நபிகள் நாயகம் செய்த ஹஜ்ஜின் செயல்முறை -3
சூஃபிகளின் ஹஜ் : - 29
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~
நபிகள் நாயகம் செய்த
ஹஜ்ஜின் செயல்முறை
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=
தொடர் ......3
துல்ஹஜ் பிறை 8 :
-------------------------------------
பிறை எட்டு, வியாழக்கிழமை லுஹா உடைய நேரத்தில் நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் மினாவிற்குச் சென்றார்கள்.
ஏற்கனவே இஹ்ராமிலிருந்து வெளிவந்திருந்த அனைவரும் அன்றைய தினம் பகலில் இஹ்ராம் அணிந்து கொண்டு நபிகளாரோடு வினாவிற்குப் புறப்பட்டார்கள்.
மினாவில் லுஹரிலிருந்து மறுநாள் ஃபஜர் வரை ஐந்து நேர தொழுகை கஸர் செய்து தொழுதார்கள்.
அரஃபா :
°°°°°°°°°°°°°°
பிறை 9 அன்று காலையில் சூரியன் உதயமான பிறகு மினாவில் இருந்து அரஃபாவிற்கு புறப்பட்டுச் சென்றார்கள்.
அங்கே அரஃபாவில் இன்று மஸ்ஜிதே நமிரா உள்ள இடத்தில் நபிகளாருக்கு கூடாரம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்தார்கள்.
பின்னர் ஜவால் - சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பிறகு லுஹருடைய நேரத்தில் தமது 'கஸ்வா' எனும் ஒட்டகத்தில் ஏறிச் சென்று 'பத்னே உர்னா' எனும் இடத்தில் உலகப் பிரசித்தி பெற்ற குத்பா - பேருரை நிகழ்த்தினார்கள்.
பேருரைக்குப் பிறகு பிலால் (ரலி) அவர்களை உரக்கமாக தக்பீர் சொல்லச் சொன்னார்கள். அரஃபா மைதானம் அதிரும் அளவிற்கு அனைவரும் தக்பீர் கூறினார்கள்.
பின்னர் லுஹர், அஸர் ஆகிய இரண்டு நேர தொழுகைகளையும் லுஹர் நேரத்திலேயே ஜம்மு, கஸர் செய்து தொழ வைத்தார்கள்.
தொழுத பிறகு அரஃபா மைதானத்திற்கு வந்து மங்ரிப் நேரம் வரை ஒட்டகத்தின் மீது இருந்தவாரே துஆ செய்து கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் நபிகளாருக்கு பால் வழங்கப்பட்டது. அதை அனைவரும் பார்க்கும் வகையில் நபிகளார் பால் குடித்தார்கள்.
அதனால் அன்று நபிகளார் நோன்பு நோற்கவில்லை என அனைவரும் தெரிந்து கொண்டார்கள்.
மேலும் அன்றைய தினம் நஜ்திலிருந்து ஒரு குழுவினர் நேராக அரஃபாவில் வந்து கலந்து கொண்டார்கள்.
அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "ஹஜ் என்றால் என்ன?" என்று வினவியதற்கு, "ஹஜ் என்பது அரஃபாவில் தங்குவதாகும் ; யார் துல்ஹஜ் பிறை 10 அன்று லுஹருக்கு முன்பு இங்கு வந்து சேர்ந்து விடுவாரோ அவரது ஹஜ் நிறைவேறி விடும்" எனக் கூறினார்கள்.
அரஃபா உடைய நாளில் மங்ரிப் நேரம் வரை நபி (ஸல்) அவர்கள் தம் உம்மத்தினருக்காக தொடர்ந்து துஆ செய்து கொண்டே இருந்தார்கள்.
