எனது சேமிப்பு மறக்க இயலாத நினைவுகள்!....
எனது சேமிப்பு
மறக்க இயலாத நினைவுகள்!....
💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 3 | தொடர் பரப்புரை 🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷
•°•°•°•°•°•°
1995 ஆம் ஆண்டு நீடூர் மிஸ்பாஹுல் ஹுதாவில் ஆறாவது வருடம் ஓதிக்கொண்டிருந்தேன். O.M ஹள்ரத் அவர்களின் கரங்களால் பட்டம் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
ஹள்ரத் அவர்கள் அந்த வருடம் மதரஸாவிலிருந்து விலகி சென்னை மந்தைவெளி பள்ளிவாசலில் இமாமாக சேர்ந்து விட்டதால் நீடூர் மதரஸாவில் ஓதிய என்னை போன்ற பட்ட வகுப்பு மாணவர்கள் சிதறினார்கள்.
அதில் ஆறு பேர் வேலூர் பாகியாத் ஸாலிஹாத்திற்கும் ஏழு பேர் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரிக்கும் வந்து சேர்ந்தோம்.
1. பாண்டிச்சேரி சுல்தான்பேட்டை முஹம்மது மூஸா மன்பயீ,
2. அய்யம்பேட்டை அபூபக்கர் சித்தீக் மன்பயீ,
3. ராஜகிரி மவ்லவி ஜவ்வாது அலி மன்பயீ,
4. தென்காசி வடகரை முஹம்மது ஜக்கரியா மன்பயீ,
5. தென்காசி வாவா நகரம் அப்துல் காதர் மன்பயீ,
6. சித்தூர் அபூபக்கர் சித்தீக் மன்பயீ ஆகிய ஆறு பேரும் நானும் வந்து சேர்ந்தோம்.
O.M. ஹள்ரத் அவர்களிடம், "நான் லால்பேட்டை செல்கிறேன்" என்று சொன்னவுடன் O.M. ஹள்ரத் அவர்கள், ஷைகுல் ஹதீஸ் அப்துல் ரஹ்மான் ஹள்ரத் அவர்களிடம் சொல்லி இருக்கிறேன்; நீ சென்று அவர்களைப் பார்!" என்று கூறினார்கள்.
நான் லால்பேட்டை சென்று ஷைகுல் ஹதீஸ் அவர்களை சந்தித்ததும் நீண்ட நேரம் என் குடும்பத்தினர் குறித்து விசாரித்து விட்டு ஷைகுல் ஃபிக்ஹ் அப்துல் ரப் ஹள்ரத் அவர்களிடம் பரீட்சைக்கு அனுப்பினார்கள். வாய்மொழி தேர்வில் வெற்றி பெற்று மதரஸாவில் சேர்க்கப்பட்டேன்.
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் மதரஸா குளத்திலும் வீராணம் ஏரியிலும் நீந்தி விளையாடி மறக்க இயலாத நினைவுகளை சேமித்துக் கொண்டேன்.
26/12/1996 அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ( இந்த வருடத்தில் ஜனவரி மாதம் ஒரு பட்டமளிப்பு விழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.)
அன்றைய தினம் எங்களுக்கு தலைப்பாகை கட்டிவிட O.M. ஹள்ரத் அவர்கள் வந்திருந்தார்கள்.
நாங்கள் ஏழு பேரும் 30-ஆம் எண் அறையில் இருந்தோம்! எங்கள் அனைவருக்கும் O.M. ஹள்ரத் அவர்கள் தலைப்பாகை கட்டிவிட்டு விசேஷமாக துஆ செய்தார்கள்.
தலைப்பாகை கட்டி விடும்பொழுதே "நீடூர் மிஸ்பாஹுல் ஹுதாவின் முன்னாள் முதல்வர் வந்திருக்கிறார் என்ற செய்தியை கேட்டு ஷம்சுல் மில்லத் அல்லாமா ஜக்கரியா ஹள்ரத் ரஹ் அவர்கள் எங்கள் அறைக்கு வந்தார்கள் .
O.M. ஹள்ரத் அவர்களை வரவேற்று டீ வாங்கி வரச் சொல்லி கொடுத்தார்கள்; பட்டமளிப்பு பேருரை நிகழ்த்தி விட்டுதான் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.
