சூஃபிகளின் நோன்பு


கட்டுரை எண் :- 29


சூஃபிகளின் நோன்பு
======================




மவ்லவீ, B.M. கலீலுர் ரஹ்மான் மன்பயீ M.A., M. Phil  

சூஃபியாக்கள் நோன்பை ஆன்மீகம் நிரம்பப் பெற்றுள்ள செயலாகவும், படைப்பினங்களுக்கு அத்தியாவசியமான வாழ்வியலாகவும் கருதுகிறார்கள். இந்த நோன்பை மூன்றாக வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

1. பொதுவான நோன்பு : இச்சைகளை விட்டும் விலகி, உடலுறவு கொள்ளாமல், உண்ணாமல் இருப்பது. இது அனைவரும் நோற்கும் நோன்பின் அமைப்பு.

2. தனித்துவமான  நோன்பு: அருவருப்பானவற்றை கேட்பது, பார்ப்பது, பேசுவது, தவறான இடங்களுக்குச் செல்வது, தவறானவற்றை செய்ய கைகளை பயன்படுத்துவது  போன்ற அனைத்துப் பாவச் செயல்களில் ஈடுபடுவதை விட்டும் விலகி இருப்பது. அத்துடன் முதலில் சொல்லப்பட்டதையும் ஏற்று நடப்பது.

இது அனைவரும் நோற்கும் நோன்பிலிருந்து சற்று வித்தியாசப்பட்டு இருக்கிறது.

3. மிகக் குறிப்பிடும்படியான நோன்பு: இதயமும் நோன்பு நோற்க வேண்டும். உலக காரியங்களை யோசிப்பதை விட்டும் விலகி, அது சார்ந்த சிந்தனைகளில் தொடர்ந்து மூழ்கி இருப்பதை விட்டும் விலகி இருப்பது. 

இதுதான் சூஃபியாக்களின் நோன்பு. இதுதான் இறைவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் படியான நோன்பின் அமைப்பு.

இந்த மிகக் குறிப்பிடும்படியான நோன்பை சூபியாக்கள் ஆறு வகைப்படுத்துகிறார்கள்.

நோன்பின் நோக்கங்கள் ஆறு : 

1. பார்வையை கட்டுப்படுத்துவது: இழிவை ஏற்படுத்துகின்றவற்றை பார்ப்பதையும், ஆசைகளை தூண்டுகின்ற வற்றை பார்ப்பதையும் விட்டு விலகி இருத்தல். அதாவது இறை நினைவில் இருந்து நம்மை திசை திருப்புகின்ற அனைத்தையும் பார்ப்பதை விட்டும் விலகி இருத்தலே நோன்பு ஆகும்.

2. வீண் பேச்சுகளிலிருந்து நாவைப் பாதுகாப்பது : பொய், புறம், கோள், இட்டுக்கட்டுதல், ஆபாசம், வீண் விவாதம், அரட்டை போன்ற அவசியமற்ற பேச்சுகளை விட்டும் விலகி,  அல்லாஹ்வை திக்ரு செய்வதிலும், திருக்குர்ஆனை ஓதுவதிலும் முழுமையாக நேரத்தை செலவிட வேண்டும். 

மேற்கண்ட பேச்சுகளில் ஈடுபட்டால் நோன்பு முறிந்து விடும் என்பது சூஃபியாக்களின் நம்பிக்கை. அதற்கு அவர்கள் ஆதாரப்பூர்வமான நபிமொழியையும் மேற்கோள் காட்டுகிறார்கள்.

3. வீணானவற்றை கேட்க வேண்டாம் : எவையெல்லாம் பேசக்கூடாதோ அவை அனைத்தையும் கேட்பதும் கூடாது.

سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ

அவர்கள் அதிகமாக பொய்யையே கேட்பார்கள்; தடை செய்யப்பட்டதையே  சாப்பிடுவார்கள். 5 : 42

لَوْلَا يَنْهَاهُمُ الرَّبَّانِيُّونَ وَالْأَحْبَارُ عَن قَوْلِهِمُ الْإِثْمَ وَأَكْلِهِمُ السُّحْتَ.

