நிரந்தர நல்லறங்கள்
கட்டுரை எண் :- 28
நிரந்தர நல்லறங்கள்
======================
"எது நிரந்தர நற்செயல் என்று ஆய்வு செய்து பார்த்ததில், இஸ்லாம் கூறும் பத்து செய்திகளைத் தவிர வேறு எதையும் இன்றை உலகத்தில் முன்னிலைப்படுத்த முடியாது" என்று மேல்நாட்டு அறிஞர் மாரிஸ் புகைல் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த அறிஞரின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு திருக்குர்ஆன், ஹதீஸ் மற்றும் கடந்த கால வரலாறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த கட்டுரையை முழுமைப்படுத்தி இருக்கிறேன்.
"நிரந்தர நல்லறங்கள்" குறித்த முழுமையான தகவல்களை வழங்கி விட வேண்டும் என்கிற ஆசையில், நிதானமாக ஆய்வு செய்து உங்களுக்கு வழங்கி இருக்கிறேன். வாசித்து விளங்கிக் கொள்ளுங்கள்.
நிரந்தர நல்லறங்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறிய நான்கு ஹதீஸுகளை சமர்ப்பித்திருக்கிறேன்.
அவற்றில் கூறப்பட்டுள்ள பத்து நல்லறங்களை தனியாக குறிப்பிட்டு அதை விவரித்து எழுதி இருக்கிறேன். இதில் உள்ள கருத்துக்களை நம் அன்றாட வாழ்வில் பின்பற்றினால், மறுமை வாழ்வு ஒளிமயமாக இருக்கும்.
*நான்கு நபி மொழிகள் :*
1. عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله تعالى عنه: أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: إِذَا مَاتَ ابنُ آدم انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ: صَدَقَةٍ جَارِيَةٍ، أو عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ. رَوَاهُ مُسْلِمٌ.
1. அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமுடைய சந்ததிய மனிதன் மரணித்து விட்டால், அவன் செய்த நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை ஆகிய மூன்றைத் தவிர அவனது மற்ற செயல்கள் துண்டிக்கப்பட்டு விடுகிறது.
நூல்: முஸ்லிம் 3358
2. وروى أحمد والطبراني عن أبي أمامة - رضي الله عنه - قال: قال رسول - صلى الله عليه وسلم -: \" أربعة تجري عليهم أجورهم بعد الموت: من مات مرابطاً في سبيل الله, ومن علّم علماً أجرى له عمله ما عمل به, ومن تصدق بصدقة فأجرها يجري له ما وجدت, ورجل ترك ولداً صالحاً فهو يدعو له \" [ وانظر صحيح الجامع حديث رقم 890 ].
2. அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு விஷயங்கள் இருக்கின்றன. அவை ஒருவரின் மரணத்திற்குப் பிறகும் அவர்களுக்கான கூலியாக வழங்கப்படும்.
1. இறைவழியில் தொடர்புடைய வராக வாழ்ந்து மரணித்தவர்,
2. கல்வியைக் கற்பித்து அதன்படி நடந்தவர்; அதைக் கேட்டு அதன்படி நடந்தவர்.
3. ஒருவர் செய்த தர்மத்திற்கு அது ஏற்படுத்திய தாக்கத்திற்கு ஏற்பக் கூலி வழங்கப்படும்.
4. ஒரு மனிதன் நல்ல பிள்ளையை விட்டுச் சென்று இருக்கிறார் என்றால் அவர் தம் பெற்றோருக்காகச் செய்யும் துஆ (வின் நன்மை).
நூல் : முஸ்னது அஹ்மத், தப்ரானீ.
3. رواه ابن ماجه من حديث أبي هريرة - رضي الله عنه - قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: \" إن مما يلحق المؤمن من عمله, وحسناته بعد موته, علماً علمه ونشره, وولداً صالحاً تركه, ومصحفاً ورثه, أو مسجداً بناه, أو بيتاً لابن السبيل بناه, أو نهراً أجراه, أو صدقةً أخرجها من ماله في صحته, وحياته, تلحقه من بعد موته \" [ حسنه الألباني رحمه الله في صحيح ابن ماجه برقم 198 ]
3. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நிச்சயமாக இறை நம்பிக்கையாளர் (முஃமின்) ஒருவர் செய்த சேவைகளிலிருந்தும், நன்மையான செயல்பாடுகளில் இருந்தும் அவர் இறந்த பிறகும்கூட அவரைச் சென்றடையும்.
1. கல்வியை கற்பித்தவர்; அதைப் பரப்பியவர்.
2. நல்ல பிள்ளைகளைப் பெற்றெடுத்து விட்டுச் சென்றவர்.
3. திருக்குர்ஆன் பிரதிகளைத் தம் சொத்தாக விட்டுச் சென்றவர்.
4. அல்லது பள்ளிவாசலைக் கட்டியவர்.
5. வழிப்போக்கர்களின் பயன்பாட்டுக்காகச் சத்திரத்தைக் கட்டியவர்,
6. ஆற்றை வெட்டிக் கொடுத்தவர்,
7. தம் வாழ்நாளில் தாம் ஆரோக்கியமாக இருக்கும் போது தம் செல்வத்திலிருந்து தர்மமாகக் கொடுக்கப்பட்டவை.
இவை யாவும் ஒருவரின் மரணத்திற்குப் பிறகும் இதன் வழி வரும் நன்மைகள் உரியவரைச் சென்றடையும்.
நூல் : இப்னுமாஜா
4. عن أنس بن مالك - رضي الله عنه - أن النبي - صلى الله عليه وسلم - قال:( سبع يجري للعبد أجرهن وهو في قبره بعد موته: من عَلّم علماً, أو أجرى نهراً, أو حفر بئراً, أو غرس نخلاً, أو بنى مسجداً, أو ورّث مصحفاً, أو ترك ولداً يستغفر له بعد موته ) [حسنه الألباني رحمه الله في صحيح الجامع برقم :3596 و ابن ماجه 224].
4. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியான் மரணித்த பிறகு, அவன் புதைகுழியில் இருக்கும் நிலையில், ஏற்கெனவே செய்திருந்த ஏழு வகையான செயல்களுக்குக் கூலி (தொடர்ந்து) வழங்கப்படும்.
1. கல்வியைக் கற்பித்தவர்.
2. ஆறு (குளம்) வெட்டியவர்.
3. கிணறு தோண்டியவர்.
4. மரம் நட்டவர்.
5. பள்ளிவாசல் (மத்ரஸா, ஸ்கூல் போன்றவற்றைக்) கட்டியவர்.
6. திருக்குர்ஆன் (அச்சடித்து) அன்பளிப்புச் செய்தவர்.
7. தம் மரணத்திற்குப் பிறகு தமக்காகப் பாவமன்னிப்புத் தேடும் பிள்ளையை விட்டுச் சென்றவர்.
நூல்: அபூதாவூத்
*பத்து கட்டளைகள் :*
*1. கற்பது, கற்பிப்பது, பரப்புவது.* கல்வி என்றால் இஸ்லாம் மார்க்க சம்பந்தமான அடிப்படை தகவல்களை ஒவ்வொருவருக்கும் எடுத்துச் சொல்வதும், அல்லாஹ்வையும் ரசூலையும் சரியான முறையில் எடுத்துச் சொல்லி, மக்களை ஓரிறை கோட்பாட்டில் நிலைத்திருக்க செய்வது தான் இல்மு - அறிவு.
மேலும் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள ஏவல், விலக்கல், ஹராம், ஹலால் போன்ற அனைத்து அடிப்படைக் கொள்கைகளையும் அறிந்தவர்கள், அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்வது கடமையாகும். இப்படிச் செய்கிறவர் தான் பயனுள்ள கல்வியை பெற்றிருக்கிறார் என்று பொருளாகும்.
மேலும் தான் பெற்ற பயனுள்ள கல்வியை தான் ஒருவனே மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணி இருந்து விடாமல், தன்னைப் போன்ற ஒரு கூட்டத்தை உருவாக்கி அப்பணியை செய்ய நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் இல்மு - கல்வி என்று ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். இது பொதுவான வார்த்தையாகும்.
மார்கக் கல்வி, உலகக் கல்வி என்று குறிப்பிட்டு எதையும் பொருள் கொள்ள கூடாது. இந்த வார்த்தை இரண்டு கல்வியையுமே உள்ளடக்கிக் கொள்ளும்.
