மஹ்மூதே! இந்த இருவரிடமிருந்து என்னை காப்பாற்று!
மஹ்மூதே! இந்த இருவரிடமிருந்து என்னை காப்பாற்று!
==================================<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 12
தொடர்: 77
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
நபியே நிச்சயமாக அல்லாஹ் உம்மை மக்களிடமிருந்து காப்பான் 5:67 எனும் இறைவனளித்த வாக்குறுதி இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆம் நபிகளார் வாழும்போது பலர் கொன்றொழித்திட நினைத்தனர். அவர்கள் அனைவரும் தோல்வியை மட்டுமே சந்தித்தனர். இப்பொழுதும் சிலர் வேறு விதமாக நினைத்தனர். அதுவும் தோல்வியில் முடிந்தது.
ஹிஜ்ரி 557 (கி.பி. 1162) ரோம் நகரைச் சார்ந்த சிலர் இரு கிருஸ்துவர்களை மதீனாவிற்கு அனுப்பி அங்குள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித உடலை எவருக்கும் தெரியாமல் தோண்டி எடுத்துக் கொண்டு ஐரோப்பாவிற்கு வந்துவிட வேண்டும் என ஏற்பாடு செய்து அனுப்பியிருந்தனர்.
இருவரும் மொரோக்கோ முஸ்லீம்கள் போல் வேடமணிந்து பெயின் முஸ்லிம்கள் என சொல்லிக்கொண்டுஹஜ் செய்து விட்டு மதீனாவிற்கு ஜியாரத் செய்வதற்காக எல்லோரும் போல் வந்தார்கள்.
ஜியாரத் செய்தார்கள்; மஸ்ஜிதுந் நபவியில் நடைப்பெறும் ஹதீஸ் வகுப்பில் இணைந்து நல்ல மாணவர்களைப் போல் கல்வி பயின்றார்கள். தக்பீர் தஹ்ரீமா தவறாமல் தொழுகையில் கலந்துக் கொண்டார்கள்.
அவர்கள் இருவரும் பாபுஸ் ஸலாம் அருகே கிப்லா திசையில் டெண்ட் அமைத்து தங்கி கொண்டார்கள். மக்களிடையே தம்மை நல்லவர்களாக காட்டிக் கொள்ள மதீனாவிலுள்ள ஏழை எளியவர்களுக்கு பொருளாதார உதவிகளையும், உடல் சார்ந்த உதவிகளையும் செய்து ஆசிரியர்கள் மற்றும் மஸ்ஜிதுந் நபவியுடன் அதிகம் தொடர்புள்ள அனைவரிடமும் நன் மதிப்பை பெற்றார்கள்.
ஐந்து நேரத் தொழுகை, தஹஜ்ஜுத் தொழுகை, ஜன்னத்துல் பகீவுவில் தினமும் துஆ செய்தல், திங்கள் கிழமை அன்று நோன்பு நோக்குதல் போன்ற செயல்களை பயபக்தியோடு செய்து வந்தார்கள்.
அவர்கள் ஓய்வெடுக்கும் பகல் நேரத்தில் பூமிக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க மண் தோண்டினார்கள். இரவு நேரங்களிலும் தொடர்ந்து தோண்டினார்கள். தோண்டப்பட்ட மண்ணை தம் மேலாடையில் வைத்து இரவில் சுமந்து சென்று ஜன்னத்துல் பகீஃ அருகே கொட்டினார்கள்.
எவறேனும் ஏதேனும் விசாரித்தால் ஜியாரத் செய்ய செல்வதாக கூறினார்கள். இப்படியாக சுரங்கப் பணி பல நாட்கள் நடைப்பெற்று மஸ்ஜிதுந் நபவியிலுள்ள மக்பராவை நெருங்கி விட்டிருந்தனர்.
இவ்வேளையில் அரசர் நூருத்தீன் மஹ்மூத் பின் ஜங்கீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கனவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்சியளித்தார்கள். அப்பொழுது அண்ணலார் இருவரது முகங்களை காட்டி, "இவர்கள் இருவரும் என் கப்ரை நோக்கி சுரங்கப் பாதை தோண்டி வருகின்றனர்; என் உடலை எடுத்துச் செல்ல நாடியுள்ளனர்; இந்த இருவரிடமிருந்து என்னை காப்பாற்று" என கூறினார்கள்.
