அன்றும் இன்றும் ஹஜ் கஷ்டமான பயணமே!
அன்றும் இன்றும்
ஹஜ் கஷ்டமான பயணமே!
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
இந்த உலகம் நாற்பது ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் அகலம் கொண்டது. இவ்வளவு பெரிய பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்திற்கு ஒன்று சேர்ந்து ஹஜ் எனும் இறைவழிபாடு செய்ய வேண்டும் எனும் சட்டத்தை இறைவன் வகுத்திருக்கிறான்.
ஹஜ் எனும் அமலை செய்வதற்கு இன்று பயணங்கள் எளிதாக இருந்தாலும் கடந்த நூறு வருடங்களுக்கு முன்புவரை, உலகம் முழுவதும் வாழ்ந்த வலிமையான, வசதியான மனிதர்களுக்கும் கூட கஷ்டமான ஒரு அமல்தான்!
அதே நேரம் இன்று நாம் சொகுசாகவே வாழ்ந்து பழகி விட்டதால், ஹஜ் எனும் அமலை கூட்டாக செய்யும் பொழுது அது மிகவும் கஷ்டமாகவே தெரியும்.
ஒவ்வொருவரும் பைக் வைத்திருப்பது போன்று ஒவ்வொருவரும் தனி விமானம் வைத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கோ உம்ராவிற்க்கோ சென்றாலும் கூட அன்றும் இந்த அமல் சிரமமாகத்தான் இருக்கும்.
ஏனென்றால் நபிகள் நாயகம் அவர்கள் இந்த அமலை செய்வதற்கு நியத்தை இப்படி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
اللَّهُمَّ إِنِّي أُرِيدُ الْحَجَّ فَيَسِّرْهُ لِي وَتَقَبَّلْهُ مِنِّي
இறைவா! நான் ஹஜ் செய்ய விரும்புகிறேன்; எனக்கு (இந்த அமலை) லேசாக்கி தருவாயாக! என்னிடம் இருந்து ஏற்றுக் கொள்வாயாக!
இந்த துஆவில் நபிகள் நாயகம் அவர்கள் முதன்முதலாக, "எனக்கு லேசாக்கி கொடு" என்று கேட்டிருக்கும் பாங்கே, இந்த இறைவழிபாடு கஷ்டமான வழிபாடு என்பதை குறிக்கின்றது.
எனவே ஹஜ்ஜையோ உம்ராவையோ செய்வோர் கண்டிப்பாக சிரமப்பட்டு தான் செய்தாக வேண்டும்; அதை மனதில் வைத்துக் கொண்டு இந்த அமலை செய்ய தயாராகுங்கள்.
நாம் தனியார் டிராவல்ஸில் அதிகமான பணத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறோம் அவர்கள் அனைத்து வகை சொகுசுகளையும் வாரி வழங்குவார்கள் என்று எண்ணி விடாதீர்கள்.
நீங்கள் வழங்கிய பணத்தையும் தாண்டி சிரமங்கள் ஏதேனும் ஒரு வகையில் வந்து சேரும்; அதை சமாளிக்கவும் சகித்துக் கொள்ளவும் மனப்பக்குவம் வேண்டும்; அந்த மனப் பக்குவத்தை முன்பே வளர்த்துக் கொள்ளுங்கள்; அது உங்களுக்கு பயன் மிக்கதாக இருக்கும்.
ஒரு இந்திய
இளவரசியின் ஹஜ் பயணம்
÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் ஓர் இளவரசி ஹஜ் செய்தார்; அவர் எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் ஹஜ் செய்தார் என்பதை கவனியுங்கள்; இன்று நீங்கள் எப்படி ஹஜ் / உம்ரா செய்து விட்டு வந்திருக்கிறீர்கள் என்பதையும் கவனியுங்கள்.
முகலாயப் பேரரசை சேர்ந்த குல்பதான் பேகம் ரஹ் அவர்கள் மன்னர் பாபர் அவர்களுக்கும் அவரது மனைவி தில்சாத் பேகம் அவர்களுக்கும் மகளாக 1523 ஆம் ஆண்டு பிறந்தார்.