எனவே பொதுமக்கள் பயன்பெறும் எல்லா வகை கல்வியையும், அனுபவத்தையும், தொழில் முறையையும் பிறருக்கு கற்றுத் தருவது ஸதகத்துல் ஜாரியா தான்.
*2. ஆறுகளை வெட்டுவது.* ஒரு பெரிய நதியில் இருந்து சிறிய பல நதிகளை உருவாக்குவதும், ஒரு சிறிய நதியில் இருந்து பெரிய பல ஓடைகளை உருவாக்குவதும், ஒரு ஓடையில் இருந்து பல பெரிய வாய்க்கால்களை உருவாக்குவதும், ஒரு வாய்க்காலில் இருந்து சிறிய பல வாய்க்கால்களை உருவாக்கி கடைநிலையில் உள்ள நிலம் வரையிலும் தண்ணீர் சென்றடைய வழிவகை செய்வது. இவ்வாறு செய்வதால் எல்லா காலத்திலும் வாழும் மக்களுக்கு செய்கிற உதவியாக கருதப்படும்.
மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களுடைய மனைவி அன்னை ஜுபைதா அவர்கள் இப்படித்தான் மக்காவிற்குள்ளும் ஹஜ் செய்கிற இடத்திலும் 'ஜுபைதா கால்வாய்' என்ற பெயரில் ஒரு கால்வாயை உருவாக்கிச் சென்று இருக்கிறார்கள். அது கடந்த நூற்றாண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்ததை தாங்கள் அறிவீர்கள்.
நீங்கள் வசதி படைத்தவராக இருந்தால், உங்களது கிராமத்தில் உள்ள ஏரியை தூர் வாருங்கள். அந்த ஏரிக்கு நீர் வரும் பாதையை செப்பனிடுங்கள் அது மிகப்பெரும் நன்மையை பெற்றுத்தரும்.
இன்று நகர்புறங்களில் வாழுகிற நாம் கண்டிப்பாக கிணறு வெட்டுவது, ஆறுகளை வெட்டுவது சாத்தியம் இல்லை.
ஆறு மற்றும் கிணறுகளை வெட்டுவதின் நோக்கம் நீர் சேமிக்கப்பட வேண்டும் மக்கள் பயனடைய வேண்டும் என்பதுதான்.
அதை இன்று நாம் நிலத்தடி நீர் சேமிப்பின் மூலம் அந்த நன்மையை பெறலாம். உங்கள் வீட்டு மாடியில் பெய்கின்ற மழை தண்ணீரை வீணாக ரோட்டில் விட்டு விடாமல், அதை முறையாக உங்கள் வீட்டின் நிலத்திற்கு அடியிலேயே செல்லும்படியாக போர்களை அமைத்து நிலத்தடி நீரை சேமித்து வையுங்கள்.
இதன் மூலமாகவும் மேற்கண்ட ஹதீஸின் நன்மையைப் பெறலாம்.
*3.கிணறு மற்றும் நிலத்தடி போர் போன்ற நீர் வழி தடங்களை உருவாக்குவது.* மக்கள் பயன்பாட்டிற்கு என கிணறு, நிலத்தடி போர் போன்றவற்றை உருவாக்கி கொடுப்பதும் மிகப்பெரும் தர்மமாகும்.
வழிப்போக்கர் ஒருவர் வழியில் இருந்த கிணற்றில் இறங்கி தண்ணீரை அருந்திவிட்டு வெளியே வந்து பார்க்கிறார். ஒரு நாய் தண்ணீர் வேண்டி தடுமாறிக் கொண்டிருந்தது. அவர் தன் ஷூவை கழட்டி அதில் தண்ணீரை எடுத்து வந்து அந்த நாய்க்கு கொடுத்தார். அதனால் அவருடைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு அவர் சொர்க்கம் சென்றடைந்ததாக ஒரு ஹதீஸ் புகாரியில் இருப்பதை தாங்கள் அறிவீர்கள்.
தண்ணீர் எடுத்துக் கொடுத்த மனிதனுக்கு சொர்க்கம் கிடைக்கிறது என்றால் அந்தத் தண்ணீர் அங்கே இருப்பதற்கு காரணமான கிணற்றை வெட்டியவருக்கு மிக உயர்ந்த சொர்க்கம் அல்லவா கிடைக்கும்.
நமது முன்னோர்கள் தண்ணீர் பந்தல், மோர் பந்தல் என்றெல்லாம் வெயில் காலங்களில் ஆங்காங்கே ஏற்படுத்தி நன்மையை பெற்றிருந்ததை நாம் அறிவோம். ஆனால் இது இன்று காலப்போக்கில் அறவே இல்லை.
வெயில் காலங்களில் உங்கள் வீட்டிற்கு வெளியே தினமும் இரண்டு கேன் தண்ணீரை போட்டு வையுங்கள். யாரோ குடித்துச் செல்லட்டும். பிடித்துச் செல்லட்டும் அது உங்கள் நரக நெருப்பை அணைக்கக் காரணமாக இருக்கும்.
மதீனாவில் "ரூமா அல் கிஃபாரி" என்றொரு கிணறு இருந்தது. அந்த கிணற்றில் சுவையான குடிப்பதற்கு மதுரமான தண்ணீர் இருந்தது. அந்தக் கிணற்றுக்குச் சொந்தக்காரர் அந்த கிணற்றுத் தண்ணீரை விற்பனை செய்து வந்தார்.
மக்காவிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருந்த நபித்தோழர்களுக்கு இந்தக் கிணற்றுத் தண்ணீரைத் தவிர வேறு எந்த தண்ணீரும் ஒத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் ஜம்ஜம் தண்ணீர் குடித்து வளர்ந்தவர்கள் அல்லவா?
இந்நிலையில் நபி (ஸல்) அவர்கள் அந்த கிணறுக்குச் சொந்தக்காரரான யூதரை அழைத்து, "இந்தக் கிணற்றை நீங்கள் அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விடுங்கள்; உங்களுக்கு சொர்க்கம் கிடைக்கப்பெற நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்" என்று கூறினார்கள்.
அவர், "எனக்கு இதைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை; எனவே அதை இலவசமாக என்னால் கொடுப்பதற்கான வசதி இல்லை" என்று சொல்லிவிட்டார்.
இதனை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கிணற்றை யார் வாங்கி கொடுத்தாலும் அவர்களுக்கு நீங்கள் சொர்க்கம் தர பொறுப்பேற்றுக் கொள்வீர்களா?" என்று கேட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் "ஆம்!" என்று சொன்னார்கள். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட யூதரிடம் சென்று விலை பேசி 37000 திர்ஹம் கொடுத்து அந்த கிணற்றை வாங்கினார்.
அதாவது "ஒரு நாள் இந்த கிணற்றை நான் பயன்படுத்திக் கொள்வேன்; மற்றொரு நாள் இந்த கிணற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்பதுதான் ஒப்பந்தம். அந்த ஒரு நாள் பயன்படுத்திக் கொள்வதற்கு தான் 37,000 திர்ஹம்.
ஹள்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் தனக்கான நாளை பொதுமக்களுக்காக அன்பளித்து விட்டார்கள். எனவே ஊர் மக்கள் அனைவரும் அந்த நாளில் இலவசமாக தண்ணீரை எடுத்துக் கொண்டார்கள். மறுநாள் யாருமே அந்த யூதனிடத்தில் சென்று விலை கொடுத்து தண்ணீர் வாங்குவதில்லை.
இப்படியாக சில மாதங்கள் கடந்த பிறகு அந்த யூதர், உஸ்மான் (ரலி) அவர்களின் புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொண்டு, "இந்தக் கிணற்றின் பங்கு இன்னொரு நாள் எனக்கென்று இருக்கிறது ; எனவே ஏதோ ஒரு தொகையை கொடுத்துவிட்டு இந்த கிணறை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.
உஸ்மான் (ரலி) அவர்கள் 8000 திர்ஹம் கொடுத்து அந்த கிணறை பெற்றுக் கொண்டார்கள். இப்பொழுது உஸ்மான் (ரலி) அவர்கள் முழு கிணற்றையும் பொதுமக்களுக்காக அன்பளிப்பு செய்து விட்டார்கள்.