அரசர் நூருதீன் ஜங்கீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு ஒரு காரியம் செய்ய கட்டளையிட்டிருக்கிறார்கள். கனவில் காட்சியளித்தது அண்ணலார்தான்.
அண்ணலார் தோற்றத்தில் ஷைத்தான் காட்சியளிக்க மாட்டான் என்பதை விளங்கி கொண்டு திடுக்கிட்டு எழுந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பு வேண்டினார்கள். பிறகு படுத்துறங்கும் பொழுது மீண்டும் இதுபோல் இரண்டு முறை கனவு ஏற்பட்டது.
உடனே தன் மந்திரி ஜமாலுத்தீன் அல் மூஸலீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை அழைத்து நடந்த நிகழ்வை விவரித்தார்கள். மூன்று முறை கனவு ஏற்பட்டதாக கூறினார்கள். செய்தியை ரகசியமாக வைத்துக் கொண்டு உடனே மதீனாவிற்கு செல்லும்படி பணித்தார்கள். அவரும் புறப்பட்டுச் சென்றார்.
அரசர்கள் வெளியூர் பயணத்திற்கு போனால் எப்படி படை பட்டாளங்களுடன் செல்வார்களோ அது போலில்லாமல் அவசரமாக செல்வதால் இருபது வீரர்களின் துணையோடு அதிகமான செல்வங்களையும் எடுத்துக் கொண்டு அரசர் புறப்பட்டு விட்டார். பதினாறு நாட்களில் மதீனாவை வந்தடைந்தார்.
அக்காலையில் சிரியாவிலிருந்து மதீனாவிற்கு வருவதென்றால் 45 நாட்கள் ஆகும். அப்படி இல்லாமல் வெறும் பதினாறு நாட்களில் வந்தது ஓர் அற்புதச் செயல்தான். அரசர் மஸ்ஜிதுந் நபவிக்குள் வந்து உளு செய்துக் கொண்டு ரவ்ளா ஷரீபில் இரண்டு ரகஅத்துகள் தொழுதார்கள்.
பிறகு நபிகளாரையும் இரு தோழர்களையும் ஜியாரத் செய்து விட்டு மஸ்ஜிதில் அமர்ந்தார்கள். உடனே அரசு அதிகாரிகள் மஸ்ஜிதுந் நபவி பொறுப்பாளர்கள், உலமாக்கள், அனைவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்.
உடனே மந்திரி அவர்கள் மதீனா வாசிகளிடம் "அரசர் உங்களை சந்திக்க வந்திருக்கிறார். அவர் தன்னுடன் அதிகமான செல்வங்களை கொண்டு வந்திருக்கிறார். அவைகளை மதீனாவாசிகளுக்கு சதகா செய்ய விரும்புகிறார்கள்" என (இது அன்றைய அரசர்களின் வழக்கமாகும்).
மதீனாவின் புனித எல்லைக்குள் இருக்கும் கிராமிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி அனைவரும் ஒரே நாளில் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ஒரு நாளில் ஒன்று கூடி விட்ட பொழுது அரசர் தன் கைகளினால் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை அள்ளி கொடுத்தார். அனைவரும் சந்தோஷமாக பெற்றுச் சென்றனர்.
அரசர் இப்படி கொடுப்பதின் நோக்கம் நபிகளார் காட்டிய இரண்டு முகங்கள் இவர்களில் தென்படுகின்றதா என்பதை காணத்தான். மக்கள் அனைவரும் வாங்கிச் சென்று விட்டார்கள். ஆனால் அவர்கள் இருவரையும் காணவில்லை.
உடனே அரசர் அவர்கள் "மதீனா வாசிகளே! உங்களில் அனைவரும் வந்து வாங்கி சென்று விட்டார்களா? என்று நன்கு பார்த்துக் கொள்ளுங்கள் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பது என் நோக்கம்" என்றார்கள்.
