ஈரோட்டு இஸ்லாமிய பெரியார் உமர் பாரூக் தாவூதி ரஹ்
ஈரோட்டின் இஸ்லாமிய பெரியார், முதுபெரும் அறிஞர், சட்ட மேதை, மௌலானா, M.S. உமர் ஃபாரூக் தாவூதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி
இறைவன் மனிதர்களில் எவரையும் வீணாக படைக்கவில்லை. படைக்கப்பட்ட ஒவ்வொருவரைக் கொண்டும் சமூகத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் ஒருநேரத்தில் பலனளிப்பவராகவே இருப்பர்.
அதிலும் ஆலிம்கள் ஆலிமானதிலிருந்து அகிலத்தை பிரியும் வரை தனக்கு பிடித்தமான வழியில் நற்பணியாற்றி வருவார்கள்.
மவ்லானா உமர் ஃபாரூக் ஹள்ரத் (ரஹ்) அவர்கள் பெயருக்கு ஏற்ப இக்காலத்தில் உள்ள சிக்கலான பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உண்மை எது என்பதை பாரூக் - பிரித்து காட்ட கூடியவர்களாக இருந்தார்கள்.
ஹள்ரத் அவர்களின் முன்னோர்கள்:
தமது முன்னோர்கள் பற்றி ஹள்ரத் அவர்கள் கூறுவதையே கேளுங்கள்.
எனது தந்தையின் தாதா (பாட்டனார்) அல்லது அவரின் தந்தை மைசூர் சமஸ்தானத்தில் மைசூர் புலி ஹைதர் அலியின் அவையில் ஓர் பிரதானியாக இருந்துள்ளார். ஈரோடுட்டுக்கு அருகாமையில் உள்ள அந்தியூர் என்னும் ஊர் அக்காலத்தில் முக்கிய கேந்திரமாக இருந்துள்ளது. அப்பகுதிக்கு இஸ்லாமிய காரியங்கள் நடத்தி வைக்கவும், இஸ்லாமிய மார்க்க ஞானம் போதிக்கவும் காஜியாக எங்களின் மூதாதையரை மன்னர் ஹைதர் அலி அனுப்பியுள்ளார்.
நூறு ஏக்கர் நிலம் மானியமாக தரப்பட்டுள்ளது. அன்றைய காலத்தில், ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம், பவானி, இரோடு பகுதிகளிலும் காவிரி கரை தாண்டி சங்ககிரி பகுதியும், ஹைதர்அலி, திப்பு சுல்தான் ஆளுமைக்குட்பட்டதே! பெரியக்கிரஹாரத்தில் அடங்கியுள்ள மீரா ஹுசைன் அவ்லியாவும், இக்கால கட்டத்தில் மன்னர் ஹைதர் அலியார் நற்போதகராக அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஹைதர் அலி பின்னர் திப்புசுல்தான் காலம் வரை காஜியார் பதவி வகித்து வந்தவர்கள். திப்பு சுல்தானின் வீழ்ச்சிக்குப்பின், ஆங்கிலேய ஆட்சி வந்தபின் பதவியும் அதிகாரமும் இல்லாமல் ஆகிவிட்டது. குடும்ப பல்வேறு திசைகளில் சிதறிப்போய் விட்டனர்.
எனது தாதா பாட்டனார் பெயர் முஹம்மது உமர் ஈரோட்டுக்கருகில் வ
ஊத்துக்குழி என்னும் ஊரில் குடியேறி வாழ்ந்து வந்தார். என்னுடைய பாட்டனாரும் மார்க்கம் அறிந்த ஆலிம் ஆவார். (சனதுகள் பெறாத பண்டைய கால ஆலிம்) அத்தருணத்தில் பெரியக்கிரஹாரம் சிறிய கிராமம்.
இங்குள்ள முஸ்லிம்களுக்கு மார்க்கம் போதிக்க, இஸ்லாமிய மத நிகழ்வுகளை நடத்தி வைக்க இந்த ஊருக்கு எனது பாட்டனாரை இவ்வூர் மக்கள் அழைத்து வந்து காஜியாக நியமித்துள்ளனர்.
இவ்வூரில் முதன் முதலாக குர்ஆன் 'பாடசாலை உருவாக்கியது, முதல் பள்ளிவாசல் (ஓலை குடிசையாகி) உண்டாக்கியதும் எனது பாட்டனாரே!