O.M. ஹள்ரத் அவர்கள் டீ குடித்த பிறகு சிறிது நேரம் ஷம்ஷுல் மில்லத் அல்லாமா ஜக்கரியா ஹள்ரத் ரஹ் அவர்களுடைய அறையில் அமர்ந்து பேசி விட்டு சென்றார்கள்.
அன்று O.M. ஹள்ரத் அவர்களுக்கு மயிலாடுதுறை அருகே ஏதோ ஒரு மதரஸாவில் பட்டமளிப்பு பேருரை இருந்தது.
O.M. ஹள்ரத் அவர்கள் வந்து சென்ற செய்தி மதரஸா முழுவதும் பரவியது மாணவர்கள் ஓடோடி வந்து முஸாஃபஹா செய்து கொண்டார்கள்;
ஷம்சுல் மில்லத் ஜக்கரியா ஹள்ரத் ரஹ் அவர்கள் என்னை பார்த்து, "வடகரையான் நீ அவ்ளோ பெரிய ஆளா உங்களைப் பார்ப்பதற்கு O.M. வந்திருக்கிறார்? " என்று சொல்லிக்கொண்டே தோளில் கையை போட்டு தட்டிக் கொடுத்தார்கள்.
பின்னர் நாங்கள் எங்கள் அறையில் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தபோது எனது சிறிய தந்தை மவ்லானா B. முஹம்மது சுல்தான் ஃபாஸில் மன்பயீ , தேவ்பந்தி - (பாண்டிச்சேரி கோட்டை குப்பம் ஜாமிஅதுர் ரப்பானியா அரபுக் கல்லூரியின் முதல்வர்) அவர்கள் என்னைத் தேடி முதல் மாடியில் உள்ள தாருல் ஹதீஸ் கூடத்தில் நடந்து வரும் பொழுது ஷம்சுல் மில்லத்
ஜக்கரியா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் வீட்டிற்குச் செல்ல தம் அரை வாசலை மூடிக் கொண்டு வெளியே வந்தார்கள் .
எனது சிறிய தந்தையை பார்த்ததும் "வாங்க வாங்க சுல்தான் என சொல்லி முஸாஃபஹா செய்து வரவேற்று மீண்டும் தன் அறைக்குள் அழைத்துச் சென்றார்கள்.
நானும் ஓரமாக நின்றிருந்தேன்; எனது சிறிய தந்தை அவர்கள், "எனது அண்ணன் மகன் கலீல் ரஹ்மான் இந்த வருடம் இங்கு பட்டம் வாங்குகிறார் அதனால் வந்திருக்கிறேன்" என்று சொன்னார்கள் .
மீண்டும் என்னைப் பற்றிய நினைவு வந்து ஜக்கரியா ஹள்ரத் அவர்கள் இப்பொழுதுதான் O.M. வந்து சென்றார் நீங்களும் வந்திருக்கிறீர்" என சந்தோஷப்பட்டார்கள் .
எனது சிறிய தந்தைக்கும் ஷம்சுல் மில்லத் ஜக்கரியா ஹள்ரத் ரஹ் அவர்கள் உஸ்தாதாக இருந்ததால் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டார்கள்..
பின்னர் ஹள்ரத் அவர்கள் "இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் நீங்கள் உரையாற்ற வேண்டும் எங்கும் சென்று விடாதீர்கள்" என கூறினார்கள் பின்னர் உரையாற்றினார்கள்.
இவ்வாறு இரு பெரும் ஆளுமைகள் எங்களுக்காக வந்திருந்தது அன்றைய தினம் பேசு பொருளாக மாறியது.
O.M. ஹள்ரத் அவர்கள் மீது இருந்த அன்பின் காரணமாக விலகிய நான் 1996 இல் இருந்து இன்று வரை சேர்ந்தே இருக்கின்றேன்.
இதற்கு ஒரு சாட்சி! இந்த நிகழ்வை நான் எழுதிக் கொண்டிருக்கும் பொழுது O.M. ஹள்ரத் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார்கள்.
பேசப்பட்ட விஷயங்கள் அதைவிட சுவாரசியமானது....
ஷம்சுல் மில்லத் ஜக்கரியா ஹள்ரத் ரஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து அல்லாஹ் சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்துகளை வழங்குவானாக!
Comments
Post a Comment