ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முதலில் யாரோடு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது தெரியுமா?
ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முதலில் யாரோடு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது தெரியுமா?
••••••••••••••••••••••••••♥•••••••••••••••••••••••••••••
இஸ்லாம் அறிமுகமாகுவதற்கு முன்பு அரபியர்களிடையே எவருக்கேனும் பெண் குழந்தைகள் பிறந்தால் அவரை யாருக்கு திருமணம் செய்து வைப்பது என சிறு பிராயத்திலேயே பேசி வைத்துக் கொள்வார்கள்.
அதன் அடிப்படையில் இஸ்லாம் மக்களிடையே பரவி வந்த வேளையில் குரைஷி வம்சத்தில் பனூ தைம் கிளையைச் சேர்ந்த அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பிறந்தார்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பிறக்கும் பொழுதே அவர்களின் வீட்டு சூழலும் நாட்டு சூழலும் இஸ்லாமிய மரபில் அமைந்திருந்தது. இஸ்லாமிய சூழலிலேயே வளர்ந்தார்கள்.
இந்நிலையில் தம் நாட்டின் வழக்கப்படி அபூபக்ர் (ரலி) அவர்கள் குரைஷி வம்சத்தில் பனூ நவ்ஃபல் கிளையைச் சேர்ந்த நெருங்கிய நண்பர் முத்இம் பின் அதீ அவர்களின் நான்கு மகன்களில் மூத்த மகன் ஜுபைர் பின் முத்இம் என்பவருக்கு திருமணம் செய்து வைப்பதாக நிச்சயம் செய்து கொண்டார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் அன்னை கதீஜா (ரலி) அவர்கள் இறந்து போனார்கள். சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு கவ்ளா பின்த் ஹகம் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்காக நான் அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷாவை பெண் கேட்கவா?" என்று கேட்டார்கள்.
நீண்ட யோசனைக்கு பிறகு நபிகள் நாயகம் அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள்.
கவ்ளா பின்த் ஹகம் (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் தாயாரான உம்மு ரூமான் என அழைக்கப்படும் ஸைனப் (ரலி) அவர்களிடம் பெண் கேட்டார்கள்.
அன்னை உம்மு ருமான் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விபரத்தை எடுத்துச் சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், "தாம் ஏற்கனவே முத்இம் பின் அதீ அவர்களுக்கு வாக்கு கொடுத்து விட்டதால் அதை மாற்ற இயலாது" என சொல்லிவிட்டார்கள்.
இந்நிலையில் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் முழுமையாக இஸ்லாத்தில் இணைந்து விட்டதால் முத்இம் பின் அதீ அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் வீட்டில் பெண் எடுப்பது குறித்து யோசித்தார்கள்.
தாம் பெண் எடுத்தால் தமது மகனையும் மாற்றி விடுவார்; தமது இல்லத்தில் இருக்கும் பலரையும் மாற்றி விடுவார்; அதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படலாம்; குடும்பம் சிதைந்து விடலாம்; ஊரார் இடையே பகைமை ஏற்படலாம் என்றெல்லாம் எண்ணி பெண் எடுக்க இயலாது என கூறி விட்டார்கள்.
முத்இம் பின் அதீ அவர்கள், "பெண் எடுக்க இயலாது" என தெளிவாக, நேரடியாக சொல்லிவிட்டார். இந்த சூழ்நிலையில்தான் கவ்ளா பின்த் ஹகம் (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று நபிகள் நாயகம் அவர்கள் வழங்கிய 500 திர்ஹம் மஹரைப் பெற்றுக்கொண்டு அபூபக்ர் (ரலி) அவர்கள் திருமணம் செய்து வைத்தார்கள்.
அனேகமாக இந்தத் திருமணம் நபிகள் நாயகம் அவர்கள் தாயிஃப் நகரத்திற்கு செல்வதற்கு முன்பு நடந்திருக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
நூல் :
ஸீரத் இப்னு ஹிஷாம்,
அத்-தபகாதுல் குப்ரா — இப்னு ஸஅ்த்,
தாரீகுத் தபரி ,
அல்-இஸ்தீஆப்.
நபிகள் நாயகம் அவர்கள் தாயிஃப் நகரத்திற்கு சென்று தஃவா பணியை முழு உற்சாகத்தோடு செய்தும் பெரும் பயன் கிடைக்கவில்லையே என்கிற வருத்தத்தோடு மீண்டும் மக்காவிற்குள் நுழைய முயன்ற போது அச்சுறுத்தல் ஏற்பட்டது.
அச்சமயம் முத்இம் பின் அதீ அவர்கள்தாம் பாதுகாப்பு வழங்கி நபிகள் நாயகம் அவர்களை மக்காவிற்குள் பிரவேசிக்க வாய்ப்பு வழங்கினார்கள்.
அதற்குப் பகரமாக நபிகள் நாயகம் அவர்கள் பத்ரு போர் முடிந்த பிறகு அதில் பிடிக்கப்பட்டிருந்த 70க்கும் மேற்பட்ட கைதிகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்த சமயத்தில் "முத்இம் பின் அதீ அவர்கள் மட்டும் இன்று உயிருடன் இருந்து, இந்த கைதிகள் குறித்து என்னிடம் பேசினால், அவருக்காக இவர்களை விடுவித்திருப்பேன்” என்று கூறினார்கள்.
ஆனால் முத்இம் பின் அதீ அவர்கள் மக்காவிலேயே உடல்நிலை சரியில்லாமல் காலமாகிவிட்டார்கள். நபிகள் நாயகம் அவர்களுக்கும் முத்இம் பின் அதீ அவர்களுக்கும் இடையே மிகப் பெரும் நல்லுரவு நீடித்திருந்தது.
நபிகள் நாயகம் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்து கொண்டதால் முத்இம் பின் அதீ அவர்களுக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேநேரம் ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ஃபதஹ் மக்காவிற்கு பிறகுதான் இஸ்லாத்தில் இணைந்தார்.
யாருக்கு யாரோட திருமணம் நடக்க வேண்டும் என இறைவன் தீர்மானித்திருக்கிறானோ அதில் யாரும் எந்த மாற்றத்தையும் செய்துவிட முடியாது.
Comments
Post a Comment