நள்ளிரவில் அஹ்ல பைத் பெண்ணுக்கு ஆதரவு அளிக்க மறுத்த முஸ்லிம்

நள்ளிரவில் அஹ்ல பைத் பெண்ணுக்கு ஆதரவு அளிக்க மறுத்த முஸ்லிம்  / ஆதரவளித்த இந்து
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

நீயும் உன் குடும்பத்தினரும் சொர்க்கவாதிகள்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

மாதம்: 11

தொடர்: 88

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

அலி (ரலி) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்த சிலர் பல்க் நகரத்தில் வசித்து வந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு அதே அலி (ரலி) அவர்களின் வம்சத்தைச் சேர்ந்த பெண் மனைவியாக இருந்தார்; இந்த தம்பதியருக்கு சில பெண் பிள்ளைகள்  இருந்தனர். 

இந்நிலையில் கடுமையான வறுமையில் இருந்த  கணவர் நோய்களுக்கு இரையாகி மரணமடைந்து போனார். 

எதிரிகளின் ஏளனமும், இழிவும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அந்தப் பெண் தன் மகள்களுடன் சமர்கந்து நகரம் நோக்கிப் பயணம் செய்தார்.

அவர்கள் பயணம் செய்த காலம் கடும் குளிர்காலமாக இருந்தது. சமர்கந்து நகரத்துக்குள் நுழைந்ததும், தம் பிள்ளைகளை ஒரு மஸ்ஜிதுக்குள்  தங்க வைத்துவிட்டு, அந்தப் பெண் தம் பிள்ளைகளுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யும் நோக்கத்தில் வெளியே சென்றார். 

அப்போது அவர் இரண்டு குழுவினரை பார்த்தார். ஒரு கூட்டம் ஒரு முஸ்லிமைச் சுற்றி இருந்தது; மற்றொரு கூட்டம் அந்த நகரத்தின் பொறுப்பாளராக இருந்த ஒரு மஜூசியை (நெருப்பு வணங்கியை)ச் சுற்றி இருந்தது.

அப்பெண் முதலில் முஸ்லிமிடம் சென்று தன் நிலையை விளக்கி, “இன்று இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டார். 

அதற்கு அந்த முஸ்லிம், “நீ அலி (ரலி) அவர்களின் வம்சத்தை சேர்ந்த பெண் என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா?” என்று கேட்டார். 

அப்பெண், “இந்த நகரத்தில் என்னை அறிந்தவர் யாரும் இல்லை” என்று சொன்னார். அவர் அப்பெண்ணை புறக்கணித்து விட்டார்.

பின்னர் அப்பெண் அந்த மஜூசியிடம் சென்று தன் நிலையையும், முஸ்லிமிடம் நடந்ததையும் கூறினார். 

உடனே அந்த மஜூசி தன் வீட்டு பெண் ஒருவளை அப்பெண்ணுடன் அனுப்பி, மஸ்ஜிதில் இருந்த மகள்களைத் தன் வீட்டிற்கு அழைத்து கொண்டு வரும்படி கூறினார்.

அவர்கள் அவருடைய வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு சிறந்த உடைகளை அணிவித்து, உணவளித்து மரியாதையுடன் உபசரித்தார்.

அன்று நள்ளிரவில், அந்த முஸ்லிம் ஒரு கனவு கண்டார். மறுமை நாள் வந்துவிட்டதாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கொடியுடன் நிற்பதாகவும், பச்சை மரகதத்தால் ஆன ஒரு அழகிய அரண்மனை எதிரில் இருப்பது போலும் கண்டார். 

அவர் நபி (ஸல்) அவர்களிடம், “யா ரசூலல்லாஹ்! இந்த அரண்மனை யாருக்கானது?” என்று கேட்டார். 

நபி (ஸல்) அவர்கள், “ தவ்கீத் வாதியான ஒரே இறைவனை ஏற்ற முஸ்லிமுக்கானது” என்று கூறினார்கள். 

அதற்கு அவர், “நானும் ஒரே இறைவனை ஏற்ற முஸ்லிம்தானே” என்றார். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ முஸ்லிம் என்பதற்கான ஆதாரத்தை எனக்கு கொடு” என்று கேட்டார்கள்.

அதனால் அந்த மனிதன் குழப்பத்துடன் நின்றிருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் “அலி (ரலி) அவர்களின் வம்சத்தை சேர்ந்த ஒரு பெண் உன்னிடம் வந்தபோது, நீ அவரிடம் ‘ஆதாரம் கொண்டு வா’ என்று கேட்டாயே அதுபோல இப்போது நீயும் ஆதாரம் கொண்டு வா" என்று கூறினார்கள்.

அந்த முஸ்லிம்  திடுக்கிட்டு எழுந்து அழ ஆரம்பித்தார். அந்த இரவே நகரம் முழுவதும் அந்தப் பெண்ணைத் தேடி அலைந்தார். இறுதியில் அப்பெண் இருக்கும் இடத்தை அறிந்து, அந்த மஜூசியிடம் சென்று, “அந்தப் பெண் எங்கே?” என்று கேட்டார். 

மஜூசி : “அவர் என்னிடம்தான் இருக்கிறார்” 

முஸ்லிம்: அப்பெண்ணை என்னிடம் ஒப்படைத்துவிடு” 

மஜூசி: அது முடியாது; அவர்கள் என் விருந்தினர்; அவர்களால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பரக்கத் கிடைத்திருக்கிறது”  

முஸ்லிம்:  ஆயிரம் தீனார்களை தருகிறேன் அவர்களை என்னிடம் ஒப்படைத்து விடு.  

மஜூசி : அவ்வாறு நான் செய்ய மாட்டேன்; அவர்கள் எனது விருந்தினர்; நீ பார்த்த அந்த அரண்மனைக்கு நான்தான் அதிக உரிமையுள்ளவன்; 

நீ இஸ்லாத்தில் இருப்பது குறித்து நீ பெருமை கொண்டாய்!  அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நேற்று இரவு நாங்கள் தூங்கவே இல்லை, என் வீட்டார் அனைவரும் அந்தப் பெண்ணின் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்;

நீ பார்த்தது போல் நானும் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டேன். அவர்கள் என்னிடம், ‘அந்தப் பெண்ணும் அவருடைய மகள்களும் உன்னிடமே இருக்கிறார்களா?" என்று கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். 

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அந்த அரண்மனை உனக்கும் உன் வீட்டாருக்கும் உரியது; நீயும் உன் குடும்பத்தாரும் சொர்க்கவாசிகள்; அல்லாஹ் உன்னை ஆரம்பத்திலேயே ஈமான் கொண்டவராக படைத்தான்’ என்று கூறினார்கள்.”

நூல் : அல் கபாயிர்

இந்த நிகழ்வு ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டிலும், கி.பி. எட்டாம் நூற்றாண்டிலும் அப்பாஸியாக்களின் ஆட்சி காலத்தில் நடந்த உண்மை நிகழ்வாகும்.

ஒரு மனிதனின் மதிப்பு, அவன் சார்ந்துள்ள மதத்தாலோ பெயராலோ அல்ல! அவன் பிறரிடம் காட்டும் அன்பு, நேர்மை, மனிதாபிமானம் ஆகியவற்றின் மூலமாக மட்டுமே உயர்ந்த நிற்கிறான்.  

கருணை காட்டியவருக்கு ஹிதாயத்தின் கதவு திறந்து இருக்கிறது; கருணையோடு நடந்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்