அப்துர் ரப் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் நினைவுகளும் நிஜங்களும்

அப்துர் ரப் ஹள்ரத் (ரஹ்) 
அவர்கள் நினைவுகளும் நிஜங்களும்
=====================================

💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 4 | தொடர் பரப்புரை  🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

முதன்முதலாக நான் லால்பேட்டைக்குள் நுழைந்தது ஒரு காலை நேரம்; பனி படர்ந்து, மக்கள் நடமாட்டம் இல்லாத வெறிச்சோடி தெருக்கள்,

ஆங்காங்கே வாய்க்கால் ஓரங்களில் பசுமையான புற்களின் மீது படர்ந்திருந்த பனித்துளிகளின் பாரம் தாங்க இயலாமல் வளைந்து காணப்பட்டது.

இந்நிலையில் மதரஸாவிற்குள் சென்று ஷைகுல் ஃபிக்ஹு அப்துர் ரப் ஹள்ரத் (ரஹ்) அவர்களிடம் வாய்மொழி பரிட்சைக்கு அனுப்பப்பட்டேன்.

ஹள்ரத் அவர்கள்  என்னைப் பற்றி விசாரித்த பிறகு எனது ஊரின் பெயரை சொன்னேன்; உடனே ஹள்ரத் அவர்கள் எனது  மாமான்மார்களான
மவ்லவி ஃபகீர் மஸ்தான் எனும் அப்துல் பாரி பாகவி,
அப்துல் லத்தீஃப் மன்பயீ ,
முஹம்மது அப்பாஸ் மன்பயீ, 
அப்துல் பசீர் மன்பயீ மற்றும் எனது
சிறிய தந்தை 
முஹம்மது சுல்தான் ஃபாஸில் மன்பயீ ஆகிய அனைவரையும் நலம் விசாரித்துவிட்டு, "தலைமுறை தலைமுறையாக இங்கு நீங்கள் ஓதுகிறீர்கள்; உன் பிள்ளையையும் கூட இங்கு ஓதவை" என்று சொன்னார்கள். 

பின்னர் இரண்டு ஒரு வரிகளை வாசித்ததும் சிறிய துண்டுச் சீட்டில் தாகிலா - சேர்த்துக் கொள்ளுங்கள் என எழுதிய சீட்டை  என்னிடமே கொடுத்து அனுப்பினார்கள்.

(இந்த இடத்தில் எனக்கு நடந்தது போன்ற ஒரு செய்தி எனது முன்னோர்களுக்கும் நடந்ததை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் எனது கமாண்ட் பாக்ஸில் பாருங்கள்.)

(காலம் சென்ற எனது மாமன்களில் ஒருவரான முஹம்மது அப்பாஸ் மன்பயீ ஹள்ரத் அவர்கள் என்னிடம் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். 

"நானும் எனது அண்ணன்மார்களும் கூத்தாநல்லூரில் ஓதிவிட்டு லால்பேட்டையில் சேர்வதற்காக வந்திருந்த போது முஹம்மது இப்ராஹிம் ஹள்ரத் அவர்களிடம் வாய்மொழி இம்திகான் -  பரீட்சைக்கு சென்றிருந்தோம். 

அப்பொழுது அவர்கள் எங்களை "எந்த ஊர்?" என விசாரித்ததும் "பெரிய வடகரை' என்று நாங்கள் சொன்னோம். 

உடனே ஹள்ரத் அவர்கள் எங்களை பேருக்காக இரண்டு வரிகளை வாசிக்கச் சொன்னார்கள்; நாங்கள் வாசித்தோம். 

பின்னர் எங்களை அழைத்துக்கொண்டு மதரஸாவின் முதல்வர் அப்துல்லாஹ் ஹள்ரத் ரஹ் அவர்களின் அறைக்குச் சென்று "இவர்கள் பெரிய வடகரை அப்துல்லாஹ் ஹள்ரத் ஊரை சேர்ந்தவர்கள், உறவினர்கள்" என்று சொன்னதும், "இவர்களுக்கு தாகிலா கொடுத்து விடுங்கள்" என்று சொன்ன பிறகுதான் எங்களை குறித்து அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்கள் நலம் விசாரித்தார்கள். 

பிறகு முஹம்மது இப்ராஹிம் ஹள்ரத் அவர்களிடம், "எங்கள் ஊர் அப்துல்லாஹ் ஹள்ரத்தை உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று கேட்டதற்கு, "அவர்கள் இங்கு சில ஆண்டுகள் முதர்ரிஸாக இருந்திருக்கிறார்கள்" என்று கூறினார்கள். 