பாவமானவற்றை அவர்கள் பேசுவதிலிருந்தும், தடை செய்யப்பட்டவற்றை அவர்கள் உண்பதிலிருந்தும் அவர்களில் உள்ள (கிறிஸ்துவ) பாதிரிமார்களும், (யூத ) ரப்பிகளும் அவர்களை தடுத்திருக்க வேண்டாமா? 5: 63

மேற்கண்ட இரு வசனங்களில், தவறான பேச்சுகளில் இருந்து விலகி இருக்கும் படி இறைவன் உத்தரவிடுகிறான். எனவே நோன்பு காலங்களில் அதை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

4. பிற உறுப்புகள் பாவங்களில் ஈடுபடாமல் பாதுகாப்பது : கை, கால்கள் மற்றும் அனைத்து உறுப்புகளும் பாவமானவற்றை விட்டும், சந்தேகத்திற்குரியவற்றை விட்டும், சிறு குற்றங்களை விட்டும் முழுமையாக  பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

நோன்பு துறக்கும் நேரத்தில் சந்தேகத்திற்கு உரியவற்றை சாப்பிடுவதை விட்டும் விலகி இருக்க வேண்டும். 

ஏனென்றால் ஹலாலானதை சாப்பிட்டு நோன்பு நோற்று விட்டு நோன்பு துறக்கும் போது ஹராமானதை சாப்பிடுவதால் என்ன பயன்?

5. நோன்பு துறக்கும் போது கவனமாக இருப்பது : இஃப்தார் -  நோன்பு துறக்கும் போது வயிறு நிரம்ப சாப்பிடுவது நல்லதல்ல! 

ஹலாலான உணவை நோன்பு துறக்கும் நேரத்தில் சாப்பிடுவது ஆகுமானதாக இருந்தாலும், வயிறு நிரம்ப உண்பது அல்லாஹ்விடத்தில் கோபத்தை ஏற்படுத்தும்.

நோன்பின் நோக்கம்; மன எழுச்சிகளை அடக்குவதும், அல்லாஹ்வின் விரோதியான ஷைத்தானை கட்டுப்படுத்துவதும் தான்.

பகலில் நோன்பின் காரணமாக சாப்பிட முடியாமல் போன  வண்ணமயமான பல உணவுகளையும், பானங்களையும் நோன்பு துறக்கும் போது உண்பதால் நோன்பின் நோக்கம் முழுமை பெறாது.

நோன்பின் போது  காலியான வயிற்றோடு இருப்பவர், நோன்பு துறக்கும்போது வயிறு நிரம்ப சாப்பிட்டால், சாப்பிடுகிற அவரால் பிறருக்கு ஏற்படும் அபாயத்தை நினைத்தும், அவருக்கே ஏற்படும் அபாயங்களை நினைத்தும் சூஃபியாக்கள் அஞ்சுகிறார்கள்.

விரும்பியதை சாப்பிடும் போது அவரின் ஆன்மா இரண்டு மடங்கு அதிகமான ஆசைகளுக்கும் மன எழுச்சிகளுக்கும் உள்ளாகிறது. அதாவது நோன்பு காலத்திற்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது அவருடைய ஆன்மா அதிகமான ஆசைகளையும், மன இச்சைகளையும் பெறுகிறது . எனவே நோன்பு துறக்கும் போது சாப்பிடுவதில் கவனம் வேண்டும் என சூஃபியாக்கள் வலியுறுத்துகிறார்கள்.

நோன்பு நோற்காத காலை நேரத்தில்  சாப்பிடுவதை விட நோன்பு நோற்கும் ஸஹரில் அதிகமாக  சாப்பிடுவதில் சூஃபியாக்களுக்கு உடன்பாடு இல்லை.

நோன்பு காலம் வருவதற்கு முன்பு நோன்பு நோற்பதின் மீது ஆசையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும், இறைவனோடு நெருக்கத்தை ஏற்படுத்தி விடும் என்கிற நம்பிக்கையும் இருக்கும். ஆனால் நோன்பு காலத்தில் அதிகமாக உண்பதால் இவற்றில்  எதையும் பெற்றுக் கொள்ள மாட்டோம். 

