முன்னுரை
முன்னுரை
நற் சிந்தனைகளை விதைத்து, இதயத்தை உயிர்ப்பித்து, அன்றாட வாழ்வை ஒழுங்குபடுத்தும் நித்திய வழிகாட்டியான அல்குர்ஆனை வழங்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்!
முப்பொழுதும் இறைநினைவோடு வாழ 'இன்ஷா அல்லாஹ்!' எனும் இனிய சொல்லை இஸ்லாமியர்களின் வாழ்வியலாக ஆக்கிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர், மற்றும் தோழர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!
இமாம் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, "எனக்கு எப்போதும் பயமும், மனக்குழப்பமும், தூக்கமின்மையும் இருக்கின்றது; நான் என்ன செய்வது?" என்று கேட்டார்.
அதற்கு இமாம் ஜீலானி (ரஹ்) அவர்கள், "வெள்ளிக்கிழமை அன்று சூரத்துல் கஹ்ஃபை முழு கவனத்துடன் ஓதி வாருங்கள்; சில வாரங்களில் குணமாகும்" எனக் கூறினார்கள்.
இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் தம் தஃப்ஸீரில் ஜும்மாவுடைய நாளில் சூரத்துல் கஹ்ஃபை ஓதுகிறவர்களுக்கு ஒரு மறைமுகமான பாதுகாப்பு வளையத்தை அல்லாஹ் அமைக்கின்றான்" எனக் கூறுகிறார்கள்.
இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்;
குகை வாசிகளை ஈமான் காப்பாற்றியது போல,
இரண்டு தோட்டக்காரர்கள் (32 -44) செல்வ மிகுதியால் பெருமை அடித்த போது அவர்களுக்கு நஷ்டங்களை ஏற்படுத்தி திருத்தியது போல,
மூஸா (அலை) அவர்களும் கிழிர் (அலை) அவர்களும் அறிவுச் சோதனையின் போது அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு இருந்தது போல,
உலகை ஆட்சி செய்த துல்கர்னைன் (அலை) அவர்கள் அதிகாரம் வழங்கப்பட்டு சோதிக்கப்பட்ட போது மிகச் சரியாக நடந்து கொண்டது போல
சக மனிதர்களில் எவரேனும் இதுபோன்ற நான்கு சோதனைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் சிக்கல்களை சந்தித்தால் அவர்கள் சூரத்துல் கஹ்ஃபை ஓதி அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினால் இறைவன் புறத்திலிருந்து பாதுகாப்பும் மீள்வதற்கான வழியும் கிடைக்கும்"
இவ்வாறு சூரத்துல் கஹ்ஃபின் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்; மேலும் விரிவாக அறிய இந்த நூலை வாங்கி வாசித்து பயன்பெறுங்கள்.
B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ M.A., M.Phil.
11/01/2026
Comments
Post a Comment