மன்பவுல் அன்வார் மார்க்கத்தை காக்க எழுந்த கல்விக் கோட்டையின் வரலாறு

மன்பவுல் அன்வார் மார்க்கத்தை 
காக்க எழுந்த கல்விக் கோட்டையின் வரலாறு 
====================================

💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 8 | தொடர் பரப்புரை  🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

இந்தியாவில் இஸ்லாமியர் ஆட்சி நடைபெற்றது வரை இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்போடு இருப்பதாக உணர்ந்தார்கள். 

இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகரித்த போது முஸ்லிம்கள் முஸ்லிமாக வாழ்வதற்கான சூழல் கேள்விக்குறியாக ஆனதால் இந்தியாவிலிருந்த  மார்க்க அறிஞர்கள் ஆங்காங்கே மதரஸாக்களை தொடங்க ஆரம்பித்தார்கள். 

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட மதரஸாக்களில் ஒன்றுதான் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி. 

இது, கி.பி. 1864 ஹிஜ்ரி 1281 களில் லால்பேட்டை பெரிய ஹள்ரத் என்று அழைக்கப்படும் சி.  அஹமது ஆலிம் (ரஹ்) அவர்களை தலைமை ஆசிரியராகக் கொண்டு ஊர் பொதுமக்களின் பெரும் முயற்சியினால் உருவாக்கப்பட்டது. 

இங்கு ஓதுகிற பிள்ளைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வீட்டாரும்  தமக்காக உணவு சமைக்க அரிசி எடுக்கும் பொழுது மதரஸா மாணவர்களுக்கும் ஒரு பிடி அரிசியை போட வேண்டும் என ஒரு புட்டியை (மூங்கில் கூடை) கொடுத்து வைத்தார்கள். 

பின்னர் வாரம் ஒரு முறை மதரஸா பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அதை சேகரித்து வந்து மதரஸா மாணவர்களுக்கு உணவு சமைத்து வழங்குவது அன்றைய மரபாக இருந்தது. 

பிற்காலத்தில் அது ஒவ்வொரு வீட்டாரும் சாப்பாடு கொடுக்கும் மரபாக உருவாகி இன்று டிபன் கேரியரில் உணவு வந்து கொண்டிருக்கிறது. 

எனது ஊரான வடகரையைச் சேர்ந்த மௌலானா மௌலவி அப்துல்லாஹ் பாகவி ஹள்ரத் அவர்கள் இங்கு ஓதியும் இருக்கிறார்கள்; ஓதிக்கொடுத்தும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1945 களில் ச. அப்துல் பாஸித் ஆலிம் அவர்கள் ஊர் ஜமாஅத்தினரின் அனுமதியோடு அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்களை அழைத்து வந்து தலைமை பொறுப்பை ஏற்று நடத்த வழிவகை செய்தார்கள்.

1945கள் வரை ஐந்து ஜும்ராக்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்த மதரஸாவில் அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் ஆறாவது ஜும்ரா மற்றும் ஏழாவது ஜும்ராவை அதிகப்படுத்தி 1947 ஆம் ஆண்டு மௌலவி ஆலிம் இளநிலை பட்டம் வழங்கினார்கள். 

1951 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 23 அறைகள் கொண்ட அழகிய கட்டடம் இன்றுள்ள மதரஸாவின் கீழ்ப்பகுதி மட்டும் காயிதே மில்லத் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

பின்னர் 1958 ஆம் ஆண்டு  பிரம்மாண்டமான கட்டிடக்கலை நுட்பத்தோடு  முதல் மாடி கட்டப்பட்டு பட்டமளிப்பு விழாவோடு திறப்பு விழா செய்யப்பட்டது.

1948 ஆம் ஆண்டு ஃபாஸில் மன்பயீ படிப்பு ஒரு வருடம் மட்டுமே நடைபெற்றது; பின்னர் தாருல் ஹதீஸ் எனும் கலைக்கூடம் முதல் மாடியில் கட்டப்பட்ட பிறகு 1958ல் இருந்து ஃபாஸில் மன்பயீ வகுப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

1962 ஆம் ஆண்டு மிகச் சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்களின் முன்னிலையில் அன்றைய தமிழகத்தின் மாபெரும் தலைவர்களின் அணிவகுப்போடு நடைபெற்றது. 

அதே விழாவில் தாருத் தஃப்ஸீர் கலைக்கூடம் கட்டப்பட அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் 1979 ஆம் ஆண்டு ஷம்சுல் மில்லத் மௌலானா முஹம்மது ஜக்கரியா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் திறக்கப்பட்டது. 