மேற்கண்ட சம்பவத்தின் அடிப்படையில் கிணறு மற்றும் போர் போன்றவற்றை உருவாக்கி பொதுமக்களுக்கு அன்பளிப்போருக்கு சொர்க்கம் பூமியிலேயே நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. இவ்வாறான பணிகளை செய்து சொர்க்கத்தை நீங்களும் புக்கிங் செய்து கொள்ளுங்கள்.
மதரஸா, பள்ளிவாசல் போன்ற பொது ஸ்தாபனங்களுக்கு போர் போட்டு கொடுக்குதல், மோட்டார் வாங்கி அன்பளிப்பு செய்தல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வாருங்கள்.
*4. மரங்களை நடுதல்.* முன்பெல்லாம் நெடுஞ்சாலைகளில் பனைமரம், புளிய மரம், மாமரம் போன்றவைகள் நடப்பட்டிருக்கும். அந்த சாலைகளில் பயணிப்பவர்கள் அந்த பழங்களை பறித்து சாப்பிட்டு கொள்வார்கள். அப்படி ஒரு பழக்கம் நம்மிடையே இருந்தது.
அரேபியர்களிடம் பேரீத்தம் மரங்களை சாலைகளில் நட்டு வைத்தார்கள். அதன் கனிகளை பயணிகள் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள். இன்று இது போன்ற நல்ல பழக்கங்கள் பெரும்பாலும் எங்கும் காணப்படவில்லை. அரபு நாடுகளில் இன்றும் இந்த நடைமுறை இருந்து வருவது பாராட்டுக்குரியது.
சாலை ஓரமாக இருக்கும் நிலங்களை உடையவர்கள் கனி தரும் மரங்களை நட்டு, அது பொது மக்களும் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்கிற பொதுவான எண்ணத்தோடு அதை விட்டு வைத்தால் நபிகளாரின் வழியை பின்பற்றியதாக ஆகும்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"எந்த ஒரு முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டு, அம்மரத்திலிருந்து மனிதர்களோ, மற்ற விலங்கினங்களோ ( பறவையினங்களோ) சாப்பிட்டால் அது அவர் செய்யும் தர்மமாகக் கருதப்படும்"
நூல் : புகாரி 2320, முஸ்லிம் 2904
على أبي هريرة وهو يغرس غرسا، فقال: [ألا أدلك على غراس خير من هذا؟ سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، والله أكبر، يغرس لك بكل واحدة شجرة في الجنة](رواه ابن ماجه وهو في صحيح الجامع).
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது ; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களுக்கான சொர்க்கத்தில் மரம் நடப்பட வேண்டுமானால், 'சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வ லாஇலாஹா இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்று ஒவ்வொரு முறை சொல்லப்படும் போதும் ஒரு மரம் அவருக்காக நடப்படுகிறது.
நூல் : திர்மிதீ , இப்னுமாஜா.
நீங்கள் வாழும் பகுதியில் என்ன மரங்களை நட்டால் அந்த நிலத்திற்கு பிரச்சனை இல்லாமலும் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பிரச்சனை இல்லாமலும் பயனாக இருக்குமோ அவ்வாறான மரங்களை நட்டு வையுங்கள். அதன் காரணமாக உங்கள் சொர்க்க வாழ்வு சிறப்பாக அமையும்.
*5. பள்ளிவாசல் கட்டுவது.* நபி (ஸல்) அவர்கள் கூறுனார்கள். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி யார் அல்லாஹ்விற்காக ஒரு பள்ளிவாசலை கட்டுகிறாரோ; அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒரு மாளிகையை கட்டித் தருகிறான். நூல்: புகாரி
பள்ளிவாசலில் அல்லாஹ் ஒருவனை மட்டுமே அனைவரும் வணங்குறார்கள். அங்கே வருகிற அனைவரும் மன அமைதியைப் பெறுகிறார்கள். ஒரே நேரத்தில் பல நூறு நல்லிதையும் கொண்ட நல்ல மனிதர்கள் ஒன்று சேருகிறார்கள். இஸ்லாம் சார்ந்த விஷயங்கள் அங்கே போதிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த மனித இனமும் நல்ல விதமாக வாழ வழிகாட்டப்படுகிறது. இவை அனைத்திற்கும் காரணமாக இருப்பது இந்த பள்ளிவாசல் தான்.
எனவே பள்ளிவாசலை கட்டுவது தனக்குத்தானே சொர்க்கத்தில் ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டதற்கு சமம்.
இதைப்போல் மதரஸா, பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை, டியூஷன் சென்டர், அரசு வேலைகள் பெற போதிக்கப்படும் அகடாமிகள், ஆதரவற்றோர் காப்பகம் என சக மனிதன் சமூக அந்தஸ்து பெற்று வாழவும், முன்னேற்றம் பெறவும் எந்த கட்டிடங்கள் காரணமாக இருக்குமோ அந்த கட்டிடங்களைக் கட்டித்தருவதும் சொர்க்கத்தைப் பெற்றுத் தரும்.
திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளை ஆய்வு செய்யும் ஆய்வுக்கூடங்களையும், திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளை விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப ஆராய்ச்சி செய்யும் ஆய்வு நிறுவனங்களையும் கட்டிக் கொடுக்கலாம்.
கேரளா மலப்புரத்தைச் சேர்ந்த குஞ்ஞகமது ஹாஜியார் அவர்களின் மனைவி ஜைனபா ஹஜ்ஜும்மா என்ற என்பது வயது பெண்மணி தன் ஐந்து கோடி மதிப்புள்ள நிலத்தை தானம் செய்திருக்கிறார்.
கணவர் இரண்டு கிட்டினியும் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்றும் டயாலிசிஸ் சிகிச்சை கிடைக்காமல் மரணித்து விட்டார். அதனால் ஜைனபா அம்மையார் அவர்கள் ஒரு ஏக்கர் முப்பது சென்ட் நிலத்தை குறிப்பிட்ட ஒரு அறக்கட்டளை நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்தார். அவர்கள் அந்த நிலத்தில் சி. ஹெச். சென்டர் மருத்துவமனை என்ற பெயரில் ஒரு டயாலிசிஸ் சென்டரை நிறுவி ஏழை எளியவர்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் செய்து வருகிறார்கள்.
தினமும் 22 டயாலிசிஸ் இயந்திரங்கள் மூலம் 44 நபர்களுக்கு இந்த நிறுவனத்தில் டயாலிசிஸ் நடைபெற்று வருகிறது.
"நாம் மரணிக்கும் போது எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை; இந்த இடத்தை மருத்துவமனைக்கு வழங்கியதால், என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இந்த டயாலிசிஸ் மையத்தின் மூலம் சமூகத்தில் உள்ள ஏழை எளியவர்கள் பயன்பெற போவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என்று சொன்ன ஜைனபா அம்மையார் அவர்கள் தனக்கான சதக்கத்துல் ஜாரியா - நிலையான நல்லறத்தை உருவாக்கிச் சென்று இருக்கிறார்.
அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்ததும் முதன் முதலில் ஒரு பள்ளிவாசலைக் கட்ட தன் சொந்த பணத்திலிருந்து இடத்தை வாங்கினார்கள். பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்குவதில் ஹள்ரத் அபூபக்ர் (ரலி) அவர்களையும் கூட்டாளியாக ஆக்கிக் கொண்டார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியாளராக இருந்தபோது மஸ்ஜிது நபவி பள்ளிவாசலை விரிவு படுத்திட முயன்ற போது பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
மஸ்ஜிதுன் நபவி பழமை மாறாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
அப்பொழுது உஸ்மான் (ரலி) அவர்கள், "யார் ஒரு பள்ளிவாசலை கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்று ஒரு மாளிகையை கட்டித் தருகிறான்" என நபி (ஸல்) அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அந்த வார்த்தை நனனவாக்கப்பட வேண்டும் என்பதற்காக வேண்டியே நான் இந்த பள்ளிவாசலை புதுப்பிக்க விரும்புகிறேன்" என்று சொன்னதும் அனைத்து சஹாபாக்களும் அதற்கு ஒப்புக்கொண்டு பள்ளிவாசலை விரிவு படுத்த முன் வந்தார்கள்.
عن عبدالله بن عمرو رضي الله عنهما قال: قال رسول الله: صلى الله عليه وسلم "من بنى الله مسجدًا بنى الله له بيتًا أوسع منه"؛ (صحيح الترغيب والترهيب: 273).
