ஜமாஅத்துல் உலமா மஸ்ஜித் திறப்பு விழாவில் O.M. ஹஜ்ரத் அவர்களின் உரை
ஜமாஅத்துல் உலமா மஸ்ஜித் திறப்பு விழாவில் O.M. ஹஜ்ரத் அவர்களின் உரை
பத்ரு யுத்தம் மிகப்பெரிய வெற்றியை இஸ்லாமியருக்கு ஈட்டி தந்தது; அதனால் அனைத்து ஸஹாபாக்களும் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
குள்ளமான உருவம் கொண்ட அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அந்த யுத்தத்தில் சொல்லிக் கொள்ளும்படியான எந்த சாகச நிகழ்வையும் செய்யவில்லை.
ஆனால் மற்ற நபித்தோழர்கள் எதிரிகளில் ஒருவரையோ இருவரையோ கொலை செய்திருக்கிறார்கள்; காயப்படுத்தி இருக்கிறார்கள்; எதிரிகளை புறமுதுகு காட்டி ஓட செய்திருக்கிறார்கள்.
குள்ளமாக இருந்ததால் நம்மால் இது போன்ற சாதனைகளை செய்ய இயலவில்லையே என்கிற வருத்தத்தோடு நபிகள் நாயகம் அவர்களை சந்தித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரின் முக வாட்டத்தை புரிந்து கொண்டு அருகில் கிடந்த ஒரு ஈட்டியை எடுத்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் கைகளில் திணித்து, "இந்தப் போர்க்களம் முழுவதும் சென்று சுற்றிப் பாருங்கள்; எவரேனும் சாகாமல் இருந்தால் அவரை நீங்கள் சாகடித்து விடுங்கள்; உங்களுக்கும் மறுமையில் மிகப்பெரிய வெகுமதி கிடைக்கும்" என்று கூறினார்கள்.
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டு அப்படி ஒருவரை போர்களம் முழுவதும் தேடி அலைந்தார்; ஒரு இடத்தில் அபூஜஹல் குற்றுயிராகக் கிடந்தான்; அவனைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்ட இப்னு மஸ்ஊத் ரலி அவர்கள் அவனுடைய நெஞ்சின் மீது ஏறி அமர்ந்து, எடுத்து வந்திருந்த ஈட்டியால் குத்தி கொலை செய்தார்கள்; தலையை துண்டித்து கையோடு கொண்டு வந்தார்கள்.
இரத்தக் கரை படிந்த ஈட்டியோடும் துண்டிக்கப்பட்ட தலையோடும் நபிகள் நாயகம் அவர்களை முகம் மலர்ச்சியோடு சந்தித்தார்கள். அவரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்ந்து இருப்பதை பார்த்து பெருமானாரும் மகிழ்ந்தார்கள்.
இப்னு மஸ்ஊத் ரலி அவர்களைப் போன்று தான் இங்கு கூடியிருக்கும் அனைத்து ஆலிம்களும் ஆவர்.
ஏனென்றால்
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ، مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا وَلَوْ كَمِفْحَصِ قَطَاةٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ، (سنن ابن ماجه)
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசல் கட்டுகிறாரோ — அது பறவையின் கூடு அளவாக இருந்தாலும் — அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான் ” (நூல் : இப்னுமாஜா) என்று சொல்லி இருப்பதால் அதனை நபிமார்களின் வாரிசான ஆலிம்கள் செய்து முடித்திட ஆசைப்பட்டார்கள்.
ஆனால் அதற்கான வசதி வாய்ப்புகள் அமைய வில்லை; எத்தனையோ ஆலிம்களுக்கு சொந்த வீடு கூட இல்லாமல் இறந்தே போகிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் எங்கிருந்து ஒரு பள்ளிவாசலை தனியாகக் கட்ட முடியும்?
இந்த சந்தர்ப்பத்தில் தான் தமிழ்நாடு மாநில ஜமாஅதுல் உலமா சபை நிர்வாகிகள் அனைத்து ஆலிம்களின் பெரும் முயற்சியோடும் அவர்களின் பங்களிப்போடும் மற்றும் பல செல்வந்தர்களின் துணையோடும் இந்தப் பள்ளிவாசலை கட்டி முடித்திருக்கிறார்கள்.
எனவே இந்தப் பள்ளிவாசல் உருவாக ஒத்துழைப்பு வழங்கிய, பொருளாதார உதவிகளை சிறிய அளவிலோ பெரிய அளவிலோ வழங்கிய ஆலிம் பெருமக்களும் கூட சொர்க்கத்திற்கு உரியவர்களாக ஆகிவிட்டார்கள்; ஜமாஅத்துல் உலமா சபை ஆக்கிவிட்டது.
இப்னு மஸ்ஊத் ரலி அவர்களின் ஏக்கத்தை நபிகள் நாயகம் அவர்கள் பூர்த்தி செய்தது போல் ஆலிம்களின் ஏக்கத்தை ஜமாஅத்துல் உலமா சபை பூர்த்தி செய்திருக்கிறது.
செல்வந்தர்கள் பள்ளிவாசல்களை கட்டுகிறார்கள்; கல்லூரிகளை நிறுவுகிறார்கள்; பள்ளிக்கூடங்களை உருவாக்குகிறார்கள்; ஆலிம்களால் ஒரு பள்ளியை கூட கட்ட முடியவில்லையே என்கிற வருத்தத்தில் இருந்தவர்களுக்கு இந்த பள்ளிவாசல் அவர்களின் ஏக்கத்தை தீர்த்து வைத்திருக்கிறது.
எலி வலையானாலும் தனி வலையாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்பி தான் முதலில் வீட்டை கட்டுகிறார்கள்.
அதிலும் சில செல்வந்தர்கள் தாம் எங்கெல்லாம் அடிக்கடி செல்வோமோ அங்கெல்லாம் தமக்கான ஒரு வீட்டை கட்டிக் கொள்கிறார்கள்; சென்னை, சிங்கப்பூர், மலேசியா, துபை, ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்கிறார்கள்.
தற்காலிகமாக வாழும் இந்த இடத்தில் ஒரு மனிதனுக்கு எத்தனையோ வீடுகள் இருக்கின்றது;
மறுமையில் நீண்ட நெடுங்காலம் வாழ வேண்டும்; அங்கே நமக்கென ஒரு வீடு வேண்டாமா? அங்கு ஒரு வீடு வேண்டுமென்றால் இங்கு அல்லாஹ்விற்காக ஒரு வீட்டை கட்டிக் கொடுத்தால் நமக்காக சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு வீட்டை கட்டுவான் என நபிகள் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்.
அந்த வார்த்தையை நம்பி ஒவ்வொருவரும் ஒரு பள்ளிவாசலை கட்டி எழுப்ப வேண்டும்; அது பின்னாளில் நீண்ட நெடுங்காலம் வாழும் மறுமைக்கு பயன் மிக்கதாக இருக்கும் என்பதில் ஒவ்வொரு செல்வந்தரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment