தங்கையை திருமணம் செய்த அண்ணன்

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம்: 11

தொடர்: 86

துஆ ஒப்புக்கொள்ளப்பட்டது ஏன்?
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

தங்கையை 
திருமணம் செய்த அண்ணன்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

இப்னு அபீ துன்யா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; 

ஒரு மனிதர் தன் கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டார்; அப்பொழுது நபிகளார், "பக்தாத்தில் இன்ன இடத்தில் இன்ன மஜூசி - நெருப்பு வணங்குபவர் இருக்கிறார்; அவரிடம் நீங்கள் சென்று, 'உங்களுடைய பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டது' என்று சொல்லுங்கள்" எனக் கூறினார்கள்.

கனவு கண்டவர் கூறுகிறார்; "நான் விழித்த போது, ஒரு நெருப்பு வணங்கியிடம் சென்று நான் எப்படி சொல்வது? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 

மறுநாள் இரவும் அதே கனவு வந்தது; மீண்டும் நான் யோசித்தேன்; மூன்றாம் நாள் இரவும் அதே கனவு ஏற்பட்டது; இனி நான் யோசிப்பதாக இல்லை; உடனே நான் பக்தாத் நோக்கி பயணமானேன். 

பக்தாதில் அவருடைய இல்லத்தை கண்டுபிடித்து அவரின் அனுமதி பெற்று வீட்டிற்குள் சென்றேன். 

அவர் மிகப்பெரும் செல்வந்தராக இருந்தார்; அவரிடம் கணக்கில் அடங்காத செல்வம் குவிந்து கிடந்தது. 

அவரிடம் சென்று அவருக்கு நான் ஸலாம் சொன்னேன்; அவர் அருகில் அமர்ந்தேன்.

அவர் : "உமக்கு ஏதேனும் தேவையா?" 

நான் : ஆம்! 

அவர் : சொல்லுங்கள் 

நான் : உங்களிடம் தனியாக பேச வேண்டும் ;  அவரை சுற்றி இருந்த பலர் சென்று விட்டார்கள். 

சிலர் மட்டும் இருந்ததால், இவர்களும் சென்று விட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். பின்னர் அவர்களும் சென்று விட்டார்கள்.

அவர் : சொல்லுங்கள் 

நான் :  "நபி (ஸல்) அவர்களின் தூதுவனாக நான் வந்திருக்கிறேன்; நபிகள் நாயகம் அவர்கள் உங்களுடைய பிரார்த்தனை ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டதாக சொல்லும்படி எனக்கு சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்"

அவர் : என்னை உங்களுக்கு தெரியுமா? 

நான்: ஆம்! தெரியும்!! 

அவர்: நான் இஸ்லாத்தை நிராகரித்தவர்களில் ஒருவன்; நபிகள் நாயகம் அவர்கள் அல்லாஹ்வி னுடைய தூதர் என்பதை மறுப்பவன்

நான்: ஆமாம்! எனக்குத் தெரியும்; உங்களிடம் என்னை நபிகள் நாயகம் அவர்களே அனுப்பி வைத்தார்கள். 

அவர் : என்னிடம்தான் அவர்கள் அனுப்பி வைத்தார்களா ?

நான் : ஆம்!  அவர்கள் தான் அனுப்பி வைத்தார்கள்.

அவர்: அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்தன் ரஸூலுல்லாஹி -  அல்லாஹ் ஒருவன் என்று நான் சாட்சி சொல்கிறேன்;  அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை நிச்சயமாக முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார்கள் என நான் நம்புகிறேன்.

பின்னர் அவர் தன் தோழர்களை தன் குடும்பத்தினரை அழைத்து, "இது நாள் வரை நான் தவறான வழியில் இருந்தேன்; இப்பொழுது நான் உண்மையான வழியின் பால் திரும்பிவிட்டேன்; யார் என்னோடு  இஸ்லாத்தில் இணைகிறாரோ அவருக்கு அவரிடம் உள்ள என் சொத்துகள் அனைத்தும் அவருக்கே உரியது. 

யார் இஸ்லாத்தில் இணையவில்லையோ அவர் என்னிடம் உள்ள உங்களுடைய சொத்துக்களை மட்டும் எடுத்துச் சென்று விடலாம். 

சிலரைத் தவிர பலரும் இஸ்லாத்தில் இணைந்தார்கள். 

பின்னர் தன் மகனை அழைத்து, "மகனே! இது நாள் வரை நான் தவறான வழியில் இருந்தேன்; இப்பொழுது நான் இஸ்லாத்தில் இணைந்து விட்டேன்; நீ என்ன செய்யப் போகிறாய்? நீ இஸ்லாத்தில் இணைந்தால் நீயும் உனது மனைவியும் பிரிந்து வாழ நேரிடும்; நானே உங்கள் இருவரையும் பிரித்து விடுவேன்; என்ன சொல்கிறாய்?