அதனால் நோன்பு குறித்த நல்லெண்ணம், மதிப்பு ஆகியன குறைந்து, நோன்பை துச்சமாக மதிக்கும் நிலை உண்டாகிவிடும் எனவும் சூஃபியாக்கள் அஞ்சுகிறார்கள்.

நோன்பு துறக்கும் போது அளவு கடந்து சாப்பிடுகிறவருக்கு உலகியல், உடலியல் மற்றும் மறுமையின் பயன் மிகக் குறைவாகவே கிடைக்கும்.

6. நோன்பு துறந்த பிறகு உள்ள நிலை :  நோன்பாளி நோன்பு துறந்த பிறகு  அச்சத்தோடும் எதிர்பார்ப்போடும் காணப்படுவார். 

அவருடைய நோன்பு ஏற்கப்பட்டு அல்லாஹ்விற்கு நெருக்கமாக இருப்பாரா? அல்லது  அவரது நோன்பு இறைவனால் நிராகரிக்கப்பட்டு இறைவனை விட்டும் தூரமாக்கப்படுவாரா  என்கிற தடுமாற்றத்தில் இருப்பார்.

சூஃபியாக்களை பொருத்தமட்டில் ஒருவர் அருவருப்பான செயல்களை செய்தாலே நோன்பு முறிந்து விடும் என்பார்கள்.

மேற்குறப்பட்ட அருவருப்பான காரியங்களை செய்கிறவர்கள், பார்ப்பவர்கள், கேட்பவர்கள் நோன்பு நோற்காமல் இருப்பதே நல்லது என்றும் சூஃபியாக்கள் கருதுகிறார்கள்.

உண்ணாமல், உடலுறவு கொள்ளாமல் தம்மை தற்காத்திருந்து, பாவங்கள் செய்ததின் காரணமாக ஒருவரின் நோன்பு முறிவது, குளிப்பு கடமையான நிலையில் உள்ள ஒருவர் உளுவின் உறுப்புகளை முறையாக மூன்று முறை கழுகிய பிறகு அவர் தொழுவதை போன்று உள்ளது. 

இவரின் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாதது போலவே அவரின் நோன்பும் ஏற்றுக் கொள்ளப்படாது.

*இருளை விரட்டும் ஒளி - நோன்பு :*

சூஃபி ஷகீக் அல் பல்கி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
"நாற்பது நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்றால் அது இதயத்தின் இருளை ஒளியாக மாற்றிவிடும்"

இரண்டு பெருநாள், அய்யாமு தஷ்ரீக் உடைய மூன்று நாட்கள் என ஐந்து நாட்கள் தவிர வருடத்தின் அனைத்து நாட்களிலும் நோன்பு நோற்பதுையே பல சூஃபியாக்கள் விரும்பி இருக்கிறார்கள். அதை செயல்படுத்தியும் இருக்கிறார்கள்.

ஒரு சில சூஃபியாக்கள் நபி தாவூத் (அலை) அவர்கள் நோன்பு நோற்றது போல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்.

*நோன்பில் இறைத்தன்மை :*

நோன்பு எதற்காக நோற்கப்படுகிறது ? என்று கேட்டால் “பசியை நாம் நன்றாக உணர்வதற்காக” என்று சிலர் பதில் சொல்கிறார்கள். 

இப்படி பதில் சொன்னவரிடம் நான் சொன்னேன். “இல்லை. நோன்பு என்பது பசியை உணர்வதற்கு அல்ல! பசியை உணராமல் இருப்பதற்கு” என்று சொன்னேன். அவர் புரியவில்லை என்று சொன்னார். 

“உணவு சாப்பிடாத போது பசியும் தாகமும் ஏற்படுவது மனிதனின் இயற்கை. ஆனால் நோன்பு என்பது ஒரு வழிபாடு (இபாதத்). 

அடிமை தன் இயற்கைபடி பசியில்  மூழ்கி இருப்பது வழிபாடு ஆகாது. தன் அடிமைத்தனத்தில் இருக்கும்போதே தன் எஜமானின் கருணையைக் கவனிப்பதுதான் வழிபாடாகும். 

