ரமலான் நோன்பும் உடல் நலமும் உலகளாவிய மருத்துவ ஆய்வுகள்

இன்று ஜும்ஆ உரை 
--------------------------------------- 

ரமலான் நோன்பும் உடல் நலமும் உலகளாவிய மருத்துவ ஆய்வுகள்
==================================

இஸ்லாம் கிறிஸ்துவம், இந்து மதம், யூத மதம் போன்ற பல்வேறு மதங்களின் மரபுகளில் நோன்பு -  உண்ணாவிரதம் இருப்பது பரவலான மரபாகும். 

விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் வரை சுமார் 13 மணி நேரம் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் உண்பதையும் குடிப்பதையும் தவிர்த்து நோன்பு நோற்கிறார்கள். 

நோன்பு நோற்கும் இந்த முறை 1447 வருடங்கள் பழமையானது. உலகத்தில் வாழும் 30% சதவீத முஸ்லிம்களில் 23% சதவீத முஸ்லிம்கள் நோன்பு நோற்கிறார்கள்.

உலகத்தில் உள்ள 195 நாடுகளில் 50 நாடுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். 

இவர்கள் அந்தந்த நாடுகளின் பல்வேறு சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்ந்தாலும், இஸ்லாம் மார்க்கத்தின் ஒரே சட்டத்தை பின்பற்றி உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு நோன்பு நோற்று வாழ்கிறார்கள். 

ரமலான் நோன்பின் நேரங்கள் ஒவ்வொரு நாட்டின் அட்சரேகையை பொறுத்து (பூமியின் 23½° சாய்வு காரணமாக) மாறுபடும்.

நார்வே நாட்டில் அதிகபட்சம் 4 மணி நேரமும், ஸ்வீடன் நாட்டில் அதிகபட்சம் 6 மணி நேரமும், பின்லாந்து நாட்டில் அதிகபட்சம் 5 மணி நேரமும், ஐஸ்லாந்து நாட்டில் அதிகபட்சம் 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரையும், ரஷ்யாவின் வடபகுதியில் 4 மணி நேரமும், கனடாவின் வடபகுதியில் 6 மணி நேரமும், அலாஸ்கா நாட்டில் 4 மணி நேரமும், கிரீன்லாந்து நாட்டில் 4 மணி நேரமும் மட்டுமே இரவு இருக்கும். இதை (Polar Night) இருக்கும் நாடுகள் என்று கூறுவர்.

அதாவது சுமார் 20 மணி நேரம் இங்கெல்லாம் பகல் நேரம் காணப்படும்; எனவே அட்சரேகையை  கவனித்து ஒவ்வொரு நாட்டின் இரவு, பகல் கூடுதலாகும் குறைவாகவும் காணப்படும்.

அண்டார்டிகா போன்ற பகுதிகளில் ஆறு மாதங்கள் பகலும், ஆறு மாதங்கள் இரவு மட்டுமே இருக்கும்.

இந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் பகலில் நோன்பு நோற்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக 20 மணி நேரமும் அவர்கள் நோன்பு நோற்றுதான் ஆக வேண்டும். 

அதே நேரம் மேற்கண்ட நாடுகளின் சில நாடுகளில் குளிர்காலத்தின் போது தொடர்ந்து 24 மணி நேரமும் கூட இரவு இருக்கும் அதாவது பகலே இருக்காது. அப்படிப்பட்ட காலங்களில் இடங்களில் வாழ்வோர் நோன்பு நோற்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட அண்டார்டிகா போன்ற நிலப்பரப்பில் யாரும் வாழ்வதில்லை.

எனவே ரமலான் நோன்பு முஸ்லிம்களின் மூன்றாவது கடமையாகும். இதை அவர்கள் கவனமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். 

