இன்று இரவு வானம் திறக்கிறது

இன்று பராஅத் இரவு 
=•=•=•=•=•=•=•=•=•=•=•=•=•

இன்று இரவு வானம் திறக்கிறது 
~=÷~=÷~=÷~=÷~=÷~=÷~=÷~=÷~=÷~=÷~=÷ 

உங்கள் பெயர் எந்த ஏட்டில் இருக்கின்றது? / பராஅத் இரவு பித்அதா? /  ரகசியங்கள் நிறைந்ததா பராஅத் இரவு? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லும் கட்டுரைதான் இது!

உங்களை நெருங்கி வரும் ஒரு கோளை காண இரவில் விழித்திருக்கிறீர்கள்; கோளரங்கம் சென்று பார்க்கிறீர்கள்; உங்களை நோக்கி நெருங்கி வரும் இறைவனை இந்த இரவில் தரிசிக்க வேண்டாமா?

ஷஃபான் எனும் சொல்லில் ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன; அவற்றில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஆரிஃபீன்களும் ஞானவான்களும் சில கருத்துக்களை சொல்லி இருக்கிறார்கள்.

ஷஃபான் ஐந்து பாக்கியங்களை தன்னுள் சுமந்திருகிறது.
ஷ ش-شرافة  எனும் எழுத்து இந்த இரவில் பல சிறப்புகள் இருப்பதையும், 
அய்ன் ع-علو எனும் எழுத்து இந்த இரவில்  அமல்கள் செய்யும் போது பல படித்தரங்களில் உயர்வுகள் கிடைக்கும் என்பதையும், 
ப  ب-بر எனும் எழுத்து உலகியல் மற்றும் மறுமை சார்ந்த பல நன்மைகள், கூலிகள் கிடைக்கும் என்பதையும், 

அலிஃப்  ا-الفة எனும் எழுத்து  இறைவனோடு தொடர்பும், அன்பும் ஏற்படும் என்பதையும்,
நூன் ن-نور எனும் எழுத்து இந்த இரவை முறையாக பயன்படுத்திக் கொள்வோருக்கு பேரொளியாக அமையும் என்பதையும் குறிப்பிடுகிறது எனக் கூறுகிறார்கள்.

அருள் வழங்கும் ஐந்து இரவுகள் :
===============================

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது; ஐந்து இரவுகளில் செய்யப்படும் துஆ ஒப்புக்கொள்ளப்படும்.  
1.  ஜும்ஆ நாளின் இரவு; 
2.  ரஜப் மாதத்தின் முதல் நாள் இரவு; 
3.  ஷஅபான் மாதத்தின் பதினைந்தாம் நாள் இரவு; 
4.  (ஈதுல் ஃபித்ர் எனும்) ஈகை பெருநாள் இரவு; 
5.  (ஈதுல் அள்ஹா எனும்) தியாகத் திருநாள் இரவு;  

நூல்: ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ,  இப்னு அசாகிர், முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்.

அதிகாலை வரை 
அருள் சுரக்கும் நான்கு இரவுகள் :
================================

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான்கு இரவுகளில் நன்மையின் வாசலை (ஃபஜ்ர்) பாங்கு வரை அல்லாஹ் திறந்தே வைத்திருக்கிறான். 

1.  (ஈதுல் அள்ஹா எனும்) தியாகத் திருநாள் இரவு. 
2.  (ஈதுல் ஃபித்ர் எனும்) ஈகை பெருநாள் இரவு. 
3.  ஷஅபான் மாத பதினைந்தாம் நாள் இரவு.
4.  அரஃபா நாளின் இரவு. 

நூல்: தஃப்ஸீர் துர்ருல் மன்ஸூர்

ஒரு இரவுக்கு 
இத்தனை பெயர்களா? ஏன்?
================================

பராஅத் இரவுக்கு ஹதீஸ் நூல்களிலும், தஃப்ஸீர் நூல்களிலும், மற்றும் உலமாக்களாலும் பல பெயர்கள் சொல்லப்பட்டுள்ளது. 

1.  'லைலதுன் நிஸ்ஃப் மின ஷஃபான்' என ஹதீஸ் நூல்களில் இந்த வார்த்தைகளை பயன்படுத்தப்பட்டுள்ளது. 