அனைத்து வழிபாடுகளின் நோக்கமும்  இறைவனை நினைவில் நிறுத்த வேண்டும் என்பதுதான்.  நோன்பு என்பதும் அடியான் தன் பசி எனும் இயற்கை பண்பின் பக்கம் கவனம் வைப்பதற்கல்ல! மாறாக அந்த பசியான நிலையிலும் இறைவன் பக்கம் தன் கவனத்தை நிறுத்துவதற்குத்தான் நோன்பு. அந்நிலையிலும் அவனை வழிபடுவது தான் உண்மையான வழிபாடு!

அதாவது இறைவன் சொன்னான் என்பதற்காக பசித்திருப்பதும், உணவு அருகில் இருந்தும் சாப்பிடாமல் இருப்பதும் அவனது உத்தரவிற்கு அடிபணிந்து நடப்பதுமே நோன்பு.

பசியும் தாகமும் மனிதனின் இயற்கை பண்பு. உணவு, தண்ணீர் தேவை எனும் நிலை மனிதனின் பண்பு. 

பசி, தாகம் அற்ற நிலை இறைவனின் பண்பு. உணவு தேவை இல்லை எனும் நிலை இறைவனின் பண்பு.

நோன்பு நோற்றிருக்கும் போது பசி மற்றும் தாகத்தின் பக்கம் நம் கவனம் செல்லக்கூடாது. அது நம்மையே நாம் கவனித்துக் கொண்டிருப்பதாக ஆகும். 

பசி மற்றும் தாகம் ஏற்படும் போதும் நம் நினைவை அல்லாஹ்வின் பக்கம் திருப்பி  நம் கவனத்தை அவனில் நிலை நிறுத்த வேண்டும். மேலும் பசி மற்றும் தாகம் ஏற்படுகிற உணர்வே இல்லாத ஒரு நிலையை அடைவது தான் நோன்பின் உண்மையான நிலை!

நோன்பு நோற்றிருக்கும் ஒருவரிடம் அல்லாஹ் சார்ந்த நினைவுகள் அதிகரிக்கும். அல்லாஹ்விற்கு உணவு தண்ணீர் உடை இருப்பிடம் போன்ற எதன் தேவையும் இல்லை. 

நோன்பு நோற்று இருக்கும் ஓர் அடியானிடம் அல்லாஹ் தன் பண்புகளை அவனில் பிரதிபலிக்கச் செய்கிறான்.

நம்மில் அல்லாஹ்வுடைய பிரதிபலிப்பை கண்டு, அதில் மூழ்கி இருப்பதை விரும்பியே சூஃபிகள் அதிகமாக நோன்பு நோற்றார்கள்.

நோன்பு மனிதனுக்கே உரித்த செயலாக இருந்தாலும் அதில் இறைவனின் சிஃபத்து - பண்புகள் இருப்பதை ஞானவாண்கள் புரிந்து கொண்டு அதில் லயித்திருக்க விரும்புகிறார்கள்.


நோன்பு நோற்பதின் நோக்கம் என்ன? என்று எவரேனும் கேட்டால் அதனை கடமையாக்கிய அல்லாஹ்வே தெளிவாக பதில் சொல்லி இருக்கின்றான்.  அதாவது "நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக ஆவதற்கே" 

எனவே ஒரு முஸ்லிம் நோன்பு நோற்பதின் மூலம் இறையச்சத்தையும் அதன் வழியாக அல்லாஹ்வையும் அடைய முடியும்.

இஸ்லாத்தின் அனைத்து வழிபாடுகளும் வெளிப்படையான வழிபாடுகளாகும். ஆனால் நோன்பு ஓர் ரகசியமான வழிபாடு. இந்த வழிபாட்டை நிறைவேற்றுகின்ற மனிதனையும் இறைவனையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.

ஒரு மனிதன் நோன்பு நோற்கின்றான். திருட்டுத்தனமாக அவன் சாப்பிடுவதுமில்லை. குடிப்பதுமில்லை. கடும் வெப்பத்தினால் தொண்டை வரண்டாலும் அவன் ஒரு துளி நீரும் அருந்துவதுமில்லை. கடும் பசியினால் கண்பார்வைக் குறைந்தாலும் அவன் ஒரு கவளம் உணவையும் உண்பதுமில்லை. 

