லால்பேட்டை மக்கள் வழங்குவது அன்னதானம் அல்ல! அமலாய் மாறிப்போன ஈமான்

லால்பேட்டை மக்கள் வழங்குவது அன்னதானம் அல்ல! 
அமலாய் மாறிப்போன ஈமான்
===================================== 

💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 10 | தொடர் பரப்புரை  🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

12 ஆம் நூற்றாண்டு முதல் தெற்கிந்திய கடற்கரை பகுதிகளில் அரபு வர்த்தகர்கள் உலர்ந்த மீன், மசாலா பொருட்கள், பட்டாணி போன்றவற்றை வாங்குவதற்காக லால்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வந்து சென்றதாக அரசு ஆவணங்கள் சாட்சி கூறுகிறது.

முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் அவர்கள் காலமான பிறகு கி.பி. 1707 களில் முகலாயர்களின் ஆட்சி பலவீனம் அடைந்திருந்தது.

அப்பொழுது அவுரங்கசீப் அமைச்சரவையில் இருந்த மீர் கமருதீன் கான் பஹாதுர் என்பவர் ஹைதராபாதிலிருந்து திருச்சி காவேரி கரைவரை உள்ள நிலப் பரப்புக்கு நிஜமாக பொறுப்பு வகித்தார்.

இந்த காலகட்டத்தில் தான் அம்பாஸியா ஆட்சி காலத்தில், ஏழாம் நூற்றாண்டில் "குர்ஆன் படைக்கப்பட்டதா?" என்கிற விவாதத்தின் போது ஏற்பட்ட மோதல்களில் ஒரு குழுவினர் வடக்கு  ஆஃப்கானிஸ்தான் பகுதியில் குடியேறி அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். 

இங்கு வாழ்ந்தவர்களின் சந்ததிகளில் ஒருவரான ஷைகு மதார் (ரஹ்) அவர்களின் தலைமையில் ஒரு குழுவினர் பல்க் Balkh” (ஆரம்பத்தில் Bactra / بلخ என்று அழைக்கப்பட்டு வந்தது இன்றைய தனி ஒரு மாவட்டமாக இருந்து செயல்படுகிறது எனும் நகரத்திலிருந்து புறப்பட்டு இந்தியாவின் இன்றைய வீராணம் ஏரிக்கரை ஓரங்களில் 1760 களில் குடியேறினார்கள்.

இவர்களின் நோக்கம் இஸ்லாமிய அழைப்பு பணி செய்வதும் அமைதியாக வாழவதுமாகவே இருந்தது.

ஹைதராபாத் நிஜாம் அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக தென்னார்க்காடு மாவட்டம் முழுவதும் இருந்ததால் லால்பேட்டை நகரமும் இவருடைய ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இவருடைய மந்திரி சபையில் அன்வர்தீன் கான் என்பவரும் இருந்தார்.

சிதம்பரம் லால்பேட்டை காட்டுமன்னார்குடி போன்ற 40க்கும் மேற்பட்ட ஊர்களில் வரி வசூலிக்கும் ஜாகீர்தாராக லால்கான் என்பவர் அதிகாரியாக இருந்தார்.

இவர் மந்திரி அன்வர்தீன் கான் அவர்களிடம் லால்பேட்டை பகுதியில் வசித்து வந்த முஸ்லிம்கள் குறித்து நல்ல விதமாக எடுத்துச் சொல்லி இந்த பகுதியில் ஒரு பள்ளிவாசலை கட்ட ஏற்பாடு செய்தார்.

இவரே நின்று அனைத்து பணிகளையும் செய்து முடித்ததால் இவரின் பெயராலே இந்தப் பள்ளிவாசல் இன்றும் அழைக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல் இவரின் பெயராலேயே இந்த ஊர் லால்கான் பேட்டை என்று இருந்ததுதான் இப்பொழுது மருவி லால்பேட்டை என்று ஆகிவிட்டது. 

இவ்வாறு ஆயிரம் வருடங்களைக் கடந்து உயிர்ப்போடு இருந்து வரும் நகரம் லால்பேட்டை.