எனது தாதா வெளியூர் சென்று அங்கேயே காலமாகி அடக்கம் செய்யப்பட்டு விட்டார். (ஊர் எது என்று தெரியவில்லை) எனது தாதி ஊத்துக்குழியில் காலமாகி அங்கேயே அடக்கம் செய்யப்பட்டு உள்ளனர். (அல்லாஹ் அன்னாருக்கு சுவனபதியில் நற்பதவி தருவானாக! எனது பாட்டனாரின் நினைவாகவே எனக்கு உமர் பாரூக் என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.
எனது பாட்டனாரின் மரணத்தின் பின் எனது தந்தையாரை தவிர மற்றவர்கள் பல ஊர்களுக்கு குடி பெயர்ந்து சென்றுவிட்டார்கள். எனது தந்தையார் மட்டும் இங்கேயே (அக்ரஹாரத்தில் தங்கிவிட்டார்.
என் தந்தையார் இப்பகுதியில் ஓர் பிரசித்தி பெற்ற தையல்காரர், ஆலிம் அல்ல! ஆனால் மார்க்க ஞானம் ஓரளவு உண்டு. உர்தூ நூல்கள் அதிகமாக விரும்பி படிப்பார்கள். எனது தாயார் ஜைனப்பி ஈரோட்டில் மரப்பாலம் பகுதியை சார்ந்தவர். எனது சிறு வயதில் மூன்று வயது சுமாரில் எனது நானாவும் சில ஆண்டுகள், பின் எனது நானியும் காலமானார்கள். ஈரோடு அடக்கம் செய்யப்பட்டது.
பிறப்பு:
ஈரோடு பட்டனத்தின் B.P.அக்ரஹாரம் பகுதியில் வசித்த சுல்தான் மஹ்மூத் ஜைனப்பி தம்பதியரின் பிள்ளைகளான முஹம்மது ஜஃபர்,
ஆமீனாபீவி, உம்முசல்மா, பசரிய்யா, உமர் பாரூக் ஆகிய ஐந்து பிள்ளைகளில் இளைய மகனான உமர் ஃபாரூக் அவர்கள் 22.7.1942 சனிக்கிழமை (1361-ரஜப் 8) அன்று பிறந்தார்கள்.
படிப்பு:
படிக்கும் வயதை அடைந்ததும் தம் உள்ளூரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்புவரை படித்த பிறகு பதிமூன்றாம் வயதில் பெற்றோர் வழிகாட்டுதல் படி ஈரோடு தாவூதியா அரபிக் கல்லூரியில் இணைந்து சில ஆண்டுகளும் மேட்டுப்பாளையம் பைஜுல் பாகியாத் கல்லூரியில் சில ஈரஆண்டுகளும் மீண்டும் தாவூதியா மதரஸாவில் படித்து முடித்து அல்லாமா அமானி ஹள்ரத் அவர்களின் பொற்கரத்தால் 'மௌலவி ஆலிம் தாவூதி' - சமுதாயத்திற்கு ஊழியம் செய்ய தகுதியானவர் என பட்டம் பெற்றார்கள்.
மேலும் உபி தேவ்பந்த் சென்று இரண்டு ஆண்டுகள் உயர்கல்வி சுற்றுத்தேறினார்கள்.
பிறகு தம் சொந்த ஊர் வந்த சிலமாதங்களுக்குப் பிறகு பெங்களூர் சபீலுர் ரஷாத் அரபிக்கல்லூரியில் ஆசிரியப்பணி கிடைத்தது. எதிர்ப்பார்த்தது கிடைத்து விட்டால் பேரின்பம் அல்லவா? ஆசைப்பட்ட ஆசிரியப்பணியை மிகசந்தோசமாக ஏற்று நான்காண்டுகள் செயல்பட்டார்கள்.
பிறகு சொந்த ஊரிலும், தாம் படித்து பட்டம் பெற்ற கல்லூரியிலும் ஆசிரியப்பணிக்கு அழைப்பு வரவே மிக மிக சந்தோசமாக ஏற்றுக்கொண்டு இன்றுவரை இறுதிவரை தம் பணியை மிக சிறப்பாக செய்து வந்தார்கள். துணை முதல்வராகவும், பின்னர் முதல்வராகவும் இருந்து நூற்றுக்கணக்கான ஆலிம்களை உருவாக்கி சமுதாயப் பணி செய்ய அனுப்பி வைத்தார்கள்.
