மரியம் அலை (மேரி) பிறந்தநாளில் அரங்கேரிய அதிசயங்கள்
மரியம் அலை (மேரி) பிறந்தநாளில்
அரங்கேரிய அதிசயங்கள்
=====================================
ذَٰلِكَ مِنْ أَنبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۚ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ
(நபியே!) இவை (இதுவரை யாருக்கும் தெரிந்திடாத) மறைவான செய்திகள்;
இவற்றை உமக்கு நாம் அறிவிக்கிறோம்;
யார் மரியமை வளர்ப்பது என்று தீர்மானிப்பதற்காக அவர்கள் தமது பேனாக்களை நதியில் போடும்போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை;
அவர்கள் சண்டையிட்டுக் கொண்ட போதும் நீர் அங்கு இருக்கவில்லை.
அல்குர்ஆன் 3 : 44
ஃபாலஸ்தீனில் நாசிரா Nazareth எனும் பகுதியில் வாழ்ந்த இம்ரான் என்பவர் ஃபலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் நீண்டகால தலைமை இமாமாகவும், மக்களால் மதிக்கப்படுகிறவராகவும், உண்மையாகவே உலகப்பற்று இல்லாத துறவியாகவும் வாழ்ந்து வந்தார். இவருடைய மனைவி ஹன்னா பின்த் ஃபாகூத் .
ஹன்னா அவர்கள், "தமக்கு குழந்தை பிறந்தால் அதை மஸ்ஜிதுல் அக்ஸா இறை இல்லத்திற்கு அன்பளித்து விடுகிறேன்" என நேர்ச்சை செய்து கொண்டார்.
இந்த நிலையில்தான் இம்ரான் / ஹன்னா தம்பதியருக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த அன்றே மரியம் என பெயர் சூட்டி மஸ்ஜிதுல் அக்ஸாவின் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
அந்தக் குழந்தையை வளர்ப்பதில் மஸ்ஜிதுல் அக்ஸாவின் மற்ற இமாம்களுக்கு இடையேயும், நிர்வாகிகளுக்கு இடையேயும், ஊர் பிரமுகர்கள் மற்றும் செல்வந்தர்களுக்கு இடையேயும் போட்டி ஏற்பட்டது.
அப்பொழுது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள்; "யார் யாரெல்லாம் குழந்தையை வளர்க்க முன் வருகிறார்களோ அவர்களின் பெயர்களை ஒரு சீட்டில் எழுதி போடுவோம்; ஒரு குழந்தையை எடுக்கச் சொல்வோம்; அதில் யாருடைய பெயர் வருகிறதோ அவரே அந்த குழந்தையை வளர்க்கட்டும்" என தீர்மானித்தார்கள்.
அவ்வாறே சீட்டுகள் எழுதி போடப்பட்ட பிறகு ஒரு குழந்தையை எடுக்கச் சொன்னார்கள்; அந்த குழந்தை ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தது; அதில் ஜக்கரியா (அலை) அவர்களின் பெயர் இருந்தது.
ஜக்கரியா (அலை) அவர்களுக்கு குழந்தை பாக்கியம் அப்பொழுது இல்லாததால் அதை தாமே வளர்ப்பதாக முதன் முதலில் குரல் கொடுத்தார்.
அதற்காக மிகப்பெரிய அளவில் பிரயாசப்பட்டார். இப்பொழுது அவருடைய பெயரே வந்ததால் எவரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
இவரும் பள்ளிவாசலின் இரண்டாம் நிலையில் இருந்த ஒர் இமாம் ஆவார்.
சீட்டு குலுக்கி போடுதல் எனும் முறை வேண்டாம்; வேறு ஒரு முறையில் நாம் ஒருவரை தேர்ந்தெடுப்போம் என கூறினர்.
"நாம் அனைவருமே தவ்ராத் வேதத்தை எழுதி வைத்திருக்கிறோம்; தவ்ராத் வேதத்தை எழுதிய புனிதமான பேனாவை நாம் நதியில் வீசுவோம்;
யாருடைய பேனா நதியின் ஓட்டத்தில் ஓடி விடுகிறதோ அவர் அந்த குழந்தையை வளர்க்க தகுதி இல்லாதவர்;
யாருடைய பேனா நீரோட்டத்தை எதிர்த்து நீந்தி செல்கிறதோ அவர்தான் இந்த குழந்தையை வளர்க்க வேண்டும்" என ஆலோசிக்கப்பட்டது; அந்த ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.
