கொலை செய்தவரை விடுதலை செய்!

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

மாதம்: 11

தொடர்: 87

கொலை செய்தவரை 
விடுதலை செய்!
<=><=><=><=><=><=><
=><=><=><=><=><=><=><=><=>

மூஸா பின் ஸாலிஹ் அல் அஸதீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;

பக்தாத் நகரத்தின் ஆளுநராக இஸ்ஹாக் பின் இப்றாஹீம் பின் முஸ்அப் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். 

இவர்கள் கூறுகிறார்கள்; ஒரு நாள் இரவு உறக்கத்தில் நபி  (ஸல்) அவர்களை கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள் என்னிடம் "அந்தக் கொலையாளியை விடுதலை செய்து விடு" என்று கூறினார்கள். 

அந்த வார்த்தையை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்து பயந்து போனேன். 

உடனே மெழுகுவர்த்தியை ஏற்றி வெளிச்சத்தை உண்டாக்கி கொண்டு, சிறைச்சாலை சார்ந்த ஆவணங்கள் அடங்கிய புத்தகத்தைத் எடுத்து ஆய்வு செய்தேன்.

நான் பார்த்த ஆவணங்களில் கொலை குற்றவாளி என்று குற்றம் சுமத்தப்பட்ட நபர் குறித்து எந்த பதிவுகளும் இல்லை. 

உடனே சிறை பொறுப்பாளர்களை வரச் செய்து அவர்களிடம், "கொலை குற்றம் சுமத்தப்பட்ட எவரேனும் சிறைச்சாலையில் இருக்கின்றார்களா?" என்று கேட்டேன். 

வந்திருந்த இரண்டு சிறை அதிகாரிகளில் ஒருவர், "ஆமாம்! அந்தக் குற்றவாளி சம்பந்தமாக ஏற்கனவே தங்களுக்கு தகவல் அனுப்பி இருக்கிறோம்" என்று கூறினார். 

உடனே நான் மீண்டும் என்னிடம் இருந்த ஆவணங்களைப் புரட்டிப் பார்த்தேன்; அப்பொழுது காகிதங்களுக்குள் மறைந்திருந்த அந்த ஆவணத்தை கண்டெடுத்தேன். 

அந்த ஆவணத்தை வாசித்தேன்; அந்த மனிதன் கொலையாளி தான்  என ஒருவர் சாட்சியம் அளித்திருப்பதையும்,
கொலையாளியே தான் செய்த கொலையை ஒப்புக் கொண்டிருப்பதாகவும் எழுதப்பட்டிருப்பதை கண்டேன்.

"அவரை அழைத்து வாருங்கள்" என உத்தரவிட்டேன்; சிறிது நேரத்தில் அவர் என்னிடம் வந்தார்; அவருடைய உடலில் நடுக்கத்தையும், பயத்தையும் கவனித்தேன்.

"என்னிடம் உண்மையைச் சொன்னால் உன்னை நான் விடுதலை செய்து விடுவேன்" என்று கூறினேன். உடனே அவர் தன் கடந்த கால நினைவுகளை சொல்ல  ஆரம்பித்தார். 

"நானும் எனது நண்பர்களும் பெரும் பாவங்களை செய்து வந்தோம்; ஹராமாக உள்ள அனைத்தையும் ஹலால் என கருதி செய்து வந்தோம். 

(பக்தாதில் உள்ள ) அபூ ஜாஃபர் அல் மன்சூர் நகரத்தில் இருந்த ஒரு பாழடைந்த வீட்டில் ஒன்று கூடி இரவு முழுவதும் எல்லா வகையான தீமைகளையும் தாராளமாக செய்து வந்தோம். 

எங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமான ஒரு கிழவி அங்கே வந்தாள்; அவளுடன் அழகான இளம் பெண் ஒருவளும் உடன் வந்திருந்தாள்.

அந்தக் கிழவி அந்த பெண்ணை வீட்டின் முற்றத்திற்கு அழைத்து வந்ததும், அந்தப் பெண் எங்களை பார்த்து அலறி மயங்கி விழுந்தாள். 

உடனே நான் அருகில் சென்று அவளை மயக்கத்தில் இருந்து தெளிய வைத்து அருகில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்று அவளை அமைதிப் படுத்தினேன். 

"உனக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டதும் அவள், அல்லாஹ்வுக்காக.... அல்லாஹ்வுக்காக..… என்னை விட்டு விடுங்கள்; 

இந்த கிழவி என்னை ஏமாற்றி அழைத்து வந்து விட்டாள்; இந்த இடத்தில் விலை உயர்ந்த பொக்கிஷங்கள் இருக்கின்றன அவற்றை பார்ப்பதற்கு ஆசையை தூண்டினாள்;  அவை உண்மை என நம்பி நானும் அவற்றை பார்ப்பதற்காகவே இங்கே வந்தேன்;

எனது தாத்தா நபிகள் நாயகம் ஆவார்கள்; எனது தாய் பாத்திமா (ரலி) ஆவார்கள்; எனது தந்தை ஹஸன் பின் அலி (ரலி) ஆவார்கள்; இவர்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்" என்று கூறினாள். 

