அவருக்கு பயப்படாதீங்க......

அவருக்கு பயப்படாதீங்க......
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 11

தொடர்: 73

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

ஹிஜ்ரி 570 களில் இன்றைய துருக்கியின் தென் கிழக்குப் பகுதியில்  டைகிரிஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் சிஸ்ரே - Cizre எனும் நகரம் அன்று 'ஜஸீரத் இப்னு உமர்' எனும் பெயரில் இருந்து வந்தது.

அந்த நகரத்தின் காஜியாக ஸத்ருத்தீன் மவ்ஹூப் அல் ஜஸ்ரி (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். 

இயற்கையாகவே இவர் மிகப்பெரும் செல்வந்தராகவும், மிகப்பெரிய அளவில் வியாபாரம் செய்யக் கூடியவராகவும் இருந்ததால், அளவற்ற செல்வத்திற்கு சொந்தக்காரராக இருந்தார். 

அந்தப் பகுதியின் ஆளுநர் இவரின் செல்வத்தின் மீது ஆசை கொண்டு அதை அபகரிக்க வேண்டுமென நினைத்து செயல்பட்டார்; இது காஜி ஸத்ருத்தீன் மவ்ஹூப் அல் ஜஸ்ரி (ரஹ்) அவர்களுக்கு தெரியவந்தது.

உடனே காஜி அவர்கள் தனது வியாபார நண்பர்களான சிலரிடம் தனது செல்வங்களை கொடுத்து சிரியா நாட்டிற்கும், எகிப்து நாட்டிற்கும் அனுப்பி வைத்துவிட்டார். 

பின்னர் தாமும் ஒளிந்த நிலையில்  சிரியாவிற்கு தப்பிச் சென்றார்; பிறகு அங்கிருந்து எகிப்து சென்றடைந்தார்.

காஜி அவர்கள் வாழ்ந்த எகிப்து பகுதிக்கு பஹாவுத்தீன் என்பவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்; அவர் காஜி ஸத்ருத்தீன் மவ்ஹூப் அல் ஜஸ்ரி (ரஹ்) அவர்களுக்கு தீங்கு செய்ய நாடினார்; இதனால் காஜி அவர்கள் மிகவும் அஞ்சி நடுங்கி வந்தார்கள். 

அமைச்சர் பஹாவுத்தீன் அவர்கள்மீது அஞ்சி நடுங்கி வந்த வேளையில் நடந்த நிகழ்வை காஜி அவர்கள் கூறுகிறார்கள். 

இந்த இக்கட்டான நேரத்தில் நான் நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன்; அவர்கள் என் நிலையை குறித்து விசாரித்தார்கள்.  

"அல்லாஹ்வின் தூதரே! அமைச்சர் பஹாவுத்தீன் அவர்களுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன்" என்று கூறினேன்.

நபி (ஸல்) அவர்கள், "அவர் குறித்து நீங்கள் அஞ்ச வேண்டாம்; அவரை நீங்கள் சந்தித்து  'உங்களுக்கு விரைவில் பதவி உயர்வு உண்டு! அதனால் எனக்கு தொந்தரவு கொடுக்காதீர்' என்று சொல்லுங்கள்; மேலும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் என் விஷயமாக உன்னிடத்தில் பரிந்துரைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லுங்கள்" என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களை நான் சந்தித்ததால் மிகவும் மகிழ்வோடு விழித்தெழுந்தேன்; ஃபஜ்ரு தொழுகையை முடித்த பிறகு என் வாகனத்தில் ஏறி சென்று பஹாவுத்தீன் அவர்கள் கோட்டைக்குச் செல்லும் பாதையில் அவரின் வருகையை எதிர்பார்த்து நின்றிருந்தேன்.

அவர் வந்ததும், அவருக்கு நான் ஸலாம் சொன்னேன்; பின்னர், "என்னிடம் ஒரு தூது செய்தி இருக்கின்றது" என்று கூறினேன்.

யாரிடமிருந்து அந்த தூது செய்தி வந்திருக்கிறது என்று என்னிடம் கேட்டார். 

"அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்து வந்திருக்கிறது; அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உமக்கு வெகு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும், அதனால் எனக்கு நீங்கள் எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்றும், என் விஷயத்தில் உங்களிடம் பரிந்துரைத்திருக்கிறார்கள்" என்றும் கூறினேன்.

அவர், "நீர் உண்மையை சொன்னீர்; நபி (ஸல்) அவர்களும் உண்மையவே சொன்னார்கள்; இன்று முதல் உங்களை வைத்து அல்லாஹ்வின் தூதரிடம் நானே பரிந்துரை செய்வேன்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! என் புறத்திலிருந்து உமக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டார்; அவரை மரியாதையோடு வழியனுப்பியும் வைத்தார்.

நூல்: தாரீஹுல் குலஃபா 

ஜஸீரது இப்னு உமர் பகுதியின் ஆளுநர் காஜி அவர்களின் செல்வத்தை கொள்ளையடிக்க நினைத்ததும் காஜி அவர்கள் அந்த ஊரை விட்டும் தப்பித்து எகிப்து வந்து விட்டார். 

காஜி அவர்கள் தப்பித்து சென்ற செய்தியை அறிந்த ஜஸீரது இப்னு உமர் பகுதியின் ஆளுநர் எகிப்து அமைச்சர் பஹாவுத்தீன் அவர்களுக்கு, "காஜி அவர்களிடம் ஏகப்பட்ட பணம் இருக்கின்றது இயன்றதை பறித்து நீங்கள் கொஞ்சம் வைத்துக் கொண்டு எனக்கு கொஞ்சம் கொடுங்கள்" என செய்தியை அனுப்பி வைத்துவிட்டார்.

பஹாவுத்தீன் அவர்களும் அதற்கான வேலைகளில் இறங்கிய போதுதான் நபி (ஸல்) அவர்கள் காஜி அவர்களின் கனவில் தோன்றி சொன்னது போலவே பஹாவுத்தீன் அவர்களின் கனவில் தோன்றியும் நற்செய்தி கூறினார்கள். 

அதனால்தான் பஹவுத்தீன் அவர்கள், "காஜி அவர்களே! நீங்களும் உண்மையை சொன்னீர்; அல்லாஹ்வின் தூதரும் உண்மையை சொன்னார்கள்" என்று கூறினார் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நேர்மையாக வாழ்ந்து வந்த காஜி அவர்களுக்கு பாதுகாப்பையும், கனவில் தோன்றியது மூலம் மகிழ்வையும் நபி ஸல் அவர்கள் வழங்கினார்கள். 

எனவே நேர்மையாக இருப்பவர்களுக்கு நபிகளாரின் உதவி எப்பொழுதும் உண்டு என இந்த வரலாற்றின் மூலம் தெரிய வருகிறது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்