குர்ஆனை ஓதுவது போல புகாரி ஷரீஃப் ஓதலாமா ?

குர்ஆனை ஓதுவது போல 
புகாரி ஷரீஃப் ஓதலாமா ?
=====================================

💠 மன்பயீ ஆலிம்கள் சங்கமம் 2025 💠
🔹 DAY – 11| தொடர் பரப்புரை  🔹
===================================
மன்பவுல் அன்வார் மதரஸா – லால்பேட்டை
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு சிதம்பரம், காட்டுமன்னார்குடி, லால்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பிளேக் போன்ற தொற்று நோய்கள் ஏற்பட்டு தினம் தினம் ஒவ்வொரு தெருவிலும் ஒருவர் இறந்து கொண்டிருந்தார்கள். 

அது மக்களின் மனதில் மிகப்பெரும் பயத்தையும், பீதியையும் விதைத்தது. 

1978 க்கு முன்பு கட்டுப்படுத்த முடியாத சில நோய்கள் ஆங்காங்கே பரவி வருவதை அறிந்த கானலில்லாஹ் அப்துல்லாஹ் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் இந்த ஊரையும் மக்களையும் காக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் புகாரி ஷரீஃப் ஓதி துஆ செய்வோம் என மதரஸா மற்றும் ஊர் தலைவர்களோடு பேசி முடிவு செய்தார்கள். 

இந்நிலையில் ஹள்ரத் அவர்கள் காலமானதால் முஹம்மது ஜக்கரியா ஹள்ரத் (ரஹ்) அவர்கள் 1979 ஆம் ஆண்டு ரஜப் மாதம் புகாரி ஷரீப் ஓதத் தொடங்கினார்கள். இன்று 50 ஆவது பொன் விழா ஆண்டை அடைந்திருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!

"பிளேக் நோய் பயம்" என்று சொன்னால் நமக்கு அவ்வளவாக தெரியாது ; அது உலக வரலாறு படித்தவர்களுக்கு நன்கு பரிச்சயம்.

ஆனால் கொரோனா தொற்றுநோய் குறித்து நமக்கு நன்கு தெரியும்; கொரோனா காலத்தில் நாம் எவ்வளவு பயந்து போய் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தோம் என்று இன்றுள்ள நண்டு சிண்டுகளுக்கெல்லாம் நன்கு தெரியும். 

நாம் அச்சப்பட்டு முடங்கிக் கிடந்தது போன்று தான் அன்று நமது பாட்டன்மார்கள் நோய் தொற்றுக்கு அஞ்சி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

லால்பேட்டை மக்களுக்கு அவ்வூரில் வாழ்ந்து மறைந்த ஆலிம்கள் இரண்டை விட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒன்று : ஜாமிஆ மன்பவுல் அன்வர், மற்றொன்று : புகாரி ஷரீஃப் ஓதுதல்.

இந்த இரண்டின் வழியாக இந்த ஊர் மக்களுக்கு கண்ணுக்குத் தெரிந்தும், கண்ணுக்குத் தெரியாமலும் பல்வேறு நன்மைகள் கிடைத்து வருகின்றன; அதனால் தான் அவர்கள் இந்த இரண்டையும் பற்றிப் பிடித்து இருக்கிறார்கள். 

ஒரு நாள் கலந்து கொண்டாலே பெரும் புண்ணியம் கிடைக்கும் என்று எண்ணி பல ஊர்களில் இருந்தும் நகரங்களில் இருந்தும் வந்து செல்வோருக்கு மத்தியில், இந்த ஊரில் 40 நாட்கள் தொடர்ந்து புகாரி ஷரீஃப் வாசிப்பு நடந்து வருவது மிகப்பெரும் புண்ணியம் அல்லவா?

நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை கேட்க வேண்டும் என்பதற்காக வேண்டி மட்டுமே அரசர்கள் உட்பட பல அறிஞர்கள் மஸ்ஜிதுந் நபவியில் இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் பாடம் நடத்தும் முவத்தா நூலை கேட்க அநேகர் வருவார்கள் என வரலாறு கூறுகிறது.