ஃபதேபூர் சிக்ரியில் அண்ணன் அக்பர் அவர்களுடன் இருந்து வந்தார். பின்னர் அக்பரின் மகன் ஹுமாயூன் அவர்கள் அரசு பதவிக்கு வந்த பிறகு அரசவை ஆலோசகர்களில் ஒருவராகவும் ஹுமாயூன் மற்றும் அக்பரின் வாழ்க்கை வரலாற்றை அவ்வப்பொழுது பதிவு செய்து கொண்டும் இருந்தார். ஹுமாயூன் நாமா எனும் நூலை முதன் முதலில் எழுதிய இஸ்லாமிய பெண் எழுத்தாளர் ஆவார்.
திருமணம் செய்து கொள்ளாமல் இறைநேசரை போல் இஸ்லாம் மார்க்கத்தின் மீது மிகவும் பற்று உடையவராக வாழ்ந்தார்.
இந்நிலையில் கி.பி. 1576 ஆறாம் ஆண்டு 53 வது வயதில் ( நபிகள் நாயகம் அவர்கள் ஹிஜ்ரத் செய்த வயதில்) ஹஜ் செய்வது என முடிவெடுத்து தம் அண்ணன் மகன்
ஹுமாயூனிடம் கூறினார்.
மிகப்பெரும் தவ வாழ்வை வாழ்ந்து வரும் அத்தையின் பயணத்தைத் தடுக்காமல் அவர் பயணம் மேற்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.
அந்தக் காலகட்டத்தில் ஹஜ் செய்வது என்பது எளிதான காரியம் அல்ல! காடுகள், மலைகள், பள்ளத்தாக்குகள், கடும்பனி, பாலை நிலம் என அனைத்து இயற்கை நிலைகளையும் தாங்கிக் கொண்டும் சமாளித்துக் கொண்டும் பயணிக்க வேண்டும்.
தரை வழியாக சென்றால் திருடர்களின் பயம்; கடல் வழியாகச் சென்றாலும் போர்த்துக்கீசிய கடல் கொள்ளையர்களின் பயம்.
குல்பதான் பேகம் ரஹ் அவர்களுடன் மன்னர் ஹுமாயூன்
அவர்களின் தாயார் ஹமீதா பேகம் அவர்களும் மற்றும் 11 பெண்களும் பயணத்தின் உதவிக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்களும் என புறப்பட தயாரானார்கள்.
புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள 'சலீமி, இலாஹி' என்ற இரண்டு கப்பல்களை ஹுமாயூன் தயார் செய்திருந்தார்.
பயண செலவிற்கும் ஆங்காங்கே காணப்படும் ஏழை எளியவர்களுக்கு வழங்குவதற்கும் என கிலோ கணக்கில் வெள்ளிகளும் தங்கங்களும் மற்றும் நாணயங்களும் எடுத்து வைத்துக் கொண்டார்கள்.
மேலும் 12,000 க்கும் மேற்பட்ட ஆடைகளை வாங்கி வைத்துக் கொண்டார்கள்; செல்லும் வழிகளில் காணும் ஏழை எளியவர்களுக்கு வழங்குவதற்காகவே இந்த ஆடைகள் கப்பலில் ஏற்றப்பட்டது.
இவர்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்ட நாளில் ஃபதேபூர் சிக்ரியின் தெருக்களில் மக்கள் வரிசையாக நின்று பூக்களைத் தூவி வரவேற்பு கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள்.
வழி அனுப்பி வைத்தவர்களும் சில செல்வந்தர்களும், "மக்காவிற்கு சென்று ஏழை எளியவர்களுக்கு வழங்குங்கள்" என தாராளமாக பண உதவிகளை செய்திருந்தார்கள்; அது அன்றைய ஆறு ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.
