நாகூர் ஹனிபா பாட்டு பாடத் தெரியுமா?

நாகூர் ஹனிபா 
பாட்டு பாடத் தெரியுமா?
**************************
   -   பாகவி, ஃபாஜில் ஜமாலி
ஆலிம் ஒருவர், தம்மிடம் நுழைவுத்தேர்வுக்கு வந்தவரிடம், "உனக்கு நாகூர் ஹனிபா பாடல் தெரியுமா?" எனக் கேட்டதும், அவர் பாடலை பாடினார். "நீ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று விட்டாய்" என்று கூறினார்.

அரபு மொழியில் ஒரு பழமொழி உண்டு. 

سل المجرب ولا تسأل الحكيم

அறிவாளியிடம் கேட்காதே! அனுபவசாலியிடம் கேள்!

"ஆயிரம் அறிவாளிகளின் சொல்லை விட , ஒரு அனுபவசாலியின் சொல் மேலானது" என கிரேக்க பழமொழி ஒன்று உள்ளது.

ஒரு மேம்பாலத்தின் அடியில் போகமுடியாமல் கண்டைனர் லாரி சிக்கிக்கொண்டது.

டை கட்டிய பல அறிவாளிகள் முயற்சித்தும் லாரியை முன்னும் கொண்டு செல்ல முடியவில்லை. பின்னாலும் கொண்டு வர இயலவில்லை.

பாலத்தின் அடியில் வழமையாக அமர்ந்திருக்கும் ஒரு ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி, அவர்களில் மிகப்பெரிய அதிகாரியிடம், "இதற்கு நான் வழி சொல்கிறேன்" எனக் கூறினார்.

"பல பட்டங்கள் பெற்ற நாங்களே செய்வதறியாது திணறுகிறோம், நீ என்ன சொல்லப் போகிறாய்?" என கேவலமாக ஒரு பார்வை பார்த்து கொண்டே மேற்கண்டவாறு கேட்டார்.

"நாலு இஞ்ச் அளவு லாரியின் உயரம் குறைந்தால், லாரி ஏதோ ஒரு பக்கம் சென்று விடும். அதை குறைக்க நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன் கேட்கிறீரா?"

சரியான கேள்வியை அவர் தெளிவாக சொன்னதும், அது, உயர் அதிகாரியை ஒரே இடத்தில் நிற்கவைத்துவிட்டது. அவரைத் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது. அவர் தீர்வு சொல்வாரோ என்கிற எண்ணம் தோன்ற வைத்து விட்டது..

"சொல்லுங்கள்" என்றார் டை ஆசாமி!

"ஆறு டயர்களின் காற்றை பிடுங்கி விடுங்கள். உயரம் குறையும். பாலத்தை கடந்து லாரியை ஓட்டிச் சென்று, வேறு ஆறு டயர்களை பொருத்தி லாரியை எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறினார். 

அவ்வளவுதான் டை ஆசாமி, அவருக்கு முத்த மழை பொழிந்து தன் மணிபர்சில் இருந்த பணம் முழுவதையும் எடுத்துக் கொடுத்தார் . அவர் சொன்ன ஆலோசனையின் அடிப்படையில் அந்த லாரி அங்கிருந்து புறப்பட்டது.

எனவே அறிவைவிட , அனுபவம் விலைமதிப்பற்றது.

எனது மாமாவின் அறிவுரைகள் அனைத்தும் அறிவுரைகள் அல்ல! அனுபவத்தின் பிழிவுகள்.

எனது மாமா தொடர்ந்து கூறினார்.

சிறு நிலா என்ற ஊரிலிருந்து அரபி ஓத தெரியாத, தமிழ் எழுத படிக்க தெரியாத ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு பெரம்பலூர் 'ஸிராத்துல் முஸ்தகீம் எதீம்கானா மதரஸா'விற்கு வந்தார். 

இந்த மதரஸா பள்ளிப் படிப்பும், இஸ்லாமிய மார்க்க படிப்பும் ஒருங்கே அமையப்பெற்ற ஓர் நிறுவனமாகும். 

இதன் நிறுவனர் 'மவ்லானா' என அனைவராலும் அழைக்கப்படும் முஹம்மது பின் அளவி அவர்களாவர்.