இவ்வூரில் தஃவா பணி செய்வதற்காக குடியேறியவர்கள், தம் நோக்கம் எந்த வகையிலும் மாறிவிடக்கூடாது, பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 167 வருடங்களுக்கு முன்னால் ஒன்று கூடி பேசி தஃவா பணியில் ஈடுபடும் ஒரு குழுவினர் தமது ஊரில் நிரந்தரமாக இருக்க வேண்டும், தஃவா செய்யும் ஒரு குழுவினரை நாம் உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரி.

அதற்காகத்தான் இந்த ஊர் மக்கள் அந்த தஃவா பணியை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக உணவளித்து வருகிறார்கள்.

இந்த ஊர் மக்களின் உணவளிக்கும் மனநிலையும், செயலும் மதீனத்து அன்சாரிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல என்றே நான் சொல்லுவேன்.

ஒரு மாணவர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன்;

லால்பேட்டை தோப்புத் தெருவில் ஒரு குடிசை வீட்டில், கணவரை இழந்த வயது முதிர்ந்த தாய் ஒருவர் இருந்தார்.

அவருக்கு விவசாய வேலைக்குச் செல்லும் ஒரே மகன், மருமகள், இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்தனர். அந்த மகன் பாம்பு கடித்து இறந்திருந்தார். 

தனது மகனுக்கு ஃபாதிஹா ஓத வேண்டும் என்பதற்காக தன் வீட்டில் இரவு உணவு சாப்பிடும் மதரஸா மாணவரை வரச்சொல்லி அனுப்பினாள் அந்தத் தாய் .

அந்த வீட்டில் சாப்பிடும் மாணவர் அந்த வீட்டை தேடிப்பிடித்து குடிசைகுள் குனிந்து சென்றார். 

அந்தத் தாய் அவரைப் பார்த்து கண் கலங்கினார்.

'என்னம்மா ஆச்சு?' என்று கேட்டார்; 'உன் வயதில் எனக்கொரு மகன் இருந்தான்; அவன் சமீபத்தில் இறந்து விட்டான். அவனுக்கு ஒரு ஃபாத்திஹா ஓதுவதற்கு உன்னை வரச் சொன்னேன்; உன்னைப் பார்த்ததும் அவன் நினைவு வந்து விட்டது' என்றார்.

அந்த மாணவர் கூறினார்; எப்படி ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை; மனம் உருக என் சகோதரனுக்காக துஆ செய்தேன்; அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பிறகு நான் எனது ஊருக்குச் சென்று என் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு லால்பேட்டையில் குடிசை வீட்டுக்குள் நடந்த நிகழ்வை சொல்லி முடித்த பிறகுதான் ஆறுதல் அடைந்தேன்.

ஏற்கனவே நான் சாப்பிட முடியாத அளவிற்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. அந்த சந்திப்பிற்கு பிறகு இரண்டு பேர் தாராளமாக சாப்பிடும் அளவுக்கு உணவு கொடுத்து அனுப்பினார்கள். 

இல்லம் சிறியதாக இருந்தாலும் உள்ளம் ஆகாயம் போல் விரிவானதாக இருந்தது.

வாழ்வில் மறக்க முடியாத நினைவுகளை வழங்கிய லால்பேட்டை மக்களை என் கடைசி மூச்சுவரை மகிழ்வோடு நினைத்து கொண்டே இருப்பேன்" என்று கூறினார்.

இவ்வாறு இந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் மிகச் சிறப்பானவர்கள். 

என்னைப் போன்ற மாணவர்கள் படித்த கல்லூரியையும் பேராசிரியர்களையும் பார்க்கச் செல்லும் பொழுதெல்லாம் எனது பாசத்திற்குரிய பேராசிரியர் மவ்லவி நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பலமான விருந்தோம்பல் செய்வார்கள்.

20 பேர் 30 பேர் என சென்றாலும் தமது வீட்டில் விசேஷமான உணவுகளை தமது வீட்டினரின் கைகளாலேயே சமைத்து வழங்கும் மனம் என்னை பலமுறை நெகிழிவடையச் செய்திருக்கிறது.

இந்த ஊர் மக்களின் இறந்து போனவர்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னித்து உயர்ந்த சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக!

வாழ்கிற அனைவரையும் ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் எல்லா வாழ்வாதாரங்களையும் முழுமையாக பெற்று வாழச் செய்வானாக!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்