மேலும் இந்த ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாக குர்ஆனை ஓதவும், தொழவும், நோன்பு நோற்கவும், பிரார்த்தனைகள் செய்யவும் செய்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதால் உணவு நேர மாற்றங்கள், தூக்கத்தின் அளவில் மாற்றங்கள்,  ஒளி வெளிச்சத்தில் அதிக நேரம் இருக்கும் நிலை, உடற்பயிற்சி முற்றிலும் தடை படுகிற நிலை போன்ற காரணங்களால் உடலில் சுரக்கும் 18 வகையான ஹார்மோன்கள் பாதிக்கப்படலாம் என ஒரு ஆய்வு உள்ளது. 

'பாதிக்கப்படலாம்' என்கிற விதத்தில் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது; ஆனால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிற எந்த ஆய்வு முடிவும் இல்லை.

எனவே உலகத்தில் மிகப்பெரிய மார்க்கமாக இஸ்லாம் இருப்பதாலும், அந்த மார்க்கத்தில் உள்ள ஒரு கடமையான நோன்பை பெரும்பாலான முஸ்லிம்கள் கண்டிப்பாக பின்பற்றி வருவதாலும், அந்த நோன்பு குறித்து உலக அளவில் முஸ்லிம்களாலும், முஸ்லிம் அல்லாதவர்களாலும் பல ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. 

முஸ்லிம்கள் நோன்பு நோற்பதால் அவர்களின் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படுகிற மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து முஸ்லிம் மருத்துவராலும், முஸ்லிம் அல்லாத மருத்துவர்களாலும், ஆய்வாளர்களாலும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. 

அப்படி ஆய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ள பல ஆய்வு அறிக்கைகளை நான் கண்டேன்; அவற்றிலிருந்து நமது தமிழ் சமூகத்திற்கு பயண்மிக்க சில ஆய்வு முடிவுகளை இந்த ரமலானில் தெரிவிக்க விரும்புகிறேன். 

இதை வாசிக்கின்ற அனைவரும் எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் காலம் சென்ற எனது மூதாதையர்களுக்காகவும் துஆ செய்யும்படி வேண்டுகோள் வைக்கின்றேன்.

நோன்பு நோற்பதால் 
உடல் எடை கூடுமா குறையுமா? 
============================

முதல் கொரோனாவின் போது வந்த ரமலான் மாதத்தில் துருக்கி நாட்டில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ரமலான் மாதத்தில் 13 மணி நேரம் உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்பதாலும், தூக்கத்தின் நேரமும் அளவும் மாறுப்படுவதாலும், கொழுப்பு சத்து சார்ந்த உணவுகள் அதிகமாக உட்கொள்வதாலும், சர்க்கரை அதிகமாக உள்ள குடிபானங்கள் அதிகமாக குடிப்பதாலும் எதிர்பாராத அளவிற்கு உடல் எடை கூடவும் குறையவும் வாய்ப்பு இருக்கிறது என்கிற கண்ணோட்டத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம்களில் 1669 நபர்களிடம் கூகுள் வழியாக படிவங்களை வழங்கி அதன் மூலம் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த முடிவு காணப்பட்டுள்ளது.

1669 பேரில் 53.6% சதவீதம் பேர் பெண்களும் 49.4% சதவீதம் பேர் ஆண்களும் பங்கேற்றனர். அதாவது 775 ஆண்களும் 894 பெண்களும் பங்கேற்றனர். இவர்களில் ஏறக்குறைய பாதிப்பேர் தமக்கு கூடுகிற குறைகிற எடையை சாதாரணமாக கருதியவர்கள் ஆவர்.

ரமலான் மாதத்தில் உடல் உழைப்பு குறைவதாலும், உடற்பயிற்சி முற்றிலும் நின்று போவதாலும், கொழுப்பு சத்து உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதாலும் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

சுறுசுறுப்பு குறைவாக உள்ளவர்கள், அதிக அளவு கொழுப்பு சத்து சார்ந்த உணவுகள், சர்க்கரை அதிகமாக உள்ள பானங்கள் குடித்தவர்களின் எடை அதிகரித்து இருந்தது.

