காஜி பதவி வேண்டாம் என்று சொன்னவருக்கு நேர்ந்த கதி....
குற்றமற்றவரை அடிக்கிறாயா?
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
காஜி பதவி வேண்டாம் என்று சொன்னவருக்கு நேர்ந்த கதி....
மாதம்: 13
தொடர்: 83
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
|•
|•
|•
|•
|•
அன்றைய ஈராக்கின் அதிபர் இப்னு ஹுபைரா அவர்கள் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களை நீதிபதி பதவிக்கு நியமிக்க விரும்பினார்; "ஒரு சமயம் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் ஏற்கவில்லை என்றால் சத்தியமாக அவருடைய தலையில் நான் சாட்டையால் அடிப்பேன்" என்று கூறினார்.
இந்த செய்தி இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களிடம் சொல்லப்பட்ட போது அவர்கள், "இந்த உலகில் என்னை அவர் சாட்டையால் அடிப்பது, மறுமை நாளில் இரும்பு கம்பிகளால் நான் அடிக்கப்படுவதை விட எளிமையானது, அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அந்தப் பொறுப்பை ஏற்க மாட்டேன்; அவர் என்னை கொன்றாலும் சரிதான்" என்று கூறினார்.
இந்த வார்த்தைகள் அமைச்சரிடம் சொல்லப்பட்டதும் அவர் ஆச்சரியப்பட்டு, "என் சத்தியத்திற்கு எதிராக அவர் சத்தியம் செய்கிறார? என்ன துணிச்சல் இருக்கும்?" எனக் கூறினார்.
உடனே அமைச்சர் அவர்கள் இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்களை அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் அரசவைக்கு வந்ததும் கோபத்தோடு, "உனக்கு அறிவில்லையா? என் சத்தியத்திற்கு எதிராக நீ சத்தியம் செய்கிறாயா? நீதிபதி பதவியை நீ ஏற்கவில்லை என்றால் உன் தலையில் அடித்தே உன்னை கொல்வேன்" என்று மிரட்டினார்.
இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்) அவர்கள் அமைதியாக, "மரணம் ஒரு முறைதான் வரும்" என்று கூறினார்கள்.
இதனைக் கேட்டதும் அமைச்சர் அவர்கள் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களுக்கு சாட்டையால் இருபது அடிகளை அடிக்க உத்தரவிட்டார்.
இமாம் அவர்களுக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது; அந்த அடிகளை வாங்கிக் கொண்டே, "அல்லாஹ்வின் முன்னிலையில் நீ நிற்க வேண்டிய நாள் வரும்! அந்த நாளை நீ நினைத்துப் பார்! உனக்கு முன்னால் நான் நிற்கும் இந்த நிலையை விட நீ அல்லாஹ்வின் முன் நீ நிற்கும் நாள் மிகவும் பயங்கரமானதாக இருக்கும்; என்னை அச்சுறுத்தி பார்க்காதே;
நான், 'லா இலாஹ இல்லல்லாஹு' என்று கலிமா சொன்னவன்; சத்தியமாக என்னை குறித்து நீ விசாரிக்கப்படுவாய்! உன்னிடமிருந்து எந்த பதிலும் ஏற்றுக் கொள்ளப்படாது" என்று கூறினார்கள்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அமைச்சர் அவர்கள் சாட்டையால் அடிப்பவரை அடிக்க வேண்டாம் என சைகை செய்தார். சிறையில் அடையுங்கள் என உத்தரவிட்டார்.
அவ்வாறே இமாம் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்; அன்று காலை அவர்களின் தலையும், முகமும் வீங்கி இருந்தது.
அந்த இரவில் நபி (ஸல்) அவர்களை அமைச்சர் கனவில் கண்டார்; அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "நீ அல்லாஹ்வை அஞ்ச மாட்டாயா? என் உம்மத்தில் ஒருவர் எந்த குற்றமும் செய்யாதிருக்க அவரை நீ அடிப்பாயா?" என கோபமாக கேட்டு மறைந்தார்கள்.
இந்தக் காட்சியை கண்டதும் அமைச்சர் அச்சத்தால் நடுநடுங்கிப் போனார்; உடனே ஒருவரை அனுப்பி இமாம் அபூ ஹனிஃபா (ரஹ்) அவர்களை சிறையில் இருந்து விடுவித்து அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
நூல் : தபகாதுல் ஹனீஃபா
யஜீத் பின் உமர் பின் ஹுபைரா அவர்கள் குரைஷி வம்சத்தில் உள்ள ஃபஸாரா எனும் குலத்தைச் சேர்ந்தவர் , உமையா அரசின் கீழ் ஈராக் முழுவதையும் கி.பி. 738 - 749 ஹிஜ்ரி 120 - 132 காலகட்டத்தில்
ஆட்சி செய்தார். இவரோடு உமையாக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
அன்றெல்லாம் மார்க்க அறிஞர்கள் காஜி பதவி வேண்டாம் என விரண்டோடினார்கள்.
Comments
Post a Comment