ஏன்? எதற்கு? என கேட்காதே!

சூஃபிகளின் ஹஜ் : - 24
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•~•

ஏன் எதற்கு என கேட்காதே!
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஈரானின் வடபகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து 2500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மக்காவிற்கு ஹஜ் செய்ய புறப்பட்டார். 

நகரங்கள், கிராமங்கள், ஆங்காங்கே அமைந்துள்ள தனி வீடுகள் என செல்லும் வழி நெடுகிலும்  தனக்கான ஷைஹை தேடிக்கொண்டே சென்றார். 

இறுதியில் ஓர் நகரத்தில் கண் தெரியாத, வயதான ஒரு ஷைஹை கண்டறிந்தார். 

அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் அந்த ஷைஹிடம் , "நான் ஹஜ்ஜுக்குச் செல்கிறேன்; அந்த அமல் சார்ந்த நுட்பமான தகவல்களை எனக்கு சொல்லித் தாருங்கள்" எனக் கேட்டார்.

ஷைஹு அவர்கள்,  "நீங்கள் என்னை ஏழு முறை தவாஃப் - சுற்றி வாருங்கள்; இது ஹஜ்ஜை விட சிறந்தது. உங்கள் கடமை நிறைவேறிவிட்டது. உங்கள் பயணத்தின் நோக்கம் முழுமை பெற்று விட்டது. நீங்கள் தூய்மை அடைந்து விட்டீர்கள்" என்று கூறினார்கள்.

அபா யஜீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் ஏன் எதற்கு என்று கேட்காமல் அவர்களை சுற்றி வர தயாரானார்கள்.  

ஷைஹு அவர்கள் "நில்!" என்று சொல்லிவிட்டு,

"நான் சொன்னதும் ஏன்? எதற்கு? என்று கேட்காமல் என்னை சுற்றி வர எத்தனித்தது போல், நீங்கள் ஹஜ்ஜுடைய அனைத்து வகை வகையான செயல்களையும் செய்து வர வேண்டும். இப்படி செய்ய வேண்டும் என்பது இறைவனின் உத்தரவும், இறைத்தூதரின் வழிகாட்டுதலும் ஆகும். 

அல்லாஹ் மற்றும் ரசூலின் வழிகாட்டுதலுக்கு இதாஅத் - கட்டுப்படுவது மட்டுமே இங்கே உயர்ந்த அமலாக கருதப்படுகிறது. 

கஃபாவிற்குள் யாரும் அவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியாது. அவ்வாறுதான் ஒவ்வொரு மனிதனின் உள்ளமும். 

கஃபாவிற்குள் நபிமார்கள் மற்றும் உலகின் ஆக சிறந்தவர்கள் மட்டுமே நுழைவது போல், நமது உள்ளத்திற்குள்ளும் அல்லாஹ் மற்றும் அவனுடைய கடமைகள் மட்டுமே நுழைந்து பதிந்திருக்க வேண்டும்" என்று கூறினார்கள். 

அபா யஜீதுல் பிஸ்தாமீ (ரஹ்) அவர்கள் தம் ஹஜ் பயணத்தைத் தொடங்கினார்கள்.

நூல் : மஷ்னவீ ஷரீஃப்

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்