குல்பத்தான் பேகம் அவர்களின் தலைமையில் புறப்பட்ட ஹஜ் குழுவினர் குஜராத் சூரத் துறைமுகத்தில் ஒரு வருட காலம், கடல் கொள்ளையர்களுக்கு பயந்து தங்கியிருந்தார்கள்.
பின்னர் சரியான தருணத்தில் கப்பலில் புறப்பட்டவர்கள் நான்கு வாரங்களில் ஜித்தா துறைமுகத்தை அடைந்தார்கள்.
பின்னர் அங்கிருந்து தம் உடைமைகளை எடுத்துக் கொண்டு பாலைவன கப்பலான ஒட்டகங்களில் ஏறி மக்கா சென்றடைந்தார்கள்.
அங்கே நான்கு வருடங்கள் தங்கி இருந்து நான்கு ஹஜ்ஜுகளை செய்தார்கள்.
மன்னர் ஹுமாயூன்
அவர்களின் தாயார் ஹமிதா பேகம் அவர்கள் மட்டும் ஒரு ஹஜ் செய்துவிட்டு திரும்பி வந்து விட்டார்கள்.
இங்கு தங்கியிருந்த காலங்களில் உடன் வந்திருந்த பாதுகாப்பு படை வீரர்களும் பணியாளர்களில் பலரும் இறந்து போனார்கள்.
ஹஜ்ஜா குல்பத்தான் பேகம் அவர்கள் அங்கு தங்கியிருந்த காலங்களில் ஏழை எளியவர்களுக்கு மிக தாராளமாக வாரி வழங்கினார்கள்; அதனால் மக்காவிலும் மதீனாவிலும் அவர்கள் குறித்து பேசாத ஆட்களே இல்லை எனும் நிலை உறுவானது.
முகலாயப் பேரரசி குல்பத்தான் பேகம் ரஹ் அவர்களின் செயல் உதுமானிய பேரரசர் முராத் அவர்களை கோபப்படுத்தியது; அதனால் முராது அவர்கள் குல்பத்தான் பேகம் அவர்களுக்கு, "இந்த நாட்டை விட்டு சென்று விடுங்கள்" என ஐந்து முறை கடிதம் எழுதினார்; அந்தக் கடிதங்கள் இன்றும் துருக்கி தேசிய ஆவணக் காப்பகத்தில் பாதுகாப்பாக இருக்கின்றது.
இங்கு இருந்த போது தாயிஃப், ஈரான், ஈராக், பைத்துல் முகத்தஸ் போன்ற பல இடங்களுக்கு சென்று ஸியாரத் மேற்கொண்டார்.
இந்நிலையில் கி.பி. மார்ச் மாதம் 1580 ஆம் வருடம் ஜித்தா துறைமுகத்திலிருந்து 'தேஸ்ராவ்' எனும் கப்பல் மூலமாக புறப்பட்டு வரும் வழியில் ஏமன் நாட்டின் ஏடன் பகுதியில் கப்பல் பழுதாகி நின்று விட்டது. ஏழு மாதங்களுக்குப் பிறகு அவற்றை சரி செய்து கொண்டு சூரத் நகரத்தை வந்தடைந்தார்கள்.
அதாவது இந்தியாவிலிருந்து புறப்பட்டதிலிருந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவை வந்தடைந்தார். ஃபதேபூர் சிக்கிரியில் அவரை வழி அனுப்பியதற்கு வந்தவர்களை விட வரவேற்பதற்கு மிகப்பெரும் கூட்டம் வந்திருந்தது; மிகப்பெரும் வரவேற்பை வழங்கினார்கள்.
கி.பி. 1603 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி காலமானார். தந்தை பாபரின் கல்லறைக்கு பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
நூல் : Vagabond Princess: The Great Adventures of Gulbadan
ஆசிரியர் : ரூபி லால்
இந்த வரலாற்றில் உள்ள சிரமங்களை மட்டும் பாருங்கள்.