உடனே நான் அவளைப் பாதுகாப்பேன் என மனதுக்குள் உறுதி கொண்டேன்; பின்னர் வெளியே வந்து என் நண்பர்களிடம் நடந்த விபரங்களை எடுத்துச் சொன்னேன். 

ஆனால் அவர்கள் என் பேச்சை நம்பவில்லை; அதே நேரம் அந்தப் பெண்ணின் அழகு அவர்களை தவறு செய்யத் தூண்டியது; 

"நீ மட்டும் அவளோடு உல்லாசமாக இருந்துவிட்டு வந்துவிட்டாய்; எங்களை அவளிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்கிறாயா?" என்று சொல்லிக் கொண்டே அவளை நெருங்கினார்கள். 

நான் அந்தப் பெண்ணுக்கு முன்னால் சென்று அவளைக் காப்பாற்ற முனைந்தேன்; எங்களுக்குள் கடுமையான சண்டை ஏற்பட்டது; நானும் பலரை காயப்படுத்தினேன்; என்னையும் பலர் காயப்படுத்தினார்கள். 

இந்நிலையில் அந்தப் பெண்ணை நெருங்க நினைத்த ஒருவனை கொன்று விட்டேன்; நான் கடுமையாக காயம்பட்டிருந்தாலும், அந்த நிலையிலும் அந்தப் பெண்ணை நான் பாதுகாத்தேன். 

அந்தப் பெண்ணுக்கு எதுவும் நேராமல் அந்த வீட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்து, அவளை அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தேன். 

அப்பொழுது அவள், "நீங்கள் என்னை பாதுகாத்தது போல் அல்லாஹ் உங்களை பாதுகாப்பானாக! எனக்கு நீங்கள் இருந்தது போல் உங்களுக்கு அல்லாஹ் இருப்பானாக!" என்று கூறினாள்.

அந்த நள்ளிரவில் எழுந்த சப்தங்களை கேட்டு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்தார்கள்; என்னால் கொலை செய்யப்பட்ட ஒரு மனிதன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்; என் கைகளில் கத்தி இருந்தது; இந்த நிலையில் தான் நான் கைது செய்யப்பட்டேன்."

ஆளுநர் இஸ்ஹாக் அவர்கள் கூறுகிறார்கள்; நீ கொலை செய்த சூழ்நிலையை நான் புரிந்து கொண்டேன்; அந்தப் பெண்ணை நீ காப்பாற்றுவதற்காகதான் கொலை செய்திருக்கிறாய்; 

எனவே அல்லாஹுவிற்காகவும் அவருடைய தூதருக்காகவும் உன்னை நான் மன்னித்து விட்டு விடுகிறேன்.

விடுதலை செய்யப்பட்ட நபர் கூறினார்; என்னை யாருக்காக நீங்கள் விடுதலை செய்தீர்களோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இனி ஒருபோதும் நான் பாவங்களின் பால் செல்ல மாட்டேன்; சந்தேகமானவற்றின் பக்கமும் செல்ல மாட்டேன்; அல்லாஹ்வை சந்திக்கும் வரை உண்மையாகவும், நேர்மையாகவும்  இருப்பேன்" என்று கூறினார்.

நான் (இஸ்ஹாக்) அவரிடம் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டதையும், அவர்கள் என்னிடம் சொன்னதையும் சொல்லிக் காட்டினேன்; நீ அந்த பெண்ணுக்கு செய்த நன்மையை அல்லாஹ் வீணாக்கவில்லை; அந்தப் பெண் செய்த பிரார்த்தனையும் வீணாகவில்லை" என்று கூறினேன். 

நூல் : அல் முஸ்தரிஃப்

ஹிஜ்ரி 170 - 190 கி.பி. 786 - 805 காலகட்டத்தில் பக்தாத் நகரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இஸ்ஹாக் பின் இப்றாஹீம் பின் முஸ்அப் (ரஹ்) அவர்கள் அப்பாஸிய கலீஃபாவான ஹாரூன் ரஷீத் அவர்கள் காலத்தில் ஆளுநராக பணியாற்றி வந்தார். எனவே இந்த நிகழ்வு ஆதாரப்பூர்வமான நிகழ்வாகும்.

தினம் தினம் பல வகையான தீய செயல்களில் ஈடுபட்டும் வரும் ஒருவர், அநீதிக்கு எதிராக நின்று உயிரையும் கொடுக்க துணிந்ததால் அவரை அல்லாஹ்விற்கு பிடித்து விட்டது. 

அதனால் அல்லாஹ் அவருக்கு துணையாக இருந்து பாதுகாத்தான்; எந்த அளவிற்கு என்றால் இனி பாவமான காரியங்களில் ஈடுபடவே மாட்டேன் என சத்தியம் செய்து அதில் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தார்; ஆனால் இவர்தான் ஏற்கனவே எந்த பாவத்தையும் விடாமல் செய்தவர்?.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்