நோன்புக்கு முன்பே அதிக எடை இருந்தவர்களுக்கு 1.67 கிலோ கிராம்  எடை நோன்பு நோற்றதால் குறைந்து காணப்பட்டது. அதுபோலவே கொழுப்பின் அளவு 1.47 முதல் 2.57  வரை கொலஸ்ட்ரால் குறைந்தும் காணப்பட்டது. 

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கடல் உணவுகள், பருப்பு வகைகள், மிதமான அளவு பால் பொருட்கள், சிவப்பு இறைச்சி வகைகள், இனிப்பு உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றை மிக கவனமாகவும் நடுநிலையாகவும் உட்கொண்டவர்களுக்கு உடல் எடை கூடவும் செய்யாமல் குறைவும் செய்யாமல் கொழுப்பு சத்து மட்டும் குறைந்து காணப்பட்டிருந்தது. 

எனவே 13 மணி நேரம் தொடர்ந்து பட்டினியாக இருப்பதால் அதிகம் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் தானாகவே தோன்றும். அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் தருவது தவறு. 

சராசரியான எடை குறைவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட சதவிகித ஆண்களுக்கு பெண்களை விட அதிக எடை குறைவு காணப்பட்டது.

இந்த ஆய்வில் கவலைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களில் 70% பேர் அதிக உடல் எடை பருமன் உடையவர்களாக இருந்தார்கள். இது மிகவும் ஆபத்தான போக்காகும். 

இப்படிப்பட்டவர்கள் தம் உடல் எடை விஷயத்தில் கவனம் செலுத்தாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரும் ஆபத்தைத் தரக்கூடிய இருதய நோய், நீரழிவு நோய், புற்றுநோய் போன்றவற்றை எதிர்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்படிப்பட்டவர்களை இந்த நோய்கள் மிக எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. 

நோன்பின் நோக்கம் இறைநெருக்கம் பெறுவதே முக்கிய காரணமாக இருந்தாலும், உலகில் வாழும் மனிதர்களுக்கு உணவில் கட்டுப்பாடு  வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவும் அல்லாஹ் நோன்பை கடமையாக்கி இருக்கிறான் என்றே என்ன தோன்றுகிறது. 

ஒவ்வொரு தனி நபருக்கும் பாடம் புகட்டும் வகையில் நோன்பு அமையப்பெற்றுள்ளது என்று சொன்னாலும் மிகையல்ல!

அதிகரித்து வரும் உடல் பருமனை நோன்பு உண்மையாகவே கட்டுப்படுத்துகிறது; மேலும் சுகாதார கட்டமைப்பை நோன்பு உருவாக்கித் தருகிறது. மேலும் விவரமாக அறிய
https://onlinelibrary.wiley.com/doi/10.1155/jnme/8851660

ரமலான் நோன்பு 
நோற்ற பாலூட்டும் பெண்கள் 
===========================

குழந்தைகளுக்கு பால் குடிப்பாட்டும் பெண்கள் நோன்பு நோற்க இஸ்லாம் விலக்கு அளித்திருந்தாலும் சிலர் நோன்பு நோற்று இருக்கின்றனர்; அவ்வாறு நோன்பு நோற்ற பெண்கள் குறித்த ஒர் ஆய்வு.

எகிப்து டக்காலியா கவர்னர்ரேட் பகுதியில் வாழ்ந்த பாலூட்டும் பெண்களிடையே பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் குழந்தைகளுக்கு பாலூட்டும் 1130 பெண்கள் பங்கெடுத்தனர்.

இவர்களில் 53 % சதவீதம் பேர் 27 வயது உடையவர்கள். மற்றவர்கள் பல தர வயது உடையவர்கள் ஆவர். 