சொந்தமாக இரண்டு கப்பல்களை தயார் செய்வது, சூரத் நகரில் கடல் கொள்ளையர்களை அஞ்சி ஒரு வருடம் தங்கியிருந்தது, நான்கு வருடங்கள் மக்கா மதீனாவில் தங்கியிருந்தது, உடன் வந்திருந்த பல பணியாளர்கள் இறந்தது, அந்த நாட்டின் அரசர் வெளியேற்ற முனைந்தது, வரும் வழியில் கப்பல் பழுதாகி நின்றது, இந்தியாவிலிருந்து மக்காவிற்கு செல்வதற்கு இரண்டு ஆண்டுகளும், மீண்டும் மக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருவதற்கு ஒரு ஆண்டு பயண காலத்தை எடுத்துக் கொண்டது என இந்த சிரமங்களை எண்ணிப் பாருங்கள்.
அதனால்தான் நபிகள் நாயகம் அவர்கள், "இறைவா! எனக்கு ஹஜ்ஜை லேசாக்கி தருவாயாக" என்று கேட்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மாலி மன்னரின் ஹஜ் பயணம்
÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
மேற்கு ஆப்பிரிக்காவில் மாலி - Mali Empire என்றொரு நாடு உள்ளது. இது, landlocked country கடல் கரை இல்லாத நாடு; Sahara Desert - சஹாரா பாலைவனம் இந்த நாட்டின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது.
இந்த நாட்டில் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள் ஆவர். நீண்ட நெடுங்காலமாகவே இது முஸ்லிம் நாடாகவே இருந்து வருகிறது; முஸ்லிம்களே இந்த நாட்டை ஆட்சி செய்து வருகிறார்கள்.
14 ஆம் நூற்றாண்டில் கி.பி. 1312 – 1337 காலகட்டத்தில் Mansa Musa - மன்சா மூசா எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். இவர் கி.பி. 1280ஆம் ஆண்டுகளில் பிறந்தார்; (West Africa) மேற்கு ஆப்பிரிக்காவில் மிகவும் செழிப்பான நிலப்பகுதியைக் கொண்டது இந்த நாடு. அன்றைய உலகில் அதிகமான தங்க சுரங்கங்களை கொண்ட நாடும் இதுதான்.
அன்றைய உலகில் நம்பர் ஒன் பணக்கார நாடு இதுதான்! அன்று இந்த மன்னரிடம் இருந்த செல்வத்தின் அளவைக் கொண்டு இன்று ஒப்பிடுவோமானால் அதை அளவிட எண்கள் கிடைக்காது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இஸ்லாம் மார்க்கத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பும் பற்றுதலும் உள்ள மன்னர் மன்சா மூசா அவர்கள் கி.பி. 1324 இல் ஹஜ் செய்ய முடிவு செய்து பயணத்திற்கு தயாரானார்.
பயணப் பாதை
÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
மாலி நாட்டிலிருந்து மக்கா நகரம் வரை இடைப்பட்ட தூரம் சுமார் 6000 முதல் 7000 கிலோமீட்டர் வரை இருக்கும்.
ஒட்டகம், குதிரை போன்ற வாகனங்களும் உடன் வரும் மனிதர்களும், குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்ற தண்ணீர் இருக்கும் நீர் நிலைகளை மையமாகக் கொண்டு மாலியில் இருந்து மக்கா வரை பயண பாதைகளை நிலவியல் அறிஞர்கள் அமைத்தார்கள்.
இந்தப் பயணக் காலம் சுமார் ஒரு வருடத்தை எடுத்துக்கொள்ளும் என திட்டமிட்டு கொண்டார்கள்; அதற்கு ஏற்ப மன்சா மூசா மன்னர் அவர்கள் பயணத்தை அமைத்துக் கொண்டார்.
இவர்கள் பயணிக்கும் பாலைவனத்தில் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் கடுமையான குளிரும் காணப்படும். குறிப்பிட்ட இடங்களில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்; இந்த சிரமங்களை ஹஜ் செய்கிறவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.
