ஊராட்சி மன்ற தலைவர் முஸ்தபா

ஊராட்சி மன்ற தலைவர் முஸ்தபா அவர்களால் பெரிய வடகரைக்கு 
மின்சாரம் வந்த கதை :
********************************************
1975 ஆம் ஆண்டு பெரிய வடகரையில் பாலம் கட்டப்பட்டது. பின்னர் 1978 ஆம் ஆண்டு பெரியவடகரை கிராமத்திற்கு மின்சாரம் வந்தது. இந்த நிகழ்வு நெகிழ்ச்சியூட்டும் ஓர் நிகழ்ச்சி.

பிரசிடெண்ட் முஸ்தபா அவர்கள் தலைவராக இருந்தபோது நமது கிராமத்திற்கு முதன்முதலில் மின்சாரம் வந்தது. தலைவர் முஸ்தபா அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அன்றைய நமது திருச்சி மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகத்திற்கும் மற்றும் மின்சாரத் துறை திருச்சி மாவட்ட உயர் அதிகாரிக்கும்  புகார் மனு அனுப்பிக்கொண்டே இருந்தார்கள். 

அதில் எழுதப்பட்டிருந்த விஷயம் இதுதான். "எங்களது ஊருக்கு மின்சாரம் இன்னும் வந்து சேரவில்லை, அதற்காக வேப்பந்தட்டை, வாலிகண்டாபுரம், பெரம்பலூர் ஆகிய ஊர்களிலுள்ள எந்த மின்சார துறை ஊழியரும் முயற்சி செய்யவே இல்லை, அவர்களிடம் நாங்கள் பலமுறை கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம், எனவே தாங்களே இதற்கு வழிவகை செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று  எழுதப்பட்டிருந்தது. 

மேலும் ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர குறை தீர்ப்பு நாளன்று மனுக்கள் பெறப்படுகின்றன. அந்த  நாளிலும் கூட இதைப் போன்றதொரு மனுவை கொடுத்து வந்தார்கள். 

இப்படி கொடுக்கப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலாக இருந்ததால் அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் மற்றும் மின்சார துறை உயரதிகாரிகள் ஆர்டர் -  உத்தரவிட்டார்கள். 

பின்னர் வேப்பந்தட்டை அதிகாரிகள் நமது முஸ்தபா தலைவர் அவர்களிடம் வந்து, "என்னங்க பாய்! புகாருக்கு மேல புகார் செய்து கொண்டே இருக்கிறீர்கள்! உங்கள் ஊருக்கு மின்சாரம் வரவேண்டுமென்றால் நூற்றுக்கும் மேற்பட்ட கம்பங்கள் பெரியவரை கிராமத்திற்கு வந்து சேரவேண்டும், அதை நீங்கள் எப்படி எடுத்து வருவீர்கள்? அதை எடுத்து வருவதற்கு எங்களிடம் வாகனமோ ஆட்களோ கிடையாது. நீங்கள் எடுத்துவந்து கொடுத்தால் நாங்கள் சில நாட்களில் இந்தப் பணியை முடித்துத் தருகிறோம், உங்களால் முடியுமா? என சவால் விடுவது போல் அதிகாரி கேட்டார். 

உடனே முஸ்தபா தலைவர் அவர்கள், "நான் எங்கள் பஞ்சாயத்தை கூட்டி முடிவெடுத்து சொல்லுகிறேன், நாளை வந்து உங்களை அலுவலகத்தில்  சந்திக்கிறேன்" என்று சொல்லி அனுப்பினார்கள். 

அன்று இரவு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. அதில் வடகரையிலுள்ள அனைத்து மதத்தினரும் ஒன்று கூடியிருந்தனர்.

அப்பொழுது இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. "எந்தெந்த வீட்டில் மாட்டு வண்டிகள் இருக்கின்றனவோ அவர்கள் அனைவரும் மாட்டு வண்டிகளை பூட்டிக்கொண்டு வேப்பந்தட்டை வந்துவிடவேண்டும். ஒவ்வொரு வண்டியிலும் மூன்று, நான்கு கம்பங்கள் ஏற்றப்படும். அதைக் கொண்டு வந்து ஒரு இடத்தில் வைக்க வேண்டும்" என பஞ்சாயத்தில் பேசி முடிவு செய்யப்பட்டது. 

அதேபோல் மறுநாள் காலை நமது கிராமத்தில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் வேப்பந்தட்டையில் ஒன்று கூடியது. இதனைப் பார்த்த மின்சாரத்துறை அதிகாரிகள் அரண்டு விட்டார்கள். "நேற்றுதான் சொன்னோம், இன்று 'பாய்' அதற்கான ஏற்பாடுகள் செய்து விட்டாரே" என்று அதிகாரிகள் மலைத்துப் போனார்கள். 

பின்னர் அன்று ஒரே நாளில் நமதூருக்கு தேவையான அனைத்து கம்பங்களும் ஏற்றப்பட்டு கொண்டுவரப்பட்டது. இதற்குப் பிறகு சில தினங்களில் நமதூருக்கு மின்சாரம் வந்ததாக நமதூர் முன்னோர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

முதலில் மின்சாரம் பெற்றவர்கள் : 
*********************

நமதூருக்கு மின்சாரம் வந்ததும் முதன்முதலில் மவ்லவி முஹம்மது காசிம் பாக்கவி ஹளரத் அவர்கள் அப்துல்லாஹ் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள 'ஹள்ரத் மஹால்' கட்டிடத்திற்கு முதன்முதலில் தம் செலவில் மின்சாரம் பெற்றுத் தந்தார்கள்.

பின்னர்தான் மவ்லவி முஹம்மது காசிம் பாக்கவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் தனது வீட்டிற்கு மின்சாரம் இழுத்தார்கள். அதே நேரத்தில் மர்ஹூம் அப்துல் ரஜ்ஜாக் ஆசிரியர் அவர்களும் தமது இல்லத்திற்கு மின்சாரம் இழுத்தார்கள். 

மின்சாரம் வந்த உடனேயே நமதூர் மக்கள் முதன்முதலில் எதற்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும்? முதல் மரியாதை கொடுக்கப்படவேண்டும்? என்பதை புரிந்து வைத்திருந்து அதை சிறப்பாக செய்து காட்டியதாக வரலாறு நமக்கு சொல்லிக் காட்டுகிறது. இதற்குப் பிறகுதான் நமது பெரியவடகரை ஜாமிஆ மஸ்ஜிதிற்கு மின்சாரம் வந்ததாக அறியப்படுகிறது.

இருண்டு கிடந்த  உரை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்திய நமது முன்னாள் தலைவர் மர்ஹூம் முஹம்மது முஸ்தபா அவர்களுக்கு அல்லாஹ் அவர்களுடைய கபுரில் ஒளியேற்றுவானாக! அவருடைய மறுமை வாழ்வை அல்லாஹ் ஒளிரச் செய்வானாக! ஆமீன்.

வரலாற்று வழியில் பெரிய வடகரை எனும் நூலில் இருந்து....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்