இந்த 1130 பெண்களில் 83.7% சதவீதம் பெண்கள் நோன்பு நோற்றனர். கேள்விகளைக் கேட்டு பதில் பெற்றதின் மூலமாக மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ரமலான் காலங்களில் பால் குடிப்பாட்டும் பெண்கள் நோன்பு நோற்பதால் அவர்களின் உடலுக்கோ குழந்தைகளின் உடலுக்கோ சொல்லிக் கொள்ளும்படியான பெரும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிய வந்தது.

ஸஹருடைய உணவிலும், இஃப்தார் உடைய உணவிலும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் பெண்கள் தாராளமாக நோன்பு நோற்கலாம். 

மேலும் பாலூட்டி கொண்டு நோன்பு நோற்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் தாய்க்கும் குழந்தைக்கும் எதுவுமே நேராது.

மேலும் விரிவாக காண.
https://www.liebertpub.com/doi/10.1089/bfm.2024.0325

2021 ஆம் ஆண்டு இதே ஆய்வு குழுவினர் நோன்பு போற்ற 21 பெண்களிடமும், நோன்பு நோற்காத 27 பெண்களிடமும் அவர்களின் தாய்ப்பாலை சேகரித்து அதில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், லிப்பிட் அளவுகள் மற்றும் பல்வேறு ஆற்றல்கள் குறித்து ஆய்வு செய்தனர் . 

அதில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த மாற்றமும் இரண்டு வகை பெண்களின் பாலிலும் காணப்படவில்லை. 

நோன்பு நோற்ற பெண்களுடைய பாலின் தரமும் நோன்பு நோற்காத பெண்களுடைய பாலின் தரமும் ஒரே அளவில் தான் இருந்தது. 

நோன்பு நோற்ற பெண்களின் பாலில் லிப்பிட், சோடியம், குளோரைடு, அயோடின், ஒமேகா-3 போன்ற கொழுப்பு அமிலங்கள் மட்டும் சற்று அதிகரித்து காணப்பட்டது. குழந்தைகளின் எடை விஷயத்தில் எந்த மாற்றமும் இல்லை; இரண்டு வகை பெண்களிடமும்  இருந்த குழந்தைகளிடம் ஒரே மாதிரியான எடை தான் இருந்தது.

https://www.liebertpub.com/doi/full/10.1089/bfm.2023.0144

ரமலான் நோன்பு நோற்ற 
முஸ்லிம் கர்ப்பினி பெண்கள் :
============================

வடமேற்கு நைஜீரியாவின் கடுனா எனும் பகுதியில் வாழ்ந்த முஸ்லிமான கர்ப்பிணி பெண்களிடம் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு. 

ரமலான் மாத நோன்பை முழுமையாக நோற்ற பெண்களுக்கும் அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கும் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படுகின்றதா என்கிற வகையில் 1814 பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ரமலான் காலங்களில் இவர்களுக்கு தூக்கமின்மை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

2024 ஆம் ஆண்டு உள்ள ரமலான் மாதத்தில் இந்த பெண்கள் நோன்பு நோற்று இருந்தார்கள். 

இவர்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு பெறப்பட்ட பதிலின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 

1814 பெண்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலில் 1370 பெண்கள் முதன் முதலில் குழந்தைகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்கள் ஆவர். 

இந்த 1814 பெண்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று இருந்தார்கள்; அதாவது 1418 பேர் நோன்பு நோற்று இருந்தார்கள். 

நோன்பு நோற்றிருந்த பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் 90.38 முதல் 173.64 கிராம் அளவு குழந்தைகளின் எடை குறைந்து இருந்தது. 

நோன்பு நோற்காத கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகளின் எடை சுமார் 100 கிராம் வரை எடை அதிகமாக காணப்பட்டது. 

தூக்கம் குறைந்ததால் கர்ப்பிணி பெண்களுக்கு சொல்லும் படியான குறைபாடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. 

