நபிகள் நாயகத்தை கண்ணியப்படுத்துங்கள்
சூஃபிகளின் ஹஜ் : - 50
~•~•~•~•~•~•~•~•~•~•~•~•
நபிகள் நாயகத்தை கண்ணியப்படுத்துங்கள்:
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
அலீ [ரலி] அவர்களுக்கு தமது விட்டு சாளரத்தைச் செப்பனிடும் தேவை ஏற்பட்டது.
சாளரத்தைச் செய்யும் தச்சரிடம், மதீனாவிற்கு வெளியில் சென்று "பக்கீ"யில் அதனை செய்து வருமாறு பணித்தார்கள்.
அதனைச் செய்யும்போது ஏற்படும் சப்தம் நபி [ஸல்] அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் அன்னார் அவ்வாறு பணித்தார்கள்.
****
அல்லாமா கிஸ்தலானீ [ரஹ்] அவர்கள் மவாஹிபுல் லதுன்னியாவில், "அண்ணல் நபி [ஸல்] அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் எவ்வாறு மரியாதையும், கண்ணியமும் அளிக்கப்பட்டதோ அதுபோன்றே இப்பொழுதும் அளிக்கப் படவேண்டும்.
ஏனெனில் அன்னார் தமது கப்ரு ஷரீபில் இப்பொழுதும் உயிரோடு இருக்கிறார்கள்" என எழுதியுள்ளார்கள்.
நூல்: ஷரஹ் மவாஹிப் லதுன்னியா
******
நபி (ஸல் ) அவர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்த ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை மிஃராஜ் அழைத்துச் செல்ல வந்தார்கள்.
அந்த இரவில் உறங்கிக் கொண்டிருந்த நம்பிகளாரை எழுப்ப மணம் இன்றி என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தார்கள்.
பின்னர் தம் இமையின் முடிகளால் நபிகளாரின் கால் பாதத்தை வருடினார்கள். அந்த உராய்வில் நபிகளார் விழித்துக் கொண்டார்கள்.
ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு நபிகளார் மீது இருந்த கண்ணியத்தின் பொருட்டால் அவர்களை தொட்டு எழுப்ப மனமில்லை.
*******
அம்ரு பின் அல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். "நான் இஸ்லாம் ஆகுவதற்கு முன் நபி (ஸல்) அவர்களை நேருக்கு நேராக பலமுறை பார்த்து இருக்கிறேன்; பேசி இருக்கிறேன்.
ஆனால், நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு அவர்களின் முகத்தை ஒரு முறை கூட முழுமையாகப் பார்த்ததில்லை.
ஏனெனில் என் கண்கள் முழுவதையும் திறந்து அவர்களைப் பார்ப்பதை கண்ணியக் குறைவாகக் கருதினேன்.
அதனால் என்னிடம் நபி (ஸல்) அவர்கள் உருவ அமைப்பு எப்படி இருந்தது? என்று என்னிடத்தில் நீங்கள் கேட்டால் அதை என்னால் துள்ளியமாக சொல்ல இயலாது" என்று கூறுகிறார்கள்.
நபிகள் நாயகத்திற்கு அருகில் இருந்தும் அவர்களை பார்க்காமல் இருப்பதே 'கண்ணியம்' என ஸஹாபாக்கள் கருதி இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே வாழ்ந்தும் இருக்கிறார்கள்.
******
ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் இயல்பாகவே சற்று குரலை உயர்த்தி பேசும் பழக்கம் உடையவராக இருந்தார்கள்.
49:2 வது வசனத்தில் "நபியின் குரலை விட உங்கள் குரலை உயர்த்தி பேசாதீர்" என இறை உத்தரவு வந்த பிறகு ஸாபித் (ரலி) அவர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள்.
அதனால் நபிகளாரின் சபைக்கு சில நாட்கள் போகாமலும் இருந்தார்கள். தன்னை நரகவாதி என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சொர்க்கவாதி தான்" என்ன சொல்லி ஆசுவாசப்படுத்திய பின்னரே நபிகளாரின் சபைக்கு சென்று வந்தார்கள். ஆனால் பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டார்கள்.
இவ்வாறு நபிகளாருக்கு முன், பேசுவதையும் கூட கண்ணியக் குறைவாக ஸஹாபாக்கள் நினைத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கண்ணியம் என்பது உவமை சொல்ல முடியாத ஒப்பற்ற உயர்வானது.
ஸஹாபாக்களில் ஒவ்வொருவரும் ஒரு வகையில் நபிகள் நாயகத்திற்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.
நாமும் கூட நபிகள் நாயகத்திற்கு முறையான மரியாதையை செலுத்த வேண்டும்.
நமது உயிரையே நபிகள் நாயகத்திற்கு வழங்கினாலும் அது ஆக குறைந்த மரியாதை தான்!
Comments
Post a Comment