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். யார் ஒரு பள்ளிவாசலை கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அதைவிட விசாலமான ஒரு வீட்டை சொர்க்கத்தில் கட்டித் தருகிறான்.
நூல் : முஸ்னது அஹ்மத்
أخرج الطبراني في الأوسط عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: " من بنى مسجدًا لا يريد به رياءً ولا سمعة، بنى الله له بيتًا في الجنة"؛ (صحيح الترغيب والترهيب: 274).
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பெருமைக்காக, பகட்டுக்காக இல்லாமல் யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசலை கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருகிறான்.
நூல் : தப்ரானீ
தொழும் இடம், பள்ளிவாசல், ஆகிய பெயரில் அது எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் அதற்கான நன்மை முழுமையாகக் கிடைக்கும்.
பெரும் பெரும் வீடுகளை தாம் குடியிருப்பதற்காக கட்டிக் கொள்கிறவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வாடகைக்கோ, விற்பனையோ செய்கிறவர்கள், பெரும் ஷாப்பிங் மால் போன்றவற்றை கட்டுகிறவர்கள் அதில் ஒரு தொழும் இடத்தை கட்டி வைத்து விடுங்கள்.
தொடர்ந்து எல்லா காலகட்டத்திலும் அங்கே அந்த தொழும் இடமாக தொடர்ந்து இருப்பதற்கான வசியத் அல்லது எழுத்து வடிவிலான கட்டளைகளை பிறப்பித்து வைத்து விடுங்கள். அல்லாஹ் அதன் காரணமாகவும் நமக்கு நிரந்தர நன்மை என்னும் வருவாயை தந்து கொண்டே இருப்பான்.
*6. குர்ஆனை பிரதி எடுத்து தருவது.*
ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் பைத்துல் முகத்தஸை மீட்டெடுத்த பிறகு முதன் முதலில் பைத்துல் முகத்தஸில் திருக்குர்ஆனை பிரதி எடுத்து, பார்த்து ஓதுகிறவர்களுக்கு தோதுவாக பள்ளிவாசலில் வைத்திருந்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய அளவில் மக்களால் பேசப்பட்டது.
நபி (ஸல்) அவர்களின் இந்த வார்த்தையை இங்குதான் முதன் முதலில் நடைமுறைப்படுத்தி இருந்தார்கள்.
எனவே பள்ளிவாசல்களில் அரபு மொழி திருக்குர்ஆன், மற்றும் மொழிபெயர்ப்பு குர்ஆன், விரிவுரை குர்ஆன் போன்றவற்றை வாங்கி வைப்பது பயன் மிக்கது.
பயன்மிக்க இஸ்லாமிய நூல்கள், ஹதீஸ் நூல்கள், அரபுக் கல்லூரிகளில் போதிக்கப்படுகிற மார்க்க சம்பந்தமான நூல்கள் ஆகியவற்றை வாங்கி அன்பளிப்பதும், அரபுக் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான நோட் புத்தகங்களை வாங்கி அன்பளிப்பதும் மிகச் சிறந்த பயனைத் தரும்.
வசதி படைத்தவர்கள் தாம் வாழ்கிற ஊரில், ஒரு நூலகத்தை உருவாக்கி, அந்த நூலகம் உலகம் உள்ளளவும் செயல்பட சொத்துகளையும் கொடுத்துச் சென்று விட்டால் அதுவே அவருக்கு சிறந்த ஸதக்கத்துல் ஜாரியாவாக இருக்கும்.
இது போன்ற நூலகங்களில் மார்க்க சம்பந்தமான நூல் மட்டுமின்றி அறிவு சார்ந்த அனைத்துத் துறை நூல்களும் இடம்பெற்றிருப்பது சிறந்தது.
மரண தருவாயில் இருக்கும் பெற்றோர் தான் ஓதிக் கொண்டிருந்த குர்ஆனையோ, அல்லது பத்து குர்ஆன் ஷரீஃப்களை விலைக்கு வாங்கி பள்ளிவாசல்களுக்கு வக்ஃபு செய்ய வேண்டும் என்று இறுதி வசியத் செய்திருந்தாலோ அதை பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல் மரண தருவாயில் பெற்றோர்கள் சொல்லாமல் போனாலும் பிள்ளைகள் நன்மையை நாடி பெற்றோருக்காக அவ்வாறு குர்ஆன் பிரதிகளை பள்ளிவாசலுக்கோ ஓதுகிறவர்களுக்கோ வாங்கி அன்பளிப்பு செய்வது இஸ்லாத்தில் ஆகுமானது.
இது நான்கு மத்ஹப் இமாம்களாலும் அங்கீகரிக்கப்பட்ட இஜிமா - ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்.
*7. பிள்ளைகளை நன்கு வளர்ப்பது.* தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கற்பித்து, நல்லொழுக்கங்களை போதித்து, நேர்மையானவர்களாகவும், உண்மையாளர்களாகவும், வளர்க்க வேண்டும்.
இப்படிப்பட்ட குழந்தைகளை நாம் உருவாக்கிச் செல்லும்போது இவர்கள், காலம் சென்ற தம் பெற்றோருக்காகவும், மூதாதையர்களுக்காகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பார்கள். மேலும் ஏதேனும் ஒரு வழியில் நன்மைகளை அவர்களுக்கு அனுப்பி வைத்துக் கொண்டும் இருப்பார்கள்.
ஷைஹு உஸைமைன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளைகள் என்பவர்கள் ஒரு மனிதனுடைய ஆண் , பெண் என இரு பாலரையும் எடுத்துக் கொள்ளும். மேலும் மகனின் மகன் மற்றும் மகள் என அவர்களுக்குக் கீழ் வரும் அனைத்து சந்ததியினரையும் மகளின் மகள் மற்றும் மகன் என அவர்களுக்கு கீழ் வரும் அனைத்து சந்ததியினரையும் இது குறிக்கும்.
وقل رب ارحمهما كما ربياني صغيرا {الاسراء: 24}،
இறைவா! நான் சிறுவனாக இருக்கும்போது என்னை எனது பெற்றோர் கவனித்துக் கொண்டது போல் நீ இவர்களை பராமரிப்பாயாக! என்று ஒரு மகன் கேட்கும் துஆவும் ஸதகத்துல் ஜாரியாவில் சேரும்.
இமாம் சுயூதி ரக் அவர்கள் கூறுகிறார்கள். பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் செய்கிற ஒவ்வொரு நற்செயலிலும் தந்தைக்கும் பங்கு உண்டு.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; உங்கள் சம்பாத்தியத்தில் மிகவும் மனமானது உங்கள் கைகளால் உழைத்து பெறுவது தான். மேலும் மகனுடைய சம்பாத்தியத்தில் பெற்றோர் சாப்பிடுவதும் மனமானது தான்.
சூரதுல் கஹ்ஃபுவில் 82 வது வசனத்தில் அல்லாஹ் ஒரு வரலாற்றை குறிப்பிடுகிறான். நல்ல ஒரு தந்தை, தன் மரண தருவாயில் தன் செல்வங்கள் தன் சிறு பிராயத்தில் உள்ள குழந்தைகளுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் அவற்றை தன் வீட்டின் சுவற்றுக்கு அடியில் புதைத்து வைத்துவிட்டு இறந்து போகிறார்கள்.
அந்த குழந்தைகள் பெரியவர்களாக ஆனதும் அந்த வீட்டை எடுத்து கட்ட நினைக்கும் போது பெற்றோர் வைத்துச் சென்றச் செல்வம் இவர்களுக்கு கிடைக்கிறது.
இதை "வ கான அபூஹுமா ஸாலிஹா - அவ்விருவரின் பெற்றோரும் நல்லவராக இருந்தார்கள்" என்று இவ்வாசனம் கூறுகிறது.
அதாவது பெற்றோர் இருவரும் நல்லவர்களாக இருந்ததாலும் அவர்களின் பிள்ளைகள் மிக நல்லவர்களாக இருந்ததாலும் தந்தையின் எண்ணப்படியே பிள்ளைகளிடத்தில் அந்தச் செல்வம் சென்று சேருகிறது.
எனவே அந்த பெற்றோரும் கூட அவர்களின் பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாக இருந்ததையே இந்த வசனம் குறிப்பிடுகிறது.