இதன் கீழ் தளத்தில்தான் பட்டமளிப்பு விழா  நடத்தப்படுகிறது அந்த அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமான கட்டிடமாக உருபபெற்றுள்ளது.

இதன் மேல் பகுதியில் வகுப்பறைகளும் மாணவர்கள் தங்கும் அறைகளும் நூலகங்களும் உள்ளது. 

2013 ஆம் ஆண்டு வரை அதாவது 150வது ஆண்டு வரை 53 ஃபாஸில் மாணவர்களும், 1530 மௌலவி ஆலிம்களும், 102 ஹாஃபில்களும் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.

1864 ஆம் ஆண்டு இந்த மதரஸா தொடங்கப்பட்டதாக வும் 1962  (ஹிஜ்ரி 1381) ஆம் ஆண்டு இதன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதாகவும் மேலே நீங்கள் செய்தியை படித்திருப்பீர்கள். 

இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்க முன்கூட்டியே ஏன் கொண்டாடப்பட்டது? என்கிற கேள்வி உங்களுக்குள் ஏற்படலாம். 

ஹிஜ்ரி வருடப் பிறப்பின் அடிப்படையில் தான் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1951 ஆம் ஆண்டு இன்றைய மதரஸா மன்பவுல் அன்வார் கட்டி முடிக்கப்பட்டது. அந்த கட்டிடம் (ஹிஜ்ரி முறைப்படி) 75 ஆண்டுகளை நிறைவடைந்ததை ஒட்டி வருகிற 23ஆம் தேதி மன்பயீ ஆலிம்கள் மற்றும் லால்பேட்டை மாநகர மக்களின் மாபெரும் சங்கம நிகழ்வு நடைபெற உள்ளது; 

புகாரி ஷரீஃப் 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள்.

இந்தக் கட்டிடத்தின் நுழைவாயிலில் அல்லாமா அமானி ஹள்ரத் ரஹ் அவர்கள் எழுதி கல்வெட்டாக பதித்துள்ள ஒரு கவிதையைப் பாருங்கள்.

நுழைவாயில் கவிதை :
=======================

லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் நுழைவாயிலில் அல்லாமா அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் எழுதிய ஒரு கவிதை கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. அதன் பொருளும் விளக்கமும் உங்கள் பார்வைக்கு தருகிறேன். 

بني رَبِّي لِعِلْمِ الدِّيْنِ قَصْرًا
وَكُلُّ الطَّالِبِينَ لَهُ اسْتَحَقَّا
فَقَالَ النَّاسُ حِيْنَ الْفَتْحِ إِرْخا 
ذُكَاءُ مَنْبَعُ الْأَنْوَارِ حَقًّا

மார்க்க கல்விக்காக என் இறைவன் ஒரு மாளிகையை எழுப்பினான்! 

மாணவர்கள் அனைவருமே இதில் பயில உரிமையானவர்களே! 

இதைத் திறந்த நாளில் மக்கள் ஒரு தேதியை கூறினர் 

அது, உண்மையாகவே மன்பவுல் அன்வார் நுண்ணறிவின் கேந்திரமாகும்

இந்த கவிதையின் கடைசி வரியில் ذُكَاءُ مَنْبَعُ الْأَنْوَارِ حَقًّا என்று இருக்கின்றது. 

இந்த வரியில் மொத்தம் 17 எழுத்துக்கள் இருக்கின்றன ஒவ்வொரு எழுத்துக்கும் அரபு மொழி அப்ஜதீ கணக்கின் அடிப்படையில் 1281 என்கிற எண் வரும். 

இந்த 1281 என்கிற எண் இந்த மதரஸா திறக்கப்பட்ட ஆண்டை குறிக்கின்றது; அதாவது ஹிஜ்ரி 1281 அன்று இந்த மதரஸா திறக்கப்பட்டது.

 700   ذ
 20       ك
  1         ا
 40      م
 50     ن
2       ب
70      ع
1        ا
30      ل
 1        ا
 50      ن
 6         و
 1         ا
200     ر
 8        ح
 100    ق
 1         ا

மேற்கண்ட அரபு கவிதையின் கடைசி வரியில் அமைந்துள்ள 17 எழுத்துக்களின் அப்ஜதீ கூட்டு எண் 1281 ஆகும். அதாவது இந்த மதரஸா தொடங்கப்பட்ட வருடத்தை இது குறிப்பிடுகின்றது.

வேலூர் பாகியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸா 1857 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதாவது ஏழு வருடங்களுக்கு பின்பு ஜாமிஆ மன்பவுல் அன்வார் தொடங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்