இறைவன் எல்லா மர்மங்களையும் அறிந்தவன் என்பதில் 
அந்த மனிதன்
எவ்வளவு நம்பிக்கையாக இருக்கின்றான்.  தன் செயல்கள் முழு உலகத்திற்கும் தெரியாமல் இருந்து விட்டாலும்  இறைவனுக்கு தெரியாமல் இருக்காது  என்பதை எவ்வளவு உறுதியாக  நம்புகிறான்!

மிகப்பெரும் சிரமங்களையெல்லாம் அவன் தாங்கிக் கொள்கிறான். ஆனால் இறையச்சத்தால், தான் நோற்கின்ற நோன்பை முறிக்கும் எந்தக் காரியத்தையும் அவன் செய்வதில்லை என்றால், அவன் உள்ளத்தில் எப்படிப்பட்ட உறுதியான இறையச்சம் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

*நோன்பின் கூலியை நானே தருவேன் :*


ஆதமுடைய மகனின் (மனிதனின்) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும், நோன்பைத் தவிர ” என்று அல்லாஹ் கூறுவதை சிந்தித்துப் பாருங்கள். 

நோன்பாளி தூங்கும்போது நோன்பு முறிவதில்லை. அதாவது நோன்பு என்பது அடியான் நிகழ்த்தும் ஒரு செயலாக இருக்குமேயானால் அவன் தூங்கினால் அது முறிந்துவிடும். அதாவது தூங்குகிறவர் நோன்பு நோற்க கூடாது என்று ஆகிவிடும்.

தொழுகை அடியான் நிகழ்த்தும் செயல். எனவே தூங்கிக் கொண்டே தொழுதால் தொழுகை கூடாது.

எனவே நோன்பு அடியானின் செயலைச் சார்ந்ததாக இல்லை. அவன் தூங்கினாலும்  நோன்பு  தொடர்கிறது. 

நோன்பு, சோர்வும் தூக்கமும் அறவே இல்லாத இறைவனுக்கு உரியது. அதாவது தூங்கும் அடியானில் நோன்பு என்பது தூங்காத இறைவனால் பேணப்படுகிறது. 

அடியான் விழித்திருக்கும்போதும் அவனில் நோன்பைப் பேணுவது இறைவன்தான்.

இங்கே இன்னொரு நபிமொழியும் கவனத்திற்கு உரியது.
”ஒருவர் மறதியாக ஒருவர் சாப்பிட்டாலோ குடித்தாலோ அவர் தன் நோன்பை முழுமைப் படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்” (புகாரி)

நோன்பு எனக்கானது என கூறிய அல்லாஹ் அடியானுக்கு உணவை சாப்பிட வைத்த போதும் நோன்பு முறியாமல் பாதுகாக்கிறான். ஏனெனில் நோன்பு அவனுக்குரியது; அடியானுக்கு உரியதல்ல!

உணவின் தேவையே இல்லாத அல்லாஹ் அடியானை உண்ணவும் பருகவும் வைத்து, அவனில் நோன்பையும் பாதுகாக்கிறான்! எவ்வளவு அற்புதமான நிலை!

*நோன்பின் நன்மைகள் :*

மனதை கட்டுப்படுத்தவும், விரைவில் இறைவனை அடையவும் நோன்பைத் தவிர குறுக்கு வழி வேறு எதுவும் இல்லை என ஹாக்கீம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

நோன்புக்காக சாப்பிடாமல் இருப்பதாலும், நோன்பு அல்லாத சந்தர்ப்பங்களில் குறைவாக சாப்பிடுவதாலும் உடல் இச்சைகளும் மன ஆசைகளும் குறைகிறது. அதனால் பாவங்கள் செய்வதிலிருந்தும் விலகி நிற்கின்றோம். எது பாவமான செயல் என்பதும் தெரிய வருகிறது.

உடல் வலிமை என்பது சாப்பிடும் உணவு மற்றும் பானத்தைப் பொறுத்து உடல் வலிமை பெறும்.

ஆன்மீக வலிமை என்பது பசி மற்றும் தாகத்தை தாங்கிக் கொள்கிற அளவிற்கு வலிமை அதிகரிக்கும்.