உலக அளவில் முஸ்லிம்கள் 30% பேர் வாழ்கிறார்கள்; அவர்களில் ரமலான் காலங்களில் கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கை தான் இது.

உலக நாடுகளில் நோன்பு காலங்களை சந்திக்கும் முஸ்லிம் நோயாளிகள், முஸ்லிம் கர்ப்பினிகள் அந்த காலங்களை எப்படி கடந்து செல்வது என்பது குறித்து உலகம் முழுவதும் ஒவ்வொரு நோய்க்கும் தனித்தனியே ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றது. அந்த ஆய்வு அறிக்கைகளும் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவர்களால் ஒரு மாத உண்ணாவிரதத்தால் உலகத்திற்கு ஏற்படுகிற பயன் என்ன என்பது குறித்து மறைமுகமாக ஆய்வு செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றது.

நாங்கள் கர்ப்பமுற்றிருக்கும் போதுதான் ரமலான் மாதம் முழுவதையும் நோன்பு நோற்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கிறது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவே நோன்பு நோற்கிறோம் என்று பல பெண்கள் கூறினார்கள்.

மேலும் விபரங்களுக்கு 
https://link.springer.com/article/10.1186/s12884-025-07158-2

நோன்பாளிகளுக்கு 
கண்கள் வறண்டு போகுமா? 
=============================

2024 ஆம் ஆண்டு ரமலான் நோன்பு நோற்ற 13 ஆண்கள் மற்றும் 27 பெண்களிடம் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. 

சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  சராசரி ஆண்களின் வயது 38.17 பெண்கள் சராசரி வயது 38. 07.

12 மணி நேரங்களில் இருந்து 13 அரை மணி நேரம் வரை உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்கும் பொழுது அவர்களுடைய கண்கள் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகுமா? கண்கள் வறண்டு போகுமா? நீர் சத்து குறைவதால் ஏதேனும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஷுடான் வாங் , ஸ்கெபன்ஸ் கண் ஆராய்ச்சி நிறுவனம் 

மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி, அமெரிக்கா ரோவாய்டா அலீல்டின் , ஷெஃபீல்ட் டீச்சிங் ஹாஸ்பிடல்ஸ் NHS ஃபவுண்டேஷன் டிரஸ்ட், யுனைடெட் கிங்டம்
அலி லாமின் , மான்செஸ்டர் பல்கலைக்கழக NHS ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (MFT), யுனைடெட் கிங்டம் ஆகிய மருத்துவ ஆய்வு கழகத்தின் உயர்நிலை மருத்துவர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையை  08 ஜனவரி 2025 அன்று Takayoshi Masuoka , கனசாவா மருத்துவ பல்கலைக்கழகம், ஜப்பான்
மதிப்பாய்வு செய்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை  கூறுவதாவது.

ரமலான் மாதத்தில் தொடர்ந்து 12 நாட்கள் நோன்பு நோற்ற 40 பேரிடம் கண் வறட்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

ரமலான் நோன்பு முடிந்து ஒரு வார காலம் நோன்பு நோற்காமல் இருந்த பிறகு ஒரு வாரம் மீண்டும் கண் பரிசோதனைகள் செய்வது என்கிற அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது.

அவர்கள் நோன்பு நோற்று இருக்கும் போது கண் சிறிதளவு வறண்டு இருந்தாலும் அதை 0.001 என்று  சொல்லப்படுகிற அளவிற்குகூட சிறிதளவு வறட்சியும் வெளியில் தெரியவில்லை. 

அதே நேரம் கண் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சொட்டு மருந்துகள் கண்களுக்கு விடாமலே 0.05 என்கிற அளவில் அவர்களின் நோயின் அளவு குறைந்து இருந்தது. 

நீண்ட நேரம் திரவ உணவுகள் உட்கொள்ளாததால் குறிப்பிடும்படியான எந்த மாற்றமும் கண்களுக்கு ஏற்படவில்லை என தெரியவந்தது. 