மகன் : தந்தையே! நீங்கள் இஸ்லாத்தில் இணைந்து விட்டீர்கள்; எனவே நானும் இஸ்லாத்தில் இணைகிறேன்; நானும் என் சகோதரியோடு சேர்ந்து வாழ்வதை வெறுக்கின்றேன்.

தனது மகளை அழைத்து, "மகளே! நானும் உனது சகோதரனும் இஸ்லாத்தில் இணைந்து விட்டோம்; நீ என்ன சொல்கிறாய்? 

மகள் : தந்தையே அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் சகோதரனுடன் கணவன் மனைவியாக வாழ்வதை வெறுக்கின்றேன்;  எனவே நானும் இஸ்லாத்தில் இணைந்து விடுகிறேன்; உடனே அவளும் இஸ்லாத்தில் இணைந்து விட்டாள்.

அவர் : எனக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட துஆ எதுவென்று உங்களுக்கு தெரியுமா? 

நான்: எனக்குத் தெரியாது;

அவர்: என் மகளை என் மகனுக்கு திருமணம் செய்து வைத்தேன்; அவர்களுக்காக திருமண விருந்தை மிகவும் விசாலமாக செய்தேன்; அனைத்து மக்களையும் அழைத்திருந்தேன்; 

நான் மிகப்பெரும் செல்வந்தன் என்பதால் அனைவரும் வந்திருந்தார்கள்;

மக்கள் அனைவரும் விருந்து சாப்பிட்டுவிட்டு சென்று கொண்டிருந்த போது எனக்கு மிகவும் களைப்பு ஏற்பட்டிருந்தது; 

என் பணியாளரிடம் மேல் மாடியில் ஒரு பாயை விரித்து வை சிறிது நேரம்  ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறினேன்;

என் வீட்டின் மேல் தளத்திற்கு சென்ற போது என் பக்கத்து வீட்டில் இருந்த நபி (ஸல்) அவர்களின் வம்சத்தை சேர்ந்த குடும்பத்தினர் இருந்தார்கள்; அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தார்கள்; 

அவர்களில் ஒரு சிறுமி தன் தாயிடம், "அம்மா! இந்த மஜூசி -  நெருப்பு வணங்கக் கூடியவர் தம் உணவின் வாசனையால் நம்மை சிரமத்திற்கு உள்ளாக்குகிறார்" என்று கூறினாள்.

உடனே நான் கீழே வந்து அவர்களுக்கு தேவையான அளவு உணவும், அதிகமான தீனார்களையும், அந்த வீட்டிலிருந்த அனைவருக்கும் புதிய உடைகளையும் எடுத்துச் சென்று கொடுத்தேன். 

அப்பொழுது அந்த வீட்டில் இருந்த குழந்தைகளின் தாய், "அல்லாஹ் உங்களை என் தாத்தாவுடன் சேர்த்து எழுப்புவானாக!" என்று பிரார்த்தனை செய்தாள் . 

அதனைக் கேட்ட அங்கிருந்த அனைவரும் "ஆமீன் -  ஏற்றுக் கொள்வாயாக!" என்று கூறினார்கள். 

"அந்த துஆ தான் எனக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது" என்று கூறினார். 

நூல் : கிதாபு தவ்வாபீன் , ஷுஅபுல் ஈமான் லி பைஹகீ 

ஹிஜ்ரி 250 - 300 / கி.பி. 860 - 910 காலகட்டத்தில் பக்தாத்தில் அப்பாஸியாக்களின் ஆட்சி நடைபெற்று வந்தது; அந்த காலகட்டத்தில் நடந்த உண்மையான வரலாறு தான் இது.

ஒரு செல்வந்தர் ஓய்வெடுப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உங்களுக்குத் தெரியும்! 

ஆனால் அவர் ஓய்வெடுப்பதை நிறுத்திவிட்டு பக்கத்து வீட்டு குழந்தைகளின் சொற்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அவர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் சென்று கொடுத்தார் என்றால் அவரின் நல்ல மனதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் வம்சத்தை சேர்ந்தவர்கள் எதையும் திட்டமிடாமல்  அவர்கள் மனதில் தோன்றிய வார்த்தைகளை இறைவனிடம் பிரார்த்தனையாக செய்தார்கள். 

அந்தப் பிரார்த்தனை இறைவனால்  ஒப்புக்கொள்ளப்பட்டு, இறை உத்தரவுக்கு இணங்க நபிகள் நாயகம் அவர்கள் ஒருவரின் கனவில் தோன்றி அவரை அனுப்பி வைத்து இருக்கிறார்கள் என்றால் செல்வந்தருடைய செயலின் கனத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

அவரின் செயலுக்கு நபிகள் நாயகம் அவர்களே முன் நின்று இஸ்லாத்தை  பரிசளித்திருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். 

தேவை உடையவருக்கு தேவையானதை தேவையான சந்தர்ப்பத்தில் வழங்குவது மிகப்பெரும் பாக்கியங்களை பெற்றுத் தரும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. 

இதை புரிந்து கொண்டு உங்கள் வாழ்விலும் நடைமுறைப்படுத்துங்கள்.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்