இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எழுதியதாகக் கூறப்படும் நூல்கள் அவர்கள் எழுதியதா? பின்னாளில் தொகுக்கப்பட்டதா?

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எழுதியதாகக் கூறப்படும் நூல்கள் அவர்கள் எழுதியதா? பின்னாளில் தொகுக்கப்பட்டதா?
=====================================

நேற்றைய தொடர்ச்சி....64

மாபெரும் ஞானி மஹபூப் சுப்ஹானி முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் 
=====================================

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எழுதியதாக சில நூல்களை சிலர் குறிப்பிடுகிறார்கள்; அந்த நூல்கள் குறித்து விரிவாகக் காண்போம்.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் உயிரோடு இருந்த வரை அவர்களின் உரைகள், அவர்களின் வரலாறு என எதுவும் யாராலும் எழுதப்படவில்லை.

எனவே அவர்கள் குறித்து எழுதப்பட்டுள்ள அனைத்து நூல்களும் அவர்களின் மரணத்திற்கு பிறகு எழுதப்பட்டவைகள் ஆகும்.

அதுபோலவே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் உரையையும், வரலாற்றையும்  தொகுத்தவர்கள் யாரும், "இது, இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் வாழும் பொழுதே தொகுக்கப்பட்டது " எனவும் யாரும் சொல்லவில்லை.

அதுபோல் எந்த ஒரு நூலிலும் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் கையொப்பம் இல்லை.

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் தமது இறுதி நாற்பது ஆண்டுகளில் அதிகமாக உரையாற்றிக் கொண்டே இருந்தார்கள்; நூல்கள் எழுத வேண்டும் என்ற சூழல் அவர்களுக்கு உருவாகவே இல்லை என்பதே உண்மை. 

1.  ஃபுதூஹுல் கைப் فتوح الغيب
எனும் நூலில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களின் 78 உரைகள் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் ஆசிரியர் இமாம் இப்னு நுஸ்ரா அல் ஹன்பலி (ரஹ்) ஆவார். இந்த நூல் ஹிஜ்ரி 560- 600 (1165 - 1203) களுக்கு பிறகு தொகுக்கப்பட்ட கையேட்டுப் பிரதி கிடைத்திருக்கின்றது; அதுவும் முழு தொகுப்பாகவே கிடைத்துள்ளது. 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 561 இல் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2.  அல் ஃபதஹுர் ரப்பானி الفتح الرباني 
எனும் நூலில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பயான் மஜ்லிஸ்களில் பேசிய 62 உரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷைகு அலீ பின் ஹிதாயா (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 580 - 620 ( 1184 - 1223) காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் உரையாற்றிய காலம் ஹிஜ்ரி 525 - 561 ஆகும் . 

இந்த நூலின் பழைய ஏடுகள் ஹிஜ்ரி 600 களுக்குப் பிறகு கிடைத்திருக்கின்றது.

3. ஜலாவுல் காத்திர் جلاء الخاطر எனும் நூல் ஷம்சுத்தீன் அபூ அப்துல்லாஹ் முஹம்மது அல் பக்தாதீ (ரஹ்) அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இந்த  கையேட்டுப் பிரதி  ஹிஜ்ரி 590 - 650 (1194 - 1252) 594 இல் கிடைத்திருக்கின்றது.

4.  ஸிர்ருல் அஸ்ரார் سر الأسرار எனும் நூல் ஹாஃபிழ் அல் முனாவி (ரஹ் ) அவர்களால் ஹிஜ்ரி 650 - 750 (1252 - 1349) காலகட்டத்திற்கு இடையில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இறந்த நூறு வருடங்களுக்கு பிறகு தொகுக்கப்பட்டுள்ளது. 

இந்த நூலை எழுதியவர் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டு இருக்க வாய்ப்பே இல்லை. 

எனவே இது முந்தைய நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டதாகவோ அல்லது வாய் வழியாக வந்த தகவல்களை சேகரித்ததாகவோ தான் இருருக்க வேண்டும்.

5.  ரஸாயில் அல் ஜீலானி رسائل الجيلاني எனும் இந்த நூலில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எழுதிய கடிதங்களை ஷைகு அல் மவ்ஸிலீ (ரஹ்) அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஹிஜ்ரி 620 - 700 (1223 - 1300)  காலகட்டத்தில் அல்லது அதற்குப் பிறகு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்களுடைய மகன்கள், பேரன்கள், மற்றும்  சந்ததியினரிடமிருந்து சேகரிக்கப்பட்ட கடிதங்களின் தொகுப்புதான் இந்த நூல்.

6.  அல் அஜ்விபது அல் ஜீலானிய்யா الأجوبة الجيلانية எனும் இந்த நூல் கேள்வி பதில் வடிவத்தில் உரைகள் தொகுக்கப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 600 - 700 காலகட்டத்திற்கு  இடையே எழுதப்பட்ட நூலாகும். 

இதுவும் முந்தைய நூல்கள் மற்றும் செவிவழி செய்திகளை வைத்து தொகுக்கப்பட்டதாகும்.

7.  அல் மவாஹிபுர் ரஹ்மானிய்யா المواهب الرحمانية எனும் இந்த நூலில் இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் பேசிய தசவ்வுஃப் சார்ந்த பயான் தொகுப்புகள் எழுதப்பட்டுள்ளது. 

இது ஹிஜ்ரி 700 - 800 களுக்கு இடையே  தொகுக்கப்பட்ட நூலாகும். இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் இறந்த 200 வருடங்களுக்கு பிறகு எழுதப்பட்ட நூலாகும். 

எனவே இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் ஒரு நூலைத் தவிர வேறு எந்த நூலையும் எழுதவில்லை. 

அவர்கள் எழுதியதாகவே காணப்பட்டால் அது அவர்கள் மீதுள்ள கண்ணியத்தின் பொருட்டால் இப்பொழுது உள்ள பதிப்பாசிரியர்கள் போட்டிருக்கலாம்; 

அல்லது அந்த நூல்களின் விற்பனை அதிகமாக வேண்டும் என்பதற்காக பதிவிட்டிருக்கலாம் என்பதே உண்மை.

மேற்கண்ட நூல்கள் அனைத்திலும் قال -  இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள், الشيخ -  ஷைகு கூறினார்கள், سمعنا நாங்கள் இமாம் ஜீலானி ரஹ் அவர்களிடமிருந்து கேள்விப்பட்டோம், ذكر இமாம் ஜீலானி ரஹ் அவர்கள் நினைவு படுத்தினார்கள் என்கிற வாசகம் அதிகமாக இடம் பெறுவதால் இது இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எழுதிய நூல் இல்லை என உறுதியாக தெரிய வருகிறது. 

இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள் எழுதியிருந்தால் அவர்கள் இது போன்ற  வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது அல்லவா?

தொடரும்.......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்