2.  'லைலத்துல் பராஅத்' - பாவங்களில் இருந்து விடுதலை பெறும் இரவு , இந்த இரவில் எல்லாம் வல்ல அல்லாஹ் பெருவாரியான மக்களை மன்னித்து நரகத்திலிருந்து விடுதலை செய்து சொர்க்கத்திற்குள் பிரவேசிக்க செய்வதால் இந்த பெயர் இப்னுமாஜா முஸ்னது அஹ்மத் போன்ற பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

3.  லைலத்துல் முபாரகா - அருள் நிறைந்த இரவு. இந்த இரவு முழுவதும் அல்லாஹ்வின் அருள் பூமிக்கு வருவதாலும், பூமியிலிருந்து  மனிதர்கள் செய்கிற பிரார்த்தனைகள் அதிகமாக அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படுவதாலும் இந்த பெயர் சொல்லப்படுகிறது; ரூஹுல் பயான் போன்ற பல தஃப்ஸீர் நூல்களில் இந்த பெயர் பதிவாகியுள்ளது; அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் சொல்லி இருக்கின்றான்.

4.  'லைலத்துர் ரஹ்மா' - கருணை பொழியும் இரவு. இந்த இரவில் இறைவன் தன் அடியார்களை அன்போடும் கருணையோடும் பார்ப்பது மட்டுமின்றி அவர்கள் செய்கிற எல்லா வகையான தவ்பாக்களையும் ஏற்றுக் கொள்வதால் இந்த பெயர் இஹ்யா உலூமித்தீன் போன்ற நூல்களில் பதிவாகியுள்ளது.

5.  ليلة الصك 
விடுதலை வழங்கப்படும் இரவு -  இந்த வருடம் யார் யார் மன்னிக்கப்படுகிறார்கள்? யார் யார் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து அல்லாஹ்வின் பதிவேடுகளில் பதிவு செய்யப்படுகிறது என மார்க்க அறிஞர்கள் சொல்லுகிற செய்தி தஃப்ஸீர் அல் கஷ்ஷாஃப் போன்ற பல தஃப்ஸீர் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

6.  உர்து மற்றும் ஃபார்ஸீ மொழியில் 'ஷபே பராத்' - விடுதலை பெரும் இரவு, பாவமன்னிப்பு தரும் இரவு என பழைய இந்திய நாட்டவர்களால் சொல்லப்பட்டு வருகிறது. 

ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவில் அல்லாஹ்  மனிதர்களை நோக்கி, "இறை மறுப்பாளர்களை தவிர இறைவனை விரோதமாக நினைக்கிறவர்களை தவிர மற்ற அனைவரையும் மன்னிக்கின்றான்" என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: இப்னுமாஜா /  
முஸ்னது அஹ்மத்

இந்த இரவில் முன்னோர்கள் :
============================

லதாயிஃபுல் மஆரிஃப் எனும் நூலில் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள், " ஸலஃப் ஸாலிஹீன்கள் -  முற்காலத்தில் வாழ்ந்த இறைநேச செல்வர்கள் ஷஃபான் மாதத்தின் 15 ஆம் நாள் இரவுக்கு தனி மரியாதையும் அந்தஸ்தையும் வழங்கினார்கள். 

ஷாம் தேசம் எனப்படும் இன்றைய பாலஸ்தீன், ஜோர்டான், லெபனான், சிரியா பகுதிகளில் வாழ்ந்த தாபியீன்களில் சிறந்தவர்களான காலித் பின் மஅதான் ரஹ், மக்ஹூல் அஷ்ஷாமி ரஹ், லுக்மான் பின் ஆமிர் ரஹ் போன்ற மகான்கள், பராஅத் உடைய இரவை கண்ணியமாக கருதி இறைவழிபாட்டிலும், தவ்பா, திக்ரு, துஆ மற்றும் தொழுகைகளில் ஈடுபட்டார்கள்" எனக் கூறுகிறார்கள்.

மேலும் ஷாம் தேச உலமாக்கள் மற்றும் முற்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் அனைவரும் இந்த இரவில் அதிகமாக வீட்டிலோ, பள்ளிவாசலிலோ, தனியாகவோ, கூட்டாகவோ அமல் செய்வார்கள். 

ஆனால் நம்மைப் போன்று அதிகமாக பயான் பேசிக்கொண்டும் அதைக் கேட்டுக் கொண்டும் இருக்க மாட்டார்கள். 