அப்பொழுது அல்லாஹ், "அநியாயக்காரர்களை மட்டும் நான் மன்னிக்க மாட்டேன்" என்று கூறினான். உடனே நபி (ஸல்) அவர்கள், "இறைவா! அநியாயம் இழைக்கப்பட்டவருக்கு உன் புறத்திலிருந்து common session - நஷ்ட ஈடு வழங்கி விடு; அதே நேரம் அநியாயம் செய்தவர்களையும் மன்னித்துவிடு" என்று கூறினார்கள். அதையும் அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.
மேலும் அன்றைய தினம் தான் 'அல் யவ்ம அக்மல்து லக்கும் தீனுக்கும்' எனும் வசனம் அருளப்பட்டது.
முஸ்தலிஃபா புறப்பாடு :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சூரியன் மறைந்த பிறகு நபி (ஸல்) அவர்கள் மங்ரிப் உடைய நேரத்தில் அங்கே மங்ரிபை தொழாமல் முஸ்தலிஃபாவிற்கு புறப்பட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சென்ற கஸ்வா ஒட்டகத்தின் மீது ஒட்டகத் தொட்டி எனும் அம்பாரி இருந்தது. அதில் முன் பகுதியில் நபிகளாரும் பின்பகுதியில் வளர்ப்பு மகனின் மகன் பேரன் உஸாமா பின் ஜைத் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள்.
முஸ்தலிஃபாவிற்குச் செல்லும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்கு சிறுநீர் கழிக்கும் தேவை ஏற்பட்டது. ஒட்டகத்திலிருந்து இறங்கி சிறுநீர் கழித்தார்கள்.
பின்னர் (வளர்ப்பு மகனின் மகன்) பேரன் உஸாமா (ரலி) அவர்கள் உளூ செய்யத் தண்ணீர் ஊற்ற, நபிகளார் உளூ செய்து கொண்டார்கள்.
மங்ரிப் தொழுகையைப் பற்றி உஸாமா (ரலி) அவர்கள் நினைவுறுத்தியும் எங்கும் தொழாமல் முஸ்தலிஃபவிற்கு வந்து அடைந்தார்கள்.
பின்னர் மங்ரிபையும் இஷாவையும் கஸர் செய்து தொழ வைத்தார்கள். அனைவரும் தொழுதார்கள்.
"பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் , பலவீனமானவர்கள் ஆகியோரில் விரும்புவோர் மினாவிற்கு சென்று தமது கூடாரங்களில் தங்கிக் கொள்ளலாம்" என சொல்லி அனுப்பி வைத்தார்கள்.
ஆனால் நபி (ஸல்) அவர்கள் அன்று இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து உம்மத்தினருக்காக துஆ செய்து கொண்டே இருந்தார்கள்.
சுபுஹுடைய ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஃபஜரை தொழுதுவிட்டு சூரிய உதயத்திற்கு முன்னரே மினாவிற்குப் புறப்பட்டுச் சென்றார்கள். உஸாமா (ரலி) அவர்கள் தாம் நடந்து வருவதாக சொல்லிவிட்டார்கள்.
அதனால் இளைஞர் ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்திற்கு பின்னால் அமர்ந்து கொண்டார்கள்.
செல்கிற வழியில் முஸ்தலிஃபா எல்லைக்குள் ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தம்மிருவருக்காகவும் ஷைத்தானுக்கு கல்லடிக்க கற்களை பொறுக்கி கொண்டார்கள்.
செல்லும் வழி நெடுகிலும் ஆண்களும், பெண்களும் நபிகளாரிடத்தில் ஹஜ் சம்பந்தமான சட்டங்களை கேட்டுக் கொண்டே இருந்தார்கள். நபிகளாரும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே சென்றார்கள்.
மீனா செல்லும் வழியில் 'வாதீ முஹஸ்ஸிர்' எனும் பள்ளத்தாக்கு வந்தது. இந்த இடத்தில் தான் அப்ரஹாவின் யானைப்படை அல்லாஹுவால் அளிக்கப்பட்டது. அதனால் நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தை விரைவாக கடந்துச் சென்றார்கள்.
தொடரும்........
Comments
Post a Comment