ஒட்டகம், குதிரை, கழுதை ஆகியவற்றில் மட்டுமே பயணிக்க வேண்டிய நிலை அன்று இருந்தது; இவைகள் இறந்து போகலாம் என்கிற நிலையும் இருந்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே அன்று ஹஜ் பயணம் நம்முடைய முடிவையும், துணிச்சலையும், ஆரோக்கியத்தையும் வசதியையும் கொண்டது மட்டுமல்ல! நம்மை தூக்கி பயணிக்கும் வாகனங்களின் உதவியும் மிகப்பெரியது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வழியில் திருடர்கள், கொள்ளையர்கள் வருவார்கள்; அவர்கள் நமது பொருட்களை திருடி கொள்ளலாம்; அது மட்டுமின்றி நமது வாகனங்களையும் திருடி கொள்ளலாம்; சமயங்களில் ஹஜ் செய்யக்கூடிய பயணியையே கொலை செய்து விடவும் வாய்ப்புகள் உண்டு.
உடனடி நிவாரணம் வழங்கும் மருத்துவ உதவிகள் இல்லாத அந்த காலத்தில் பயணத்தின் போது நோய் நொடிகள் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படலாம்; அல்லது அந்த நோயிலிருந்து மீள முடியாத தொற்றுநோய் / நீண்ட கால நோய்களுக்கு ஆளாகலாம்; அதனால் உயிரிழப்பு ஏற்படலாம்.
இந்தப் பயணத்திற்கு தமது சக்திக்கு மீறிய தொகையை எடுத்துச் செல்ல வேண்டும்; அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் வேண்டும் ; தமது குடும்பத்தினரை விட்டு விட்டு நீண்ட நெடுங்காலம் ஹஜ் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
தமது சொந்த ஊரிலிருந்து ஹஜ்ஜுக்கு புறப்பட்டுச் சென்று, ஹஜ் செய்வது எவ்வளவு இன்னல்களை சந்திக்க வேண்டுமோ அதே இன்னல்களை ஹஜ்ஜில் இருந்து தமது ஊருக்கு திரும்பி வரும்போதும் அதே சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதையெல்லாம் தாண்டி ஒருவர் ஹஜ் செய்து விட்டு வந்தால் அது மிகப் பெரிய அதிசயம் தான்! ஆனால் அந்த அதிசயங்களை நிகழ்த்தியவர்கள் உலகத்தில் பலர் இருக்கிறார்கள்.
ஹஜ்ஜுக்கு செல்கிற சிலர் வழி தெரியாமல் பாலைவனங்களில் சிக்கி இறந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் வழி தெரியாமல் சுற்றி திரிந்து திரும்பி ஊருக்கு வரவும் இயலாமல் மக்காவிற்கு செல்லவும் இயலாமல் இடையிலேயே மனதை தளர விட்டு அந்தந்த பகுதிகளில் வாழ்ந்து இறந்தவர்களும் இருக்கிறார்கள்.
ஹஜ் பயணத்தை மேற்கொள்கிறவர்கள் இரவு காலங்களிலும் பகல் காலங்களிலும் தங்குவதற்கு முறையான இடம் இல்லாமல் தங்குகிற பொழுது வன விலங்குகளுக்கும் விஷ ஜந்துகளுக்கும் ஆளாகி இறந்தவர்களும் இருக்கிறார்கள்.
முற்காலங்களில் ஹஜ் பயணம் செய்தவர்கள் இதுவே தமது இறுதிப் பயணம் என்கிற நம்பிக்கையில் இந்த கடமையை செய்ய முன்வந்தார்கள். அல்லாஹ்வின் மீதும் ரசூலின் மீதும் கொண்டிருந்த உண்மையான பேரன்பின் வெளிப்பாடாக இந்த பயணத்தை மேற்கொண்டார்கள்.
ஹஜ் செய்துவிட்டு திரும்பி வருவோம் என்கிற நம்பிக்கை இல்லாமல் இந்த புனிதப் பயணங்களை மேற்கொண்டார்கள்.
