வாப்பா அவர்களுக்கு ஷைகுல் ஹதீஸ் என பெயர் வந்த வரலாறு
வாப்பா அவர்களுக்கு ஷைகுல்
ஹதீஸ் என பெயர் வந்த வரலாறு
💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 6 | தொடர் பரப்புரை 🔹
==================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷
கொல்லம் முஸ்தபா ஹள்ரத், அவர்கள் ஹதீஸ் துறையில் மிகவும் மேம்பட்ட ஓர் ஆலிமாக திகழ்ந்தார்கள். 1970 களில் அவர்கள்தான் 'ஷைகுல் ஹதீஸ்' என ஆலிம்களால் கண்ணியமாக அழைக்கப்பட்டார்கள்.
நீடூர் மதரஸாவில் ''புகாரி ஷரீஃப்'' பாடத்தை நடத்தி வந்த கொல்லம் முஸ்தபா ஹள்ரத் அவர்கள், பாடம் நடத்தும்போது மிகவும் உற்சாகமாகவும், உயரிய ஒழுக்கத்தோடும் பேனுதலாக பாடங்களை நடத்துவதை வழமையாக கொண்டிருந்தார்கள்.
தினந்தோறும் காலை பதினொரு மணி அளவில் கட்டஞ் சாயில் கொஞ்சம் அவல் போட்டு ஊறவைத்து சாப்பிடுவது இவர்களது வழக்கம்.
ஊறவைத்த அவலிலிருந்து இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் மட்டுமே எடுத்து சாப்பிட்டு விட்டு மீதத்தை வைத்து விடுவார்கள்; கொல்லம் முஸ்தபா ஹள்ரத் அவர்களின் மாணவராகவும், அன்னாரின் பணிகளை மேற்கொள்ளும் காதிம் - பணியாளராகவும் இருந்துவந்த நமது ஏ.இ.எம். வாப்பா அவர்கள், மீதம் வைக்கப்பட்டவற்றறை எடுத்து உண்பார்கள்.
அக்காலத்தில் ஏழாவது ஜும்ரா முடித்ததும் ஹதீஸுக் கென்று ஸனது பெறுவது ஓரு மரபாக இருந்தது.
ஹதீஸுடைய ஸனதை வாப்பா அவர்கள் பலமுறை கொல்லம் முஸ்தபா ஹள்ரத் அவர்களிடம் கேட்டபோதும் கூட “இதோ தருகிறேன், அதோ தருகிறேன்" என காலதாமதப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் வாப்பா, அவர்கள் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்ததால்,''எனது அறையில் எல்லோருக்குமாக நான் எழுதி வைத்திருக்கிறேன், அதில் ஒன்றை எடுத்து வா' என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
வாப்பா அவர்கள், அறைக்குச் சென்று அங்கு மடித்து வைக்கப்பட்டிருந்த வற்றிலிருந்து ஒன்றை எடுத்து வந்து கொடுத்தார்கள்.
அதைப் பிரித்துப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்ட முஸ்தபா ஹள்ரத் அவர்கள், "உனக்கு ஒரு ஹதீஸ் ஸனது தருகிறேன் எடுத்து வா என்றுதான் சொன்னேன்; ஆனால், நீ உனக்கானதையே, உனது பெயர் எழுதப்பட்டதையே எடுத்து வந்திருக்கிறாய், இன்ஷா அல்லாஹ்! நீ ஹதீஸ் துறையில் மிகச் சிறந்து விளங்குவாய்" என்று கூறினார்களாம்.
மவ்லவி, O.S. முஹம்மது இல்யாஸ் காஸிமி ஹள்ரத்
இமாம் : மஸ்ஜிதே மஃமூர், மண்ணடி சென்னை.
•°•°•°•°•°•
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் ஹதீஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள்; அப்பொழுது பெரும் சத்தம் கேட்டது; மஸ்ஜிதுந் நபவிக்கு அருகில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் வீடு இருந்தது; வீட்டிலிருந்த தாயார் சப்தத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்து "என்ன சத்தம்?" என விசாரித்தார்கள்.
“இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் தும்மினார்கள்; அவர்கள் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று சொன்னதற்கு பதில் சொல்லும் விதமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் 'எர்ஹமுகல்லாஹ்' என பதிலுரைத்தார்கள். அதுதான் சத்தத்திற்கான காரணம்' என சொல்லப்பட்டது.