எனவே உங்களுடைய பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாக வளர்ப்பதை கடமையாக்கி கொள்ளுங்கள். அதனால் பயனுடைய போவது நீங்களும் உங்களின் சந்ததிகளும் தான்.
*8. வழிப்போக்கர்களுக்கான சத்திரம் கட்டுதல்.* தமிழ்நாட்டில் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மா அவர்கள் தாம் ஆட்சி செய்த பகுதியில் சாலைகளை அமைத்து இருபுறத்திலும் மரங்களை நட்டார். அந்த சாலைகள் தான் இன்று விரிவடைந்து நெடுஞ்சாலைகளாக காட்சியளிக்கிறது.
அதுபோலவே பல்வேறு அரசர்கள் தம் காலத்தில் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சத்திரங்களை கட்டி வைத்திருந்தார்கள். வழிப்போக்கர்கள் அதில் தங்கி ஓய்வெடுப்பார்கள். மழை, வெயில் காலங்களில் அந்த இடங்களை பயன்படுத்திக் கொள்வார்கள்.
அங்கே தங்கி இருப்பவர்களுக்கு பல அரசாங்கங்கள் உணவளித்து இருக்கின்றன. இதுவெல்லாம் கடந்த கால வரலாறு.
சுதந்திர இந்தியாவில் சத்திரங்கள் முடிவுக்கு வந்த பிறகு இஸ்லாமியர்கள் வழிப்போக்கர்களுக்காக பள்ளிவாசல்களை எந்த நேரமும் திறந்தே வைத்திருந்தார்கள். அதை இஸ்லாமிய வழிப்போக்கர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இன்று இந்த நிலையும் முழுமையாக மாறி வழிப்போக்கர்கள் ஹோட்டல்களிலும், லாட்ஜ்களிலும் தங்கும் நிலை உருவாகி இருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை ஒற்றி, நமது முன்னோர்கள் பின்பற்றி வந்த சம்பிரதாயமான நடைமுறை இன்று நம் அனைவராலும் ( அனைத்து மதத்தினராலும் ) கைவிடப்பட்டுள்ளது. இதை ஏதேனும் ஒரு வழியில் மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும்.
மேலும் ஏழை மாணவர்கள் படிப்பதற்கு மதரஸா கட்டிக் கொடுப்பது, விடுதிகள் கட்டிக் கொடுப்பது, கல்லூரிகள் கட்டித் தருவது, அனாதை காப்பகங்கள் கட்டுவது, அனாதை சிறுவர்கள் படிப்பதற்கு தேவையான கட்டிடங்களை கட்டிக் கொடுப்பது, ஆதரவற்ற விதவைப் பெண்களுக்கு இலவச வீடு வழங்குவது அல்லது வாடகை இல்லாத வீடு வழங்குவது அல்லது குறைந்த வாடகையில் வீடு வழங்குவது, ஏழை எளியவர்களுக்கு கட்டிடங்கள் கட்ட உதவி செய்வது போன்ற இவை யாவும் நிரந்தர நல்லறங்களில் சேரும்.
*9. இறைவழியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.*
روى فضالة بن عبيد رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : ( كل ميت يختم على عمله ، إلا الذي مات مرابطا في سبيل الله ، فإنه ينمى له عمله يوم القيامة ، ويأمن فتنة القبر ) رواه الترمذي وأبو داود
ஃபழாலத் பின் உபைத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைவழியில் தொடர்புடையவராக இருந்து மரணித்தவரை தவிர, மற்ற அனைத்து வகைகளிலும் மரணித்தவர்களின் அமல்கள் - சேவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
(அதாவது, மற்றவர்களுக்கு இறந்த பிறகு எந்த வகை நன்மையும் வந்து சேராது.)
நிச்சயமாக மறுமை நாளில் (இறைவழியில் இறந்த)
அவருடைய சேவைகள் அவருக்கு பன்மடங்காக்கி பெருக்கித் தரப்படுவார். மேலும் அவர் கப்ர் (மண்ணறை) குழப்பங்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்.
நூல்: திர்மிதீ, அபூதாவூத்
عَنْ سَلْمَانَ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: (رِبَاطُ يَوْمٍ وَلَيْلَةٍ خَيْرٌ مِنْ صِيَامِ شَهْرٍ وَقِيَامِهِ وَإِنْ مَاتَ جَرَى عَلَيْهِ عَمَلُهُ الَّذِي كَانَ يَعْمَلُهُ وَأُجْرِيَ عَلَيْهِ رِزْقُهُ وَأَمِنَ الْفَتَّانَ)
رواه مسلم
ஸல்மான் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கேட்டிருக்கிறேன்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு பகல் என இறைவழியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், மாதமாதம் நோன்பு நோற்று அதன் இரவுகளில் நின்று வணங்குகிறவரை விட சிறந்தவர் ஆவார்.
(இறைவழியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட) அவர் இறந்து விட்டால், அவர் என்ன வகையான அமல் - சேவைகள் செய்திருந்தாரோ அதற்கான கூலி வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கும். மேலும் அவருக்கு மறுமையில் சிறந்த ரிஸுக்கு - சொர்க்க வாழ்வாதாரங்களை கூலியாக வழங்கப்படும்.
மேலும் மன்னரை குழப்பங்களில் இருந்தும் பாதுகாக்கப்பட்டிருப்பார்.
நூல்: முஸ்லிம்
முராபிதன் ஃபி ஷபீல் என்றால் யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் என்பதே முதன்மையான பொருள்.
இவர்களிடம் மண்ணறையில் உனது இறைவன் யார்? உனது மார்க்கம் என்ன? உன்னிடம் அனுப்பப்பட்ட நபி யார்? என்பது போன்ற வழமையான கேள்விகள் கேட்கப்படாது.
இறைவழியில் உண்மையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டதாலும், அதில் உண்மையாக இருந்ததாலும், அதில் நீடித்து நிலைத்து ஈமானோடு செயல்பட்டதாலும் அவருக்கு இந்த கண்ணியம் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு இவர்களுக்கு மட்டுமே உரியது.
அல்லாஹ் திருக்குர்ஆனில், பல் அஹ்யாவுன் இன்த ரப்பிஹிம் யுர்ஸகூன் - அவர்கள் அல்லாஹ்விடத்தில் உயிரோடு இருக்கிறார்கள்; மேலும் அவர்கள் உணவளிக்கவும் படுகிறார்கள்......... என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ஷுஹதாக்கள் சொர்க்கக் கனிகளை சாப்பிடுகிறார்கள்.
ஃபைலுல் கதிர் எனும் நூலில் அல் முனாவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இவர்களிடம் முன்கர் மற்றும் நகீர் ஆகிய இரண்டு மலக்குமார்கள் வரவே மாட்டார்கள். இவர்கள் சம்பந்தமான எந்த தகவல்களையும் இறைவனிடத்தில் எடுத்துச் சொல்லவும் மாட்டார்கள். இவர்கள் இறைவழில் நீடித்து நிலைத்திருந்து மரணித்து விட்டார்கள் என்பதே சாட்சியாகக் கருதப்படும்.
இமாம் ஸர்கஸீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் வாழும் காலத்தில் முஸ்லிம்கள், இவர்களின் காரணமாக பாதுகாப்பாக இருந்தார்கள். அதனால் இவர்கள் தன் மன்னரையில் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
மேலும் முராபித்தன் ஃபீ ஷபீல் எனும் சொல்லுக்கு இறை வழியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட இறைநேசர்கள், சூஃபியாக்கள், ஆலிம்கள், போன்றவர்களையும் இந்த சொல் குறிப்பிடுவதாக முஸ்லிம் நூலின் விரிவுரையான ஃபைலுல் கதீரில் குறிப்பிடப்படுகிறது.
*10. ஸதகத்துல் ஜாரியா - நிரந்தரமாக நன்மையைத் தரும் தர்மம்.*
நிரந்தரமாக நன்மையைத் தரக்கூடிய சிறிய முதலீடுகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது என்றும் பொருள் சொல்லலாம்.
அதாவது முழுமையான ஒரு பள்ளிவாசல் கட்டுவது மதரஸா கட்டுவது போன்று இல்லாமல், ஒரு பள்ளிவாசலில் ஒரு தொழுகையாளி தொழுவதற்கு என்ன செலவாகுமோ அந்த தொழும் இடத்திற்கான தொகையினை மட்டும் செலுத்துவது, ஒரு மதரஸாவில் ஒரு அறையை மட்டும் கட்டிக் கொடுக்க பொறுப்பேற்றுக் கொள்வது என்று சொல்லலாம்.