இஸ்லாமியர் ஆட்சி செய்த நிலப்பகுதிக்குள் ஹஜ் செய்ய கூடியவர்கள் சென்றுவிட்டால் அவர்களுக்கு அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் Caravan routes - ஹஜ் பயணிகளுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்சா மூசாவின் ஹஜ் பயணக் குழு:
÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
மன்னர் மன்சா மூசா அவர்கள் உலக செல்வந்தர்களில் முதன்மையானவர் என்பதால் தாம் ஹஜ் செய்ய செல்லும் பொழுது 60000 / அறுபது ஆயிரம் நபர்களை உடன் அழைத்துச் சென்றார். அதுமட்டுமில்லாமல் பன்னிரண்டாயிரம் அடிமைகளை பாதுகாப்பு படை வீரர்களாக அழைத்துச் சென்றார்.
150 கிலோ தங்கம் ஏற்றப்பட்ட 100 ஒட்டகங்களை இழுத்துச் சென்றார். அதாவது 15000 கிலோ தங்கத்தை வழிச் செலவுக்கு எடுத்துச் சென்றார்; இது அல்லாமல் வெள்ளி கணக்கில்லாமல் எடுத்துச் செல்லப்பட்டு இருந்தது.
இவர்கள் சாப்பிடுவதற்கு தேவையான உணவுப் பொருட்களும் படுத்து உறங்குவதற்கு தேவையான உபகரணங்களும், பயணத்திற்கு தேவையான அனைத்தையும் எடுத்துச் சென்றார்கள்.
72000 ஆயிரம் நபர்களில் படையை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள், ஒட்டகம் மற்றும் குதிரைகளை பராமரிக்கும் வீரர்கள், அரசருக்கு சேவை செய்யும் அரண்மனை ஊழியர்கள், மார்க்க அறிஞர்கள், இவர்கள் அனைவருக்கும் உணவு தயார் செய்யும் ஊழியர்கள் என பலரும் அடங்குவர்.
72000 ஆயிரம் பேர் 7000 கிலோமீட்டர் தொலைதூரத்தை கடந்து செல்லும் பொழுது இடைப்பட்ட நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் இந்த குழுவை எப்படி பார்த்திருப்பார்கள் என்று நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
72000 ஆயிரம் பேர் கொண்ட ஹஜ் குழுவினரும் அவர்களின் வாகனங்களும் நடந்து செல்லும் பாதை எவ்வளவு விசாலமானதாக இருக்கும் என்றும் யோசித்துப் பாருங்கள்.
இன்றுள்ள சென்னையில் பாதி மக்கள் தொகை கொண்ட ஒரு பெரு நகரம் நகர்ந்து செல்வது போல் இருந்திருக்கும்.
இந்தக் காட்சியை காணுகிற யாரும் ஆச்சரியப்படாமலோ அதிசயப்படாமலோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இதற்கு முன்பெல்லாம் ஒரு நாட்டை பிடிப்பதற்கு தான் இவ்வளவு பெரிய படைகள் செல்வதை பார்த்திருப்பார்கள். ஆனால் ஒர் இறைகடமையை நிறைவேற்றுவதற்கு இவ்வளவு பெரிய கூட்டம் சென்றதை இதற்கு முன்பும் அதற்குப் பின்பும் எவரும் பார்த்ததில்லை; வரலாற்றில் பதிவுகளும் இல்லை.
மன்னர் மன்சா மூசா அவர்கள் இந்தப் பயணத்தின் மூலம் தான் ஒரு மிகப்பெரும் செல்வந்தர் என்பதையும், உலகத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அரசர் என்பதையும் மறைமுகமாக உலக மக்களுக்கு உணர்த்தினார்.
மேலும் உலக நாடுகளோடு மறைமுகமாக வர்த்தக தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் இந்தப் பயணம் ஒரு பாதையாக அமைந்திருந்தது என அவரது வரலாற்றை எழுதிய அறிஞர்கள் கூறுகிறார்கள்.