அலுவலகத்தில் இருந்தவர்களிடம், "இந்த சிறுவரை இந்த மதரஸாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்" என வேண்டி நின்றபோது, அங்கிருந்தவர்கள்  "இவருக்கு அரபி தெரியுமா?, தமிழ் எழுதப்படிக்கத் தெரியுமா? "என கேட்டார்கள். 

எனது மாமா, "இவருக்கு எழுத்து வாடையே இல்லை" என்று பதில் கூறினார். அதற்கு அவர்கள், "இவரை நாங்கள் எப்படி சேர்த்துக் கொள்வது? நீங்கள் மவ்லானா அவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" என சொல்லி அனுப்பிவிட்டார்கள்.

எனது மாமா அவரை அழைத்துக்கொண்டு, இருளடைந்த, ஒதுக்குப்புறமாக இருந்த அவர்களின் அறையில் சந்தித்தார்கள்.

எனது மாமா வந்த நோக்கத்தை கூறினார்.

மவ்லானா அவர்கள், "படிக்க தெரியுமா? எழுதத் தெரியுமா? ஓதத் தெரியுமா?" என சரளமாக கேள்விகளை எழுப்பினார்கள்.

எனது மாமா கூறினார். ஹள்ரத்! இவன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தான். நான்தான் அவன் பெற்றோரிடம் சொல்லி அழைத்து வந்திருக்கிறேன். இவனுக்கு எதுவும் தெரியாது. தமிழில் பேசுவான். இவனை நீங்கள் சேர்த்து கல்வி கற்பிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

"ஒண்ணுமே தெரியாதவனை நான் சேர்த்துக் கொண்டு என்ன செய்வது? என்னை தர்மசங்கடத்திற்குள் ஆழ்த்துகிறீறே" என்று சொல்லிக்கொண்டே தலையில் அணிந்திருந்த தொப்பியை கழட்டி வைத்து விட்டு, தலையை சொரிந்து கொண்டு, ஏதோ சிந்தனை வயப்பட்ட வராக நீண்ட நேரம் இருந்துவிட்டு, "உனக்கு நாகூர் ஹனிபா பாடல் தெரியுமா?" என்று கேட்டார். அந்த சிறுவர், "தெரியும்" எனக் கூறினார். 

"எங்கே ஒரு பாடலைப் பாடு" எனக் கேட்டார். அவர், "இறைவா! உன்னை தேடுகிறேன், அந்த ஏக்கத்திலே நான் வாடுகிறேன்" என ராகமாக படித்துக் காட்டியதும் மவ்லானா அவர்கள் சொன்னார்கள். 

"நீ திக்கல், திணறல் இல்லாமல் தடையின்றி பேசுகிறாய், உன் குரலில் நல்ல ராகம் தென்படுகிறது. நீ ஓதத் தகுதியானவன்தான்! காஜா! இவனை நான் சேர்த்துக் கொண்டுவிட்டேன். நீங்கள் சென்று வாருங்கள். நான் இந்தப் பயலை பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறினார்கள். 

இந்த நிகழ்வை சொல்லிவிட்டு எனது மாமா தொடர்ந்து கூறினார்.

எந்த ஒரு அறிவும் இல்லாதவருக்கு ஏதாவது ஒரு அறிவு கொடுத்துவிட வேண்டும் என்று, அன்று வாழ்ந்த பெரியவர்கள் நினைத்தார்கள்.

இன்று எல் கே ஜி வகுப்பில் சேர்க்க போகும் பெற்றோருக்கு, தேர்வு நடைபெறுவது ஆச்சரியமாக இருக்கிறது.

பெரம்பலூர் மவ்லானா அவர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் வாழ்ந்த பெருமக்களை இப்படி அறிவாளியாக ஆக்கினார்கள். அதற்காக பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். 

அன்று ஆலிம்களின் அயராத முயற்சியால் இன்று பெரம்பலூரில் படித்தவர்களின் எண்ணிக்கை பெருமளவு உயர்ந்திருக்கிறது" என்று பல்வேறு கருத்துக்களைச் சொன்னார்கள்.

புகைப்பட விளக்கம் : பெரம்பலூர் மௌலானா அவர்களின் புகைப்படம்.

அனுபவம் தொடரும்......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்