அதே நேரம் ரமலான் மாதத்தில் அதிகாலையில் எழுந்து விடுவதாலும், இரவு நீண்ட நேரம் கழித்து உறங்குவதாலும் மொத்தத்தில் ரமலான் மாதத்தில் தூக்கம் குறைவதால் கண் சுரப்பிகளில் சில மாற்றமும், கண் சவ்வு படலம் பரவுதல் போன்ற சில மாற்றங்கள் ஏற்படுகின்றது. இவை நோன்பு நோற்பதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அல்ல! 

இந்த ஆய்வின்போது காண்டாக்ட் லென்ஸ் அணிந்தவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கண் பார்வை குறைவுக்காக கண்ணாடி அணிந்து இருப்பவர்கள், கண்ணில் எந்த குறைபாடும் இல்லாமல் இருப்பவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள். 

நோன்பாளிகளில் சிலருக்கு கண் வறட்சி சற்று இருந்தாலும் நோன்பு காலங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சமநிலைக்கு வந்துவிடுகிறது.

குறைந்த அளவு உள்ள கண் வறட்சியினால் மிகப் பெரும் பாதிப்பு எதுவும் இல்லை; அது போலவே இப்பொழுது ஏற்பட்ட வறட்சியினால் நீண்ட காலத்துக்குப் பிறகு அவை பாதிப்பை ஏற்படுத்தாது.

முதல் வாரத்தை விட மூன்றாவது வாரத்தில் கண்ணீர் சுரப்பிகளில் இருந்து நீர் சுரப்பது 0.0001 % சதவீதம் குறைந்து காணப்பட்டது. 

கண்ணை பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்யும் போது ஒரு சில நிலைகளில் ஒரு சில மாற்றங்கள் இருந்தாலும் மொத்தத்தில் எந்த குறையும் இல்லை என்றே ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளது. 

மேலும் விபரமாக அறிய...
https://www.frontiersin.org/journals/medicine/articles/10.3389/fmed.2025.1488765/full

ரமலானில் 
அதிகரிக்கும் வாகன விபத்துக்கள்? 
==================================

2013 - 2016 காலகட்டத்தில் ஈரான் நாட்டின் வடபகுதியில் கஸ்பியன் கடற்கரை ஓரத்தில் ரஷ்ட் எனும் மாநிலத்தில் குயலான் மாவட்டத்தில் ரமலான் மாதத்தில் நடக்கும் ஆக்சிடென்ட் விபத்துக்கள் குறித்து ஒரு ஆய்வு செய்யப்பட்டது. 

வெவ்வேறு வானிலை அமைப்புகள் உள்ள சந்தர்ப்பத்திலும், ரமலான் அல்லாத சந்தர்ப்பத்திலும் கூட ஆய்வு செய்யப்பட்டது. 

போக்குவரத்து விபத்துகள் 0.040 என்ற அளவிலும், மற்றும் காயங்கள் 0.001 என்ற அளவிலும்  கணிசமாக அதிகரித்தன. போக்குவரத்தின் அளவும் கணிசமாக அதிகரித்திருந்தது.

அதிலும் நோன்பு துறக்கும் நேரத்தை நெருங்க நெருங்க விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 

காரணம் நோன்பு திறப்பதற்காக விரைந்து செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் அவர்கள் செயல்படுவதாலும்,  ட்ராபிக் - வாகன நெருக்கடிகளில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளாவதாலும், சர்க்கரை - நீரழிவு நோய் உள்ளவர்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டு மன நெருக்கடிக்குகளுக்கு ஆளாவதாலும் அவசரத்தில் ஏதோ ஒன்று செய்வதால் விபத்துகள் நேருகின்றது. 

எனவே இந்த தகவலை முஸ்லிம்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்; அதனால் நமது சக தோழர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

எனவே ரமலான் மாதத்தில் நோன்பு திறக்கும் இடத்திற்கு நோன்பு திறப்பதற்கான அரை மணி நேரத்திற்கு முன்பே விரைந்து சென்று விடுங்கள்.