இமாம் புகாரி ரஹ் அவர்கள் தமது நூலை எழுதி முடித்த பிறகு பல்க், மர்வு, நிஷாபூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பொழுது அந்தந்த ஊர் மக்கள் இமாம் புகாரி (ரஹ்) அவர்களை சிறிது நேரம் நபி மொழிகளை வாசிக்கச் சொல்லி சமா / சாமி (நமது ஊர்களில் தராவீஹ் தொழுகையில் இமாம் ஓதும் கிராஅத்தை சரி பார்க்க சாமி -  கேட்பவர் என்று ஒருவரை நியமிப்பது வழக்கம் அந்த வகையில் ) கேட்டிருப்பதாக வரலாறுகள் உண்டு.

5,6 ஆம் நூற்றாண்டுகளில் பக்தாத் ஷாம் போன்ற நகரங்களில் புகாரி ஷரீஃப் முழுவதும் பாடம் நடத்தி முடிக்கும் மஜ்லிஸ் நடந்திருக்கிறது. அவ்வாறு புகாரி ஷரீஃப் முழுவதும் ஓதி முடித்ததும் அதனைத் தொடர்ந்து துஆ மஜ்லிசும் நடைபெற்று இருப்பதாக ஆதாரங்கள் இருக்கின்றன.

وكانوا إذا ختموا الصحيح دعوا الله تعالى”

ஏழாம் நூற்றாண்டுக்கு பிறகு தான் வறட்சி, நோய் தொற்று, போர் போன்ற அபாயங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் ஸஹீஹுல் புகாரி ஷரீஃப் நூலை வாசிப்பதன் மூலம் பரக்கத்தை பெற நாடி இருக்கிறார்கள். பக்தாத் ஷாம் போன்ற நகரங்களில் புகாரி ஷரீஃப் ஓதப்பட்டுள்ளது.

எகிப்தில் மம்லூக் அரசர்கள் ஆட்சி செய்த போது பஞ்சம், நோய் தொற்று, வறட்சி போன்ற காரணங்களுக்காக புகாரி ஷரீஃப் முழுவதும் ஓதி துஆ செய்திருப்பதாக வரலாறுகள் சாட்சி சொல்கிறது.

நூல்: அல் பிதாயா வந்நிஹாயா

இந்தியாவில் ஹிஜ்ரி பத்தாம் நூற்றாண்டுக்கு பிறகுதான் எகிப்து உலமாக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் டெல்லி, லக்னோ  போன்ற பகுதிகளில் ஓதப்பட்டுள்ளது. 

இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் தெஹ்லவி போன்ற மாபெரும் அறிஞர்கள் காலத்தில் இந்த செயல் மிகவும் பயபக்தியோடு நன்மையை நாடி செய்யப்பட்டுள்ளது. 

பொதுவாகவே மார்க்க அறிஞர்கள் இந்த செயலை ஹராம் என்று தடுத்து விடவில்லை ; முபாஹ் அனுமதிக்கப்பட்ட அழகான செயல் என்றே கூறுகிறார்கள்.

இவ்வளவு வரலாற்று சிறப்பு வாய்ந்த புகாரி ஷரீஃப் ஐம்பதாம் ஆண்டு நிகழ்வு நடைபெற உள்ளது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.

وكانوا إذا ختموا الصحيح دعوا الله تعالى
واجتمع الناس على ذلك
(التاريخ البغداد)

وكان ختم صحيح البخاري
يُقرأ في الجامع الأموي
ويُدعى عند ختمه دعاءً عاماً
 (تاريخ دمشق)

وكان من عادة العلماء
إذا ختموا صحيح البخاري
أن يدعوا الله تعالى
رجاء القبول والبركة
 (طبقات الشافعية الكبرى)

وختموا صحيح البخاري
ودعوا الله تعالى
عند الشدائد والبلاء
(البداية والنهاية)

وكان إحياءُ علم الحديث بالهند بقراءة الصحيحين، وخاصة صحيح البخاري، وختمه مع الدعاء
(الإنصاف في بيان سبب الاختلاف شاه ولي الله الدهلوى)

وكان ختم صحيح البخاري معروفاً في مدارس دهلي، ويُختم بالدعاء العام
(بستان المحدثين - شاه عبد العزيز دهلوي)

وكان أهل العلم بكشمير يقرؤون صحيح البخاري في المجالس، فإذا ختموه دعوا الله تعالى
(ملا علي كاشميري تاريخ كشمير)

كان ختم البخاري يُقام في المساجد الكبرى بحيدر آباد بإشراف العلماء
( آثار الحديث بالهند),

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்