உடனே அவர்கள் "மேற்கத்திய நாடான ஸ்பெயின் காரர்கள் இருவரை தவிர மற்ற அனைவரும் வாங்கி சென்று விட்டார்கள். அவர்கள் இருவரும் மார்க்கக் கல்வி பயில வந்திருக்கும் மாணவர்கள் தக்பீர் தஹ்ரீமா தவறாமல் தொழும் நல்லவர்கள், ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல்கள்; ஆகவே அவர்களுக்கு இது தேவையில்லாததால் வரவில்லை" என்று கூறினார்கள்.
அரசர் அவர்கள் இருவரையும் அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார்கள். அவர்கள் இருவரும் வந்து சேர்ந்ததும் அண்ணலார் காட்டிய முகங்கள் அவர்கள் தாம் என்பதை அறிந்துக் கொண்டு "ஏன் நீங்கள் இருவரும் நம்மிடம் வரவில்லை நாமளித்த சதகாவை பெற்றுக் கொள்ள வில்லை" என கேட்டார்.
அவர்கள் "எங்களிடம் போதுமான அளவு செல்வம் இருக்கிறது. ஆகவே எங்களுக்கு அது தேவையில்லை" என்றனர். அவர்களை வைத்துக் கொண்டே அவர்களைப் பற்றி மதீனா வாசிகளிடம் விசாரித்தார்கள்.
மதீனாவாசிகள் அவ்விருவரையும் புகழ்ந்தனர். மேலும் அவர்கள் "மேற்கத்திய நாட்டவர்கள், ஹஜ் ஜியாரத்திற்காக வந்தவர்கள், ஹதீஸ் பாடத்தில் அமர்ந்து பாடம் படிக்கிறார்கள், நபிகளாரின் அருகே சில ஆண்டுகள் தங்கியிருக்க விரும்புகிறார்கள்" என்றார்கள்.
உடனே அரசர் அவர்கள் "இப்படி பட்ட நல்லவர்களின் இல்லத்திற்கு சென்று வர வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே அவ்விருவரும் தங்கியிருக்கும் அறைக்கு சென்றார்.
அங்கே சுரங்கம் அமைப்பிற்கான எந்த அடையாளமும் இல்லாததைக் கண்டு தனக்குள் ஆச்சரியப்பட்டார்கள். மதீனாவாசிகளோ அரசர் இவர்களின் வீட்டிற்கு ஏன் செல்ல வேண்டும்? இவர்களிடம் அரசர் எதை எதிர்பார்க்கிறார்? என குழுமியிருந்த மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
ஆளில்லாத வீட்டில் விரிக்கப்பட்டிருந்த பாயை அரசர் தூக்கினார். அங்குதான் அந்த சுரங்கப்பாதை காணப்பட்டது. அதனை கண்ட அரசர் அதற்குள் ஒருவரை இறக்கி விட்டு சென்று பார்க்கும்படி கூறினார்; அப்பாதை மஸ்ஜிதை நோக்கி நீண்டு செல்வதாக அவர் கூறினார்.
அப்பொழுது அரசர் அல்லாஹ்வை புகழ்ந்து விட்டு அவர்கள் இருவரையும் விசாரித்ததில் அவர்கள் கிருஸ்துவர்கள் என்றும் ஐரோப்பா அரசர் 'வன்பஷ்' நபிகளாரின் உடலை எடுத்த வரும்படி அனுப்பினான் என்றும் கூறினர். உடனே அரசர் அவ்விருவருக்கும் தூக்கு தண்டனை வழங்கும்படி உத்தரவிட்டார்.
இந்த பயங்கர நிகழ்ச்சிக்குப் பிறகு அரசர் அவர்கள் நபிகளார் மற்றும் இரு தோழர்களின் கப்ருகளைச் சுற்றி தண்ணீர் வரும் வரை பள்ளம் வெட்டி அந்த வெற்று இடத்தில் அலுமினியத்தை காய்ச்சி நீராக ஊற்றப்பட்டு சுவர் போல் எழுப்பச் செய்தார். இதனால் இனி யாரும் சுரங்கப் பாதை அமைத்து வர இயலாது.
இவர்தான் முதன் முதலாக மஸ்ஜிதுந் நபவி மற்றும் ரவ்ளாவிற்கு மேல் குப்பா வைத்து கட்டி அதில் பச்சை வண்ணம் பூசி அழகு படுத்தினார். அன்றிலிருந்து இன்று வரை அனைத்து ஆட்சியரும் புதுப்பிக்கும் போது பச்சை வண்ணம் பூசி வருகின்றனர்.