எனவே இவ்வாறான சிறிய அளவிலான இறை வழியில் முதலீடு செய்த பிறகு அதை அல்லாஹ்விற்காக வக்ஃபு - பொதுமக்களின் பயன்பாட்டிற்கென அல்லாஹ்விடம் ஒப்படைத்திட வேண்டும்.
இதுபோல் நாம் செய்திருக்கிற சிறு பணிகளுக்கான நன்மையும் நம் மரணித்த பிறகு நம்மை வந்தடையும்.
ஷைஹு உசைமைன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். மனிதன் வாழ்கிற காலத்தில் செய்த ஸாலிஹ் - நற்செயல்களுக்கான நன்மை அவன் மரணித்த பிறகும் அவனுக்கு வந்து கொண்டே இருக்கும்.
உதாரணமாக பிரிந்து போக இருந்த கணவன் மனைவிக்கு நல்ல அறிவுரையைச் சொல்லி சேர்ந்து வாழ செய்த செயல்.
என்ன படிப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த மாணவனுக்கு சரியான படிப்பிற்கான வழியை காட்டியச் செயல்.
பொதுவாகவே மனிதன் எதை தர்மமாக கொடுத்திருக்கிறானோ அது மட்டுமே, அவன் மரணித்திற்கு பிறகு பயனளிக்கும். மற்ற எதுவும் அவனுக்கு பயனளிக்காது.
وعن عائشة رضي اللَّه عنها: أَنَّهُمْ ذَبَحُوا شَاةً، فقالَ النَّبِيُّ ﷺ: مَا بَقِيَ مِنها؟ قالت: مَا بَقِيَ مِنها إِلَّا كَتِفُهَا، قَالَ: بَقِي كُلُّهَا غَيرَ كَتِفِهَا رواه الترمذي
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது; (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (தம் வீட்டில்) ஒரு ஆட்டை அறுத்து (தர்மம்) செய்திருந்தார்கள்.
(வெளியில் சென்றிருந்த நபி (ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்ததும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம், "இன்று அறுத்த ஆட்டில்) என்ன மிச்சம் இருக்கிறது?" என்று கேட்டார்கள்.
அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "ஒரு தொடையைத் தவிர வேறு எதுவும் மிச்சம் இல்லை" என்று கூறினார்கள்.
அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், "(நாம் தர்மமாக கொடுத்த) அனைத்தும் நம்மிடமே (மிச்சமாக) இருக்கிறது; ஆனால் நம்மிடம் உள்ள அந்த தொடையைத் தவிர" என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதீ
அதாவது தான் அறுத்த ஆட்டில் தான் சாப்பிட்டதில் தனக்கு எந்த பயனும் இல்லை. அதே சமயம் நாம் பிறருக்கு அளித்த தர்மம் மறுமை நாளில் முழுமையாக பயனளிக்கும்.
இதைத்தான் நஹ்லு 16: 96 ...... வசனம் கூறுகிறது
عن يزيد بن أبي حبيب ، أن أبا الخير، حدثه، أنه سمع عقبة بن عامر، يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: ( كل امرئ في ظل صدقته حتى يفصل بين الناس – أو قال: يحكم بين الناس ) رواه الإمام أحمد وغيره، وصححه الشيخ الألباني
யஸீத் பின் அபீ ஹபீப் ( ரஹ்) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுமை நாளில் மக்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், அடியார்களின் தலைக்கு மேல் மிக நெருக்கமாக சூரியன் சுட்டெரிக்கும் சமயத்தில் , தர்மம் செய்தவர்கள் (மட்டும்) நிழலில் இருப்பார்கள்.
நூல் : முஸ்னது அஹ்மத்
எனவே நம்மிடம் உள்ள செல்வத்தை நாம் பயன்மிக்க வழியில் முதலீடு செய்ய பழகிக் கொள்ள வேண்டும். அதுவே நம் மரணத்திற்கு பிறகு அளவிட முடியாத, நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பயன் தரும்.
*நிலையான நல்லறங்கள் குறித்து தமிழ் இலக்கியங்கள் :*
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். ( திருக்குறள். 333)
விளக்கம்:
நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்: அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதே செய்ய வேண்டும்.
பேறெனப் பெற்றதிரு போம்வழியார் தாமறிவார்
வேறெதும் தந்திடாது ஊறினையன்றி - நூற்றினில்
வாரிவ ழங்கிடும் காண்பாய் மதியது
பாரினில் வாழ்ந்திடும் நாள்.
பொருள்: நாம் நிலைத்தது என்று நினைத்துச் சேர்த்த பொருட் செல்வம் போகும் வழி எவ்வாறு என நாம் அறியாமலேயே அழிந்து விடும். விதியின் வழி எவ்வாறோ அவ்வாறே நம் வாழ்வு நிலைக்கும். எனவே நிலையாத இந்த வாழ்க்கையில் அனைவருக்கும் வழங்கி ஆதரவு அளித்து வாழும் மனிதர்களே உலகில் நிலைத்து வாழ்பவர் ஆவார்.
*காக்கையும் ஆலமரமும் :*
ஆலமரத்திலிருக்கும் ஆலம்பழத்தைத் தின்று எச்சமிடும் காக்கை ஓா் அற்பப் பறவை.
ஆனால், அது எச்சமிடுவதால் உண்டாகும் ஆலமரம் நூறு ஆண்டுகள்வரை நின்று நிலைத்து, பலருக்கு நிழலைத் தருகின்றது.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நல்லறங்களை ஆற்ற வேண்டும்.
"நிலையில்லா இவ்வுலகத்தில் நிலையான புகழை நிறுவ வேண்டும் என்றால் நிலையான பணிகளைச் செய்துவிட்டுத்தான் ஒருவா் மறைய வேண்டும்" என பெருந்தலைச் சாத்தனாா் எனும் புறநானூற்றுப் புலவா் சொல்லி இருக்கிறார்.
*தேனீயை போல் இருக்காதே! :*
உடாஅதும், உண்ணாதும், தம் உடம்பு செற்றும்,
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது வைத்தீட்டி னாரிழப்பர்; வான்தோய் மலைநாட! உய்த்தீட்டும் தேனீக் கரி.
தமிழ் இலக்கியங்களில் நாலடியார் பாடல் என்றொரு நீதி நூல் இருக்கின்றது. இதனை நாலடி நானூறு எனவும் வேளாண் வேதம் எனவும் கூறுவர்.
அதில் இடம்பெற்ற ஒரு கவிதையை தான் நீங்கள் மேலே கண்டது அதன் விளக்கம்.
மிகப்பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த ஒர் அரசன் தான் நல்ல ஆடை , அணிகலன்களை உடுத்தி அனுபவிக்காமலும், நல்ல உயர்தரமான உணவு வகைகளை வயிறார உண்டு பயனடையாமலும், தன் உடலை வருத்திக் கொண்டும், என்றும் அழிவில்லாத தர்மங்களை செய்யாமல் செல்வத்தை சேகரித்துக் கொண்டும், பிச்சைக்காரர்களுக்கு கூட கொடுக்காமலும் செல்வத்தை சேகரித்து வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் அவை அனைத்தையும் விட்டுவிட்டு இறந்து போய் விடுவார்கள்.
இது எப்படி இருக்கிறது என்றால், பல மலர்களில் இருந்து மிகச் சிரமப்பட்டு தேனைக் கொண்டு வந்து ஒரு கூட்டிலே சேர்த்து வைக்கும் தேனியை போன்றாகும்.
தேனீக்கள் சேர்த்து வைத்த தேனை பிறர் எடுத்து பயன்படுத்தி அனுபவிப்பது போல் யாருக்கும் கொடுக்காமல் தானும் அனுபவிக்காமல் சேர்த்து வைத்த எல்லா செல்வங்களையும் வேறு யாரோ ஒருவர் ஒரு நாள் எடுத்துக் கொண்டு போய் விடுவார்.
எனவே, தன் உடல் உலகை விட்டும் மறைந்து விட்டாலும் - அழிந்துவிட்டாலும் தான் அழியாமல் உலகில் நிலைத்திருக்க நிரந்தர நற்செயல்களை உருவாக்கி விட்டுச் செல்ல வேண்டும், அதுவே சரியாகவும் முறையாகவும் வாழ்ந்த வாழ்வின் அடையாளமாகும்.