திருமணம்:
தேவ்பந்த் தாருல் உலூமில் படித்து விட்டுவந்ததும் இருபத்தைந்தாம் வயதில் 5.7.1967 அன்று திருமணம் செய்துக் கொண்டார்கள், சாதிக்காபானு (12ம் வகுப்பு) ஷாஹ் முஹம்மது இம்தாதுல்லாஹ் B.E., மவ்லவி ஹாபிழ் அஸ்ரத் ஹுனைன் M.A அரபிக், முஹம்மது இஹ்சானுல்லாஹ், பாத்திமா பானு என்ற இரண்டு பெண்மக்களும் மூன்று ஆண்மக்களும் பிறந்தனர்.
ம.ஜ.க. தமீமுன் அன்சாரி அவர்கள் கூறுகிறார்கள்.
ஹள்ரத் அவர்கள் மார்க்கப் பணிகள் மட்டுமின்றி, அரசியல் துறையிலும் தனது பங்களிப்புகளை செய்தவர்.
1987 ஆம் ஆண்டு ஷாபானு வழக்கு தொடர்பாக, நாடாளுமன்றத்தில் G. M. பனாத்வாலா அவர்கள் வரலாற்று சிறப்புமிக்க உரையை ஆற்றினார்.
அதற்கு இவர்கள்தான் குறிப்புகளை வழங்கியவர் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும். அப்படிப்பட்ட ஆளுமையும், அறிவும் மிக்கவர்.
முனைவர், A. காஜா முயீனுத்தீன் ஜமாலி ஹள்ரத் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருமுறை ஈரோட்டில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபை தேர்தலில் தலைமை வகித்து பேசும்போது.........
உலமாக்களின் வருகையால் ஈரோடு சிறப்பு பெறுகிறது என்று குறிப்பிட்டு
வானமும் பூமியும் யார் சிறப்புக்குரியவர்கள் என சண்டையிட்டது......
பூமி கஃபத்துல்லா உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை எடுத்து சொன்னது.
உடனே
வானம் அர்ஸ், குர்ஸீ மற்றும் சுவர்க்கம் போன்றவைகளை கூறியது.
இவ்வாறு இரண்டும் பல்வேறு சிறப்புகளை சொல்லி வந்த போது
பூமி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்றதும் வானம் தன் வாதத்திலிருந்து விலகியது என்று குறிப்பிட்டார்கள். நபிகள் நாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பை ஸாலிஹீன்கள் வழியில் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
நூல்கள்:
ஹள்ரத் அவர்கள் தேவ்பந்த் தாருல் உலூம் கல்லூரியில் முப்ஃதி நீதிவழங்கும் நீதிபதி பட்டயப்படிப்பை முடித்திருந்ததால் சரியான தீர்வுகளோடு சுவையாக பல கட்டுரைகள் நூல்கள் எழுதியுள்ளார்கள்.
1. இஸ்லாம் வகுத்த இல்லற நெறிகள்,
2. இஸ்லாமிய இறைக் கோட்பாடு
3. திருக்குர்ஆனின் திறவு கோல்
4. ஷரீஅத் நீதி மன்றம்
5. மௌலானா M.S. உமர் ஃபாருக் தாவூதி ஹஜ்ரத் அவர்களின் களஞ்சியம்
மேலும் தமிழகம் முழுவதும் சென்று மார்க்கப் பிரச்சாரம் செய்துள்ளார்கள். ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமேடைகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஹள்ரத் அவர்கள் மிக மெதுவாகவும், ஆழனான கருத்துக்கள் நிறைந்த வார்த்தைகளால் சொற்பொழிவாற்றி, வந்திருப்போரின் உள்ளங்களை ஈர்த்து விடுவார்கள்.
மேலும் 1985ல் புனித ஹஜ் செய்து முடித்தார்கள். இன்னும் 1988 முதல் 1992 வரை மாநில ஜமாஅத்து உலாமாவில் செயளாலராகவும், மற்றும் பல்வேறு சமுதாய பொறுப்புகள் வகித்து தன்னிகரற்ற சமுதாயப் பணி ஆற்றி 18/12/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8 :00 மணி அளவில் இன்று காலமாகி இருக்கிறார்கள்.
அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து, சொர்க்க தரஜாக்களை உயர்த்தி, தன் ரிழா - திருப்தியை அவர்களின் மீது பொலிவானாக!! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!!!!
மேலதிக தகவல்களுக்கு....
மௌலானா M.S. உமர்ஃ பாரூக் தாவூதி அவர்களின் களஞ்சியம் என்ற நூலை வாசித்து பயனடையுங்கள்.
அன்புடன்
மௌலவி பி.எம். கலீலுர் ரஹ்மான் மன்பயீ
Comments
Post a Comment