நிம்மதியாகப் போகச் சொன்னார்கள்.

ஆனால் சமையலறையில் ஒரு கோதுமையோ மசாலா சாமான்களோ இறைச்சியோ எதுவும் இல்லை.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தாம் தொழும் இடத்தில் அமர்ந்து, "இறைவா! நீயே அருளாளன், அன்பாளன், உன் விருந்தினர்கள் என் இல்லம் தேடி வந்திருக்கிறார்கள், இங்கே போனால் உணவு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் வந்திருக்கிறார்கள்; அவர்களின் நம்பிக்கையை நனவாக்குவாயாக!" என்று அழுது பிரார்த்தனை செய்தார்கள்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் அழுது பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் பொழுதே காங்காவின் வாசலில் பல வண்டிகளில் தானியங்களும், இறைச்சிகளும், மசாலா சாமான்களும் மூட்டை மூட்டைகளாக வந்து நின்றன.

வந்திருந்தவர்களில் ஒருவர் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் வந்து, "யா ஸய்யிதீ! நேற்று இரவு ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவில் ஒருவர் "உங்களால் இயன்ற அளவு உணவுப் பொருட்களை எடுத்துச் சென்று இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வசம் ஒப்படையுங்கள்" என்று பலமுறை கனவு கண்டேன். 

விடிந்ததும் வண்டிகளை தயார் செய்து, உணவு பொருட்களை மூட்டைகளில் கட்டி ஏற்றிக்கொண்டு வந்து சேர்வதற்கு இவ்வளவு நேரம் ஆகிவிட்டது என்னை மன்னித்து விடுங்கள்" என வந்திருந்த செல்வந்தர் கூறினார். 

அவ்வளவுதான் அவ்வளவு மூட்டைகளும் சமையலறைக்கு சென்றன; அங்கே பசியோடு இருந்த ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு வேலையாக செய்தார்கள்; ஒரு சில மணித்துளிகளில் 1200க்கும் மேற்பட்ட மனிதர்கள் வயிறார சாப்பிட்டது மட்டுமின்றி தாம் கொண்டு வந்திருந்த பாத்திரங்களிலும் பைகளிலும் அள்ளிச் சென்றார்கள்.

நூல்: பஹ்ஜதுல் அஸ்ரார் 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் நடத்திய மதரஸாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் 300 இல் இருந்து 400 நபர்கள் வரை உணவு உண்ணுவார்கள். 

இதற்குத் தேவையான பொருளாதாரத்தை தம்முடைய சொந்த  வருவாயிலிருந்தும் பிறர் கொடுப்பதை வைத்தும் தாராளமாக செலவு செய்வார்கள்.

பொதுவாகவே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வாரி வழங்கும் வள்ளல் குணம் படைத்தவர்கள் ஆவர்; தம்மிடம் யார் எதை கேட்டு வந்தாலும் அதை அப்படியே கொடுப்பது அவர்களின் வழமை. 

அவர்கள் தமக்கென எந்த செல்வத்தையும் சேமித்து வைத்துக் கொண்டதில்லை. அவர்கள் இறக்கும் பொழுதும் அதிகமாக எதையும் விட்டுச் செல்லவில்லை. 

தமது செலவினங்கள் போக தம்மிடம் மேல் மிச்சமாக இருக்கும் அனைத்து செல்வமும் ஏழைகளுக்கு உரிமையானது என்று சொன்னது மட்டுமின்றி சொன்னது போல் வாழ்ந்தும் காட்டினார்கள்.

நாளை நிறைவடையும்........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்