தஈஸல் முலூக் அரசர்கள் நாசமாகட்டும்! அவர்கள் இறந்தால் கூட எவரும் திரும்பி பார்க்க மாட்டார்கள். ஆனால், என் மகன் தும்மியதற்கே ஆயிரக்கணக்கனோர் பிரார்த்தனை செய்கின்றனர்" என தாயார் கூறினார்.
இவ்வாறு ஷைகுல் ஹதீஸ் அவர்கள் தம் பெரும்பகுதி நேரத்தை பாட அறையில் கழித்தார்கள். அவர்கள் எத்தனை தும்மல் தும்மினார்களோ அத்தனைக்கும் மாணவர்கள் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்திருப்பார்கள்.
ஷைகுல் ஹதீஸ் அவர்கள் தம் அறையிலோ, வீட்டிலோ, பயணத்திலோ இருந்தாலும் கூட எப்பொழுதும் உடன் நான்கைந்து மாணவர்கள் இருப்பார்கள்.
தம் வாழ்நாளின் பெரும்பகுதி நேரம் மாணவர்களுக்கிடையே கழிந்திருக்கிறது. மாணவர்களின் துஆ ஷைகுல் ஹதீஸ் அவர்களுக்கு எப்போதும் உண்டு.
ஷைகுல் ஹதீஸ் அவர்கள் தம் கனவில் நபி (ஸல்) அவர்களை கண்டிருக்கிறார்கள்; அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "உங்களுக்கு என்ன வேண்டும்?" என கேட்டதற்கு "ஹதீஸ் துறையில் வல்லமை வேண்டும்" என கேட்டார்கள். அவ்வாறு அவர்களுக்கு அது வழங்கப்பட்டது.
இன்றும் அவர்களின் உரையில் ஹதீஸ்களை பேசும்போது புகாரி நூலில் இந்த ஹதீஸை இவர் அறிவிக்கிறார், முஸ்லிம் நூலில் அதே ஹதீஸை வேறு ஒருவர் அறிவிக்கிறார்,
அந்த நூலில் 'ஃபே' எனும் எழுத்து இடம்பெற்றுள்ளது. இந்த நூலில், அதே இடத்தில் ஃபேக்கு பகரமாக 'வாவ்' எனும் எழுத்து இடம்பெற்றுள்ளது.
இந்த நூலில் 'எ' இருக்கிறது. அந்த நூலில் இல்லை" என்பது போன்ற மிக நுட்பமான விஷயங்களையும் கோடிட்டு காட்டும் வல்லமையை அவர்கள் பெற்றிருந்தார்கள்.
மவ்லானா, O.M. அப்துல் காதிர் பாகவி ஹள்ரத்
முதல்வர் : ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி, வீரசோழன்
•°•°•°•°•°
இந்த உரையை எழுதும் நான் கூறுகிறேன்;
புகாரி பாடத்தில் அமர்ந்தால் சமர்கந்து புகாரா உடைய ஆலிம்களிடம் நாம் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறோமா என்ற நினைவுதான் வரும்; அந்த அளவிற்கு ஹள்ரத் அவர்களுடைய விளக்கம் மடைதிறந்த வெள்ளம் போல் பாயும்.
•°•°•°•°•°•
லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் முதவ்வல் வகுப்பிற்கான பாடங்கள் ஆசிரியர்களுக்கிடையே பிரிக்கப்பட்டபோது நமது வாப்பா அவர்களுக்கு 'முஅத்தா' எனும் நூல் வழங்கப்பட்டது.
அப்பொழுது வாப்பா அவர்கள், "நான் இந்த நூல் ஓதியதற்கான ஸனது பெறவில்லை" என்று சொன்னார்கள். திஸ்ஆ என்பதிலுள்ள ஒன்பது நூல்களில் இந்த ஒரு நூலுக்கு மட்டும் என்னிடம் ஸனது இல்லை. மற்ற எட்டு நூல்களுக்கும் ஸனது பெற்றிருக்கிறேன்; நான் இதை எப்படி ஓதித் தருவது" என்று கேட்டார்கள்.
பொதுவாகவே முதவ்வல் வகுப்பை ஒரு ஆசிரியரிடம் மண்டியிட்டு முறையாக கற்றுக் கொண்டவர் தான் மற்ற மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டும் என்பது ஒரு மரபு.
இந்நிலையில் ஷைகுல் ஹதீஸ் வாப்பா அவர்கள் அரைமனதோடு அதை ஏற்றுக்கொண்டு இல்லம் திரும்பினார்கள்.