பசி உடலைத் துன்புறுத்துகிறது. இதயத்தைத் தூய்மைப்படுத்துகிறது. ஆன்மாவை அன்பின் மூலம் உயிர்ப்பிக்கின்றது. இறைவனை சந்திப்பதற்காக மனதை தயார் செய்கிறது  என்று கஷ்ஃபுல் மஹ்ஜூப் என் நூலில் கூறப்பட்டுள்ளது.

நோன்பு, சூஃபிகளால் மிகவும் போற்றப்படும் ஒரு நல்லமல். இறைவன் புறத்திலிருந்து தமக்கு இல்ஹாம் ஞானோதயம் ஏற்பட வேண்டும் என சூஃபிகள் விரும்பும்போதெல்லாம் தொடர்ந்து நாற்பது 
நாட்கள் நோன்பு நோற்பார்கள். 

அதற்குப் பிறகு அவர்களுக்கு இல்ஹாம் ஞான உதயங்கள் ஏற்படும். நபிமார்களுக்கு வஹீ இறைவனால் அருளப்பட்டது போல் அவ்லியா -  இறைநேசர்களுக்கு இல்ஹாம் இறைவனால் வழங்கப்படுகிறது.

நோன்பு நோற்றவர்களின் முகம் பெருநாள் அன்று காலையில் பிரகாசமாகவும், உடலும் முகமும் வத்தி போயும் காணப்பட வேண்டும். அப்படி காணப்படுபவர்கள் தான் உண்மையான நோன்பாளிகள் என ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இன்று அப்படி யாரேனும்  இருக்கிறார்களா?

ஸஹருக்கு ஆக உயர்தரமான உணவு; நோன்பு துறக்கும் போது அத்தனை வெரைட்டிகளையும் வைத்துக் கொண்டு நோன்பு துறப்பது; தராவீஹ் தொடங்குவதற்கு முன் ஒரு சிற்றுண்டி; தராவீஹ் தொழுத பிறகு மற்றொரு முறை சாப்பிடுவது என வழமையாக சாப்பிடுவதை விட நோன்பு காலங்களில் அதிகமாக சாப்பிட்டால் பெருநாள் அன்று அவர் முகம் வாடிப் போயா இருக்கும்?

மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள்  பத்து நாட்கள், இருபது நாட்கள் என தொடர்ந்து நோன்பு நோற்பார்கள். அதாவது ஸஹரில் சாப்பிடுவது சுன்னத் என்பதற்காக சிறிதளவு தண்ணீர், ஒரு பேரித்தம் பழம் ஆகியன மட்டுமே உண்டு நோன்பு நோற்பார்கள். 

அதேபோல் நோன்பு துறக்கும் போதும் சிறிது தண்ணீர் ஒரு பேரீத்தம் பழம் மட்டுமே சாப்பிடுவார்கள். இவ்வளவு குறைந்த உணவைச் சாப்பிட்டு பலமுறை மாதக்கணக்கில் நோன்பு நோற்று இருக்கிறார்கள். 

"இறைவன் பசி, தாகம் இல்லாதவன். அவனை அடைய அவன் வழியில் பசி, தாகம் ஆகியவற்றை துறக்க வேண்டும் அல்லவா!" என்று அடிக்கடி கூறுவார்கள்.

*பசி, மருந்துகளின் அரசன்*

யார் தனக்குப் பசி ஏற்படுவதை விரும்புவதில்லையோ அவன் ஆயிரக்கணக்கான நோய்களின் பிறப்பிடமாக இருக்கின்றான்.

நோய்களினால் ஏற்படும் வலிகளை விட பசியினால் ஏற்படும் வலிகள் குறைவுதான்.

பசித்திருந்தால் உடல் சுத்தமாகவும், உடல் எடை குறைவாகவும் காணப்படுவதோடு விரைந்து செயல்படும் உற்சாகம் இருக்கும்.

பசி மருந்துகளின் அரசன். எனவே பசிக்கு மனதிலே இடம் கொடுக்க வேண்டும். பசித்தவர்களை இழிவாகக் கருதாதே!