*இறந்தவர்களுக்காக இருப்பவர்கள் ஸதகத்துல் ஜாரியாவை செய்யலாமா? :*
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! என் தாய் திடீரென இறந்து விட்டார்; அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார் என நான் என்னுகிறேன்; எனவே அவர் சார்பாக நான் தர்மம் செய்தால் அதன் நன்மை அவருக்குக் கிடைக்குமா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! கிடைக்கும்" என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 1388, 2760
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவரது தாயார் இறந்து விட்டார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியூர் சென்றிருந்த போது என் தாய் இறந்து விட்டார். அவருக்காக நான் ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு ஏதும் பயன் இருக்குமா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! பயன் உண்டு" என்றார்கள்.
"அப்படி என்றால் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை அவர் சார்பில் நான் தர்மம் செய்கிறேன் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன் " என அவர் கூறினார்.
நூல்: புகாரி 2756, 2762, 2770.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது ;
"என் தந்தை வஸிய்யத் ஏதும் செய்யாமல் சொத்தை விட்டுச் சென்று விட்டார். அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அது வஸிய்யத்துக்குப் பகரமாக அமையுமா?" என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! அமையும்" என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 3081
ஸஅது பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தாய் இறந்து விட்டார்; அவர் சார்பில் நான் தர்மம் செய்யட்டுமா?என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! தாராளமாக செய்யுங்கள்" என்று கூறினார்கள். "எது சிறந்த தர்மம்?" என்று கேட்டேன். அதற்கு, "தண்ணீர் வழங்குதல்" என்று கூறினார்கள்.
நூல்: நஸாயீ 3604, 3606
மேற்கண்ட ஹதீஸ்கள் நமக்கு இரண்டு கருத்துக்களை தெளிவுபடுத்துகின்றன.
ஒன்று : இறந்து போன பெற்றோருக்காக அல்லது தம் குடும்பத்தில் காலம் சென்ற பெரியவர்கள், முன்னோர்கள், மூதாதையர்கள் என எவருக்காக வேண்டி , தற்போது வாழ்கிறவர்கள் நன்மையை நாடி செய்தாலும் அதை இறைவன் தனது வலது கரத்தில் வாங்கி பன்மடங்காக்கி தருவான்.
இரண்டு : பள்ளிவாசல் கட்டுதல், தண்ணீர்ப் பந்தல் மற்றும் நிழற்குடை அமைத்தல், கிணறு, குளம் வெட்டுதல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல் போன்ற நிலையான தர்மங்களை இறந்தவர்களின் நன்மைக்காகச் செய்தால் அந்த நன்மை அவர்களைச் சேரும் என்பதற்கு இந்த ஹதீஸ்கள் ஆதாரமாக அமைந்துள்ளது.
*ஆண் பெண் பிள்ளைகளில் வேற்றுமை இல்லை:*
"வலதுன் ஸாலிஹுன் யதுவூ லஹு - பெற்றோருக்காக பிரார்த்தனைச் செய்யும் நல்ல பிள்ளைகள்" என்று நபி ஸல் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனவே பிரார்த்தனை செய்யும் படியான எந்த வகை பிள்ளைகளை விட்டுச் சென்றிருந்தாலும் அந்த பெற்றோருக்கு பிரயோஜனம் தான்.
ஆனாலும் நம் சமூகத்தில் பெண் பிள்ளைகள் பிறப்பதை சிலர் வெறுக்கிறார்கள். ஏனென்றால் அவர்களை கற்பொழுக்கத்தோடு வளர்த்து, காதல் போன்ற விவகாரங்களில் சிக்காமல் பாதுகாத்து, பெரிய அளவில் பொருளாதாரம் செலவழித்து திருமணம் செய்து வைப்பது, திருமணத்திற்கு பின்னரும் அவர்களை கவனித்துக் கொள்வது போன்ற காரணங்களால் பெண் பிள்ளைகள் பிறப்பதை விரும்பாத பெற்றோரை இன்று நாம் பார்க்கிறோம்.
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற கடமைகளை அல்லாஹ் செய்யும்படி நம்மிடம் சொல்லி இருக்கிறான். அல்லாஹ் சொன்னான் என்பதற்காக அதை நாம் முறையாக செய்து வருகிறோம்.
அதே இறைவன் தான் "எவ்வித அறிவும் இல்லாமல் அறியாமையினால் தம் பிள்ளைகளை கொள்பவர்கள் பேரிழப்பை அடைவார்கள்; அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி, அல்லாஹ் அந்த பிள்ளைகளுக்கு அளிக்கவிருக்கும் வாழ்வாதாரங்களை இவர்கள் தடுக்கிறார்கள்; அவர்கள் வழி தவறி விட்டார்கள்; அவர்கள் நேர்வழி பெறுபவர்களுமல்லர். 6 : 140 என்று சொல்கிறான்.
அதாவது "வறுமையை அஞ்சி பெண் குழந்தைகளை கொலை செய்து விடாதீர்கள். அவர்களுக்கு நாமே வாழ்வாதாரங்களை விசாலமாக தருகிறோம்" என்று சொல்லுகிறான்.
தொழுங்கள், நோன்பு நோறுங்கள் என்று அல்லாஹ் சொன்னபோது செய்கிற நாம், பெண் பிள்ளைகளையும் நாம் வளர்த்து ஆளாக்கினால், அவர்களுக்கு தேவையானவற்றை அல்லாஹ் தருவான் என்கிற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். வேற்றுமை பாராமல் பெண் குழந்தைகளையும் நன்கு வளர்த்து ஆளாக்க வேண்டும்.
எந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களை நாம் அன்புடனும், ஒழுக்கத்துடனும் வளர்த்து விட்டால் நாம் மரணித்த பிறகு நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மனிதனின் அந்தஸ்தை உயர்த்துவான். "இறைவா! இது எனக்கு எப்படி கிடைத்தது?" என்று அவன் கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்காக உன் பிள்ளைகள் பாவமன்னிப்பு கேட்டதால் இந்த உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது' என அல்லாஹ் பதிலளிப்பான்.
நூல் : முஸ்னது அஹ்மத்
நமது பிள்ளைகள் இறைவன் நம்மிடம் அமானிதமாக கொடுத்த பொக்கிஷம். அவர்களை இறைவன் விரும்புவது போல் வளர்த்து, ஆளாக்கி விட்டால் இம்மை மறுமை ஆகிய இரு வாழ்வும் நமக்கு சிறப்பாகவே அமைந்து விடும். நாம் எந்த கவலையும் கொள்ள வேண்டாம்.
எனவே பிள்ளைகளிடத்தில் ஆண், பெண் என வேற்றுமை காட்டாமல் , உங்களுக்காக பிரார்த்திக்கும் நல்ல பிள்ளைகளை உருவாக்கிட முயற்சி செய்யுங்கள்.
மேற்கண்ட பத்து விஷயங்களை தம் பெற்றோருக்காக செய்வதில் ஆண், பெண் பிள்ளைகள் என வேற்றுமை இல்லை. இரு தரப்பினரும் தம் பெற்றோருக்காகவும் மூதாதையர்களுக்காகவும் நிரந்தர நல்லறங்களை செய்யலாம் என்பதை குறிப்பிடவே தனி தலைப்பிட்டு சொல்லி இருக்கிறேன்.
*இந்தியாவில் ஸதகத்துல் ஜாரியா நிலங்கள் :*
இந்தியாவை முஸ்லிம்கள் 1200 வருடங்களுக்கு முன்பிருந்தே ஆட்சி செய்யத் தொடங்கி விட்டார்கள். அன்று முதல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். அதைப்போல் முஸ்லிமல்லாத மன்னவர்களும் ஆட்சி செய்தார்கள்.
அந்தந்தக் காலகட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத பொதுமக்கள், தம் மரணத்திற்குப் பிறகு நிரந்தர நன்மை பெற வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில், தமக்குச் சொந்தமான நிலங்கள், ஆட்டு மந்தைகள், பசு மாடுகள் என அவரவர் சார்ந்த ஆலயங்களுக்கு தானமாக வழங்கியிருந்தார்கள்.