செல்லும் வழிகளில் இருந்த ஏழை எளியவர்களுக்கு தங்கத்தை வாரி வழங்கினார்; செல்லும் வழிகளில் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களையும், உபகரணங்களையும் வாங்குவதற்கு தங்கத்தை தாராளமாக அள்ளிக் கொடுத்தார். இதனால் அவரை மக்கள் "நடமாடும் அருளாளர்" என வர்ணித்தார்கள்.
இவர் மிக தாராளமாக தங்கத்தை செலவழித்ததால் அன்றைய உலகத்தில் தங்கத்தின் மதிப்பு மிகவும் குறைந்து உலகப் பொருளாதாரம் சீர்குலைந்து சம நிலையில் இல்லாமல் போய்விட்டது. இந்த பாதிப்பு சுமார் பன்னிரண்டு வருடங்கள் நீடித்திருந்ததாக வல்லுனர்கள் கூறுகிறார்கள். பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து மக்கள் பல சிரமங்களை சந்தித்தார்கள்.
அதிலும் ஹஜ்ஜுடைய வழியில் இருந்த கெய்ரோவில் தங்கத்தை மிக தாராளமாக செலவளித்தார்; வாரி வழங்கினார். அதனால் எகிப்தின் பொருளாதாரமே சீர்குலைந்து விட்டது.
இவர் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய பிறகு எகிப்தின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி இருப்பதை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த தங்கத்தை மீண்டும் விலை கொடுத்து வாங்கி அந்த நாட்டில் பொருளாதார சமநிலையை ஏற்படுத்தினார் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஹஜ் அமலை செய்த விதம்:
÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
ஒரு வருட பயணத்திற்குப் பிறகு ஒரு வழியாக மக்காவிற்குள் வந்து மிகவும் சாதாரணமான ஒரு மனிதரைப் போல் அல்லாஹ்வின் அடிமையாக இருந்து ஹஜ்ஜுடைய அமல்களை அறிஞர்கள் வழிகாட்டியபடி மிகச் சிறப்பாக செய்து முடித்தார்.
ஹஜ்ஜுடைய காலங்களில் மீனா முஸ்தலிஃபா அரஃபாவிலும், மக்காவில் தங்கி இருந்த காலங்களிலும் தான் கொண்டு வந்திருந்த தங்கத்தை ஏழை எளியவர்களுக்கும் மக்காவில் இருந்த அறிஞர்களுக்கும் வாரி வழங்கினார்.
எதிர்காலங்களில் ஹஜ் செய்ய வருவோருக்கு சில வசதிகளை செய்து கொடுங்கள் என சொல்லி அரசாங்கத்திற்கும் தங்கத்தை அள்ளிக் கொடுத்தார்; கஃபாவின் பராமரிப்பு செலவுகளுக்கு தாராளமாக உதவினார்.
மக்காவிலும் மதீனாவிலும் இருந்த மார்க்க அறிஞர்களை சந்தித்து தமக்குத் தெரியாத மார்க்க விஷயங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
சில மார்க்க அறிஞர்களை தமது நாட்டிற்கு அழைத்து வந்து மென்மேலும் இஸ்லாம் மார்க்கம் வளர்வதற்கும், இஸ்லாம் மார்க்கத்தை மக்கள் புரிந்து கொள்வதற்கும் ஏற்பாடுகளை செய்தார்.
இவர் ஹஜ்ஜை முடித்துவிட்டு தமது நாட்டிற்கு திரும்பிச் செல்லும் பொழுது, தாம் எடுத்து வந்த செல்வத்தில் எதையும் திரும்ப எடுத்துச் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
எனவே செல்லும் வழியெல்லாம் தாராளமாக தங்கத்தையும் வெள்ளியையும் வாரி வழங்கிக் கொண்டே சென்றார்.