ஆனால் பெரிய வடகரை அப்துல்லாஹ் ஹள்ரத் அவர்கள் 1938 களுக்கு முன்பு காலமாகி விட்டார்கள். அவர்கள் 1920 களுக்கு பிறகு இங்கு ஓதி கொடுத்திருக்கலாம் என்று கூறினார்கள். 

இதே கருத்தை எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த காலம் சென்ற அணுகுண்டு மௌலானா என்று சொல்லப்படும் ஷரஃபுத்தீன் மன்பயீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம்.

அணுகுண்டு மௌலானா குறித்து அறிய 

https://www.facebook.com/share/p/16ugsuK3W5/ )



பட்டம் பெரும் ஒவ்வொருவரு மாணவரும் திருமணப் பத்திரிகை போல் பட்டமளிப்பு விழா பத்திரிக்கை அடிப்பது வழக்கம்.

எனது பட்டமளிப்பு விழா பத்திரிக்கையை அடிப்பதற்காக எனது தந்தையிடம் கேட்டபோது, "நீ சிச்சாவிடம் கேட்டுக் கொள்!" என எனது சிறிய தந்தை முஹம்மது சுல்தான் ஃபாஸில் மன்பயீ ஹள்ரத் அவர்கள் வசம் அனுப்பி விட்டார்கள். 

நான் கோட்டகுப்பம் சென்று எனது சிறிய தந்தையிடம் விபரத்தை சொன்னதும் அவர்கள், "முதலில் நாம் பத்திரிக்கையை முடிவு செய்வோம்; பிறகு அதற்கு ஏற்ற வாசகங்களை தயார் செய்வோம்" என்று சொன்ன பிறகு அவ்வாறே ஒரு பத்திரிகையை வாங்கி வந்தோம். 

அந்தப் பத்திரிக்கைக்கு ஏற்ற தகவலை எனது சிறிய தந்தை எழுதிக் கொடுத்தார்கள்.

என் சிறிய தந்தை எனக்கு ஆசிரியராகவும் இருந்ததால், மரியாதை நிமித்தமாக அவ்வளவாக நான் பேசமாட்டேன். 

ஆனாலும் துணிச்சலை வர வைத்து, "உங்களுக்கும் எனது தந்தைக்கும் இன்சியல் B என இருக்கின்றது. 

எனக்கு இன்சியல் M  என இதுவரை பயன்படுத்தி வந்திருக்கிறேன் (எனது தந்தையின் பெயர் முஹம்மது முஸ்தபா ); இந்தப் பத்திரிக்கையில் B.M.  என்று போடுங்கள் அது O.M. ஹள்ரத் அவர்களுக்கான இன்சியல் போல் இருக்கும்" என்று கூறினேன்.

எனது சிறிய தந்தையும், O.M. ஹள்ரத் அவர்களும் திருச்சி அன்வாருல் உலூம் மதரஸாவில் ஒன்றாக நீண்ட காலம் பணி செய்தார்கள்; இருவருக்குமான வீடு அருகருகே இருந்தது; அதனால் இருவரும் குடும்ப நண்பர்கள்.

இந்நிலையில் எனது சிறிய தந்தை, "அதுவெல்லாம் வேண்டாம்; ஒரு இன்சியலை மட்டும் போடு" என்று சொல்லி எழுதி கொடுத்து press -  பிரஸ்ஸில் கொடுத்துவிட்டு வரும்படி அனுப்பி வைத்தார்கள்.

பாண்டிச்சேரியில் இருந்த ஒரு பிரசில் கொண்டு சென்று கொடுக்கும் பொழுது நான் B யை சேர்த்துப் போடுங்கள் எனச் சொல்லி கொடுத்து விட்டேன்.

என் சின்னம்மாவிடம் விவரத்தை சொல்லி, B  இன்சியலை சேர்த்ததற்காக சிபாரிசு செய்யும்படி கூறினேன்; அவர்களும், "ஏதோ போட்டுட்டு போறான் விடுங்க" என்று சொன்னார்கள். அப்பொழுதும் கூட அதுவெல்லாம் வேண்டாம் என்றே கூறினார்கள்.

எனது சிறிய தந்தையின் "வேண்டாம்" எனும் சொல் கண்டிப்பாக வேண்டாம் என்பது போன்றது அல்ல! எதார்த்தமாக தெரிவிக்கும் மறுப்பு  வகையிலான ஒரு சொல்தான். 