பல செல்வந்தர்கள் பல கிராமங்களுக்கு ஜமீன் தாரர்களாக - சொந்தக்காரர்களாக இருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் தமக்குச் சொந்தமான பல வருவாய் கிராமங்களை, தான் வணங்கும் ஆலயங்களுக்கு இனாமாக வழங்கினார்கள்.
அவ்வாறு தமிழ்நாட்டிற்குள் மட்டும் 1952 களுக்கு முன் சுமார் 20000 - இருபது ஆயிரம் கிராமங்கள் இனாம் கிராமங்களாக இருந்துள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1952இல் பி.சி.குமாரசாமி ராஜா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது இனாம் ஒழிப்பு சட்டம் எனும் புதியதொரு சட்டத்தை வகுத்து அதன்மூலம் தமிழகத்தில் இருந்த 20,000 - இருபது ஆயிரம் இனாம் கிராமங்களையும் விடுவித்து தமிழ்நாட்டு அரசுக்கு சொந்தமான வருவாய் கிராமங்களாக மாற்றினார்.
அந்த வகையில் முஸ்லிம்கள் வசம் சில பெயர்களில் பல கிராமங்கள் இருந்தது. அந்த கிராமங்கள் கீழ் காணும் பெயர்களால் அன்று வழக்கு மொழியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாகிர், அல்தாங்க் இனாம், தேஷ்முக் , தேஷ்பாண்டே இனாம். இந்தப் பெயர் சொல்லின் விளக்கத்தை சுருக்கமாகக் காண்போம்.
ஜாகிர் .
இது, முஸ்லிம் படைத்தளபதிகளுக்கு, வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம். ஜாகிர் இனாம்கள் தமிழகத்தில் பரவலாக இருந்தன.
அல்தாங்க் இனாம்.
இதை சிவப்பு முத்திரை இனாம் என்றும் சொல்வார்கள். இது முஸ்லிம் மசூதிகளும், அவற்றில் பணியாற்றும், ஊழியர்களும் அனுபவித்துக் கொள்ள கொடுக்கப்பட்ட இனாம்.
தேஷ்முக் மற்றும் தேஷ்பாண்டே இனாம்
இந்த இனாம் நிலங்களை மும்பையில் பார்க்கலாம். தேஷ்முக் இனாம் வருவாய் துறையினருக்கும், தேஷ்பாண்டே இனாம் காவல் துறையினருக்கு கொடுக்கப்பட்ட இனாம்.
இவ்வாறு நமக்கு முன் வாழ்ந்த மன்னர்களும், அந்தந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த இஸ்லாமிய செல்வந்தர்களும் பள்ளிவாசல், தர்கா மதரஸா மற்றும் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கப்பெற வேண்டும்; அதன் மூலம் தன் மரணத்திற்குப் பிறகும் தனக்கு நன்மைகள் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில் தர்மம் செய்து இருக்கிறார்கள்.
இன்று அந்த தர்மங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வக்ஃபு நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது.
ஆனால், சுதந்திர இந்தியாவில் குறிப்பாக கடந்த முப்பது வருடங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு பள்ளிவாசலுக்கும், எந்த ஒரு மதரஸாவிற்கும், தர்காவிற்கும் யாரும் நிலங்களையோ, வீட்டுமனைகளையோ அன்பளிப்பு செய்ததாக பதிவுகள் இல்லை.
தாராளமாக காசு பணங்களை வழங்குகிறார்களேத் தவிர இவ்வாறான ஸதக்கத்துன் ஜாரியாவாக வழங்கப்படுவது மிகவும் குறைந்து விட்டது.
இது போன்ற வரலாற்றை அறிந்த என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. இதை வாசிக்கிற செல்வந்தர்கள், நீங்கள் கோடி ரூபாயை தானமாக வழங்குவதை விட இடங்களாக கொடுத்துச் செல்லுங்கள். அது நிரந்தரமான நன்மையை பெற்று தரும்.
*இறை மறுப்பாளர்களின் செயல்களுக்கு மறுமை நாளில் கூலி உண்டா?*
இறை மறுப்பாளர்களில் ஒருவர் மற்றொருவரின் பசியை ஆற்றினாலோ, ஒருவருக்கு மருத்துவ உதவி செய்தாலோ, அல்லது நிரந்தர நல்லறங்களில் ஒன்றை செய்தாலோ அவருக்கு இவ்வுலகிலேயே சிறந்த பகரத்தை அல்லாஹ் கொடுத்து விடுவான். அவருக்கு மறுமை நாளில் எந்த நன்மையும், பிரதிபலனும் வழங்கப்படாது. இதுவே இஸ்லாமிய கொள்கையாகும்.
இந்தக் கருத்தை வலியுறுத்தும் விதமான அல்லாஹ்வின் கூற்றையும் அண்ணலாரின் வாழ்வியலையும் காண்போம்.
அல்லாஹ் கூறுகிறான் ; இறை மறுப்பாளர்கள் (இவ்வுலகில்) செய்த நற்காரியங்களின் பக்கம் (மறுமை நாளில்) நாம் கவனம் செலுத்துவோம்; பிறகு அவற்றை காற்றில் பரப்பி விடப்பட்ட புழுதியாக நாம் மாற்றுவோம். 25 : 23
அவர்கள் இணை வைப்பார்களானால் அவர்கள் செய்த நல்லவற்றையெல்லாம் அவர்களின் பதிவேட்டில் இருந்து அவன் அகற்றி விடுவான். 6 : 88
இணை வைப்பவர்கள், தாம் இறை மறுப்பாளர்களாகவே இருப்பதற்கு அவர்களே சாட்சியாளராக இருக்க, அவர்கள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பதற்கு தகுதி கிடையாது; *அவர்கள் செய்த நற்காரியங்கள் அனைத்தும் பயனற்று போய்விட்டன;* அவர்கள் நரகத்தில் நீடித்திருப்போர் ஆவர். 9 : 17
இறை நம்பிக்கை கொள்ள எவர் மறுக்கிறாரோ அவரது நற்செயல்கள் பயனற்று போகும். அவர் மறு உலகில் இழப்புக்குரியவர்களில் ஆகிவிடுவார். 5: 5
وعن أَنسٍ رضى الله عنه، عن رَسُول اللَّه ﷺ قَالَ: .....أَمَّا الْكَافِرُ فَيُطْعَمُ بِحَسَنَاتِ مَا عَمِلَ للَّهِ تَعَالَى في الدُّنْيَا، حَتَّى إِذَا أَفْضَى إِلى الآخِرَة لَمْ يَكُنْ لَهُ حَسَنَةٌ يُجْزَى بِهَا . رواه مسلم.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு இறை மறுப்பாளர் உணவை (தர்மம்) அளிப்பதன் மூலம் நன்மையை பெற்று இருந்தால் அதற்கான நன்மையை அல்லாஹ் இவ்வுலகிலேயே அவருக்கு வழங்கி விடுகிறான்.
அவை எந்த அளவு சிறந்ததாக இருந்தாலும், மறுமை நாளில் கூலியாக வழங்கப்படும் எந்த நன்மையும் அவருக்கு கொடுக்கப்படாது.
நூல் : முஸ்லிம்
ஆக இறுதியில்.....
*மறுமை நாளில் இப்படியும் சிலர் :*
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “திவாலாகிப் போனவர் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
மக்கள், “யாரிடம் வெள்ளிக்காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்” என்று பதிலளித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும்.
அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர் மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 5037
நமது கடந்த காலத்தை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. நினைத்துப் பார்க்கத் தோன்றினாலும் நினைவில் வருவதில்லை.
எனவே நமது கடந்த காலம் எப்படி கழிந்தது என்று நமக்குத் தெரியாது. எஞ்சி இருக்கிற எதிர்காலத்தை சரியாக அமைத்துக் கொள்ள நினைப்பவர்கள் ஸதகத்துல் ஜாரியாவான மேற்கண்ட ஒரு செயலை செய்து, மரணத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் திவாலாவதில் இருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளலாம்.
மேலும் இந்த மதரஸா மிகச் சிறப்பாக நீண்ட காலம் நடைபெற்று வருகிறது. இந்த மதரஸாவின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக உங்களின் செல்வங்களை கொட்டிக் கொடுத்தால் மறுமையில் வாழ்வாங்கு வாழலாம்.
மவ்லவி, B.M.கலீலுர் ரஹ்மான் மன்பயீ M.A., M.Phil
Comments
Post a Comment