அந்த நாள் இரவில் ஒரு கனவு. அந்தக் கனவில் கொல்லம் முஸ்தபா ஹள்ரத் அவர்கள் தோன்றி, நமது வாப்பா அவர்களின் கையை பிடித்து இழுத்துச் சென்று முஅத்தா பாடம் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு சபையில் உட்கார வைத்து,
"இவர்கள்தான் இமாம் மாலிக் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி), இவர்களிடம் முஅத்தாவை முறையாகக் கற்றுக் கொள்" என்று சொன்னார்கள்.
பின்னர் இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பாடத்தை ஓதி கொடுத்தார்கள். மறுநாளிலிருந்து முஅத்தா எனும் நூலை நமது வாப்பா அவர்கள் போதிக்கத் தொடங்கினார்கள்.
இதை ஒரு நாள் பாடத்தில் வாப்பா அவர்கள், "நான் 'இமாம் மாலிக்' (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் நேரடி மாணவர்; எப்படியெனில் இமாம் மாலிக் அவர்களிடம் கனவில் முஅத்தா ஹதீஸ் பாடங்களை படித்தேன்" அதனால் நான் இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவராவேன்" என்று கூறினார்கள்.
மவ்லவி, K.A. முஹையத்தீன் அப்துல் காதிர் மன்பயீ ஹள்ரத்
துணை முதல்வர் : ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி, நீரூர்)
•°•°•°•°•°•°
ஒரு சமயம் ஷைகுல் ஹதீஸ் அவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது நான் கேட்டேன். "வாப்பா! உங்களுக்கு ஷைகுல் ஹதீஸ் என்ற அழகான பெயரை சூட்டியது யார்?"
ஷைகுல் ஹதீஸ் அவர்கள் சொன்னார்கள். "1990 ஆம் ஆண்டு சென்னை, மண்ணடி, மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசலில் ஹைஅத்துஷ் ஷரீஆ மூலம் மாநிலம் தழுவிய ஷரீஅத் மாநாடு நடைபெற்றது. அதில் எனக்கு அஸர் தொழுகைக்குப் பிறகு பிரசங்கம் இருந்தது.
அந்த அமர்வுக்கு பெங்களூர் ஷபீலுர் ரஷாத் முதல்வர் 'அபூ ஸவூத்' பாகவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் தலைமை வகித்தார்கள்.
அப்பொழுது அவர்கள் என்னை பேச அழைத்தபோது, "இப்பொழுது உங்களிடையே லால்பேட்டை, ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியில் புகாரி ஷரீஃப் நடத்துகிற பேராசிரியர், 'ஷைகுல் ஹதீஸ்' உரையாற்றுவார்கள்.
இவர்களுடைய பேச்சில் ஹதீஸ்கள் அதிகம் இடம்பெறும், கேட்பதற்கு இனிமையாக இருக்கும், அனைவரும் அமைதியாக கேளுங்கள்" என்று சொன்னார்கள்.
அப்பொழுது அந்த சபையிலிருந்த என்னை விட மூத்த
ஆலிம்கள் உட்பட அனைத்து ஆலிம்களும் 'ஷைகுல் ஹதீஸ்' என்கிற அந்த வார்த்தையை பொருந்திக் கொண்டார்கள். அப்போது, அபூஸவூத் மவ்லானா அவர்கள் பொருத்தமான பட்டத்தை பொருத்தமானவருக்குத்தான் சூட்டியிருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டார்கள்.
அதற்கு அடுத்து வந்த நோட்டீஸ்களில் அவர்களாகவே 'ஷைகுல் ஹதீஸ்' என்றே எனது பெயரை போட்டுக் கொண்டார்கள்.
அந்த வகையில் நான் 'ஷைகுல் ஹதீஸ்' என இன்றும் அழைக்கப்பட்டு வருகிறேன். ஒரு பெரிய மகான் எனக்கு அப்பெயரை சூட்டியது எனக்குக் கிடைத்த பாக்கியம்" என்று கூறினார்கள்.
பல்லவி, S.M அப்துர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத்
முதல்வர்: மதரஸா நிஸ்வான் நேதாஜி நகர் சென்னை
கொல்லம் முஸ்தபா ஹள்ரத் அவர்களின் துஆவினாலும்,
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் பாடம் ஓதி கொடுத்ததாலும்,
நபி (ஸல்) அவர்கள் நேரடியாக கனவில் காட்சி அளித்து வரம் கொடுத்ததாலும்,
அபூ ஸவூத் மௌலானா (ரஹ்) அவர்கள் பெயரைச் சூட்டியதாலும் இன்று அவர்கள் "ஷைகுல் ஹதீஸ்" என அழைக்கப்படுகிறார்கள்.
Comments
Post a Comment