மற்றொரு கோணம் :
=======================
இந்நிகழ்ச்சி இன்னொரு முறையாகவும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்று மிஸ்ரை ஆட்சி செய்துக் கொண்டிருந்த 'அல் ஹாகிமுல் அபீதீ'யை ஷியாவினரில் ஒரு பிரிவினரான இஸ்மாயீலீ கொள்கையினரில் ஒரு குழுவினர் அரசரை சந்தித்து 'நபிகளார் மற்றும் இரு தோழர்களின் உடலை நம் மிஸ்ருக்கு கொண்டு வந்து விட்டால் ஹஜ்ஜுக்கு வருவோர் ஜியாரத் செய்ய வருவோர் என அதிகமானவர்கள் நம் நாட்டிற்கு வருவார்கள். அதனால் நம் நாட்டிற்கு பெருமையும் வருமானமும் அதிகரிக்கும்" என தூபம் போட்டனர்.
முட்டாள் மன்னன் இதனை நல்ல கருத்து என எண்ணி அவ்வுடல்களை வைப்பதற்காக நைல் நதிகரையோரம் பிரமாண்டமான நினைவு மண்டபம் கட்டும்படி உத்திரவிட்டான். அதற்காக அதிகமான செல்வங்களை செலவிட்டு கட்டிக் கொண்டிருந்தான்.
பிறகு இந்த காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுக்கும்படி வெற்றியை மட்டும் பெற்றுக் கொண்டிருக்கும் தன் ஐரோப்பிய நண்பன் வம்பஷ் இடம் ஒப்படைத்தான்.
அவன் சிறுபடையுடன் மதீனா வந்தடைந்ததும் அவன் வருகையின் நோக்கத்தை புரிந்து கொண்டு மக்கள் எச்சரித்தார்கள். ஆனால் கைகலப்பு நிகழா வண்ணம் பார்த்துக் கொண்டனர். அவன் மீது காரி துப்பினார்கள்.
அவன் எதற்கும் அசையாததால் அவனை கொன்றிட ஆயத்தமானார்கள். அவன் அவர்களின் உள்ள கொதிப்பையும் ஆக்ரோஷத்தையும் கண்டு போர் ஏற்பட்டு விடுமோ என எண்ணினான்.
அப்பொழுது அவன் தன்னை மக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள “உங்கள் மீது எனக்கு பயமில்லை; பயப்படத் தகுதியானவன் அல்லாஹ்தான் அவன் நாடினால் எனக்கு மரணமளிக்கட்டும்" எனக் கூறினான்.
உடனே அல்லாஹ் அவனுக்கு மாரடைப்பை ஏற்படுத்தினான். அவன் அதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொழுதே கடுமையான புயல் காற்றை அவனது குழுவினர் மீது வீசச் செய்தான்.
அவனது வாகனங்கள், குதிரைகள், உடமைகள் என அனைத்துமே பந்து உருளுவது போல் பின்னோக்கி உருண்டோடின. இதனால் அவனது வாகனம், குதிரைகள் மற்றும் உடமைகளில் பெருமபாலானவை அழிந்து விட்டது.
நூல் : ஷதராதுத் தஹப் ஃபீ அக்பாரி மின தஹப்
அரசர் நூருதீன் ஜங்கி (ரஹ்) அவர்களின் கனவில் கண்மணி நாயகம் அவர்கள் காட்சியளித்து தமக்கான உதவியை செய்யும்படி வேண்டுகோள் விடுத்த விரிவான நிகழ்வை நீங்கள் மேலே கண்டீர்கள்.
நபிகளாருக்கு நாம் உதவி செய்திருக்கிறோம் என நூருதீன் ஜங்கி (ரஹ்) அவர்கள் எண்ணி பெரும் மகிழ்வடைந்து தம் பிறப்பின் பயனை அடைந்து விட்டதாக ஆனந்தம் கொண்டிருந்தார்கள்.
இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பைப் போன்று வேறு யாருக்கும் வாய்க்கவில்லை என வரலாறு கூறுகிறது.
Comments
Post a Comment