ஊர் மக்களின் முன்னிலையில் அவரவரும் தமது புனிதமான பேனாக்களை கொண்டு வந்து நதிக்கரையில் நின்று தூக்கி எறிந்தார்கள்; எரிந்தவர்களின் பேனாக்கள் நதியின் ஓட்டத்தில் சென்று விட்டது;
அதில் மீண்டும் ஜக்கரியா (அலை) அவர்களின் பேனாவே நீரோட்டத்தை எதிர்த்து நீந்திச் சென்றது.
இதனை கண்ணுற்ற அனைவரும் மனதார ஏற்றுக் கொண்டாலும் ; அந்த குழந்தையை வளர்க்க வேண்டும் என்கிற பேராசையில் நடந்து முடிந்த அதிசய காட்சியையும் எவரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
அவர்களில் மீண்டும் ஒருவர் சொன்னார்; "இப்பொழுது நடந்து முடிந்த தேர்வு முறையில் பலருக்கும் விருப்பம் இல்லை என்றே தெரிகிறது; ஆனால் இறுதியாக ஒரு தேர்வு முறையை நான் சொல்கிறேன்;
மீண்டும் நாம் அனைவரும் மற்றொரு பேனாவை நதியில் வீசுவோம்; யாருடைய பேனா நதியின் ஓட்டத்தில் செல்கிறதோ அவர்தான் குழந்தையை வளர்க்க வேண்டும்;
யாருடைய பேனா நீரோட்டத்தை எதிர்த்து நீந்திச் செல்கிறதோ அவர்கள் குழந்தையை வளர்க்க தகுதி இல்லாதவர்கள்" எனக் கூறினார்.
அங்கிருந்து அனைவரும் அதை ஒப்புக்கொண்டு தமது பேனாக்களை நதியில் வீசினார்கள்; அனைவருடைய பேனாக்களும் நதிநீரை எதிர்த்து நீந்திச் சென்றது; ஜக்கரியா (அலை) அவர்களின் பேனா மட்டும் நீரோட்டத்தில் கலந்து சாதாரணமாகச் சென்றது.
இந்த காட்சியைக் கண்ணுற்ற அனைவரும், "இதுதான் இறைவனின் விருப்பம் இதற்கு மேலும் இன்னொரு தேர்வு நடத்துவது நியாயம் இல்லை" என முடிவு செய்து மர்யம் (அலை) அவர்களை வளர்க்கும் பொறுப்பை ஜக்கரியா (அலை) அவர்களிடம் நதிக்கரையிலேயே ஒப்படைத்தார்கள்.
முஸ்னது அஹ்மத, அபூதாவூத், திர்மிதீ , இப்னுமாஜா, நஸாயீ, இப்னு கஸீர் போன்ற பல நூல்களில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களின் தொகுப்பே மேற்கண்ட கருத்து; ஆதாரப்பூர்வமான செய்தி.
மக்கள் யாரை உயர்வாக நினைக்கிறார்களோ அவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல! இறைவன் யாரை தேர்வு செய்கிறானோ அவர்கள்தான் உண்மையில் உயர்ந்தவர்கள்.
ஜக்கரியா (அலை) அவர்களை பிறர் மதியாதது போல் நாம் யாரையும் மதிக்காமல் இருந்து விடக்கூடாது.
இம்ரானைப் போல் இறைப்பணிகள் செய்து வரும் நல்லவராக இருப்பவருக்கு சோதனைகள் வராது என்று எவரும் எண்ணக்கூடாது.
நபிமார்களின் தாய்மார்கள் உலக முஸ்லிம்களின் தாய்கள் ஆவர்;
அந்த வகையில் மரியம் (அலை) அவர்களை நேசிப்போம்;
ஈஸா (அலை) அவர்களை கண்ணியப்படுத்துவோம்;
Comments
Post a Comment