பிறகு பட்டமளிப்பு பத்திரிக்கை வந்ததும் B.M. மைப் பார்த்து, "நல்லாதான் இருக்கிறது" என்று சொன்னார்கள். 

2001, 2002 ஆம் ஆண்டுகளில் நானும் எனது சிறிய தந்தையின் ஒரே நேரத்தில் குர்ஆனின் குரல், சிந்தனைச் சரம் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதி இருக்கிறோம்; 

அப்பொழுது எனது சிறிய தந்தை அவர்கள் தமது பெயரை "B.M.  சுல்தான்  தேவ் பந்தி என்று போட்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அதாவது B. முஹம்மது சுல்தான் என்பதில் முஹம்மதை சுருக்கி  போடுவார்கள். 

என் பட்டமளிப்பு விழாவிற்காக எல்லோருக்கும் அழைப்பை கொடுத்து விட்டு இன்றைய ஷைகுல் ஜாமிஆ முஃப்தீ A. நூருல் அமீன் மன்பயீ ஹள்ரத் அவர்கள் சொன்னது போல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மதரஸாவிற்கு வந்து விட்டேன். 

காலையில் குர்ஆன் ஓதிய பிறகு நாஸ்டா காசை வாங்கிக்கொண்டு ஷைகுல் ஃபிக்ஹ் அப்துல் ரப் ஹள்ரத் ரஹ் அவர்களுடைய அறையை கடந்து செல்லும் போது, "கலீல்! இங்க வா!" என்று அழைத்தார்கள்; நான் சென்றேன். 

"ஷிப்லி கடையில் ஒரு டீ வாங்கி வா" என்று சொல்லி டம்ளரையும் பணத்தையும் கொடுத்தார்கள்.

சிறிது நேரத்தில் நான் வாங்கிக் கொண்டு வந்தபோது ஹள்ரத் அவர்களின் அறை உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. 

சிறிது நேரத்திற்கு பின்னர் திறந்தார்கள்; டீயை கொடுத்தேன். 

ஹள்ரத் அவர்கள் : 

பட்டமளிப்பு விழா பத்திரிகையை அடித்தாயா ?

நான் :  ஆம்! ஹள்ரத் !

ஹள்ரத் அவர்கள் : 

"ஒவ்வொருவரும் ஒரு தினுசா பத்திரிக்கையை அடிக்கிறார்களே நீ எப்படி அடித்தாய் கொண்டு வந்து காட்டு!"

நான் என் அறைக்குச் சென்று எனது பத்திரிக்கையை கொண்டு வந்து காட்டினேன். 

அதைப் பார்த்ததும், "இது ஒரு தினுசாத்தான் இருக்குது; நல்லா இருக்குது; சின்னதாக இருக்குது; நம்ம செய்தியை சொல்ல இந்த அளவு பத்திரிக்கை போதும்; இதுக்கு மேல்  பெரிதாக இருந்தால் இஸ்ராஃப் தான்!

"ஏன் உங்க அப்பா பெயரை போடாமல் உங்க சிச்சா பெயரை போட்டு இருக்கிறாய்?" என்று கேட்டதும் எனது தந்தை தான் அவ்வாறு சொன்னார்கள் என்று சொன்னேன். 

உங்க பாவாவும் உங்க சிச்சாவும் அவ்வளவு ஒற்றுமையானவர்களா? நெருக்கமானவர்களா? என்று கேட்டார்கள். "ஆம்!" என்று சொன்னேன்.

ஹள்ரத் அவர்கள் இருவரின் ஒற்றுமையும் நீடித்து நிலைத்து இருக்க துஆ செய்தார்கள். 

அதுபோலவே எனது தந்தையும் எனது சிறிய தந்தையும் இவர்களுக்கு இருந்த ஒரே தங்கை என மூவரும் ஒற்றுமையாகவே இருந்தார்கள். 

அவர்களின் சந்ததிகளாகிய நாங்களும் இன்று வரை ஒரு சின்ன பிணக்குகள் கூட இல்லாமல் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகிறோம்! எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் சொத்து தகராறுகள் எதுவும் இல்லை. 

அவர்களின் துஆ இன்று வரை எங்கள் குடும்பத்தை ஒற்றுமையாக கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்று தான் நான் சொல்லுவேன். 

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, தரஜாக்களை உயர்த்துவானாக! ஆமீன்!!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்