ஆனால், இன்று இந்த பயான் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதும் கூட சிறந்த இபாதத்துதான்! இதில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் டிவியிலோ, உங்கள் அலைபேசியிலோ, வீண் அரட்டையிலோ தான் மூழ்கி இருப்பீர்கள்; அதற்கு இது சிறந்தது தானே?

பராஅத் பித்அத்தா?
===================

பராஅத் இரவு சம்பந்தமாக காணப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானது, அதனால் பராஅத் இரவை கொண்டாடக்கூடாது என சிலர் கூறுகிறார்கள். 

பராஅத் இரவு சம்பந்தமாக 1. ஆயிஷா ரலி 2. அலீ (ரலி) 3. அபூபக்ர் (ரலி)  4. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) 5. அபூ ஹுரைரா (ரலி)
6.  முஆத் பின் ஜபல் (ரலி)  7. அபூ ஸஅலபா (ரலி) 

8. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) 9. அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) 10. உஸ்மான் பின் அபுல் ஆஸ் (ரலி) ஆகிய பத்துக்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் அறிவித்துள்ள ஹதீஸ்களில் சில குறைபாடுகள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் கூறியுள்ள நபி மொழியில் பராஅத் இரவு என்று ஒன்று இருப்பதாக பேசப்பட்டுள்ளது. 

எனவே இந்த இரவில் நபித்தோழர்கள் தாபியீன்கள், தபவு தாபியீன்கள் என மூன்று தலைமுறை நல்லோர்கள் இந்த இரவை சிறப்பித்து இருப்பதால் நாமும் இந்த இரவை கண்ணியப்படுத்துவதில் தவறு இல்லை.

இந்த இரவில் தவறு செய்யவா மார்க்கம் அனுமதித்துள்ளது? இல்லையே! வளமையாக செய்யும் அமலை அதிகமாக செய்ய அல்லவா தூண்டுகிறது?

லவ்ஹுல் மஹ்ஃபூல்
====================

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ

நிச்சயமாக இந்த குர்ஆனை நாம் ஒரு பாக்கியமிக்க இரவில் இறக்கினோம்; நிச்சயமாக எச்சரிக்கை செய்வோராக நாம் இருக்கிறோம். 44 : 3

அல்லாஹ்விடத்தில் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்கிற ஒரு பதிவேடு உள்ளது. இதில் அண்ட சராசரங்கள் அனைத்தின் செயல்பாடுகள் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. 

அதில் ஒன்றுதான் திருக்குர்ஆன்; இதுவும் லவ்ஹுல் மஹ்ஃபூலில் எழுதப்பட்டிருந்தது. 

بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ ۝ فِي لَوْحٍ مَحْفُوظٍ
அப்படி அல்ல இது மகத்தான குர்ஆன்; பாதுகாக்கப்பட்ட பலகையில் உள்ளது. 85:22

அல்லாஹுவின் அர்ஷுக்கு அடியில் வலது புறத்தில் இருந்த லவ்ஹுல் மஹ்ஃபூலில் இருந்து குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் முதல் வானத்தில் பைத்துல் இஸ்ஸா - கண்ணியமான மகத்துவமிக்க இல்லத்திற்கு இந்த பாராஅத்துடைய இரவில் பிரதி எடுத்து வந்து  வைத்தான் என இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள். 

நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் 

பின்னர் முதல் வானத்திலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கதர் உடைய இரவில் அருளப்பட்டது.  இவ்வாறு மூன்று கட்டங்களில் குர்ஆன் அருளப்பட்டது.

இந்த இரவில் என்ன செய்யலாம்? 
=================================

عن أبي هريرة - رضي الله عنه - قال: "إذا كان هلال شعبان، دُفِع إلى ملك الموت صحيفةٌ، يَقْبض من فيها إلى شعبان من قابل، فإن الرجل ليغرس الغرس، ويبني البنيان، وينكح، ويولد له، ويظلم ويفجر، وما له في السماء اسم، وما اسمه إلا في صحيفة الموتى، إلى أن يأتي يومه الذي يُقْبض فيه".

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்; ஷஃபான் மாதத்தில் மலக்குல் மவ்த்திடம் ஒரு ஏடு வழங்கப்படும், அதில் எதிர் வரும் ஆண்டில் ரூஹ் - உயிர் கைப்பற்றப்படும் நபர்களின் பட்டியல் இருக்கும்.

