நபிகள் நாயகத்தின் நிழலில் முஃப்தி நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்
நபிகள் நாயகத்தின் நிழலில்
முஃப்தி நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்
💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 5 | தொடர் பரப்புரை 🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷
அல்லாமா முஃப்தீ நூருல் அமீன் ஹள்ரத் அவர்களிடம் புகாரி ஷரீஃப் இரண்டாம் பாகம் ஓதினேன்; ஹள்ரத் அவர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள்; தினம் தினம் ஒரு வரிசையில் இருப்பவர்களிடம் பாடம் கேட்ட பிறகுதான் பாடம் நடத்தத் தொடங்குவார்கள்.
மற்ற உஸ்தாத்மார்களுடைய பாடங்களை பார்ப்பதை விட இவர்களின் பாடத்தை பலமுறை பார்த்துத் தெளிவு பெற்ற நிலையில் தான் சென்று அமர்வோம்.
அதன் பயனை இன்று நிதர்சனமாக அனுபவித்து வருகிறேன். அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நோய் நொடியில்லா பெருவாழ்வையும் அருள்வானாக!
ஹள்ரத் அவர்களோடு நடந்த சுவாரஸ்யமான ஒரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
12/05/2011 அன்று மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் அஸர் தொழுது விட்டு திண்ணை தோழர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் மங்ரிபு வரை அமர்ந்திருக்கலாம் என எண்ணி மங்ரிபு தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன் .
அப்பொழுது என் அலைபேசி சிணுங்கியது; எடுத்து பேசியபோது, நான் ஏற்கனவே எதிர்பார்த்தது போல் எனக்கு மகன் பிறந்ததாக மனைவி சொன்னார்; மகிழ்வுற்றேன்.
இந்த சந்தோசமான செய்தியை யாரோடு பகிர்ந்து கொள்வது என யோசித்தபோது என நினைவுக்கு வந்தது இருவர் தான்; அதில் ஒருவரான எனது ஆன்மிக ஆசான் O.M. ஹள்ரத் அவர்கள்! அவர்களோடு என் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள அலைபேசியில் அழைத்தேன் அவர்கள் எடுக்கவில்லை.
பிறகு என் மதிப்பிற்குரிய மானசீகரும், ஆசிரியர்களில் ஒருவரும், நமது லால்பேட்டையின் ஷைகுல் ஜாமிஆ முஃப்தீ நூருல் அமீன் ஹள்ரத் அவர்களை அலைபேசியில் அழைத்தேன்.
உடனே அவர்கள் எடுத்தார்கள்; மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் இருப்பதாக சொன்னேன்; "எனது ஸலாத்தினையும் நபிகள் நாயகம் அவர்களுக்கு சொல்லிவிடுங்கள்" எனக் கூறினார்கள்.
ஹள்ரத் அவர்களின் ஸலாத்தினை நபிகள் நாயகம் அவர்களுக்கு சொல்ல எழுந்து நின்று கொண்டேன்.
பின்னர், "ஹள்ரத்! எனக்கு இரண்டாவதாக மகன் பிறந்திருக்கிறார்; தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினேன்.
உடனே ஹள்ரத் அவர்கள் அலைபேசியிலேயே துஆ செய்தார்கள்; நான் அமர்ந்திருந்த இடம் துஆ ஒப்புக்கொள்ளப்படக்கூடிய இடங்களில் ஒன்றாக இருந்தது.
ஹள்ரத் அவர்கள் சொன்னார்கள், "நீங்களே துஆ ஒப்புக்கொள்ளப்படக்கூடிய இடத்தில்தான் இருக்கிறீர்கள்; உங்கள் மகனையும் ஆலிமாக ஓத வைப்பேன் என்றும், நமது ஜாமிஆவில் ஓத வைப்பேன் என்றும் துஆ செய்து விட்டு வாருங்கள்" என்று சொல்லிவிட்டு நலம் விசாரித்தார்கள்.
பின்னர் O.M. ஹள்ரத் அவர்களை அலைபேசியில் அழைத்தேன்; அவர்களிடம் மகன் பிறந்த செய்தியை சொன்னேன்.
ஹள்ரத் அவர்கள் நான் சொல்லாமலே தமிழிலும் அரபு மொழியிலும் துஆ செய்தார்கள்; பிறகுதான் இப்பொழுது மதீனாவில் இருக்கிறீர்களா? மக்காவில் இருக்கிறீர்களா" என்று கேட்டார்கள்.
மதீனாவில் இருக்கிறேன் என்று சொன்னதும் "எனது ஸலாத்தினையும் நபிகள் நாயகம் அவர்களுக்கு சொல்லுங்கள்" என்று சொன்னார்கள்.
"நீங்கள் ஏற்கனவே சொல்லி அனுப்பிய ஸலாத்தினை நான் சொல்லிவிட்டேன்" என்று கூறினேன்; "மறுபடியும் சொல்லுங்க......" என்றார்கள்.
நபிகள் நாயகம் அவர்களின் கால்மாட்டில் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்று கொண்டேன்.
பின்னர், "லால்பேட்டை நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்" என்று சொன்னேன்.
"நல்லா தான் சொல்லி இருக்கிறார்கள்; துஆ செய்துவிட்டு வாருங்கள்; பிள்ளைகள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடு ஆலிம்களாகவும் ஆகட்டும்" என்று கூறினார்கள்.
எனது மகன் பிறந்த நேரமும் இரண்டு பேராசிரியர்களின் துஆ கிடைத்த இடமும் மாபெரும் பாக்கியம் பொருந்தியதாக இருந்தது.
உஸ்தாதுமார்களின் துஆவினால் என்னைப் போன்ற பல மாணவர்கள் நலமாக இருக்கிறார்கள் என்பதே உண்மை!
காலம் சென்ற என் ஆசிரியர்களின் பிழைகளை மன்னித்து உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக!
வாழும் வலிமார்களான என் ஆசிரியர்களுக்கு அல்லாஹ் உலகத்தையே காலடியில் கிடத்துவானாக! ஆமீன்!
மன்பயீ ஆலிம்கள் அனைவரும் சங்கம நிகழ்வுக்கு வாருங்கள்!
Comments
Post a Comment