போடுவோம் ஓட்டு வாங்க மாட்டோம் நோட்டு....

போடுவோம் ஓட்டு 
வாங்க மாட்டோம் நோட்டு....
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

தாவூஸ் பின் கைஸான் அல் யமானீ ரஹ் (طاووس بن كيسان اليماني) அவர்கள் ஹிஜ்ரி 20 களுக்குப் பிறகு பிறந்த தாபியீன்களில் ஒருவர். 

இவர் ஃபிக்ஹு மற்றும் ஹதீஸ் துறை அறிஞர்களில் மிகப்பெரும் ஆளுமை மிக்கவர். 

எளிமை, உலக பற்றின்மை போன்ற இயற்கை சுபாவத்தை கொண்ட மிகப்பெரும் சூஃபிகளில் ஒருவர்.

ஹிஜ்ரி 20 - 106 ( கிபி 640 -  725) காலகட்டத்தில் வாழ்ந்தவர்; அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) போன்ற பல ஸஹாபாக்களை சந்தித்து ஹதீஸ்களை நேரடியாக கேட்டறிந்தவர்.

இவர்களின் பேணுதல் குறித்து தஹபீ (ரஹ்) அவர்களுடைய ஸியரு அஃலாமு நுபலா என்கிற நூலில் எழுதப்பட்டுள்ள ஒரு செய்தி. 

இமாம் தாவூஸ் (ரஹ்) அவர்களின் குடும்பம் மிகவும் வறுமையிலும் பொருளாதார நெருக்கடியிலும் ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து வந்தது. அச்சமயம் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்கள்; இமாம் தாவூஸ் (ரஹ்) அவர்களின் மகனார் கலீஃபா அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அந்தக் கடிதத்தில், "எங்களுடைய தந்தையும் நாங்களும் மிகவும் சிரமத்திலும், பொருளாதார நெருக்கடியிலும் இருக்கின்றோம்; எங்களுக்கு ஏதேனும் நீங்கள் உதவி செய்யுங்கள்; எங்களுடைய தந்தை உங்களிடத்தில் நேரடியாக உதவி கேட்க மாட்டார் என்பதை தாங்கள் அறிவீர்" என்று எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்தை படித்ததும் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள், "300 தீனார்களை வழங்குங்கள்" என உத்தரவிட்டார்கள். 

அரசாங்க அதிகாரிகளில் ஒருவர் அந்தப் பணத்தை எடுத்துச் சென்று அவர்களின் மகன் வசம் ஒப்படைத்தார்கள்.

சில நாட்களுக்கு பின்னர் அரசாங்கத்தில் இருந்து மற்றொரு அதிகாரி வந்து, "உங்களின் குடும்ப செலவினங்களுக்கு 300 தீனாரை கலீஃபா உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் அரசாங்கத்தின் பொது நிதியிலிருந்து வழங்கச் சொல்லியிருந்தார்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்களா? அதைப் பெற்றுக் கொண்டதற்காக ஒரு கையெழுத்து வாங்க வந்திருக்கிறேன்" என்று கேட்டது இமாம் தாவூஸ் (ரஹ்) அவர்கள், "அப்படி ஒன்றும் நான் பெறவில்லையே?" என்று சொன்னார்கள்.

உடனே வந்திருந்த அதிகாரி,  "தங்களுடைய மகனிடத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டது" என்று கூறினார்.

இமாம் தாவூஸ் (ரஹ்) அவர்கள் தம் மகனை அழைத்து கேட்டபோது, "ஆமாம்! நான்தான் கடிதம் எழுதினேன்; அவர்கள் பணம் வழங்கினார்கள்; அந்த பணத்தைக் கொண்டு கடன்களை அடைத்தேன்; வீட்டுக்குத் தேவையான உணவு பண்டங்களை வாங்கி வைத்திருக்கிறேன்" என்று கூறினார். 

இமாம் தாவூஸ் (ரஹ்) அவர்கள் உடனே தமது நிலத்தை விலை பேசி விற்பனை செய்துவிட்டு அதில் கிடைத்த பணத்தில் 300 தீனார்களை அவர் வசம் கொடுத்து, "இதை அரசாங்க நதியில் சேர்த்து விடுங்கள்" என்று கூறினார்கள்.

அரசு தன் நிதியிலிருந்து வழங்கும் செல்வத்தை இறைநேசர்கள் பெறுவதை விரும்பவில்லை; அதுவும் 100 சதவீதம் நேர்மையான முறையில் வருவாய் வரும் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் அரசாங்கத்திடமிருந்து கூட பெறுவதை விரும்பவில்லை என்றால் அவர்களின் பேணுதலான வாழ்க்கையை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

இமாம் தாவூஸ் (ரஹ்) அவர்களைப் போன்று ஒவ்வொருவரும் நேர்மையாகவும் பேணுதலோடும் வாழ வேண்டும். 

அந்த வகையில் ஓட்டுக்காக பணம் பெறுவது இஸ்லாம் மார்க்கத்தில் ஹராம் -  தடை செய்யப்பட்டதாகும். 

எனவே இஸ்லாமியர்களில் எவரும் ஓட்டுக்கு பணம் வாங்காமல் உங்களுடைய உரிமை மிகுந்த வாக்கினை அல்லாஹ்விற்காக செலுத்த முன் வாருங்கள்.

இன்னும் சுவாரசியமான பல தகவல்கள் இந்த சொற்பொழிவில் உள்ளது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்