லால்பேட்டை ஃபத்வாக்கள் ஓர் ஆய்வு
லால்பேட்டை ஃபத்வாக்கள் ஓர் ஆய்வு
💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 9 | தொடர் பரப்புரை 🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷
உலகின் பல ஆட்சியாளர்கள் பெரும்பகுதி நிலப்பரப்பையும் கோடிக்கணக்கான மக்களையும் பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ததற்கு தூணாகவும், துணையாகவும் இருந்தது நான்கு மத்ஹப்புகளின் நுட்பமான சட்டங்களும் அது காலத்திற்கு ஏற்றதாக இமாம்கள் வகுத்ததும்தான் காரணம்.
இஸ்லாமிய சட்டங்களில் இருந்து தான் உலகம் இன்று பல சர்வதேச சட்டங்களை தமக்காக வடிவமைத்து இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
காலத்தின் ஓட்டத்திற்கு ஏற்ப மக்களின் குற்றச் செயல்கள் பல்வேறு வடிவங்களில் பெருகும்போது அவற்றைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் உருவாவது வாடிக்கையானது தான்!
புதிய சட்டங்களை வகுப்பதிலும் அதை நடைமுறைப்படுத்துவதிலும் உலகத்தில் முன்னிலையில் இருப்பவர்கள் முஸ்லிம்கள் தாம்!
இஸ்லாமியர்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் ஆகிய மூல ஆதாரங்களை வைத்துக்கொண்டு ஃபத்வா என்கிற பெயரில் புதிய சட்டங்களை வகுக்கிறார்கள்.
அவ்வாறு வகுக்கப்பட்ட ஃபத்துவாக்களில் மன்பஉல் அன்வாரின் ஃபத்வாக்கள் தனிச்சிறப்பு பெற்றது.
இங்கிருந்து வெளியிடப்பட்ட ஃபத்வாக்களில், "குர்ஆனின் மூலமில்லா மொழிபெயர்ப்பு கூடாது" என்ற ஃபத்வா சமூகத்தில் எழுந்த பெரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த ஜாமிஆவிற்கு தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும், இலங்கை, மலேசியா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற நாடுகளிலிருந்தும் மாநிலங்களில் இருந்தும் ஃபத்வா கேட்டு பதில் பெற்றுள்ளனர்.
மக்களுக்கு ஷரீஅத்தின் தெளிவான தீர்ப்பு தேவைப்படும் போதெல்லாம் உடனே இந்த மதரஸாவை அனுகுவோர் தான் அதிகம்.
இந்நிலையில் இதுவரை பல்லாயிரம் ஃபத்வாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் அல்லாமா அமானீ ஹள்ரத் (ரஹ்) அவர்கள் காலத்தில் தான் ஃபத்வாக்களை பதிவு செய்துவைத்து அதிலிருந்து நகல் எடுத்து பதில் அனுப்புவது என்ற மரபு தொடங்கியது.
அப்படி பதிவு செய்யப்பட்டுள்ள ஃபத்வாக்களை தலைப்பு வாரியாக ஒழுங்கமைத்து பல பாகங்களாக வெளியிட வேண்டும் என்ற விருப்பம் மதரஸா பேராசிரியர்களுக்கு இருந்தது. 150-ஆம் ஆண்டு விழாவின்போது 52 ஃபத்வாக்கள் அடங்கிய ஒரு தொகுப்பு வெளியிடப்பட்டது.
4000 க்கும் மேற்பட்ட ஃபத்வாக்கள் 7000க்கும் மேற்பட்ட பக்கங்களில் 25 நோட்டு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் காலத்தில் வழங்கப்பட்ட ஃபத்வாக்களின் புள்ளிவிபரதைப் பாருங்கள்.
முதல் ஃபத்வா கொடுக்கப்பட்ட நாள் 7.10.1945 ஆகும்.
அமானி (ரஹ்) அவர்கள் காலத்தில் இறுதியாக 9.8.1966 (24 ரபியுல் அவ்வல் 1386) அன்று கடைசி ஃபத்வா வழங்கப்பட்டுள்ளது.
அமானி ஹள்ரத் அவர்களின் காலத்தில் வழங்கப்பட்ட ஃபத்வாக்களின் மொத்த எண்ணிக்கை 866 ஆகும்.
இவைகள் யாவும் ஆறு நோட்புத்தகங்களில் 1764 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆறாவது நோட்டில் 22வது பக்கத்தோடு முடிவடைகிறது.
அமானி ஹள்ரத் அவர்களின் கடைசி கையொப்பம் இடம் பெற்றுள்ள ஃபத்வா 14.7.1966 இல் ஆகும்.
ஹள்ரத் அவர்கள் இறந்த 9.8.1966 வரை இடைப்பட்ட 27 நாட்களில் 11 ஃபத்வாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் ஹள்ரத் அவர்களின் கையொப்பம் இல்லை. உடல் நிலை சரியில்லாததின் காரணமாக அவர்களின் கவனத்திற்கு இந்த ஃபத்வாக்களை கொண்டுச் செல்லவில்லை என்றே கருதுகிறேன்.
ஹள்ரத் அவர்கள் மதியம்1.30 மணி சுமாருக்கு இறந்தார்கள். அன்று காலையில் கூட ஒரு ஃபத்வா வழங்கப்பட்டுள்ளது.
இதற்குப்பிறகு 22.8.1966 அன்றுதான் 867வது ஃபத்வா வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹள்ரத் அவர்கள் வாழ்ந்த காலத்தில் 866 ஃபத்வாக்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஃபத்வாக்களை யார் எந்த மொழியில் கேட்கிறார்களோ அவர்களுக்கு அந்த மொழியிலேயே பதில் வழங்கி இருக்கிறார்கள். இது எல்லா நாஜிர்கள் காலத்திலும் நடைபெற்றுள்ளது.
அமானி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் காலத்தில் அதிகமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் சிலோன், மலேஷியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் இருந்தும் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.
லால்பேட்டை ஃபத்வாக்கள் ஓர் ஆய்வு எனும் பெயரில் இன்றைய ஷைகுல் ஜாமிஆ முஃப்தீ A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு நூல் தொகுத்திருக்கிறேன்; விரைவில் வெளிவர துஆ செய்யுங்கள்.
Comments
Post a Comment