சொர்க்கத்தின் வாசலை தட்டிய ஒரு பித்தலாட்டக்காரி

சொர்க்கத்தின் வாசலை 
தட்டிய ஒரு பித்தலாட்டக்காரி 
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

93.  எனக்கு ஸூரத்துல் 
ஃபாத்திஹாவை கற்றுக்கொடுங்கள்
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>

மாதம்: 11

தொடர்: 89

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>

அஹ்மத் பின் ஹுஸைன் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;

நான் ஒரு முஸ்லிமான அடிமைப் பெண்ணை வாங்கினேன்; அவள் துருக்கி இனத்தைச் சேர்ந்தவளாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

அவளுக்கு அரபி பேசத் தெரியாது;
எனது நண்பர்களின் அடிமைப் பெண்கள் அவளின் பேச்சை மொழிபெயர்த்து எனக்கு சொல்வார்கள்.

ஒரு நாள், அவள் தூங்கிக் கொண்டி ருந்தபோது திடீரென விழித்துக் கொண்டு அழுதபடியே எழுந்து சப்தமாக, "எனக்கு ஸூரத்துல் ஃபாத்திஹாவை கற்றுக் கொடுங்கள்!" என அரபு மொழியில் பேசினாள்.

அதை கேட்ட நான், என் மனத்தில்,
“இவள் என்ன சூழ்ச்சிக்காரியாக இருக்கிறாள்? என் மொழியைப் புரிந்துகொள்கிறாள், ஆனாலும் இதுவரை என்னிடம் பேசவில்லையே" என எண்ணினேன்.

அப்போது நண்பர்களின் அடிமைப் பெண்கள் அனைவரும் கூடி அவளிடம், “இதுவரை உனக்கு இவருடைய மொழி தெரியாது என்று சொன்னாய்? இப்போது திடீரென எப்படி பேசுகிறாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவள், “நான் என் கனவில்
கோபம் நிறைந்த முகத்துடன்
ஒரு மனிதரைப் பார்த்தேன்;
அவருக்குப் பின்னால் பலர் நின்றிருந்தனர்; அவர் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்;
"இவர் யார்?" என அங்கிருந்த ஒருவரிடம் கேட்டேன்.

அவர், இவர்தான் ‘மூஸா (அலைஹிஸ் ஸலாம்) என்று சொல்லப்பட்டது.

பின்னர், அவரைவிட இன்னும் அழகிய முகத்துடன் மற்றொருவரைப் பார்த்தேன்; அவருடனும் பலர் நின்றிருந்தார்கள்; அவரும் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தார்; "இவர் யார்?" என்று அங்கிருந்த ஒருவரிடம் நான் கேட்டேன் அதற்கு அவர் "முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)"என்று கூறினார்கள்.

அப்போது, "நான் இவருடன் தான் செல்வேன்" என என் உள்ளத்திற்குள் சொல்லிக் கொண்டேன்; அப்போது
அவர்கள் ஒரு மிகப் பெரிய கதவின் அருகே சென்றார்கள்.

அது சொர்க்கத்தின் கதவாக இருந்தது; நபி (ஸல்) அவர்கள் தட்டியதும் கதவு திறக்கப்பட்டது; அதற்குள் நபிகளாரும் அவருடன் இருந்தவர்களும் உள்ளே சென்றார்கள்.

ஆனால் நானும் என்னுடன் இருந்த இரண்டு பெண்களும் வெளியே நிறுத்தப்பட்டு விட்டோம். 

நாங்கள் கதவைத் தட்டினோம்.
அப்போது கதவு திறக்கப்பட்டதும் ஒருவர்  "யார் ஸூரத்துல் ஃபாத்திஹாவை சரியாக ஓதத் தெரிந்தவர்களோ, அவர்கள் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும்" என்று கூறினார்கள். 

என்னுடன் இருந்த அந்த இரண்டு பெண்களும் ஸூரத்துல் ஃபாத்திஹாவை முழுமையாகம் சரியாகவும் ஓதிய பிறகு அவர்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டது; அவர்கள் உள்ளே சென்று விட்டார்கள்.
நான் மட்டும் அங்கே நின்றுவிட்டேன்.

அப்போதுதான் நான் 
"எனக்கு ஸூரத்துல் ஃபாத்திஹாவை கற்றுக்கொடுங்கள்!" என்று சப்தமிட்டேன்; எப்படியோ  பெரும் சிரமத்திற்கு மத்தியில் அதை கற்றுக் கொண்டேன்; முழுமையாக மனனம் செய்த அதே கணமே நான் அங்கேயே உயிர் துறந்தேன்" என்று அப்பெண் கூறினார்.

நூல் : முன்தகபுல் கலாம் ஃபீ தஃப்ஸீரில் அஹ்லாம்

அஹ்மத் பின் ஹுஸைன் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டை சேர்ந்தவர். குர்ஆனை முறைப்படி ஓதுவதற்கு பல்வேறு சீர்திருத்தங்களை செய்தவர், வழிகாட்டியவர் ஆவார்.

அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறவும், மறுமையில் வெற்றி பெறவும் மொழி, இனம் ஒரு அளவுகோல் அல்ல!; ஈமானும், குர்ஆன் உடனான தொடர்புமே அளவுகோல்! 

நாம் அனைவரும் அறிந்த சூரத்துல் பாத்திஹா சாதாரணமான அத்தியாயம் அல்ல! அது மதிப்பு மிக்கது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது. 

ஒருவர் சாதாரணமாக சூரத்துல் பாத்திஹாவை ஓதி சொர்க்கம் சென்று விடுகிறார்; அதே சொர்க்கத்திற்காக மற்றொருவர் ஜிஹாத் உயிரையே தியாகம் செய்கிறார்.

சூரத்துல் பாத்திஹா சொர்க்கத்தின் திறவுகோல்!

மறுமை நாளில் சூரத்துல் பாத்திஹா தவிர்க்க முடியாத அடையாளம்!

வாய்ப்பு கிடைக்கும் போதே தாமதிக்காமல் சூரத்துல் பாத்திஹாவை மனப்பாடம் செய்து கொள்வதே உண்மையான வெற்றி!

தொடரும்....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்