யாருக்குத் தெரியும்? ஒருவர் மரம் நடுவதில் ஈடுபட்டிருப்பார்; ஒருவர் வீடு கட்டுவதில் ஈடுபட்டிருப்பார்; ஒருவர் திருமணம் செய்வதில் ஈடுபட்டிருப்பார்; ஒருவர் குழந்தை பாக்கியம் பெற்றிருப்பார்; ஆனால் அவரின் பெயரோ அந்த வானவருடைய மரண ஓலையில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.

நூல்: ஷுஅபுல் ஈமான் லில் பைஹகீ

முன்னேற்பாடு 
செய்த முன்னோர்கள் :
=============================

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுவதாவது; ஸஹாபாக்கள், ஷஃபான் பிறையை கண்டதும் குர்ஆன் ஓதுவதில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். தங்களுடைய செல்வங்களுக்கான  ஸகாத்தை கணக்கிட்டு வரியவர்களுக்கும், ஏழைகளுக்கும்  ரமலான் மாதத்தில் வழங்குவதற்காக தயாராக வைத்துக் கொள்வார்கள்.

அதிகாரிகள், கைதிகளை வரவழைத்து, தண்டனை உறுதியானவர்களுக்கு தண்டனை வழங்குவார்கள், மற்ற கைதிகளை விடுதலை செய்வார்கள்.

வியாபாரிகள், தம் கடனை நிறைவேற்றிவிட்டு,தங்களுக்கு வரவேண்டிய கடன்  தொகையை வசூல் செய்வார்கள்.

ரமலான் பிறை தென்பட்டால் சில நபித்தோழர்கள்  குளித்துவிட்டு இஃதிகாஃபில் அமர்ந்து விடுவார்கள்.  

 நூல்: அல் குன்யதுத் தாலிபீன்

மூன்று கடமைகள் :
====================

இமாம் தாவூஸ் யமானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; நான், இமாம் ஹஸன் பின் அலி (ரலி) அவர்களிடம் நிஸ்ஃபு ஷஃபான் குறித்தும், அதில் அமல் செய்வது குறித்தும் கேட்டேன்.

அதற்கு ஹஸன் (ரலி) அவர்கள், "நான் இந்த இரவை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வேன்;

முதல் பகுதியில் எனது பாட்டனார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதுவேன். இதுவும் 

اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ  يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏

33:56 வசனத்தின் மூலம்  அல்லாஹ்வின் கட்டளையை செய்ததாக ஆகும். 

இரவின் இரண்டாவது பகுதியில் "இஸ்திக்ஃபார்" பாவமன்னிப்புக் கேட்பதில் ஈடுபடுவேன், இதுவும் 

وَمَا كَانَ اللّٰهُ لِيُعَذِّبَهُمْ وَاَنْتَ فِيْهِمْ‌ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُوْنَ‏
8:33 எனும் வசனத்தின் அடிப்படையில் கடமையான அமலாகும்.

இரவின் மூன்றாவது பகுதியில் தொழுகையில் ஈடுபடுவேன். இதுவும் 

كَلَّا  لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩

 96:19 எனும் வசனத்தின் அடிப்படையில் கடமையான அமலாகும்.

ஹஸன் ரலி அவர்களிடம் "இந்த இரவில் அமல்களில் ஈடுபடக்கூடியவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்" என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் எனது தந்தை அலி (ரலி) அவர்கள் எனது பாட்டனார் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டதாக சொன்னார்கள்.

"யார் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாள் இரவை அமல்களால் உயிர்பிப்பாரோ அவரை அல்லாஹ்  இறைநெருக்கம் பெற்றவர்களில் சேர்த்து விடுகிறான்;

இறைநெருக்கம் பெற்றவர்கள் குறித்து அல்லாஹ் அருள்மறையில்...

فَاَمَّاۤ اِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِيْنَۙ‏

 56:88 எனக் கூறுகிறான்" என்று சொன்னார்கள்.

நூல்: தவ்பா வ இஸ்திஃபாஃர்

எனவே இந்த இரவில் ஏதேனும் ஒரு நற்செயலை செய்து கொண்டு இரவைக் கழியுங்கள்; அல்லது இந்த இரவில் வளமையாக செய்யும் அமல்களைத் தாண்டி அதிகபடியான சில அமல்களை  செய்யுங்கள்.

எல்லாம் வல்ல இறைவன் இந்த இரவின் அருளை பெற்ற நல்லடியார்களின் கூட்டத்தில் நம்மையும் சேர்த்து வைப்பானாக!

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்