மதீனாவில் மாத கணக்கில் தங்கியிருந்து நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலில் அமல்கள் செய்து மன அமைதியைப் பெற்றார். நபிகளாரின் தரிசனத்தை கனவில் பெற்றார் என்றும் சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.
பின்னர் தம் மாலி நாட்டிற்கு திரும்பியதும் Timbuktu தெம்புட்டு எனும் நகரத்தில் மிகப்பெரும் மார்க்க கல்விக்கூடத்தை நிறுவினார். அதில் மக்காவிலிருந்தும் மதீனாவில் இருந்தும் அழைத்து வரப்பட்ட மார்க்க அறிஞர்களை கொண்டு மக்களுக்கு இலவச கல்வியை வழங்கினார். இறுதியில் இவர் கி.பி. 1337ல் மரணம் அடைந்தார்.
நூல்: மஸாலிகுல் அப்ஸார் ஃபீ மமாலிகுல் அம்ஸார்
ஆசிரியர் : இப்னுல் ஃபல்லுல்லாஹில் உமரீ ஷிஹாபுத்தீன் அஹமது பின் யஹ்யா
இன்று அனேக வசதிகள் இருந்தாலும் இன்றும் ஹஜ் யாத்திரை சிரமமான பயணம்தான்!
இன்று தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியுள்ளது; விமானப் பயணம், ஏர் கண்டிஷன் வசதிகள், நவீன மருத்துவம் ஆகியன இருந்தபோதிலும் ஹஜ் பயணம் கடினமாகவே இருக்கின்றது.
உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதால் ஹரம் அருகிலும், தவாஃப் மற்றும் ஸயீயின் போதும் சாதாரணமாக நடக்கும் நடை மிகச் சிரமமாகி விடுகின்றது. சில சமயங்களில் தவாஃபிலும் ஸயீயிலும் உடல் தளர்ந்து விடுகின்றது.
இந்த நச்சு நடை மன அழுத்தத்தையும், சோர்வையும் ஏற்படுத்தி உடல் பலவீனம் அடைகின்றது; மேலும் சவூதி அரேபியாவின் 50°C வெப்பம் உடலில் நீர் இழப்பை ஏற்படுத்தி பலவீனத்தை உண்டாக்குகிறது.
ஹஜ் உடல் உழைப்பு சார்ந்த ஓர் அமல் என்பதால் வயதானவர்களுக்கு அது சவாலான வழிப்பாடாகவே அமைகின்றது.
ஹஜ்ஜுடைய பத்தாவது நாளில் இருந்து ஜமாராத்து சென்று கல் எரிந்து விட்டு வருவது மிகப்பெரும் சவாலான காரியம்; அதையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வது மன அழுத்தத்தையும் உடல் சோர்வையும் உண்டாக்கும்.
மொழி தெரியாமை, வழி அறியாமை, குழுவில் இருந்து பிரிந்து விடுவது போன்ற பல்வேறு சிக்கல்களில் உழல்வது உளவியல் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகின்றது.
எனவே வெளிநாட்டு ஹஜ் பயணம் என்பது வசதிகள் நிறைந்த சுற்றுலா பயணம் அல்ல! சிரமங்களை அடித்தளமாகக் கொண்ட ஆன்மீகப் பயணம்.
ஹஜ்ஜுக்கு செல்ல நிய்யத் வைப்பவர்கள் முதன் முதலில் எல்லா வகை சிரமங்களையும் சகித்துக் கொள்ளும் மனநிலையும் உடல் வலிமையும் தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லாம் வல்ல இறைவன் கடந்த 1438 வருடங்களாக ஹஜ் செய்த அனைவருடைய ஹஜ்ஜையும் அல்லாஹ் ஒப்புக் கொள்வானாக! ஆமீன்!!
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர், மவ்லவீ, B.M . கலீலுர் ரஹ்மான் மன்பயீ
இமாம்: மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் சாந்தோம் சென்னை.
8/4/2026
Comments
Post a Comment