நபி (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியுமா?
நபி (ஸல் ) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
2.
நபி (ஸல்) அவர்களைக்
கனவில் காண முடியுமா?
==========================
ஜின்களுக்கும் ஷைத்தான்களுக்கும் கெட்ட வடிவங்களையும், நல்ல வடிவங்களையும் எடுப்பதற்கான ஆற்றலை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்.
மனிதர்களின் கனவுகளில் மனிதர்கள் விரும்பும் கனவுகளை உருவாக்கிடும் ஆற்றல் பெற்றவர்களாகவும், மனிதர்கள் விரும்புகிற தோற்றம் மற்றும் வடிவங்களில் காட்சியளிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் ஷைத்தான்களும் ஜின்களும் இருக்கின்றார்கள்.
அவர்கள் ஆதமுடைய சந்ததியினரின் ரத்த நாளங்களில் பயணிக்கிறார்கள். அதனால் மனிதன் தன்னைப் பற்றி அறியாததை எல்லாம் அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அவன் உள்ளத்தில் இருப்பவற்றையும் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; நிச்சயமாக ஷைத்தான் ஆதம் (அலை) அவர்களுடைய சந்ததியினரின் ரத்த நாளங்களில் ஓடிக்கொண்டு இருக்கின்றான்.
நூல் : புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ, முஸ்னது அஹ்மத்.
ஆதம் (அலை) அவர்களின் சந்ததியினரின் கனவுகளில் நபி (ஸல்) அவர்களின் தோற்றத்தில் காட்சியளிக்கும் ஆற்றல் ஜின்களுக்கு அறவே இல்லை. அதே நேரம் ஷைத்தான்கள் நபி (ஸல்) அவர்களின் உருவத்தை கற்பனை செய்தும் பார்க்க இயலாது.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; யார் என்னைக் கனவில் கண்டார்களோ அவர்கள் உண்மையாகவே என்னையே பார்த்தார்கள். நிச்சயமாக ஷைத்தான் என்னைப் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்க இயல மாட்டான்.
நூல் : புகாரீ
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; என்னை யார் கனவில் பார்த்தார்களோ அவர்கள் என்னையே கனவில் பார்த்தார்கள். நிச்சயமாக ஷைத்தான் எனது உருவத்தில் காட்சியளிக்க சக்தி பெறமாட்டான்.
நூல் : புகாரீ
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; உறக்கத்தின் போது யார் என்னை கனவில் பார்த்தார்களோ நிச்சயமாக அவர்கள் விழித்திருக்கும் போது என்னை பார்த்தவர் போன்று ஆவர்; நிச்சயமாக ஷைத்தான் எனதுத் தோற்றத்தில் காட்சியளிக்க சக்திப் பெற மாட்டான்.
நூல் : முஸ்லிம், அபூதாவூத்.
எனவே நபி (ஸல்) அவர்களை யார் கனவில் பார்த்தார்களோ அவர்கள் உறுதியாகவும், உண்மையாகவும் பார்த்தவர்கள் ஆவர். அதில் எந்த சந்தேகமும், குழப்பமும் இல்லை.
அதே நேரம் ஷைத்தான் மனிதர்களுடைய விஷயங்களில் தலையிட்டு, அவர்களிடையே குழப்பங்களை தோற்றுவிக்கவும், தீய வழிகளுக்கு இழுத்துச் செல்லவும், சிலருடைய உருவத்தில் காட்சியளித்து அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தவும் சக்திப் பெற்றவனாக இருக்கின்றான்.
Comments
Post a Comment