நோன்பு திறக்கும் நேரங்களில் உங்களுடைய வாகன ஓட்டிகளுக்கு வேலை பலுவை சுமத்தாதீர்கள். 

உங்களுடைய நண்பர்களுக்கு  மேற்கண்டவற்றை எடுத்துச் சொல்லி கவனமாக இருக்க அறிவுறுத்துங்கள்.

ஆதாரம் மற்றும் இந்த கட்டுரையை விரிவாக அறிய : https://link.springer.com/article/10.1186/s12889-025-21980-5

இஸ்லாம் எந்த வகையில் தனித்துவமானது தெரியுமா? 
================================

2007 ஆம் ஆண்டு கணக்கின்படி ரமலான் மாதத்தில் உலக முஸ்லிம்களில் நோன்பு கடமையானவர்களில் 93 % சதவீதம் பேர் நோன்பு நோற்கிறார்கள்; அமெரிக்கர்கள் 77% பேர் நோன்பு நோற்கிறார்கள்.

உலகத்தில் இரண்டு வகை அறிஞர்களை மட்டும் மதம் சார்ந்தும் சிந்திக்க வைத்திருக்கிறது என்றால் அது இஸ்லாம் மார்க்கம் மட்டும்தான். 

முதலாவது: அந்தந்த நாட்டு சட்டத்துறை அறிஞர்கள். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தமது சொத்துக்களை பிரித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்கு அவர்கள் மார்க்கச் சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து அவர்கள் அறிந்திருக்க வேண்டும். 

மற்றொரு துறை அறிஞர்கள் மருத்துவர்கள். ஒரு முஸ்லிமான நோயாளி ரமலான் காலங்களில்  எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மருத்துவ அறிஞர்கள் தெரிவிக்க வேண்டும். 

ஒவ்வொரு முஸ்லிமும் ரமலான் காலங்களில் நோன்பு நோற்பார்; அவர்களுக்கு இருக்கிற நோய்களுக்கு ஏற்ப நோன்பை எப்படி மேற்கொள்வது என்பது சம்பந்தமான விவரத்தை சொல்லிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். 

எனவே மருத்துவர்கள் ஒரு நோய் எப்படி எல்லாம் விளைவுகளை வெளிப்படுத்தும் என்பதை தெரிந்து இருப்பதோடு, உண்ணாமல் பருகாமல் நோன்பாளியாக இருப்பவரிடம் அதே நோய் எப்படிப்பட்ட பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் தெரிந்திருக்க வேண்டிய நிர்பந்த நிலையில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். 

எனவே இந்த இரண்டு துறை சார்ந்த அறிஞர்கள் இஸ்லாம் மார்க்கம் குறித்தும் அதன் கடமைகள் குறித்தும் ஓரளவு முழுமையாக தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த வகையில் தான் இஸ்லாம் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

இவ்வாறு பல ஆய்வுகள் நோன்பு குறித்து செய்யப்பட்டு வருகிறது; இந்த ஆய்வுகள் சொல்லும் பாடம் இதுதான்! 

நோன்பு நோற்பதால் மனிதனுக்கும் உடலுக்கும் நல்லதே நடக்குமே தவிர சிறிதளவு கூட தீமை நடக்காது. 

ஏனென்றால் நமது உடலை Mona fixture -  உற்பத்தி செய்தவன் அல்லாஹ் ஆவான்; அவன் படைத்த உடலுக்கு எது நல்லது? எது கெட்டது என்று தெரியும்; நல்லது என்பதால்தான் நமக்கு ஒரு மாத நோன்பு கடமையாக்கி இருக்கிறான்; அதை முறையாக நேற்று சரியாக உடல் கட்டமைப்பையும், உள்ளத்தின் கட்டமைப்பையும் வைத்துக் கொள்வோம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்