சுவை இல்லாத பொருட்கள் பசியின் காரணமாக சுவை மிக்கதாகக் கருதப்படுகிறது. சுவையான பண்டங்கள் அனைத்தும் பசி இல்லாததினால் ஒதுக்கி தள்ளப்படுகிறது.

பசித்தவனுக்கு தவிடும் அல்வா தான்!

ஒரு ஏழை பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுகிறான். அவன் எப்போதெல்லாம் சாப்பிடுகிறானோ அவன் சாப்பிடுவது அனைத்தும் உயர்தரமான உணவு வகைகள்தான்.

பசி பெரும்பாலானவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது.

பசியை கட்டுப்படுத்தியவர்கள் புலியைப் போல்  பலசாலிகளாக ஆகிறார்கள்.

உண்பதில் இன்பம் கண்டவர்கள் ஆன்மீகத்தில் தேர்ச்சி பெற முடியாது.

மரணத்தை வழங்கும் பசி, உயிருடன் வாழ்வதைவிட சிறந்தது. அதாவது மரணித்திடாமல் இருக்க சாப்பிடுவதை விட சாவதே மேல்!

"முறையாக நோன்பு நோற்று, நோன்பு காலங்களில் முறையாக அனைத்து நேர தொழுகைகளையும் தொழுதால் அவர் மிஅராஜ் -  இறைவனை சந்திப்பார்" என பீரப்பா அவர்கள் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்கள்.

*நோன்பாளிக்கு முதலிடம் :*

ஸஹ்ல் பின் அப்துல்லாஹ் அல்இஸ்கந்தரீ (ரஹ்,  ஹிஜ்ரி 815 ) அவர்களிடம் நோன்பு குறித்து ஒரு சீடர் வினவினார். அதற்கு அவர்கள் கூறிய பதில் நம்மை சிந்திக்க வைக்கிறது.

“பசி உடலுக்குப் பலவீனமளிக்கும் உணவு உடலுக்குப் பலத்தைத் தரும். ஆனால், பட்டினியும் ஒட்டிய வயிறும்தான் என் ஞானப் பசியைத் தணித்தது. 

உணவும் நிரம்பிய வயிறும் எனக்குப் பசியை அளித்தது. என் உடலைப் பலவீனப்படுத்தியது. 

இந்த ஒட்டிய வயிற்றால் என் புறப்பார்வை மறைந்து அகப்பார்வை விரிந்தது. 

இதனால், என் விரிவான ஞானம் முழுவதும் பக்தியில் செலுத்தியதால் என் அகங்காரம் தொலைந்துப் போனது"

உலகில் எந்த தேவையும் இல்லாமல் வாழ்ந்த இவர் அவ்வப்பொழுது திருக்குர்ஆன் தஃப்ஸீர் விரிவுரை நடத்துவார்.

அந்த விரிவுரையை கேட்பதற்கு பள்ளிவாசலில் மக்கள் கூட்டம் அலைமோதும். கூட்டத்தில் அந்த நாட்டு மன்னரும் மந்திரிகளும் அடங்குவர்.

தஃப்ஸீரை தொடங்குவதற்கு முன்பு அவர்கள் கூறுவார்கள். "நோன்பு நோற்றவர்கள் எனக்கு எதிரில் அமருங்கள். காலையில் சாப்பிடாதவர்கள் அதற்கு அடுத்து அமருங்கள். 

காலை விழித்தவுடன் என்ன சாப்பிடலாம் என்று நினைத்தவர்கள், எப்பொழுதும் நினைப்பவர்கள் கொஞ்சம் பின்னால் அமர்ந்து கொள்ளுங்கள்."

தஃப்ஸீரை கேட்க வந்திருந்தவர்களுக்கு இடையில் இந்த பாகுபாட்டை தவிர வேறு எந்த பந்தா -  அலப்பரையையும்  அவர் செய்ததில்லை. 

உடலுக்குள் உணவும் தண்ணீரும் இல்லாமல், இறைவன் நம்மை தாயின் கருவறையிலிருந்து  வெளியேற்றியது போல் எல்லா காலத்திலும் உடல் இருக்கும் பட்சத்தில் அவன் அல்லாஹ்விற்கு அருகிலேயே இருக்கின்றான். அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் நோன்பை நோற்போம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்