ஒரு கொள்ளைகளுக்கு நபிகள் நாயகம் செய்த உதவி
உன் மகன் விட்டுச் சென்றதை
அக்பர் அல் குர்திக்கு கொடு
மாதம்: 11
தொடர்: 94
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
பிஷ்ர் அல் ஹாஃபி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;
ஒரு நாள் நான் அக்பர் அல் குர்தி என்பவரை சந்தித்தேன். அவரிடம் நான், “நீ அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் காரணமாக இருந்த நிகழ்ச்சி எது?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “ஒரு காலத்தில் நான் வழிப்பறி கொள்ளையனாக இருந்தேன்; ஒருமுறை நான் இருந்த இடத்தில் மூன்று பேரீச்சை மரங்கள் இருந்தன; அவற்றில் இரண்டு மரங்கள் கனி கொடுத்தன;
ஒரு மரம் மட்டும் கனியில்லாமல் இருந்தது.
அப்போது ஒரு சிட்டுக்குருவி,
கனி கொடுக்கும் மரத்திலிருந்து ஒரு ஈரமான பேரீச்சம் பழத்தை எடுத்துக் கொண்டு கனி இல்லாத மரத்தில் போடுவதைப் பார்த்தேன்; உடனே நான் அதை கவனிக்க தொடங்கினேன். அது இப்படியே பத்து முறை செய்தது.
அப்போது என் உள்ளத்தில்
"எழுந்து சென்று பார்க்க வேண்டும்" என்று தோன்றியது; நான் எழுந்து சென்று பார்த்தபோது, அந்த கனி இல்லாத மரத்தின் உச்சியில்
ஒரு குருட்டுப் பாம்பு இருந்தது;
அந்தப் பாம்பின் வாயில் அந்தப் பறவை பேரீச்சை பழங்களை போட்டு ஊட்டிக் கொண்டிருந்தது.
அந்தக் காட்சியைப் பார்த்ததும் நான் அழுதேன்; “இறைவா! இந்தப் பாம்பு கொல்லப்பட வேண்டும் என்று
உன் நபி (ஸல்) கட்டளையிட்டு இருக்கிறார்கள்.
நீ இதன் கண்களை குருடாக்கி இருக்கிறாய்! இதற்காக நீயே ஒரு பறவையையும் ஏற்படுத்தி உணவையும் கொடுத்து வருகிறாய்.
ஆனால் நான் உன் அடியான்;
நீ ஒருவனே இறைவன் என்று நம்புகிறேன்; நீ என்னை வழிப்பறி செய்யவும் மக்களைப் பயமுறுத்தவும் விட்டாயே!" என்று நான் மனதிற்குள் புலம்பி கொண்டிருக்கும் பொழுது என் உள்ளத்தில் ஒரு குரல் “அக்பரே! என் கதவு திறந்தே இருக்கிறது” என்று கேட்டது.
உடனே நான் என் வாளை எடுத்து உடைத்தேன், என் தலை மீது நானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு, மன்னித்துவிடு மன்னித்துவிடு என்று பட்டப்பகலில் கூச்சலிட்டேன்.
அப்போது அசரீரியாக ஒரு குரல்,
“உன்னை நாங்கள் மன்னித்தோம்,
உன்னை நாங்கள் மன்னித்தோம்”
என்று சொன்னது.
அதைக் கேட்ட என் தோழர்களில் சிலர் தூக்கத்திலிருந்து விழித்தும், உறங்காமல் இருந்த சிலரும் ஓடோடி வந்து “என்ன நடந்தது? ஏன் இப்படி கத்திக் கூச்சலிட்டு பயமுறுத்துகிறாய்?” என்று கேட்டனர்.
“நான் அல்லாஹ்வின் அருளை விட்டும் புறக்கணிக்கப்பட்டவனாக இருந்தேன் ; இப்போது நல்லவனாக ஆக்கப்பட்டு விட்டேன்” என்று கூறினேன்.
அதற்கு அவர்கள் “நாங்களும் புறக்கணிக்கப்பட்டிருந்தோம் நல்லவர்களாக ஆகிவிட்டோம்" என்று அனைவரும் கூறினார்கள்.
பிறகு நாங்கள் அனைவரும்
எங்கள் உடைகளை கழற்றி எரிந்து விட்டு இஹ்ராம் ஆடை அணிந்து கொண்டு மூன்று நாட்களாக அழுது கொண்டும், (கடந்த கால பாவங்களை நினைத்து) வாய்விட்டு புலம்பிக் கொண்டும் ஆன்மீக மயக்கத்தில் மூழ்கிய வண்ணம் நடந்து வந்தோம்.
மூன்றாம் நாள் ஒரு கிராமத்தை அடைந்தோம். அங்கே ஒரு குருட்டுப் பெண் கிராமத்தின் வாசலில் அமர்ந்திருந்தார்.
அவர் “உங்களில் அக்பர் அல் குர்தி இருக்கிறாரா?” என்று கேட்டார்.
எங்களில் ஒருவர், “ஆம், இருக்கிறார்;
உங்களுக்கு என்ன வேண்டும்?”
என்று கேட்டார்.
அதற்கு அப்பெண் “கடந்த மூன்று இரவுகளாக நான் கனவில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பார்க்கிறேன்; அவர்கள் என்னிடம்,
"உன் மகன் விட்டுச் சென்றதை அக்பர் அல் குர்திக்கு கொடு" என்று சொன்னார்கள்.
அப்பெண் தன் வசம் இருந்த அறுபது துணிகளை எங்களுக்குக் கொடுத்தார்; நாங்கள் அவற்றில் சிலவற்றை உடுத்திக் கொண்டு
பாலைவனத்தின் வழியாகச் சென்று
இறுதியில் பைத்துல்லாஹ்வை
அடைந்தோம்.
நூல் : கிதாபு தவ்வாபீன்.
ஹிஜ்ரி 150 - 227 கி.பி. 767 - 841 காலகட்டத்தில் பிஷ்ர் அல் ஹாஃபி (ரஹ்) அவர்கள் வாழ்ந்தார்கள்.
ஈரான் மர்வ் என்னும் இடத்தில் பிறந்து பக்தாத்தில் காலமானார்; இவர் ஒரு சூஃபி அறிஞர் ஆவார்.
நடமாட முடியாத குருட்டு பாம்பின் இருப்பிடத்திற்கே சென்று உணவளிக்கும் இறைவன் ஆரோக்கியமாக இருக்கும் மனிதனுக்கு உணவளிக்க மாட்டானா?
காகத்தைக் கொண்டு காபிலுக்கு பாடம் புகட்டிய இறைவன் அக்பருக்கு சிட்டுக் குருவியவும் குருட்டுப் பாம்பையும் வைத்து பாடம் புகட்டி இருக்கிறான்.
"உண்மையான தவ்பா பழைய கதவுகளை மூடாமல் புதிய கதவுகள் திறக்காது" என்பது போல அவர் மனமார மனம் மாறியதால் அவர் அல்லாஹ்வை அடையும் பாக்கியம் பெற்றார்.
உங்களிடம் உள்ள குறைகளை களைந்து அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள்!
தொடரும்......
Comments
Post a Comment