குடியரசு தினவிழா நினைவுகள்

குடியரசு 
தினவிழா நினைவுகள் 
_________________________

எங்கள் ஊரில் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் அஃலா ஹள்ரத் அவர்களிடம் பயின்று இரண்டாவது பேஜ்ஜில் ஓதி முடித்து, பின்நாளில் பட்டம் பெற்ற மர்ஹூம் அப்துல்லாஹ் பாகவி ஹள்ரத் (ரஹ்) அவர்கள் இருந்தார்கள். இவர்கள் இந்திய விடுதலைக்காக பங்காற்றியவர்களில் ஒருவர்.

அஃலா ஹள்ரத் அவர்களின் மகனார் ஜியாவுதீன் அஹமது பகாதூர் அவர்கள் 1919 களில் கிலாஃபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் தீவிர பங்கெடுத்திருந்தார்கள். 

அச்சமயம் திருச்சி மாவட்ட கிலாஃபத் இயக்க தலைவர்களான வி.எஸ். முஹம்மது இப்ராஹிம், சையத் முர்துஜா ஹஜரத் போன்றவர்களோடு மவ்லவி, அப்துல்லாஹ் பாகவி அவர்கள் நெருங்கிய தொடர்பிலும், கிலாஃபத் இயக்க பணிகளில் தீவிரமாகவும் செயல்பட்டு வந்தார்கள். 
(1) ஓர் அடி குறிப்பு

காந்தியடிகளார் அவர்கள் அரை நிர்வாணதோடு திருச்சிக்கு வந்த முதல் மற்றும் இரண்டாம் பயணங்களில் உடன் இருந்தார்கள். 

அப்துல்லாஹ் பாகவி (ரஹ்) அவர்களின் தீவிர செயல்பாடுகளால் எங்களூரிலும் சுற்றுவட்டார கிராமங்களிலும் கிலாஃபத் இயக்கத்தோடு தொடர்புடைய ஆலிம்கள், பொதுமக்கள் அனேகர் இருந்தனர். 

அவர்களின் தீவிர செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்தவர்தான், எனது உஸ்தாத் அப்துல் ஸமது ஆலிம் அவர்கள்.
அதனால் எப்பொழுதுமே எங்களூர் இஸ்லாமியர்கள் இடையே சுதந்திர தின விழிப்புணர்வு அதிகமாக ரத்தத்தில் ஊறி இருந்தது. 

அதை பாய்ச்சியவர் அப்துல்லாஹ் பாகவி, அவர்களும் அவரை தொடர்ந்து வந்த அவரது மாணவர், எனக்கு இஸ்லாமிய தொடக்கக் கல்வியை கற்பித்த உஸ்தாத் மர்ஹூம் அப்துல் ஸமது ஆலிம் அவர்களுமாவர்.

நான்கு அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எனது ஆசிரியர், முஹம்மது அலி அவர்கள் குடியரசு தின விழா, சுதந்திர தின விழா அன்று காலையில், சுபுஹு தொழுகைக்குப் பிறகு, "ஹள்ரத்! இன்று சுதந்திர தின கொடியேற்று விழா பள்ளிக்கூடத்தில் நடைபெற உள்ளது. நம்ம மதரஸா மாணவர்களை சற்று விரைவாக அனுப்பி வைத்தால் எங்களுக்கு சௌகரியமாக இருக்கும்" என குறைவான குரலெலியில் பணிவாக பேசுவார்.

மர்ஹூம் அப்துல் ஸமது ஆலிம் அவர்களின் மாணவர்களில் ஒருவர்தான் இந்த ஆசிரியர் மர்ஹூம் முஹம்மது அலி அவர்கள்.

8:30 மணி வரை நடத்தவேண்டிய மதரஸாவை 8:00 மணிக்கெல்லாம் விட்டு, "நான் பள்ளிக்கூடத்திற்கு 8 :30 மணிக்கெல்லாம் வந்திடுவேன் அதற்குமுன் நீங்கள் அனைவரும் அங்கு வந்திருக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வெளியே அனுப்புவார்கள்.

அவர்கள் மதரஸாவை விடும்போது நாங்கள் மணியைப் பார்ப்போம். அது எட்டுமுறை பெல் அடிக்க தொடங்கி இருக்கும். வெள்ளை டயலில் கருப்பு ரோமன் எழுத்தில் வட்டமான அந்த கடிகாரம் இன்றும் மனதில் பதிந்துள்ளது. 

அன்று எங்கள் இஸ்லாமிய குடும்பத்தினரிடையே எவரது வீட்டிலும் கடிகாரம் இருந்ததில்லை. பள்ளிவாசலில் மட்டும்தான் இரண்டு கடிகாரங்கள் இருந்தன. 

ஒன்று வெளி பள்ளியில் தொங்கும். அதை ஊர் மக்கள் அனைவரும் சற்று குனிந்து பார்த்தால் தெரியும். உள்ளே ஒரு கடிகாரம் தொங்கும். அது தொழுகையாளிகள் மட்டும் பார்க்கும்படியாக இருக்கும்.

நீண்டநேரம் நடத்தவேண்டிய மதரஸாவை விரைவில் விட்டதாலும், அன்றைய குடியரசு தின விழா நிகழ்வில் ஆரஞ்சு மிட்டாய் வழங்கியதாலும் நினைவுகள் நிலைத்திருக்கிறது.

பள்ளிக்கூடத்தில் ஒன்பது மணிக்கு கொடியேற்ற நிகழ்வு நடைபெறும். அதற்கு முன் அனைத்து இஸ்லாமிய மாணவர்களும் ஒன்று கூடி விடுவார்கள். பின்னர் மற்ற மாணவர்களும் வருவார்கள்.

தலைமையாசிரியர், ஊரின் முக்கியஸ்தர்கள், சில சமயங்களில் எனது உஸ்தாத் அப்துல் ஸமது ஆலிம் அவர்கள் என பலரும் கொடி ஏற்றுவார்கள்.

இறுதியில் தேசிய கீதமான ஜன கண மன பாடலை மாணவர்கள் கோரசாக பாடுவார்கள். இறுதியில் ஆரஞ்சுமிட்டாய் வழங்கப்படும்.

அந்த மிட்டாயின் சுவை இன்று திருநெல்வேலி அல்வாவில் இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவில் இல்லை. கோவில்பட்டி கடலைமிட்டாயில் இல்லை.

சாப்பிட்ட தருணங்களை பொறுத்தது போல் தெரிகிறது, சுவை!

நல்ல நினைவுகள் 
நம் இறுதி காலத்திற்கு தேவை!

நினைவுகளை சேமியுங்கள்! 
நல்ல நினைவுகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்! 
பிறருக்கும் பயன் தரும்!

அன்புடன் 

மவ்லவி, பி. எம். கலீலுர் ரஹ்மான் மன்பயீ

25/1/2022
https://www.facebook.com/share/p/1GUzKBy2Fu/

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்